\n"; } ?>
Top Ad
banner ad

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்

விஸ்வநாதன்… வேலை வேணும்…. விஸ்வநாதன்ன்ன்ன்ன்ன்ன்ன்….. வேலை….. வேணும்…..

கண்ணதாசன் எம்.எஸ்.வியைக் நேரடியாகக் கேட்பதற்கு பதிலாக ‘காதலிக்க நேரமில்லைபடச்சூழலிற்கு ஒப்ப எழுதிய பாட்டின் முதல் வரி. இந்த வரியை ஒட்டிப் பெயர் வைத்து எடுக்கப்பட்ட படம் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” – ஒரு காட்சி, அந்த காதலிக்க நேரமில்லைபடக் காட்சியைப் போலவே எடுக்கப்பட்டுள்ளது. 

சூரியா நடித்து சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம், பல வருடங்களுக்குப் பிறகு சூரியாவின் ஹிட் எனக் கூறலாம். பெரும்பாலும் நகைச்சுவை, சில சோகக் காட்சிகளென பெருமளவு குடும்ப செண்டிமெண்ட் வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகவும் ரசிக்கமளவுக்கு இருந்த என்பதே உண்மை.

அடிப்படையில் இது ஒரு வித்தியாசமான குடும்பக் கதை. 42 வயதான கோடீஸ்வரர் சஞ்சய் விஸ்வநாத். திருமணம் என்றாலே அலர்ஜி. ஆனால் அம்மா ராதிகாவுக்கு ஒரே கவலை — “நான் போறதுக்குள்ள பேரன் முகத்தையாவது பார்த்துடணும்என்பதுதான். அதற்காக பையன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அம்மா ஆசைப்பட, பையன் திருமணம் வேண்டாம், ஆனால் குழந்தை வேண்டும் என்று ஒரு வேறு ரூட்டில் போகிறார். அமெரிக்கா சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு வருகிறார். அந்தக் குழந்தையின் தாயாக வருபவர் மமிதா பைஜு. அதன் பிறகு குழந்தையைச் சுற்றி உருவாகும் உறவுகள், பிரச்சினைகள், காதல், குடும்பம், செண்டிமெண்ட் என்று படம் நகர்கிறது.

இந்தக் கதையைப் பார்த்தவுடன் நமக்குள் இரண்டு கேள்விகள் வரும்.

ஒன்று — “இது எப்படி குடும்பப் படம்?”

இரண்டு — “இந்தக் கதையை நம்ம ஊர்ல எடுத்திருந்தா, முதல் பாதியிலேயே பஞ்சாயத்து கூட்டியிருப்பாங்களே?”

ஆனால் இயக்குநர் வெங்கி அட்லூரி அந்த இரண்டையும் சமாளித்திருக்கிறார்.

வெங்கி அட்லூரி இதற்கு முன் வாத்திலக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கியவர். இந்தப் படத்திலும் அவருடைய முக்கியமான பலம் கதை சொல்லும் விதம்தான். ஒரு ஸென்ஸிட்டிவ்வான சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு அதை லெக்சராக மாற்றாமல், குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய எண்டர்டெய்ன்மெண்டாக மாற்றியிருக்கிறார். அதுவே படத்தின் பெரிய வெற்றி.

இங்கே சர்ரகஸி இருக்கிறது. வயது வித்தியாசம் கொண்ட காதல் இருக்கிறது. குடும்ப வாரிசு பற்றிய பழைய தலைமுறையின் எண்ணம் இருக்கிறது. இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு மெஸ்ஸேஜ் என்று எதுவும் நம் தலையில் கட்டவில்லை. கதாபாத்திரங்கள் பேசட்டும், சண்டை போடட்டும், அழட்டும், சிரிக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்.

வெங்கி அட்லூரியின் எழுத்தில் இன்னொரு நல்ல விஷயம் ராதிகா, மமிதா, ரவீனா என்று பெண்களுக்கே தனித்துவமான இடம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மமிதாவின் கதாபாத்திரம் வெறும் ஹீரோயின்வேலை மட்டும் செய்யாமல், கதையின் மத்திய கருவாக மாறுகிறது. இந்தப் படத்தில் சூர்யா  நான் சஞ்சய் விஸ்வநாத்என்று நடித்திருக்கிறார். கோட்டு, சூட்டு, பணக்காரத்தனம், கொஞ்சம் அரகன்ஸ், அதற்குள் அம்மா மீது இருக்கும் பாசம் எல்லாவற்றையும் அளவாகச் செய்திருக்கிறார். குறிப்பாக ராதிகாவுடன் வரும் காட்சிகளில் பெரிய பெரிய வசனங்கள் இல்லாமலேயே முகபாவனைகளில் நிறைய விஷயம் கொண்டு வருகிறார்.

மமிதா பைஜூ அவரையே கொஞ்சம் சாப்பிட்டு விடுகிறார்! மமிதா திரையில் வந்தவுடன் படத்தின் எனர்ஜி லெவல் ஏறுகிறது. அவருடைய இன்னஸன்ஸ், நகைச்சுவை, மற்றும் எமோஷனல் சென்ஸ் மூன்றுமே நன்றாக வேலை செய்கின்றன. குறிப்பாக சூர்யாவுடன் அவருடைய கெமிஸ்ட்ரி இயல்பாக இருக்கிறது. இருவருக்கும் இடையிலான உறவு மெதுவாக, நேர்த்தியாக வளர்கிறது. 

அதிலும் மமிதா சிரிக்கும்போது, சூர்யா சிரிக்கிறாரா, கதாபாத்திரம் சிரிக்கிறதா என்று ஒரு கட்டத்தில் நமக்கே குழப்பம்.

ராதிகா சரத்குமார் படத்தின் இன்னொரு பெரிய பலம். வழக்கமான அம்மா செண்டிமெண்ட்காட்சிகளை அவர் செய்தாலும், அதில் ஒரு நெருக்கம் இருக்கிறது. சூர்யாவை சஞ்சய் கண்ணுஎன்று அழைக்கும் விதத்திலேயே அந்த உறவு நிறுவப்பட்டுவிடுகிறது. சிரிக்க வைக்கும் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிகரமான காட்சிகளிலும் சரி, அவர் படம் முழுவதும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

நாசர், ரவீனா டாண்டன், யோகி பாபு, மற்றும் பல துணை நடிகர்கள் அனைவரும் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். திரைக்கதை பற்றி சொன்னால், முதல் பாதி மிகவும் சுறுசுறுப்பாக செல்கிறது.

ஒரு விஷயத்தை நிறுவிவிட்டு அதிலிருந்து இன்னொரு விஷயத்திற்கு போகிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வு, காதல், குழந்தை பாசம் என்று எல்லாம் கலந்திருக்கிறது. அதனால் படத்தில் பெருமளவு தொய்வு இல்லை.

இரண்டாம் பாதியில் கொஞ்சம் மெதுவாகிறது. சில இடங்களில் மோதல் இயற்கையாக வராமல் இங்கே ஒரு பிரச்சினை வரணும்என்று ஸ்க்ரிப்ட் முடிவு செய்த மாதிரி தெரிகிறது. குறிப்பாக சில மிகை உணர்ச்சிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கத்தரிப்பு இருந்திருக்கலாம். 

ஆனால் முழுப் படத்தையும் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அந்தக் குறைகள் பெரிதாகத் தோன்றவில்லை..

அதற்கு முக்கிய காரணம் வசனங்கள்.

வெங்கி அட்லூரியின் வசனங்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன; சில இடங்களில் கதாபாத்திரத்தின் மனநிலையை நேரடியாக சொல்லாமல் புரிய வைக்கின்றன. ஒரு சண்டைக்குப் பிறகு எப்படி பேசுவது தெரியாமல் போவதுதான் மனிதர்களைப் பிரிக்கிறதுஎன்ற கருத்தைச் சுற்றி வரும் வசனம் குறிப்பாக அழகாக இருக்கிறது.

ஒளிப்பதிவு நிமிஷ் ரவி.

படம் முழுவதும் மெருகான தோற்றம். சூர்யா எங்கே நின்றாலும் இவர் 42 வயது கோடீஸ்வரர்என்ற வசதியான தோற்றம் வருவதற்கு ஒளிப்பதிவும் கலை வடிவமைப்பும் உதவுகின்றன. சென்னை காட்சிகளாகட்டும், வெளிநாட்டு இடங்களாகட்டும், வீடு, விடுதி, பயணக் காட்சிகளாகட்டும் காட்சியமைப்புகள் எல்லாம் செழுமையாக இருக்கின்றன.

சில இரண்டாம் பாதிக் காட்சிகள் தேவைக்கு அதிகமாக இருண்டதாகத் தோன்றினாலும், ஒட்டுமொத்த ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்துகிறது.

கலை வடிவமைப்பு பாங்லான்.

இதிலும் பணம் தெரிகிறது.

அதாவது, சூர்யா நான் பணக்காரன்என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் நிற்கும் வீடு, அவர் பயன்படுத்தும் பொருட்கள், அவர் அணியும் உடைகள் எல்லாம் சேர்ந்து அதைச் சொல்லிவிடுகின்றன. நல்ல கலை வடிவமைப்பின் வேலை அதுதான். கதாநாயகனை விட சோபாதான் முதலில் கோடீஸ்வரர் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு!

படத்தொகுப்பு நவீன் நூலி.

நீளமான படம் பெரும்பாலான நேரங்களில் இழுவையாக இல்லாமல் இருப்பது படத்தொகுப்பின் சிறப்பு. குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் வெட்டுகள் நன்றாக வேலை செய்கின்றன. 

இசை ஜி.வி. பிரகாஷ் குமார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை பெரிய பலம். உணர்ச்சிகரமான காட்சிகளில் இசை வந்து உணர்வை இன்னும் அதிகப்படுத்துகிறது; சண்டைக் காட்சிகளில் வேகத்தைக் கொடுக்கிறது. பாடல்கள் அந்த அளவுக்கு தாக்கத்தைக் கொடுக்கவில்லை, ஒரு சில இடங்களில் இரைச்சல் அதிகம் என்றாலும், இசைத்தொகுப்பு முழுவதும் படத்தோடு பொருந்துகிறது.

நடன அமைப்பு சேகர் வி.ஜே. மற்றும் விஜய் பின்னி.

பாடல் காட்சிகளில் நடன அமைப்பு துடிப்பாக இருக்கிறது. குறிப்பாக மமிதாவின் நடன அசைவுகள் நன்றாக இருக்கின்றன. சூர்யாவும் வயதை மறந்து நடனம் ஆடுகிறார். கதையில் நாற்பத்தி இரண்டு வயது, நிஜத்தில் ஐம்பது. நடனத்தில் மட்டும் இருபதுகள்.

சண்டைப் பயிற்சி வி. வெங்கட்.

சண்டைக் காட்சிகள் இந்தக் கதைக்கு அவசியமில்லையெனினும், சிக்ஸ் பேக் சூரியாவிற்காக இரண்டு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன.

படத்தின் நகைச்சுவை பற்றி தனியாக சொல்ல வேண்டும்.

இது முழுநீள நகைச்சுவைப் படம் அல்ல. ஆனால் கதையின் சூழ்நிலையிலிருந்து நகைச்சுவை எடுக்கப்படுகிறது. அதனால் நகைச்சுவைக் காட்சிகள் தனியாக ஒட்டியிருப்பது போலத் தெரியவில்லை. குறிப்பாக பயணக் காட்சிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உரையாடல்கள், மருத்துவமனை தொடர்பான காட்சிகள் போன்றவை நல்ல பொழுதுபோக்கைக் கொடுக்கின்றன.

இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருக்கலாம். சில உணர்ச்சிக் காட்சிகள் நீளமாகின்றன. சில சண்டைக் காட்சிகள் கதைக்குள் இயற்கையாக வரவில்லை. சில பாடல்கள் இன்னும் தாக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.

சூர்யா தனது நட்சத்திரப் பிம்பத்தை கொஞ்சம் ஒதுக்கிவைத்து கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். மமிதா பைஜூ படத்திற்கு புதுமையான உணர்வைக் கொடுக்கிறார். ராதிகா படத்தின் உணர்ச்சிப் பின்புலமாக இருக்கிறார். வெங்கி அட்லூரி சிக்கலான கதைக்கருவை குடும்பப் பொழுதுபோக்காக மாற்றியிருக்கிறார். நிமிஷ் ரவியின் காட்சியமைப்புகள் படத்திற்கு செழுமையான தோற்றத்தைக் கொடுக்கின்றன. நவீன் நூலியின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தைச் சமாளிக்கிறது. ஜி.வி. பிரகாஷின் இசை, குறிப்பாக பின்னணி இசை, படத்தின் உணர்வைத் தூக்குகிறது. வி. வெங்கட்டின் சண்டைப் பயிற்சி வணிகத் திரைப்படத்துக்கான சுவாரசியத்தைக் கூட்டுகிறது. சேகர் வி.ஜே., விஜய் பின்னியின் நடன அமைப்பு பாடல்களை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில்விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் — பெரிய கருத்தைச் சொல்ல வந்த சிறிய குடும்பக் கதை அல்ல; கொஞ்சம் வித்தியாசமான குடும்பச் சூழ்நிலைக்குள் நம்மை அழைத்துச் சென்று, இரண்டு மணி நாற்பது நிமிடத்துக்கும் மேலாக சிரிக்க வைத்து, சில இடங்களில் நெகிழ வைத்து, முடிவில் சரிநல்லாத்தான் இருந்ததுஎன்று சொல்ல வைக்கும் படம்.

வெ. மதுசூதனன்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad