\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அன்புநிறைந்த மணவாழ்வு

குடும்பம் ஒரு பல்கலைகழகம் என்பர். அந்த குடும்பத்தில் தன்னலமற்ற  அன்பு எனப்படுவது ஆழமான நட்பு மற்றும் பிரதிபலன் எதிர்பாராத அணுகு முறையை  கொண்டது. மேலும் மற்றவர்களுடைய நலனில் அக்கறை செலுத்துவது. அன்பான ஒருவர் மற்றவரை மதிப்பவராகவும்,  மற்றவரோடு சுமூகமான நட்பு கொண்டவராகவும், காலத்தால் உற்ற, உதவும்கரமாகவும் இருப்பார்.

குறைகளை மறந்து நம் வாழ்க்கைத் துணையுடன் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல தருணத்தையும் நிறைந்த மனதோடு போற்றுவது வளமான வாழ்வின் நற்பண்பு ஆகும்.  

தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு உறவுகளில் நேர்மறையான அனுபவங்களைக் கட்டியெழுப்புவதாக உள்ளது. வலுவான பாசத்தை கொண்டவர்கள் மேலும் மேலும் அன்புநிறைந்த உறவை வளர்த்துக்கொள்ளவே முயற்சிப்பார்கள்.  

ஜான் கெட்மன் என்ற அறிஞர், திருமணம் பற்றிய அவருடைய  ஆய்வில்,  ஒவ்வொரு ஆரோக்கியமான திருமண வாழ்வில் ஒவ்வொரு குறைகளும் ஐந்து நிறைகள் கொண்டது என்பார். அந்த நிறைகள் போற்றுவதே வலுவான உறவுகளை உருவாக்குகிறது என்பார்.

நம்முடைய வாழ்க்கைத் துணையின் அன்பை நம்மால் ஏற்றுகொள்ளவும், பாராட்டவும் முடியும்.  அவர்கள் மேல் எப்போதெல்லாம் நம்முடைய நன்றியுணர்வை வெளிப் படுத்துகிறோமோ அப்போதெல்லாம் அன்பான உறவு உறுதிபடவும் மேலும் வளரவும் வாய்ப்புள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் அன்பான வார்த்தைகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் சரியான நேரத்தில் பரிந்துரைகளையும் ஆலோசனையையும் அளிக்க முடியும்.

அன்பு வார்த்தைகள்

அன்பு நிறைந்த வார்த்தைகள் வாழ்க்கை துணைக்கு நம்பிக்கையை உருவாக்குகிறது. அன்பான வார்த்தைகள் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ரசிக்கும் அழகிய மெல்லிசை. அவை இயற்கையை எல்லாம் கடந்து உயர்ந்து நிற்கும். வானிலிருந்து புமியை தேடிவந்த தேவதைகள் போன்றது அன்பு நிறைந்த வார்த்தைகளின் பரிமாற்றம். அன்பான வார்த்தைகள் மனிதத்தை நமக்கு உணர வைக்கிறது. நாம் செய்யும், மற்றும்  செய்யப்போகும் செயல்களையெல்லாம் வரையறுக்கும்.

வாழ்க்கை துணையின்  சிறிய சிறிய நல்ல செயலைகளை நாம் பாராட்ட வேண்டும். வாழ்க்கை துணையுடனான என் வாழ்வின் அழகிய நினைவுகளை இங்கு நினைவுகூறுகிறேன். என்னுடைய அன்பின் உருவான மனைவி திருமதி.மஞ்சுளா, அவர் பாசத்தையும் அன்பான வார்த்தைகளையும் நன்கு அறிந்திருந்தார். அவருடன் பேசிய அனைத்து பிரிவினரும், அவருடைய அன்பான வார்த்தைகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஒரு ஆசிரியராக இருந்த அவரை,  அவருடைய பல மாணவர்கள் இன்றும் பெருமையோடு நினைவுகூர்ந்து பாராட்டுகிறார்கள். அவர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தோடு கூடிய கல்வியை தந்து அவர்களுடைய வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.  

அவரது மாணவர்கள் பலர் இங்கிலாந்து,  அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் குடியேறினர். அவர்கள் அனைவரும் ஆசிரியரான என் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தவறாது அனுப்புவார்கள். வெளிநாடுகளில் பணிபுரியும் பல மாணவர்கள் கிறிஸ்மஸ் தினத்தன்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். என் மனைவியும் தன் மாணவர்களோடு உரையாட சிறிது நேரத்தை செலவிடுவார்.

ஒருநாள் என் மனைவி மஞ்சுளாவின் அனுமதியுடன்,  அந்த மாணவர்களிடம்,   ஆசிரியர்மீதான அவர்களுடைய பாசத்தின் இரகசியத்தை அறிய உரையாடினேன் .

அவர்களில் ஒரு மாணவன் தனது தந்தை ஒரு வணிகர் என்றும், அன்பைத் தவிர எல்லாவற்றையும் தனக்கு அளித்தார் என்றும் சொன்னார். அப்போது    “மஞ்சுளா மேடம் மட்டுமே என் தந்தையின் நிலையிலிருந்து, நான் விரும்பும் அன்போடு கலந்த  அறிவை எனக்குக் கொடுத்தார்”  என்றார். மற்றொரு மாணவர் என்னிடம் தன்னுடைய  தந்தை தொழிற்சாலையில் இரவு நேர பணியாளராக பணியாற்றுகிறார். தான் தன்னுடைய தந்தையின் அன்பைப் பெறவில்லை என்றும் கூறினார். மேலும் “மஞ்சுளா மேடம் எனக்கு தந்தையின் அன்பைக் கொடுத்தார்” என்று கூறினார்.

ஒருநாள் திருமதி.மஞ்சுளா ஆசிரியராக இருந்தபோது பெங்களூர் ஸ்ரீ வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் முதல் மாணவர் தினம் கொண்டாடப்பட்டது.  அன்று ஒரு மாணவர் ஆசிரியையான திருமதி.மஞ்சுளாவின் அன்பான பயிற்றுதலையும், மதிப்பையும்  அனைவரின் முன்பு மேடையில் கூறினார்.   “என்னுடைய  உயர் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் நான் வெற்றிகரமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திருமதி.மஞ்சுளா மேடம்  அவர்கள்தான்” என்றார். அன்பான அணுகுமுறையே அனைவரையும் உங்கள்பால் ஈர்க்கிறது.

அன்றாட வாழ்வில் இரக்க செயல்களின் வெளிப்பாடு

நம் வாழ்க்கை துணைவருக்கு தேவையானதை அவர்கள்  எதிர்பார்க்கும் முன்பே நிறைவாகவும் அன்போடும் பிரதிபலன் பாராது செய்யுங்கள்.  அது அனைவருக்கும் சமாதானத்தை பொழிந்து நம்முடைய கசப்பான வெறுப்பு, மற்றும் பழிவாங்கும் எண்ணங்களையும் தவிர்கிறது. கருணை என்பது என் மனைவியின் மதிப்பைக் குறிக்கிறது. சிந்தனையில் கருணையின் ஆழத்தை உருவாக்குகிறது. பகிரும் அன்பையும் உருவாக்குகிறது. அன்பின் வெளிப்பாடுகள் குடும்ப வாழ்க்கையின்  மனநிறைவை தரும்.

என் திருமண வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், என் வேலை இடத்தில் இருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் நாங்கள் வசித்தோம். என் பணியிடத்துக்குச் சென்று திரும்புவதற்காக நான் ஒரு சைக்கிளைக் வைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் மதியவேளையில் உச்சி வெயிலிலும் உணவிற்கு வீட்டிற்கு வருவேன்.  வியர்வையுடன் என் சோர்வுற்ற முகத்தை என் மனைவி நோக்குவார். அவர் என்னை பரிதாபமாக அன்போடும் பார்த்துக்கொள்வார். நான் அறியாதபோது தன் தந்தையிடம் பேசி தினமும் என் அலுவலகத்திற்கு என் வீட்டிலிருந்து மதிய உணவை எடுத்துக் செல்ல ஒரு பையனை ஏற்பாடு செய்தார்கள். அவருடைய  அன்பான மனப்பான்மையும், உற்சாகமான செயல்களும்தான்  எங்கள் திருமண உறவை மேம்படுத்தின என்பதில் சந்தேகமில்லை.

