\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

குடிமகனின் மகன்

Filed in கதை, வார வெளியீடு by on November 12, 2017 1 Comment

1966 ஆண்டில் நான் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றபின், சிறீ லங்கா தொலை தொடர்பு திணைக் களத்தில் சிரேஷ்ட பொறியியலாராக உத்தியோகம் கிடைத்து வேலை செய்த காலகட்டத்தில், எனக்கு அறிமுகமான பல இன நண்பர்கள் அதிகம். அதற்குக் காரணம் நான் தமிழ் ஆங்கிலம், சிங்கள மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதோடு எல்லோருடனும் அன்பாகப் பழகும் குணம் உள்ளவன்.  அப்போது  திருமணமாகாத நான் தங்கியிருந்தது கொழும்புக்கு அருகேயுள்ள வெள்ளவத்தையில், சம்மரி என்று அழைக்கப்படும மூன்று அறைகளைக் கொண்ட வாடகைவீட்டில். ஒரு அறைக்குள் இரண்டுபேராக சம்மரியல் வாழந்த நான் உற்பட ஆறு பேரில் நால்வர் அரசு சேவையிலும், இருவர் தனியார் ஸ்தாபனங்களிலும் வேலை செய்தவர்கள்.

ஒவ்வொரு சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் சங்கு நாயர் என்ற மளையாளச் சமையல்காரன் சம்மரிக்கு வந்து உணவு தயாரிப்பான். மற்றைய நாட்களில் கடைகளில் தான் நாங்கள் சாப்பிடுவோம்.

சனி ஞாயிறு தினங்களில் ஒவ்வொருவரும் எங்களின் நண்பன் ஒருவனை விருந்துக்கு அழைக்கலாம். எனது மோட்டார் சைக்கிலை ரிப்பெயர் செய்வதற்கு சிரிபாலா என்பவனின் கராஜுக்கு எடுத்துச் சென்ற போது அஙகு வேலை செய்யும்  அறிமுகமான மெக்கானிக்; தான் செல்வராசா என்பவன். அவனை “பண்டா” என்ற பட்டப் பெயர்வைத்து செல்லமாக எல்லோரும் அழைப்பார்கள். தமிழனாக இருந்தும், சிங்களம் சரளமாக பேசியபடியால் அவனை எல்லோரும் பண்;டா என்ற பெயரை இலங்கையின் பிரதமாராக இருந்த பண்டாரநாயக்கா என்பரின் நினைவாக அவனுக்கு நண்பர்கள் வைத்தது அந்த அடைப்பெயர்.

பண்டா எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும், முடியாது என்று சொல்லாமல் செய்வான். நான் அப்போது வைத்திருந்;த 3.5 ஹொண்டா  மோட்டார் சைக்கிலைப் பராமரிப்பது பண்டாவின் பொறுப்பு. அதைத் தினமும் துடைத்து பளீச் என்று மின்னும் விதத்தில் பலர் ரசிக்கும் படி வைத்திருப்பான். அவன் சேவைக்காக நான் அவனுக்கு சிறுதொகையை மாதம் மாதம் கொடுத்து வந்தேன். அவனுக்கு நிரந்தர வேலை என்று ஒன்றுமில்லை. ஏதோ ஒரு மோட்டார் சைக்கில் கராஜில் சில நேரங்களில் உதவியாளனாக வேலைசெய்தான். அதில் கிடைக்கும் வருமானம் அவனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை.

“ என்ன பண்டா இப்படி உத்தியோகம் இல்லாமல் எப்படி தொடர்ந்து இருக்கப்போகிறாய்? நான் ஒரு நாள் அவனைக் கேட்டேன்.

“ அதற்கு அவன் “ தம்பி, நான் இளம் வயதில் படிக்கவேண்டிய நேரம் படிக்காமல் கூட்டாளிகளோடு விளையாடித் திரிந்தேன். படித்திருந்தால் எனக்கு உத்தியோகம் கிடைத்திருக்கும். எனக்கு தெரிந்தது மோட்டார் சைக்கில் திருத்துவதும், டிரைவர் வேலையும் தான்”இ என்றான் பண்டா.

                                                            ******

நான் அரசினால், பயிற்சிபெற இரு வருடங்கள் இங்கிலாந்து சென்று திரும்பிய பின் என் திருமணத்துக்குப் பண்டாவை அழைக்கத் தேடினேன், அவன் கிடைக்கவில்லை. பண்டா வேலை செய்த காராஜில் போய் விசாரித்தேன்.

“ ஐயா, பண்டா ஒரு வருஷத்துக்கு முன்பே ஒமானுக்கு டிரைவர் வேலை கிடைத்துப் போய்விட்டான் என்றான் கராஜ் உரிமையாளன் சிரிபாலா. எனக்கோ அதைக் கேட்டதும் மனதுக்குள் சந்தோஷம். “ எங்கிருந்தாலும் பண்டா நல்லாக இருக்கட்டும் என மனதுக்குள் வாழ்த்தினேன். அதோடு எங்கள் நட்பு முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் எங்கள் நட்பு திரும்பவும் ஒரு நாள் திரும்பும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. திரும்பவும் பண்டாவை ஐந்து வருடங்களுக்குப் பின், நான் ஒமானுக்கு வேலை கிடைத்து என் குடுமபத்தோடு போனபோது சந்திப்பேன் என நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் நான் மீன் கடைக்கு மீன் வாங்கச் செற்றிருந்தபோது ஏற்பட்டது திரும்பவும் அச் சந்திப்பு. பண்டா, தன்னோடு வேலை செய்யும் ஒருவரோடு மீன் கடைக்கு மீன் வாங்க வந்திருந்தான்.

“ என்ன பண்டா எப்படி இருக்கிறாய். கண்டு வெகுகாலம்”, என்றேன்.

“ ஏதோ கடவுள் புண்ணியத்தில் எனக்கு ஒமானில் டெய்லர் வுட்ரோ  கொந்துராத்து ஸ்தாபனத்தில்  டிரைவர்  வேலை கிடத்தது. இங்கு வந்து நான்கு வருடங்களாகிவிட்டது. இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை யாழ்ப்பாணம் போய்வருவேன். எனது இரு சகோதரிகளையும்; திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். என் அப்பாவை வயது வந்த காலத்தில் தொடர்ந்து வேலை செய்யவேண்டாம் என்று சொல்லிநிறுத்திட்டேன். நான் ஒவ்வொரு மாதமும் அனுப்பும் பணம் அவர்கள் வாழப் போதுமானது”.

“ பண்டா,  உன் நல்ல மனசுக்கு கடவுள் உனக்கு நல்லவழி காட்டிவிட்டார். அது சரி உன் அப்பா என்னவாக இருந்தார்” நான் பண்டாவைக்  கேட்டேன்.

“ சலவைத்தொழிலாக இருந்தவர். யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடத்தில் அவரைத் தெரியாத   வீடுகள் இல்லை”. யாழ்ப்பாணம்,  கந்தர்மடத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி தன் அப்பா என்று பண்டா கூறியவுடன்.

“பண்டா அவர் பெயர் என்ன”? என்னையறியாமலே என் வாய் கேட்டுவிட்டது,

“என் அப்பா பெயர் அண்ணாமலை. என்பாட்டனார் பெயர் சின்னமலை அவர்கள் பரம்பரையாக சலவைத்தொழில் செய்துவந்தவர்கள். குடிமகன் எனறு நல்ல மரியாதை என் அப்பாவுக்கு பல வீடுகளில் இருந்தது” பண்டா சொன்னான்.

எனக்கு “குடிமகன்” என்ற வார்த்தை நான் கேட்காத புதிய வார்த்தையாக இருந்தது. அதன் அர்த்தத்தை பண்டாவிடம் கேட்டேன்.

“ குடிமக்களை பஞ்சமர் என்று அழைப்பார்கள். அதில் வண்ணான் என்ற சலைவைத் தொழிலாளி, அம்பட்டன் என்ற சவரத்தொழிலாளி, நளவர், பள்;ளர், பறையர் ஆகிய ஐந்து சாதியினர் உள்ளடங்குவார்கள். இவர்கள் ஐவருக்கும் வேளாளச் சாதி மக்களின் வீடுகளில் நடக்கும் வைபவங்களில் முக்கிய பங்குண்டு. இது ஊர் வழக்கம். திருமணத்துக்கு மணமக்களை வரவேற்கும் போது வெள்ளைத் துணி விரிப்பது முதற் கொண்டு சாவு வீடுகளில்; நடக்கும் கிரிகைகளில்; அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. திருமணத்தின் போது வீட்டு வாசலில் இரு வாழைமரங்கள்; குலைகளோடு கட்டப்பட்டிருக்கும.; திருமணம் முடிந்தவுடன், வாசலில் உள்ள வாழைமரத்தின்; வாழைக் குலைகள் அவ்வீட்டு குடிமக்களான வண்ணானுக்கும், அம்பட்டனுக்கும் போய் சேர்வது மரபு . அதோடு மரணவீடுகளில் பறைமேளம் அடிப்பது அவ்வீட்டுர் குடிமகனான பறையனின் உரிமை. இது மரபுவழிவந்த தேசவழமை“, பண்டா விபரம் சொன்னான்.

பஞ்சமர் பற்றிய முழு விபரங்களை எனக்கு பண்டா சொன்னபோது எனக்கு அது புதுமையாக இருந்தது. அப்படியானால், தேசவழமை சட்டம் யாழ்ப்பாணத்தில் சாதிவேற்றுமைக்குத் துணைபோயிருக்கிறதா? என்றது என் மனம்.

“ அவன் சொன்ன விபரங்கள் என்னை திகைக்க வைத்துவிட்டது, காரணம் கந்தர்மடத்துக்கு அருகாமையில உள்ள எங்கள் நல்லூர் வீட்;டுக்குப் பரம்பரை பரம்பரையாக சலவத் தொழில் செய்பவர்கள் அண்ணாமலையும், சின்னாமலையும் என்று என் அம்மா எனக்குச் சொன்னது என்நினைவுக்கு வந்தது. நான் எனக்கு பண்டாவின் தகப்பனை என் பெற்றோருக்கு தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளவில்லை. சோசலிஷ கொள்கையில் நம்பிக்கை உள்ள நான், சாதி வேற்றுமையை வெறுப்பவன். குடிமகனின் மகனோடு என்நட்பு இருந்ததையிட்டு எனக்குள் மகிழ்ந்தேன்.

ஒமானில் விடுமுறை தினங்களில் நாம் இருவரும் கடற்;கரை சீப் என்ற கடற்கரையோரக் கிராமத்துக்குச் சென்று மீன் வாங்கி வந்து சமைத்தச் சாப்பிடுவோம். பண்டாவே கொண்டு வந்த மீன்களைத் துப்பரவு செய்து, வெட்டி சமைப்பதற்கு என்மனைவியிடம் கொடுப்பான். அதுவுமல்லாமல் சமையலுக்குத் தேவையான உதவிகளைச் செய்வான். நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவோம் சில சமயங்களில் என்மகளுக்குப் பரிசு பொருட்ளைப் பண்டா வாங்கி வருவான். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்க மாட்டான். காலப்போக்கில் பண்டா என் குடும்பத்தோடு ஒருவனாகிவிட்டான். அவன் பூர்வீகத்தைப் பற்றி என் மனைவிக்கும், மகளுக்கும் சொல்ல நான் விரும்பவில்லை.

           

                                            *******

நான் ஒரு வருடம் ஓமானில் வேலை செய்தபின் துபாயுக்கு வேலை கிடைத்தபோன பின்னர், எனக்கு பண்டாவோடு இருந்த தொடர்பு இல்லாமல் போய்விட்டது. சில வருடங்களுக்குபின் நான் என் குடும்பத்தோடு நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது என் மகள் ருதுவானாள். அவளுடைய சாமத்திய சடங்கைத் தெரிந்த ஊர் சனங்களை அழைத்து பிரமாதமாக நடத்த வேண்டும் என்பது என் அக்காவினதும் அண்ணனிதும் விருப்பம்.. எனக்கு அதில் துளி கூட விருப்பமிருக்கவில்லை. வைபவத்துக்கு மகளுக்குச் சேலை வாங்க நான்  ராஜ்கோபால் சேலைக் கடைக்குப் போய் இருந்த போது பண்டாவை சந்திப்பேன் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனது இரு சகோதரிகளோடு சேலை வாங்க பண்டா வந்திருந்தான். தன சகோதரிகளை என் குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தினான்.

“ என்ன பண்டா திரும்பவும் பல வருடங்களுக்குப் பின் உன்னைச் சந்திப்பதில் மிகவும் சந்தோஷம். இப்பவும் நீ ஓமானிலா வேலை செய்கிறாய்”? நான் பண்டாவைக் கேட்டேன்.

“இலலை தம்பி. நான் இப்ப யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வந்து இரண்டு வருடங்களாகிவிட்டது”.

“ அப்ப இப்ப யாழ்ப்பாணத்திலா வேலை”?

“ நான் இப்ப மூன்று லொரிகள் வாங்கி சாமான்களை கொழும்புக்கு கொண்டு போய் வரும் பிஸ்னஸ் செய்கிறேன். அதோடு கார், மோட்டார் சைக்கில் திருத்தும் கராஜவைத்திருக்கிறன். மூன்று பேர் என் கடையில் வேலை செய்கிறார்கள். என் சகோதரிகளும் எனக்கு உதவி” என்றான் பண்டா.

“ எனக்கு கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது பண்டா” என்றேன்.

என் மகள் ருதுவானதையும், சாமத்திய சடங்கு வைபவம் ஒன்று வைக்க தீரமானித்ததாக அவனக்குச் சொன்னேன்.

“ கேட்க சந்தோஷமாக இருக்கு. உங்களுக்கு ஏதும் உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் புது பேஜோ 404 கார் ஒன்று உண்டு. அதை நீங்கள் யாழ்ப்பாணத்தில் நிற்குமட்டும் பாவிக்கலாம்” எனாறான் பண்டா பெருமையோடு. என்னால் அவன் சொன்னதை நம்பமுடியவில்லை.

“ பண்டா, நீ அவசியம் என் மகளின் சாமத்தியச் சடங்கு வைபவத்துக்கு வந்து என் குடுபத்தோடு சேர்ந்து கோண்டாடி, உணவருந்தி செல்ல வேண்டும். இனி எப்ப உன்னை சந்திப்பேனோ எனக்குத் தெரியாது” என்றேன்.

சாமத்தியச் சடங்கு நடக்க இருக்கும் நாள், நேரம், இடம்; ஆகிய விபரங்களையும் அவனுக்குச் சொன்னேன்

“ எங்கள் வீடு எங்கு இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா”?

“ தெரியும் தம்பி.” என்றான் சுருக்கமாக.

“ அப்ப நான் உன்னை காலை பதினொன்று மணியளவில் எதிர்பார்க்கிறேன்” என்றேன் நான்.

“ தம்பி இதோ கார் சாவி .நீங்கள் யாழ்ப்பாணம் இருக்கு மட்டும்; வைத்திருங்கள்”, என்ற கார் சாவியை என்னிடம் தந்தான். என்னால் மறுக்க முடியவில்லை.

******

என் மகளின் சாமத்திய சடங்கிற்கு கந்தர் மடத்தில் உள்ள பல குடும்பங்கள் வந்திருந்தார்கள். என் அக்கா யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாக பல வருடங்கள் வேலை செய்தபடியால், அவவுக்கு பல குடும்பங்களைத் தெரிந்திருந்தது. என் அண்ணாவுக்கும் பல குடும்பங்களைத் தெரியும். என் அக்காவும் அண்ணாவும் பழமையில் ஊறியவர்கள். சாதி, சனம், முறை பார்ப்பவர்கள்.  எனது முற்போக்குக் கொள்கையை அவர்கள் அவ்வளவுக்கு வரவேற்பதில்லை. என் குடும்பத்துக்கு, சாமத்திய சடங்கிற்கு வந்திருந்த ஒரு சில குடும்பங்களை மாத்திரமே தெரியும்.

என் மகளை கிணற்றடியில் குளிப்பாட்டி வீட்டுக்கு மேளத்தோடு அழைத்த வரும் போது வெள்ளைத்துiணி விரித்து அழைத்து வரப்பட்டாள்;. அதை வழமையாகச் செய்யும் குடிமகன் அண்ணாமலைக்குப் பதிலாக எனக்கு அறிமுகமாகாத ஒரு குடிமகனே வெள்ளை விரிக்கும் கிரிகைகளைச் செய்தான்.

அதைக்கண்ட நான், “என்ன அக்கா வெள்ளைத் துணி விரிக்கும் வண்ணான் எனக்குத் தெரியாத முகமாய் இருக்கிறதே. இப்போது உங்கள் குடும்பத்துக்கு புது வண்ணாண் போலத் தெரிகிறது.? என்றேன் ஒன்றும் தெரியாதவன் போல்.

“அதை ஏன் கேட்கிறாய் தம்பி. இப்ப அண்ணமாலை வண்ணான் வேலை  செய்வதில்லை. அது அவன் மகன் அவனுக்கு இட்ட கட்டளையாம். நாலு காசு அண்ணாமலையின் குடும்பத்துக்கு வந்துவிட்டது. கல் வீடு கூட கட்டி வசதியாக வாழ்கிறான். ஆனால் தன் தொழிலை எங்கள் குடும்பத்துக்கு தன் தூரத்துச் சொந்தக்காரப் பையன் பொன்னுத்துரை செய்வான் என்று சொன்னான். நாங்களும் அதை சரியென்று சம்மதித்தோம்” என்றாள் என் அக்கா.

“ அப்படியா. யார் குத்தி அரிசி ஆனாலும் சரிதானே அக்கா” என்றேன் சிலேடையாக.

“ அது சரி நீ ஆருடைய புது விலை உயர்ந்த காரைப் பாவிக்கிறாய்”?

“  அக் கார் எனது நீண்ட காலம் நண்பனான பண்டா என்ற செல்வராசாவினது. பல காலம் ஓமானில் டிரைவராக வேலை செய்;து? சம்பாதித்து, இப்போ சொந்தத்தில் மூன்று லொரிகளும்,; ஒரு கார் ரிப்பையர் செய்யும் கராஜ் வைத்திருக்கிறான். அவனும் கந்தர்மடம் தான்”.

“ எனக்கு இப்போ நினைவுக்கு வருகுது, அண்ணாமலை சொன்னவன் தன் மகன் செல்வராசா ஒமானில் டிரைவராக வேலை செய்து சம்பாதித்து இப்போ சொந்தத்தில் பிஸ்னஸ் செய்கிறான் என்று. மகன் கட்டளைப்படி  தான் வண்ணான் வேலை செய்வதில்லை என்று. நீ சொல்லும் செல்வராசா அவனோ தெரியாது”, அக்கா என்னைக கேட்டாள். அவளுக்கு நான் அண்ணாமலையின் மகனோடு சினேகிதம் வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று அவள் பேச்சில் இருந்து தெரிந்து. அவளோடு என் அண்ணாவும் சேர்ந்து கொண்டார்.

“ தம்பி. சாமத்திய சடங்குக்கு கநதரமடத்தில் வாழும் உயர்சாதி சனகள் பல பேர் வந்திருக்கினம். அவர்களுக்கு நீ ஒரு வண்ணானின் மகனோடு நட்பாயிருக்கிறாய் என்று அறிந்தால்; என்ன பேசுவினம்? எங்கள் குடும்ப கௌரவத்துக்கு  இழுக்கு வந்து விடும்” என்றார் கோபத்தோடு.

“ அண்ணா உங்களுக்குத் தெரியும் எனக்கு சாதி வேற்றுமை காட்டுவது பிடியாது என்று. காலத்தோடு சாதி பார்ப்பது மறைந்து வருகிறது. உங்களுக்கும், அக்காவுக்கும் என் நண்பன் பண்டாவைப் பிடிக்காவிட்டால் எனக்கும் பிடிக்கக் கூடாது என்பதில்லை. பண்டா என் மகளுக்கு ஒரு இரத்தினக் கல் பதித்த தங்க மோதிரம் பரிசாக கொண்டு வந்திருக்கிரான். எண்டை மகளை சிறு வயது முதற் கொண்டே ஒமானில் தெரியும். பண்டா சாமத்திய சடங்குக்கு வந்து ஊர் சனஙகளோடு இருந்து விருந்து சாப்பிடுவதில் என் குடும்பத்துக்குப்  பூரண சம்மதம்” என்றேன் நான் உறுதியாக.

“நீ அழைத்து விருந்துக்கு வந்திட்டான் உன் நண்பன். ஆனால் ஒன்று மட்டும் சொல்லுகிறன் அவன் எல்லோரோடும் ஒன்றாக சபையில் இருந்து சாப்பிடுவதை நானும் உன் அண்ணாவும் அனுமதிக்க மாட்டோம்”, என் அக்கா திடமாகச் சொன்னாள். எனக்கு அது சவாலாக அமைந்தது,

“ என்ன அக்கா சொல்லுகிறீர்கள்? இந்த சாமத்திய சடங்கு முழுவதுக்கும் பணம் செலவு செய்தது என் குடும்பம். அதானால் எனக்கு, என் நண்பனுக்கு என் விருப்பப்படி சபையில் அமர்த்தி விருந்து கொடுககு;ம் உரிமை இல்லையா? இது என்ன நியாயம்”?, நான் என் குரலை உயர்த்திப் பதில் அளித்தேன்.

எனது தர்க்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் என் சகோதரங்களுக்கு போய்விட்டது.

“ நீ என்ன செய்ய வேண்டுமானாலும்; உன் விருப்பப்படி செய் “ என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, என்னோடு மேலும் தர்க்கம் செய்யாமல் அவ்விடத்தை விட்டு; அண்ணரோடு அக்கா போய்விட்டாள்.

நான் நேரே பண்டாவிடம் போய் செம்பும் தண்ணியும் கொடுதது, ” பண்டா வாரும் நாங்கள் இருவரும்; ஒன்;றாகச் சபையில் இருந்து சாப்பிடுவோம்” என்றேன்.

பண்டா, நானும் எனது சகோதரங்களும் பேசியதைக் கேட்டோ என்னவோ

“தம்பி எல்லோரும் சாப்பிட்ட பிறகு நான் சாப்பிடுகிறேன்”, என்றான்.

அப்போது அங்கு வந்த என் மனைவி “ பண்டா உமக்கு விருப்பமான உருளைக்கிழங்கு துவையலும் ,  முருங்கக்காய் குழம்பும் செய்த வைத்திருக்கிறோம். ஆனால் இண்டைக்கு உமக்கு பிடித்த மீன் கறி செய்யவில்லை. நீர் மகளுக்கு கொடுத்த சிவப்பு இரத்தினக் கல் பதித்த மோதிரம் அழகாக இருக்கிறது. அவளுக்கு நல்லாக பிடித்துக்கோண்டது. எழும்பி வாரும் எங்களோடு சாப்பிட. நீர் எங்கள் குடும்பத்தின் ஸ்பெசல் விருந்தினர்”, என்றாள். பண்டாவால் எங்கள் குடும்பத்தின்; வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. நான் கொடுத்த தண்ணீர் செம்பை புன்னகையோடு வாங்கி, கால் கை கழுவப் போனான். பல கண்கள் எங்களை உற்றுநோக்கிக் கொண்டிருந்தன.

       பொன் குலேந்திரன் – கனடா

 

Tags: , , , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad