‘எபிக் ஃபியூரி’ எனும் அதிகாரப் போர்
அமைதி தொலைந்த இரவு
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நள்ளிரவு, உலக வரலாற்றில் ஒரு கறைபடிந்த நாளாக மாறியது. “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதல், வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது பல தசாப்தங்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு புவிசார் அரசியல் காய்நகர்த்தல். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது, இந்தப் போரின் தீவிரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.
போர் ஏன் தொடங்கியது?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கும் தற்போதைய போர்ச் சூழலுக்கும் பின்னால் உள்ள முக்கிய காரணங்களை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம்:
- அணு ஆயுத அச்சம்: ஈரான், சர்வதேச ஒப்பந்தங்களை மீறி தனது நிலத்தடி அணுசக்தி மையங்களில் யுரேனியம் செறிவூட்டலை 90% வரை எட்டிவிட்டதாக இஸ்ரேலிய மொசாத் (Mossad) அமைப்பு குற்றம் சாட்டியது. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்குப் பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால், ஈரானின் அணு ஆயுத உற்பத்தித் திறனை முற்றிலுமாக ஒழிப்பது இவ்விரு நாடுகளின் குறிக்கோளாக இருந்தது.
- நிழல் யுத்தம் நேரடி யுத்தமாதல்: சிரியா, லெபனான் மற்றும் ஏமனில் ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள் இஸ்ரேல் மீது நடத்தி வந்த வன்முறை தாக்குதல்கள் ஈரானின் தூண்டுதலால் என கருதப்பட்டது. மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை நிலைநாட்ட ஈரான் பயன்படுத்தும் ராணுவ வியூகங்கள் மற்றும் குர்து குழுக்கள் போன்ற அமைப்புகளுடனான மோதல்களும் இந்தப் போருக்குப் பின்னணியாக உள்ளன.
- ஆட்சி மாற்றம் (Regime Change): அயதுல்லா அலி காமேனியின் தலைமையிலான ஆட்சி ஹெஸ்பொல்லா, ஹமாஸ் மற்றும் ஹவுத்திகள் போன்ற குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை அளித்து வருவதாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஆக்கிரமிப்பைச் செலுத்தி பலவித கட்டுப்பாடுகளை நிர்பந்திப்பதாகவும் அமெரிக்கா சந்தேகித்தது. மேலும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நேரடியாக அமெரிக்காவைத் தாக்கும் திறனை வளர்த்து வருவதாகவும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களைச் சாதகமாக்கி, ஈரானின் மதகுருமார்களின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்கா திட்டமிட்டது.
அயதுல்லா காமேனி கொல்லப்பட்ட போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைக்கப்பட்டிருந்த இடங்கள் சேதமடைந்த போதிலும், ஈரான் தனது பணிகளை நிறுத்தவில்லை. மாறாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஆதரவு தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து நடந்த கொலைகளும், தாக்குதல்களும் இன்றைய போருக்கு வழிவகுத்தன.
பேச்சுவார்த்தை நாடகங்கள்
இந்தப் போரின் மிகக் கொடுமையான அம்சம் அதன் தொடக்கம். பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், ஓமன் நாட்டின் சுல்தான் முன்னிலையில் ஜெனீவாவில் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கும் ஈரான் தூதர்களுக்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை மேஜையில் அமர்ந்து கொண்டே, மறுபுறம் அமெரிக்காவின் பி-2 (B-2) ரக குண்டுவீச்சு விமானங்களும் இஸ்ரேலின் எஃப்-35 (F-35) விமானங்களும் காமேனியின் இல்லத்தின் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தின. இதை ஈரான் எதிர்பார்த்திருக்கவில்லை என்றே சொல்லலாம். தனது வான் பாதுகாப்புத் திறனில் (Air Defense) மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஈரானின் ராடார் அமைப்புகளைத் தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இஸ்ரேல் செயலிழக்கச் செய்ததாகவும், ஈரானுக்குள்ளேயே இருக்கும் சில அதிருப்திக் குழுக்கள், காமேனியின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இது ஈரானின் உளவுத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது எதிரி நாட்டின் தலைவரைக் கொல்வது சர்வதேச சட்டங்களின்படி போர் குற்றமாகும். ஆனால், “பயங்கரவாதத்தை ஒழிக்க இதுவே இறுதி வழி” என்று கூறி அமெரிக்கா இதை நியாயப்படுத்துகிறது.
முரண்பட்ட அரசியல் நோக்கங்கள்
“நான் புதிய போர்களைத் தொடங்காத அதிபர்” என்றும், “இந்தியா – பாகிஸ்தான் போரைத் தடுத்தவன் நான்” என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தவர் அதிபர் டிரம்ப். தெளிவான தீர்மானமும், திட்டமும் இல்லாமல், இஸ்ரேலின் அழுத்தங்களுக்கு அவர் அடிபணிந்துவிட்டார் என்றே சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசி வந்த அதிபர் டிரம்ப், ஈரானை வீழ்த்துவதன் மூலம் மத்திய கிழக்கில் ஒரு “நிரந்தர அமைதியை”க் கொண்டு வந்ததாக வரலாறு தன்னை நினைவு கூர வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்திருக்கக் கூடும்.
இன்னொரு கோணத்தில், சமீபத்தில் வெளியான ஜெப்ரி எப்ஸ்டைன் தொடர்பான ரகசிய ஆவணங்களில் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் பெயர்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், அந்தப் பெரும் சர்ச்சையிலிருந்து தப்பிக்க உலகத்தையே போரின் பக்கம் திருப்பியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இந்தப் போர், அவர்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் பிம்பத்தைக் காப்பதற்கான ஒரு கருவியாக (Political Tool) அமைகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவர்கள் அதிகாரப்பூர்வமாக இதை “உலக அமைதி மற்றும் அணு ஆயுதத் தடைக்கான நடவடிக்கை” என்றே முன்னிறுத்துகின்றனர்.
‘எந்தவொரு போரிலும் முதலில் பலியாவது உண்மை’ (“The first casualty of war is the truth”) என்ற புகழ்பெற்ற கிரேக்கச் சொற்றொடர் உண்டு. தகவல்கள் சிறகடித்துப் பறக்கும் இன்றைய மின்னணு யுகத்தில் உண்மை சவக்குழிக்குள் புதைக்கப்படுகிறது என்றே சொல்லலாம். அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களின் நேர்மையைக் கூட அமிலச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் பிரச்சாரத் தளங்களாக, மக்களின் உணர்வைத் தூண்டி போருக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், வணிக லாபத்திற்காகச் செயல்படுகின்றன. ஈரானின் தெஹ்ரான் அருகே உள்ள ஒரு பகுதியில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலின் போது ஒரு பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் விழுந்தன. இதில் 160க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1300க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில், தாங்கள் ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கியதாகவும், பொதுமக்களின் உயிரிழப்பிற்கு ஈரானின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளின் (Air Defense) தவறான செயல்பாடே காரணம் என்றும் வாதிடுகின்றனர். அது போலவே அமெரிக்க F-35 மற்றும் பிற நவீன ட்ரோன்கள் (Drones) பலவற்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் பறை சாற்றிக்கொண்டது. அமெரிக்க அரசு இதை மறுத்தாலும், அமெரிக்க ராணுவத் தலைமையகம் (Pentagon), ஈரானின் பதிலடித் தாக்குதலில் தங்களது சில விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் செயலிழந்ததை ஒப்புக்கொண்டது. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இந்தப் போர், களத்தில் நடக்கும் போரை விடவும் ஆபத்தானது என்பதை மறுக்கவியலாது. இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் “போர்க்குற்றம்” என்று பல நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன.
ஐ.நா.வின் செயல் (அற்ற) நிலைப்பாடு
ஈரான் மீதான போர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாகவும், மெத்தனமாகவும் இருப்பதாக சர்வதேச அளவில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மார்ச் 11, 2026 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2817, அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களை “கொடூரமானவை” என வன்மையாகக் கண்டித்தது. இந்தத் தீர்மானத்தில், ஈரான் மீது போர் தொடுத்த அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. போர் நிறுத்தம் கோரிய ரஷ்யாவின் முன்மொழிவை ஐ.நா. நிராகரித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்தன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 1,300-க்கும் மேற்பட்ட ஈரான் மக்கள் மற்றும் 168 குழந்தைகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியான போதிலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இதைக் கண்டிக்கவில்லை என விமர்சிக்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை ஐ.நா. நிபுணர்கள் “சர்வதேச சட்ட மீறல்” என்று கூறினாலும், பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பாக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், மார்ச் 2026 தொடக்கத்தில் நடந்த அவசரக் கூட்டத்தில், “மத்திய கிழக்கில் நிலவும் இந்தச் சூழல் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும்” என எச்சரித்ததோடு, தற்போதைய போரால் “ராஜதந்திரத்திற்கான வாய்ப்புகள் பறிபோய்விட்டன” என்றும் வருத்தம் தெரிவித்தார். ஐ.நா.வின் இந்த மெத்தனமான போக்கை எதிர்த்து உலகின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மக்களின் குரல் – அதிகாரத்திற்கு எதிரான அறப்போர்
எந்தவொரு போரிலும் துப்பாக்கிகள் பேசத் தொடங்கும்போது, சாமானிய மக்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. ஆனால் ‘எபிக் ஃபியூரி’ போரில் ஒரு விசித்திரமான ஒற்றுமையைக் காண முடிகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் வீதிகளில் ‘எங்கள் வரிப்பணம் பிணங்களை விதைக்க அல்ல’ (Not in our name) என்று முழங்கும் அமெரிக்கக் குடிமகனுக்கும், தெஹ்ரானின் இடிபாடுகளுக்கு இடையே தனது குழந்தையைத் தேடும் ஈரானியத் தாய்க்கும் இடையே இருக்கும் ஒரே பொதுவான மொழி, ‘அமைதி’.
அமெரிக்காவில் 60%-க்கும் அதிகமான இளைஞர்கள் இந்தப் போரை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். இஸ்ரேலிலும் கூட, பணயக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் தேவையற்ற உயிரிழப்புகளைக் காரணம் காட்டி நெதன்யாகுவின் போர்க்குணமிக்க அரசியலுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. எல்லையின் இருபுறமும் உள்ள மக்கள், இந்தப் போரைத் தங்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கையாகப் பார்க்காமல், சில தனிநபர்களின் அரசியல் இருப்புக்காக தாங்கள் பலியாடுகளாக நிறுத்தப்படுவவதாகக் கருதுகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் ‘போர் வேண்டாம்’ (No War) என்ற ‘ஹேஷ்டேக்’குகள், உலக நாடுகளின் எல்லைகளையும் கடந்து சாமானியர்களை ஒரு புள்ளியில் இணைத்துள்ளது. இது அரசுகளுக்கு எதிரான ஒரு மௌனமான ஆனால் வலிமையான அறப்போராக உருவெடுத்துள்ளது.
அரசியல் லாபங்களுக்காகவும், மத / இன ஒடுக்குமுறைக்காகவும், அதிகாரப் போட்டிக்காகவும் தொடங்கப்பட்ட இந்தப் போர், ஈரானின் ஆட்சி மாற்றத்தில் முடியுமா அல்லது ஒரு நீண்ட காலப் பேரழிவாக மாறுமா என்பது வரும் நாட்களில்தான் தெரியும். ஆனால், ஒரு நாட்டின் தலைவரைப் பேச்சுவார்த்தையின் போதே கொன்றது, சர்வதேச ராஜதந்திர உறவுகளில் ஒரு கறுப்புப் பக்கமாகவே இருக்கும்.
ரவிக்குமார்.
கட்டுரை எழுதப்பட்ட நாள் : மார்ச் 15, 2026.