ஒரு மரத்தின் குணத்தை அதன் பழத்தின் தன்மையால் மட்டுமே அறியப்படுகிறது.  மனிதனும் தன்னுடைய நல்ல செயல்களால் மட்டுமே ஒரு மனிதனாக அறியப்படுகிறான். எந்த ஒரு மனிதனும் தன்னுடைய நற்செயல்களை இழக்ககூடாது.   நட்பை விதைக்கிறவர் நட்பை அறுவடை செய்கிறார், அன்பை விதைக்கிறவர் அன்பை அறுவடை செய்கிறார்.

தயவான வார்த்தைகளின் வடிவத்தில்கூடிய  இரக்கத்தின் செயல்கள் அன்பான உறவை விளைவிக்கும். அதுவே நம் வாழ்க்கை துணையின் அணுகுமுறையையும் மாற்றும். ஒரு மனிதனின் பதட்டமான இதயம் அவனைகீழே தள்ளிவிடுகிறது, ஆனால் நல்ல சொற்களோ அவன் வாழ்வை மகிழ்விக்கிறது. (நீதிமொழிகள் 12:25). கிறிஸ்துவின் புதுமைகள் அனைத்தும் அவருடைய கருணையின் வெளிப்பாடே.

ஒருவனை மனிதனாக மாற்ற வல்லமை கொண்டது அன்பு. தயவான வார்த்தைகளின் வடிவத்தில், இரக்கத்தின் செயல்கள் அன்பான உறவை விளைவிக்கும்.  நம் வாழ்க்கை துணையின் மனதை நேர் செய்யும்.

திருமணமான ஒரு மாதம் கழித்து  ஒரு நாள், நான் சோர்வான  உணர்வுடன் வேலையிலிருந்து திரும்பினேன். அன்று வேலை செய்யும் இடத்தில் கடுமையான மன அழுத்ததுடன் இருந்ததால் நான் ஒரு நல்ல மனநிலையில் இல்லை. நான் வீட்டு கதவு மணியை ஒலித்தபோது, என் மனைவி கதவை  திறந்து வழக்கமான சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார்கள். நான் சரியாக முகம் கொடுத்து பதிலளிக்கவில்லை. மாறாக  நான் வீட்டின் தூய்மையை  பற்றி சில கருத்துக்கள் சொன்னேன். என் மனைவி அமைதியாக என் நிலை புரிந்தவராக என் வார்த்தைகளை கேட்டுக்கொண்டார்,  கோபப்படவில்லை.

அன்பு கலந்த அமைதியான முகத்தோடு என்னை சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். பிறகு அவர் ஒரு கப் காபி கொண்டுவந்து  என்னை குடிக்க சொன்னார்கள். அவர் தரும் காப்பியை நான் எப்போதும் ரசித்து குடிப்பேன். சிறிது நேரம் கழித்து நான் சாதாரண மனநிலையில் இருந்ததைக் கண்டபோது, ​​அவர் என் தோள் மீது மெதுவாக தன் கையை வைத்து, அன்போடு சொன்னார்கள்: “நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது ஒவ்வொரு நாளும் நான் உங்களுடைய பாதுகாப்பான வருகைக்காக இறைவனிடம் வேண்டி கொண்டிருப்பேன். உங்களுடைய வருகையை நான் ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். வீட்டிற்கு வெளியே  உங்களுடைய வேலை சுமையை இறக்கிவைத்துவிட்டு இனிமையான உணர்வோடும் அமைதியான உள்ளத்தோடும் வரவேண்டும் என்று வேண்டி கொண்டிருப்பேன்” என்றார்கள்.

அந்த ஒரு நொடிபொழுதில் என் தவறை உணர்ந்து, என் மனைவியிடம் முழு மனதோடு மன்னிப்பு கேட்டேன். அவரது அன்பான வார்த்தைகளும், செயல்களும் முற்றிலும் என்னை மாற்றின. அந்த நாள் முதல், நான் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் கவலைகளையும். மன அழுத்தத்தையும் அங்கேயே விட்டுவிட்டு மகிழ்ச்சியான மனநிலையுடன் வீட்டிற்கு வருவேன்.

கருணையின் வடிவம்

அன்பான அணுகுமுறை மட்டுமே திருமணமான தம்பதிகளின்  உறவை மேம்படுத்த உதவுகிறது. வலுவான உறவு கொண்டவர்கள் பல ஆண்டுகளாக உறவை தொடர்ச்சியாக வளர்த்துக் கொள்வது மிக முக்கியம் என்பதை அறிந்திருக்கிறார்கள். அன்பு  ஒருவருக்கொருவர் உதவ வழிசெய்கிறது. உதாரணமாக, சில உறவுகளில் ஒருவர் ஒரு முடிவு எடுக்கமுடியாமல் சிரமப்படும்போது,  அவருடைய வாழ்க்கை துணைவர் உதவ முன்வருவார். அப்போது அவருக்கு முடிவெடுப்பதும் மிக  எளிமையாக இருக்கும்.  

ஒருமுறை என் தனிப்பட்ட காரணங்களுக்காக, கோயம்புத்தூரில் உள்ள காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் இருந்த பணியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு பெங்களூரில் எனது குடும்பத்துடன் தங்கநேரிட்டது. அப்போது, ஒரு வாரகாலம் கழித்து,  ஒருநாள் நான் வீட்டில் மிகுந்த கவலைபடர்ந்த முகத்தோடு  உட்கார்ந்திருப்பதை  என் மனைவி கவனித்தார்கள். பின்பு, என்னை அழைத்து “நீங்கள் எம்.எஸ். ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வரை சந்திக்கலாமே!” என்று ஆலோசனை  சொன்னார்கள்.

நானும் முகமலர்ச்சியோடு அவருடைய ஆலோசனையைப் பின்பற்றி கல்லூரியின் முதல்வரை சந்தித்தேன். என்ன ஆச்சரியம்! அந்த முதல்வர் என்னை மிகந்த மகிழ்வுடன் வரவேற்று பேசினார்கள். மேலும் என்னை அந்த கல்லூரியின் மின்னணுவியல் துறையின் தலைவராக உடனே  நியமித்தார்கள். மறுநாள் நானும் மிக்க மகிழ்வோடு அந்த  கல்லூரியில் பொறுப்பேற்றுக்கொண்டேன். என் மனைவி எப்பொழுதும் எனக்கு சரியான நேரத்தில் சரியான பரிந்துரைகளையும் ஆலோசனையையும் அளிப்பவர் என்பதை நினைத்து  பெருமைப்படுகிறேன்.

நாம் கற்றுக்கொண்டது

அன்பை மற்றவர்களிடம் காட்டுவது மிகவும் எளிது. அன்பு என்றுமே  வலிமையானது. அன்பை புரிந்து கொள்வதைவிட அன்பு செலுத்துவது எளிது.  அன்பு மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று.  அன்பில்லாத மனித வாழ்க்கை தனிமையான இருண்ட சிறையிலிருப்பது போன்றது. வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் நம்  தயவை வெளிப்படுத்தும் திறன் நம்மில் எல்லோருக்கும்  உண்டு. அன்பும், கருணையும் நம்மை சார்த்தவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது.    நம்முடைய அன்றாட வாழ்க்கையில்  ஒவ்வொருவருக்கும் மற்றவர்களை  அன்பு செய்ய எண்ணற்ற வாய்ப்புகள் உண்டு.

குறிப்பாக நம் வாழ்க்கை துணையிடம் முழுமனதோடு அன்பு செய்யவேண்டும். நம் வாழ்வில் ஆழமாக எண்ணிப்பார்த்தால், அன்பினால் மட்டுமே நம்முடைய திருமண உறவின் பலம் அதிகரிக்கும். அன்னை தெரேசாவின் அறிவுரை; “கடவுளுடைய இரக்கத்தின்  உயிருள்ள வெளிப்பாடாக,  எப்போதும்  உன் முகத்தில் அன்பு,  உன் கண்களில் இரக்கம்,  உன் புன்னகையில் தயவு,  உன் அன்பான வாழ்த்துக்களில் கனிவு கொண்டிரு.”

கடவுள் மேல் அன்புகொண்டு அன்னை தெரேசாவின் அறிவுரைகளை கடைபிடித்தால், நம் வாழ்வில் அமைதியையும், அன்பான  உறவையும், கடவுளின் அருளையும் பெற்றுக்கொண்டு, நம் மணவாழ்வு என்றும்  வழமான மற்றும் வெற்றிகரமான   அன்பும் கருணையும் நிறைந்த மணவாழ்வாக அமையும்.

அன்புடன்,

Dr. அந்தோனி  தாமஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad