Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எம்.ஜி.ஆர்.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற  இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார்.

இந்தியாவின் சிறந்த வெற்றிப்பட நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டவர்.

அவருக்கு நடிப்பும், அரசியலும் இரு கண்களாக அமைந்திருந்தன. இளமைக் காலத்திலேயே, பல நாடகக் குழுக்களில் பிரபலமாகத் திகழ்ந்தார். காந்தியடிகள்  மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிதும்  பற்றுக்
கொண்டு, இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டவர்  எம்.ஜி.ஆர்.

அநேக சிரமங்களுக்கிடையில் திரைப்படவுலகில் காலடி எடுத்து வைத்த எம்.ஜி.ஆர், முதல் சில படங்களுக்குப் பிறகு மக்களின் ரசனையைத் துல்லியமாக அளந்து, வெற்றிச் சூத்திரத்தை வடிப்பதில் வல்லவரானார். பொதுவுடைமைக் கொள்கைகளை ஆதரிக்கும் கருத்துகளையும், ஏழை எளியோர் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத கருத்துகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் மையக் கருவாக வைத்து, ஜனரஞ்சகமான முறையில் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர்.

திரைப்படங்களுக்கு மக்களிடையே உள்ள ஆளுமையை அறிந்து, தனது கதாபாத்திரத்தின் வழியே எந்தவிதத் தீய வழக்கமும் போய்ச் சேர்ந்துவிடக் கூடாதென உறுதியாக இருந்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் அவர் நடித்ததில்லை. உடற்பயிற்சி செய்து, சுறுசுறுப்பாக உழைத்து, பெற்றோரையும் மற்றோரையும் போற்றி, ஊரையும், நாட்டையும்  பாதுகாத்து வாழவேண்டுமென்ற நோக்கத்தினை இளைஞர் மனதில் பதிய வைத்து வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.

திரைப்படங்களில் அனைத்துத் துறைகளிலும் முழு ஈடுபாட்டோடு உழைத்தவர், சில படங்களைத் தயாரித்தார்; இரண்டு படங்களை இயக்கவும் செய்தார். உடல் சிலிர்க்கும் சண்டைக்
காட்சிகள், சிறந்த பாடல்கள், உணர்வுப் பூர்வமான காதல் காட்சிகள், குடும்பக் காட்சிகள் எனும்
கலவையினூடே சமூக மேம்பாட்டுக்கான கருத்தைக் கச்சிதமாகப் பொருத்தி, பொதுமக்கள் மனதில், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அறிஞர் அண்ணாவைத் தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். தனது படங்களில் திராவிடக் கருத்துகளைப் புகுத்திய எம்.ஜி.ஆர். கதாபாத்திரங்கள் வழியே சொன்னாலும், அவை தாம் சொன்னதாகவே மக்களிடம் சென்றடைவதைப் புரிந்து கொண்டார். இதனை நன்குணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அவரை மேலவை உறுப்பினராக்கி அரசியலில் இழுத்துவிட்டது. 1967ல் திரைப்படம் சம்பந்தமாக எழுந்த பிரச்சனை ஒன்றில் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டு விட, கழுத்தில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்ற நிலையில்,  பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். குண்டடிபட்டதினால் பேசுவதே கடினமாகிப் போன போதும், திரைப்படங்களில் டப்பிங் செய்ய மறுத்து, மிகுந்த முயற்சியுடன் பயிற்சி  செய்து சொந்தக் குரலில் பேசினார். அரசியல் மேடைகளிலும், தனது பேச்சில் குழறாத வகையில் சொற்களையமைத்து உரையாற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்த விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவரை ஒரு சிறந்த தலைவராக மக்களை ஏற்றுக்கொள்ள வைத்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் எழுந்தவொரு பிரச்சனை காரணமாக, அக்கட்சியிலிருந்து விலகித்
தனிக் கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் ஏழைப் பங்காளனாக, சமூகத் தொண்டனாக, அநீதிகளை எதிர்ப்பவனாக, கொடையாளியாக தன்னைக் காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆரை அரசியலுக்கு வரவேற்ற தமிழக மக்கள் அவரை முதல்வராக்கினர். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த,
முதல் இந்தியத் திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ஆர் அவர்களையே சேரும். முழு நேர அரசியல் பழக்கமில்லாத போதும், அரசியலில் பழுத்த அனுபவம் பெற்றோரை அமைச்சராக்கிக் கொண்டார் எம்.ஜி.ஆர்..

1977 தொடங்கி 1987ல் அவர் மறையும் வரை பத்தாண்டுகள் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்த எம்.ஜி.ஆர். பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பான ஆட்சியினை வழங்கி வந்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக்கியது, இலவசச் சீருடை, புத்தகங்கள் வழங்கியது, மகளிர் சேவை மையங்கள் உருவாக்கியது, ஆதரவற்ற பெண்களுக்கு
இலவசத் திருமண ஏற்பாடுகள் செய்தது, மது விலக்கு அமல் படுத்தியது என எளிய மக்களைச் சென்றடையும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார்.

உயர்ந்த அரசியல் பண்புகளைக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். கொள்கைகளில் முரண்கள் இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை, அவரவர்க்கு உரிய மரியாதை தந்து நடத்திய தலைவர் அவர்.

பிறப்பால் மலையாளியானாலும் தமிழ் மீது தனிப்பற்று கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தஞ்சையில் முதல்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். தேவநாகரி வடிவில் எழுதியிருந்த ஒரே காரணத்தினால் மத்திய அரசாங்கம் தனக்கு அளித்த பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுத்தவர் அவர். தமிழ் ஈழம் உருவாக வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

தனிப்பட்ட வாழ்வில் மூன்று முறை திருமணம் புரிந்தவர் எம்.ஜி.ஆர்.  முதலிரண்டு மனைவியர் நோயினால் இறந்து விட, உடன் நடித்த வி.என். ஜானகியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார். எல்லாச் செல்வங்களும் பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு மக்கட் செல்வம் மட்டும் அமையாமல் போனது வருத்தத்துக்குரிய விஷயம்.

சிறுநீரகப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சை பெற்ற எம்.ஜி.ஆர். 1987ல் இயற்கை எய்தினார். வந்தோர்க்கு உணவளித்து, இல்லாதோர்க்கு பொருளளித்துக் கொடை புரிந்த கலியுகக் கர்ணன் என்று வாழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவு தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

புரட்சித் தலைவர், மக்கள் தலைவர், பொன்மனச் செம்மல், இதயக்கனி என பல பட்டப் பெயர்கள் பெற்றிருந்தாலும் ‘தலைவர்’, ‘வாத்தியார்’ என்று அன்போடு மக்கள் வைத்த பட்டப் பெயர் இன்றும் நிலைத்துள்ளது.

இன்றைய தினம், (12/24/2017) அவர் மறைந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. எனினும் இன்றும் எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்துக்கு மக்கள் அளிக்கும் அன்பும், நெகிழ்ச்சி நிறைந்த மரியாதையும் குறையவில்லை.

ரவிக்குமார்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad