banner ad
Top Ad
banner ad

நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….

டிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம்.   நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது.

         டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள்  எல்லாரும்  இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப்  பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்.

        ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு  முன், மரியாள் என்ற ஒரு யூத இளம்பெண், கலிலேயாவிலுள்ள நசரேத் என்ற ஒரு சிறிய நகரத்தில் தன் தந்தை ஜோக்கீம் மற்றும் தாயார் அன்னம்மாளுடன் வாழ்ந்து வந்தார், அப்போது ஜோசப் என்கிற ஒரு தச்சனுக்கு, பெற்றோர்களால், மரியாளின்  திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்தது.

        மரியாள் கடவுளின் ஆசீரையும், அன்பையும் பெற்று புனிதவாழ்வு வாழ்ந்து வந்தார்.

        அப்போது ஒருநாள், கடவுள், தன் தூதன் கபிரியேலை மரியாளிடம் அனுப்பினார். தேவதூதர் மரியாளைப் பார்த்து, “அருள் நிறைந்தவரே, கர்த்தர்  உம்முடனே இருக்கிறார்” என்று அவர்களிடம் சொன்னார். தேவதூதர் இப்படி சொன்னதும் மரியாள், இது  எந்த விதமான வாழ்த்துக்களோ என்று எண்ணிக் குழம்பினார்.

        மரியாளுடைய குழப்பத்தை உணர்ந்த  தேவதூதர் அவர்களிடம், “மரியாள் பயப்படாதிருங்கள், ஏனென்றால் கடவுள் உங்கள் மேல்  கருணை  காட்டியுள்ளார்” என்றார்.

        மேலும் தேவதூதர்  “பரிசுத்த ஆவியானவர் உங்கள்  மேல் இறங்கிவருவார், உன்னதமானவருடைய வல்லமையின் நிழல் உங்கள் மேல் விழும். நீங்கள்  கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுப்பீர்கள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்கள். அவர்   மேன்மையானவர், அவர் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுவார்” (லூக்கா 1: 35-37) என்றார்.

        மரியாள், கடவுளுடைய விருப்பத்தை   ஏற்றுக்கொண்டு, “இதோ, நான் ஆண்டவருடைய அடிமை. உங்கள் வார்த்தையின்படியே  எனக்கு  ஆகக்கடவது” என்றார். (லூக்கா 1:38).

பெத்லகேம் நோக்கி ஒரு பயணம்…

        அக்காலத்தில், சீசர் அகஸ்டஸ் என்ற மன்னர் யுதேயா  நாட்டை ஆண்டுகொண்டிருந்தார். அவர், அனைவரையும் மக்கள் தொகை கணக்கீட்டுக்காக தங்கள் பெயர்களை, பெத்லகேமில் பதிவு செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்.  அரசனின் ஆணைக்குக் கீழ்படிந்து ஜோசப்பும்,  மரியாளும் நசரேத்திலிருந்து   பெத்லகேமுக்குப்   புறப்பட்டார்கள்.

        அந்த நேரத்தில் இறை அருளால் கருவுற்றிருந்த மரியாள் குழந்தைபிறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஜோசப்,  மரியாளைக் கழுதையின் மேல் அமரவைத்து காடுகள் மற்றும் மலைகளின் வழியாக, ஏறக்குறைய  100 மைல்கள் தூரம்கொண்ட  நீண்டபயணத்தை, கால் நடையாகத் தொடங்கினார்.   பெத்லகேமுக்கு வந்து சேர்ந்தபோது மரியாள் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள்.  அங்கு தங்குவதற்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை. எல்லா சத்திரங்களின் கதவுகளையும் ஜோசப் தட்டிப்பார்த்தார். யாருமே இடம் தரவில்லை.  நீண்ட தேடலுக்கு பிறகு கடைசியாக, அவர்கள் தங்குவதற்கு ஓர் இடம் கிடைத்தது.

ஆனால், அது……. ஒரு மாட்டுத்தொழுவம்.

குழந்தை இயேசுவின் பிறப்பு……

          அந்த மாட்டுதொழுவத்தில் ​​மரியாள் மகனைப் பெற்றெடுத்தார்.  மாட்டுத் தீவன தொட்டியில், குழந்தைக்கு வைக்கோலான படுக்கையைச் செய்து அதன்மேல் துணியால் போர்த்தப்பட்ட  குழத்தை இயேசுவைப் படுக்கவைத்தனர். (லூக்கா 2: 7).

அன்பின் உருவமான குழந்தை   இயேசு எளிமையாக மாட்டுதொழுவத்தில் பிறந்தார்.  

இயேசு பரலோகத் தந்தையின் மகன் ஆவார்.  மேன்மைக்குரிய கடவுளின் மகனாக இருப்பினும், அவர் ஏழையாக பிறக்க விரும்பினார். இவ்வாறு, அவர் தன்னையே  தாழ்த்திக் கொண்டார்.

        கடும் குளிர்…. இரவு நேரம்…. அந்த மாட்டு தொழுவத்திலிருந்து சில மைல் தூரத்தில்,  இடையர்கள் வயல்களில் ஆடுகளோடு தங்கியிருந்தார்கள். அந்த இரவுநேரத்தில் திடீரென பிரகாசமான ஒளியோடு ஒரு தேவதூதர் அவர்களுக்குத் தோன்றினார். அவர்களுக்கு ஒரே பயம்.

        அப்போது, தேவதூதர் “இரட்சகர், மெசியா, பிறந்திருக்கிறார்”  என்ற நற்செய்தியை அவர்களுக்குக் சொன்னார்.  உடனே  அநேக தேவதூதர்கள்    “கடவுளுக்கு மகிமை உண்டாவதாக! அவர் பூமியில் விரும்புகிறவர்களிடத்தில் சமாதானம் உண்டாவதாக” (லூக்கா 2:14) என்று பாடினார்கள்.

இடையர்களின் சந்திப்பு……

        உடனே இடையர்கள் ஆவலோடு, தேவதூதர் சொன்ன இடத்திற்கு குழந்தை இயேசுவைக் காணச்   சென்றார்கள் .   

        அங்கு மரியாளையும், யோசேப்பையும், குழந்தையையும் கண்டார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்து இருந்தது. உடனே கடவுளை மகிமைப்படுத்தி, துதித்தார்கள். (லூக்கா 2:20).

        முதன் முதலாக, எளியவர்களுக்கு இறைமகன் இயேசுவின் பிறப்பு சொல்லப்பட்டது.  இவ்வாறாக இயேசு, பிறந்த முதல் நாளே, தன்னை ஏழை மக்களில் ஒருவர் என்று வெளிப்படுத்தினார்.

இயேசுவின் வருகையை பற்றிய தீர்க்கதரிசனம்…

        விவேகத்தின் சக்தியைக் கொண்ட அறிவைப் பெற்று, சரியான முடிவு எடுத்து ஒவ்வொரு நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்தும் ஒரு நபர் அறிவார்ந்த நபராக அறியப்படுகிறார். பழைய ஏற்பாட்டில் பலாம் எனற தீர்க்கதரிசி, மெசியாவாகிய இயேசுவின் வருகையை ஒரு நட்சத்திரம் குறிக்கும் என்று கூறியிருந்தார்.

இசாயா என்ற  தீர்க்கதரிசி பழைய ஏற்பாட்டில் (இசாயா 9:6)  “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்,  ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும், அவர் திருப்பெயர் அற்புதமான  ஆலோசகர், மிகுந்த வல்லமையுள்ள கடவுள், என்றும் வாழும் தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்.

அவரது ஆட்சியின் உயர்வுக்கும், அமைதியான அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது, தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார். இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிவார். படைகளின் ஆண்டவர் இதைச் செய்து நிறைவேற்றுவார்”  என்று கூறியுள்ளார்.   இசாயாவின் தீர்க்கத்தரிசனம்,  இயேசுவின் வாழ்வில்  உண்மையாயிற்று

மூன்று ஞானிகளின் வருகை…..

யூதேய நாட்டில் மூன்று ஞானிகள் இருந்தார்கள். அவர்கள், இறைமகன் இந்த உலகத்திற்கு வரும் செய்தியானது, வானத்தில் தோன்றும் அடையாளத்தால் வெளிப்படும் என்று அறிந்திருந்தார்கள்.  

ஒருநாள், அவர்கள் வானத்தில் தோன்றிய வால் நட்சத்திரத்தைக் கண்டார்கள். அதன் மூலம் இறைமகன்  பிறந்துள்ளார் என்பது உறுதியானது. உடனே, அவர்கள் இயேசு பாலனைப் பார்த்து, அவரை வணங்க விரும்பினார்கள் (மத்தேயு 2:1-2).

வால் நட்சத்திரம் வானத்தில் தோன்றி அவர்களுக்கு வழிகாட்டியது.    அதைத் தொடர்ந்து பெத்லகேம் நோக்கி வந்தார்கள்.   தங்களோடு  தங்கம், தூபவர்க்கம், மற்றும் வெள்ளைப்போளத்தை,  பிறந்த விண்ணுலக மன்னனுக்குப் பரிசாக கொண்டுவந்தார்கள்.  அந்தக் காலத்தில்  அரசனை  அல்லது தெய்வத்தை வணங்க போகும்போது, இந்த மதிப்புமிக்க பொருட்களைப் பரிசாக எடுத்து செல்வது வழக்கம்.

ஞானிகள் மூவரும் வரும் வழியில் ஏரோது நாட்டின் மன்னனைச் சந்தித்து “யூதர்களை ஆளப்போகும் ராஜா பிறந்துள்ளார் அவரைக் காணச் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அதைக் கேட்ட ஏரோது மன்னனுக்கு மனதில் ஒரு பயமும், பொறாமையும்  வந்தது. அந்தக் குழந்தையைக் கொல்ல நினைத்தார். அதை வெளிக்காட்டிகொள்ளாது, ஞானிகளிடம் “நீங்கள் சென்று குழந்தையை பார்த்துவிட்டு வரும்போது அந்தக் குழந்தை இருக்கும் இடத்தைச் சொன்னால் நானும் சென்று பார்க்கிறேன்” என்றார்.

        பயணத்தைத் தொடர்ந்த ஞானிகள், வால் நட்சத்திரத்தைப் பின்பற்றி பெத்லகேம்  வந்து, மாசற்ற குழந்தையான  இயேசு பாலனையும், தாயாகிய மரியாளையும் கண்டு, பணிந்துவணங்கி, தங்கள் பரிசுகளைக்  காணிக்கையாக வைத்தார்கள். (மத் 2:9-11)

        அந்தப் பரிசுகளுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஆரம்ப காலங்களில்,  பரிசு இல்லாமல் எவரும் ஓர் அரசனைப் பார்க்கச் செல்ல  முடியாது. தங்கம் உலோகங்களின் அரசன். அதுவே, விண்ணுலக அரசருக்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், அவரை அரசராக வெளிப்படுத்தினார்கள்.

அந்த மூன்று ஞானிகளில் ஒருவர், இந்த உலகத்தில்  அநியாயத்தை நீக்கி, மனிதகுலத்திற்குச் சமாதானத்தைக்  கொண்டுவரக்கூடிய, அதிகாரத்தையும், வல்லமையையும் கொண்ட   ஓர்  அரசர்  தேவை என்று எண்ணியிருந்தார். அதனால்தான்,  ஓர் அரசருக்குத்  தேவையான தங்கத்தைப் பரிசாகக் கொண்டுவந்தார்.

மற்றொரு ஞானி இயேசு பாலனை ஒரு மேன்மை மிகுந்த குருவாகக் கருதினார். அதனால், வெள்ளைப்போளம் என்ற  நறுமணத்தைத் தரக்கூடிய  விலையுயர்ந்த இயற்கையில் கிடைக்கும் அரிய பொருளைப்   பரிசாகக் கொண்டுவந்தார்.  அக்காலத்தில், ஆலயங்களில் குருக்கள், இறைவழிபாட்டிற்கு வெள்ளைப்போளம் பயன்படுத்துவது வழக்கம்.  குருக்கள் எப்போதும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பாலமாகக் கருதப்படுவார்கள்.

மூன்றாவது ஞானி, பிறந்த இறைமகன் உலகில் உள்ள மனிதகுலத்தை, பாவ வாழ்விலிருந்து மீட்டு விண்ணுலக  வாழ்விற்கு உரியவர்களாக்குவார்  என கருதி  தூபவர்க்கத்தை பரிசாக கொண்டுவந்தார்.

இவ்வாறாக,  மூன்று  ஞானிகளும், இயேசு பாலனிடம்  வெவ்வேறான எதிர்பார்ப்புடன் பார்க்க வந்தார்கள். எல்லாவற்றிக்கும்  மேலாக, இயேசு இந்த பிரபஞ்சத்தின் அரசர்.  அவருடைய ராஜ்யத்திற்கு  முடிவேயிறாது.

ஏரோது, இயேசு பாலனைக் கொல்லத் துடித்ததால் தேவதூதர் அந்த மூன்று ஞானிகளையும் திரும்பிப் போகும்போது, வேறுவழியாக போக அறிவுறுத்தினார்.

        இயேசு, “மனிதனாகப் பிறந்தார்” அவர் மனிதகுலத்தை ஆளவந்தது, வலிமையான சக்தியால் அல்ல, மாறாக அன்பால் மட்டுமே ஆளவந்தார்.   

        தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஓர் அரசரின்  பொறுப்பாகும்.  அதனால்தான் இயேசு கூறினார், “நான் வாழ்வுதரும் உணவு, என்னிடம் வருபவர் ஒருபோதும் பசியோடு திரும்பி போவதில்லை (யோவான் 6:35) நானே வழியும், சத்தியமுமாய் இருக்கிறேன்” (யோவான் 14:6).

கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு, இந்த உலகத்தில்  ஏழைப் பெற்றோரின் மகனாக இயேசு பிறந்தார். அவரது பிறப்பு மேன்மையானது. ஏழைகளோடு தன்னை அடையாளப்படுத்தினார். அன்பின் உன்னத வடிவமாக இயேசு இந்த உலகத்திற்கு மனிதனாக வந்தார்.

அன்பின் வடிவான இயேசு நம்மில், நம் உள்ளத்தில்,

நம் குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் பிறக்கிறார்.

உங்கள் ஆனைவருக்கும்

இனிய   கிறிஸ்து   பிறப்பு   நாளின்   வாழ்த்துக்கள் …!

Dr. அந்தோனி  தாமஸ்

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad