Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பகுத்தறிவு – 9 – மாதமோ மார்கழி….

( * பாகம் 8 * )

பகுத்தறிவு குறித்த நமது தொடரைச் சற்று, காலங்களுக்கொப்ப திருப்பிச் செல்லலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் மார்கழி மாதத்தைத் தொடர்புபடுத்தி எழுதலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த வாரப் பகுத்தறிவுக் கட்டுரை.

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பானது என்று போற்றப்படும் மார்கழி என்ற உடனே, அந்த அதிகாலைப் பொழுது நம் மனதை ஆக்கிரமித்து விடும். குழந்தைப் பருவத்தில், நம் கிராமத்து அக்கிரகாரத்து வாசலில் நடைபெற்ற ஒவ்வொரு சிறு நிகழ்வுகளும் மனதில் நிழலாடுகிறது. சூரியன் இன்னும் முழுதாக வெளிவந்திராத, ஆனால் ஓரளவுக்கு வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்திருந்த அந்த அதிகாலைப் பொழுது. சூரியனின் உஷ்ணக் கிரணங்கள் இன்னும் தாக்கியிராததால் வான வெளியில் தைரியமாக அமைந்திருந்த புகை மூட்டம். அக்கிரகாரத் திண்ணைகளில் அமர்ந்திருந்த மாமாக்களுக்கு, தெருவின் அடுத்த பக்கத்தில் நீண்டு நெடிந்திருந்த சிவன் கோயில் சுவற்றில் அடிக்கப்பட்டிருந்த காவி வெள்ளை வண்ணங்களைத் தெளிவில்லாமல் காட்டிக் கொண்டிருந்தது. அக்கிரகாரத்தில் அமைந்திருந்த பத்து வீடுகளின் வாசல்களிலும், பெண்டிர் அமர்ந்து அவரவர்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப புதுப்புது கோலங்களை வரைந்து கொண்டிருந்தனர். ஒவ்வொன்றும், மிகப் பெரியனவாகவும், ஏதோவொரு இயற்கை அமைப்பினையோ, கடவுள் சம்பந்தப்பட்ட நிகழ்வைக் காட்டுவதாகவோ அமைந்திருந்தது. அந்தத் தெருவிலேய வேறெவரும் தன்னைவிடச் சிறப்பாக வடிவமைத்திருக்கலாகாது என்பதில் அனைவரும் குறிப்பாக இருப்பர். ஒவ்வொரு கோலத்தையும் போடுவதற்கு, இரண்டு மூன்று மணிநேரங்கள்கூட ஆவதுண்டு. அவ்வளவு நேரம் பனிப் பொழிவின்கீழ் அமர்ந்திருப்பது உடலுக்கு நலம் பயப்பதன்று என்பதற்காக, தலையில் ஒரு துண்டை முக்கோணமாக மடித்துக் கட்டியிருப்பர். அந்தப் பெரிய கோலங்களுக்கு மத்தியில், மாட்டுச் சாணியைக் குவித்து வைத்து அதில் ஒரு பறங்கிப் பூவைச் செருகி வைப்பதுடன் அன்றைய கோலம் போடும் படலம் முடிவுக்கு வரும்.

அதன் பிறகு, கோயிலிலிருந்து புறப்பட்டு, பல பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டே பலரும் ஊர்வலமாக வருவதும் வழக்கம். சினிமாக்களில் கொச்சைப்படுத்தப்படுவது போன்று அமைவதல்ல இந்த ஊர்வலங்களும், பஜனைப் பாடல்களும். சுத்தமாகக் குளித்து முடித்து, மேலங்கி ஏதும் அணியாமல், இசைக் கருவிகளின் துணை ஏதுமில்லாமல், உச்சஸ்தாயில் ஸ்ருதி தப்பாமல் ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் பாடிவரும் கூட்டம் – நினைக்கையிலேயே அந்தப் பாடல்களின் அனுபவச் சுவையும், பக்தியும் நம் மனதில் இன்றும் கரை புரண்டோடுகின்றன. அங்கிருந்தது சிவன் கோயில் எனினும், பொதுவாக வைணவர்களுக்கு உரித்தான மார்கழி மாத பஜனையையும், பொங்கல் சுண்டல் போன்ற பிரசாதங்களையும் அங்கும் செய்யத் தவறியதில்லை. சிறுவயதில், இந்தப் பரந்த மனத்தின் பெருமைகளை உணர்ந்ததில்லை. பல பேதங்களும் தலை விரித்தாடும் இந்த நாட்களில், எனது கிராமத்தின் சமத்துவ நோக்கை நினைத்துப் பார்க்கையில் சற்றுப் பெருமையாகவே உள்ளது.

மார்கழி மாதத்தைக் குறித்துப் பேசிவிட்டு, ஆண்டாள் குறித்துக் கூறிடாவிடின் அது முழுமையடையாது என்று தோன்றுகிறது. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று போற்றப்படும் ஆண்டாள் குறித்து நாம் பல விஷயங்களைக் கேட்டறிந்திருக்கிறோம். திருமாலையே கணவனாக வரித்தவள் என்றும், திருமாலை அடைவதற்காக, மானுடர் போன்ற முயற்சியில் ஈடுபட்டவள் என்றும் பலவாறாகக் கதைகளிலும், திரைப்படங்களிலும், எழுத்துக்களிலும் படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். புகழ்பெற்ற பனிரெண்டு ஆழ்வார்களில் முக்கியமானவர், ஒரே பெண்பாற்புலவர்.  முப்பது பாசுரங்களைக் கொண்ட திருப்பாவையும், 143 பாசுரங்களைக் கொண்ட நாச்சியார் திருமொழியும், ஆண்டாளால் இயற்றப்பட்ட வைணவ சமயத் தமிழ் இலக்கியங்களாகும். வைணவ சமயம் என்று குறிப்பிடப்பட்டாலும், இவ்விலக்கியங்கள் மனித சமுதாயத்திற்கே பொதுவான தத்துவங்களை விளக்கின. சாதாரண பக்தி இலக்கியங்களாகவே பெரும்பாலாராலும் புரிந்து கொள்ளப்படும் இவை, மிக உயர்ந்த ஞான விளக்கங்களைத் தரும் உயர்வான ஞான மார்க்க நூற்களாகும்.

திருப்பாவையின் முதற் பாசுரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நந்நாளால்

நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறைதருவான்

பாரோர் புகழ, படிந்தேலோர் எம்பாவாய்!!!

மார்கழி மாதம் என்பது, பூமிக்குச் சூரியன் மிகவும் அருகிலும், சூரியக் கதிர்கள் தொடமுடியாத கோணத்திலும் அமைவதான காலமாகும். அதனால், இந்தக் காலத்தில் வெப்பம் குறைந்து குளிரதிகமாக இருக்கும் நிலை. மேலும், சூரியன் பூமிக்கு அருகாமையில் இருப்பதால் அதன் ஈர்ப்பு சக்தி அதிகமாக பூமியைத் தாக்கும் நேரமிது. இதனால் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.  அதாவது, புவி ஈர்ப்பு விசைக்கு எதிர்த் திசையில் பயணிக்க வல்ல தருணம்.

பொதுவாக, மனிதனின் எண்ணங்கள் கீழ் நோக்கிச் செல்வன. தம்மைச் சுற்றி நிகழும் பொருளியல் தொடர்பான ஆசைகள் அனைத்தையும் கீழ் நோக்கிச் செல்லும் ஆசைகளாகவும் சிற்றின்பங்களாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். வீடு, கார், குடும்பத்திற்கான வசதி வாய்ப்புக்கள், புலனின்பங்கள் ஆகிய அனைத்துமே சிற்றின்பங்களாகும். இவையே பொதுவாக அனைவரின் ஆசைகளாக அமைகின்றன. இவற்றைத் தவறென்று கூறுவது எந்தத் தத்துவத்தின்  நோக்கமுமல்ல. ஆனால் இதுபோன்ற சிற்றின்பங்களைக் குறைத்து, நிலவுலகு வாழ்வின் முழுமைப் பயனை அடையும் ஒரு சீரிய நிலையையே பேரின்பமாகக் குறிப்பிடுகின்றன. அந்தப் பேரின்ப நிலையை அடைவதற்கு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகப் பயணிப்பது அவசியமாகிறது. இதனையே கூட கர்ம யோக விளக்கத்தில், முதுகுத் தண்டின் கீழ் தேங்கும் உயிர்ச் சக்தியை, முதுகுத் தண்டின் வழியாக மேலே எடுத்துக் கொண்டு துரியத்திலும், துரியாதீதத்திலும் அமரச் செய்வதே கர்ம யோகம் என்றும் விளக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு திரவத்தை, ஒரு திரவத்தின் சாரத்தை, புவி ஈர்ப்பு விசைக்கு எதிர்த் திசையில் எடுத்துச் செல்லும் முயற்சிக்கு, புவி ஈர்ப்புக் குறைந்த சூரியனின் எதிர்த்திசை ஈர்ப்பு அதிகமாக உள்ள மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்த ஆண்டாளின் ஞானத்தை வியக்கமாலிருக்க முடியுமா?

பக்தி மார்க்கமாக, நாராயணன் என்ற பெயருள்ள, வடிவமுள்ள ஒரு கடவுளைப் போற்றுவது போல் தொடங்குகின்றது திருப்பாவை. இந்தப் பக்தி மார்க்க விளக்கத்தைக் காண்பதற்கு, தனது சக தோழிகளான அனைத்து ஆயர்பாடிச் செல்வச் சிறுமியரையும் அழைக்கிறாள் ஆண்டாள். ஏன் சிறுமிகள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர்? ஞான மார்க்க விளக்கங்களில், அடைய வேண்டிய பரம்பொருள், மெய்ப்பொருள் ஒன்றை மட்டுமே ஆண்பாலாகவும் அதனை வந்தடைய வேண்டிய அத்தனை ஜீவாத்மாக்களையும் பெண்பாலாகவும் பாவிப்பது ஒரு முறை. அதே முறையில், அனைத்து உயிரினங்களையும் பெண்பாலாகக் குறிப்பிடுகின்றார் ஆண்டாள்.

மனித உடலும், சிங்க முகமும் கொண்ட நரசிம்மத்தையும் ஒரு உருவமைப்பாகக் காட்டுவதும், ஞான மார்க்க வழிகளில் ஒன்று. இது, மனித சமுதாயத்தின் வளர்ச்சியடைந்த உருவ அமைப்பையும், இன்னும் முழுமையாய் வளர்ச்சியடையாத மிருக குணத்தையும் விளக்குவதே ஆகும். இதே தத்துவத்தைப் பின்பற்றி, ஆண்டாளும் இங்கே யசோதை பார்ப்பது சிங்கம் என்றும் விளக்குகிறார்.

இவை எல்லாவற்றையும் விளக்கி, நோன்பு நோற்பதற்குச் சரியான காலம் இந்த மாதமே என்று தொடங்குகிறார் ஆண்டாள். நோன்பு என்றால் என்னவென்று பார்க்க வேண்டிய நிலை இதுவே. ஏதோ ஒரு கடவுளின் பெயரை, மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்வது நோன்பு அன்று. நாம் இதுவரை செய்துவந்த செயல்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்தறிந்து, தவறானவற்றைத் திருத்திக் கொள்ளும் செயலே நோன்பு என்பதாகும். வள்ளுவர் பல குறள்களிலும் நோன்பு என்பது செயல் திருத்தம் கொடுத்துக் கொள்வதே என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். உதாரணமாகக் கீழ்க்கண்ட குறளைச் சொல்லலாம்.

”இலர் பலராகிய காரணம் நோற்பார்

சிலர் பலர் நோலாதார்”

இல்லை என்ற நிலை அதிகமாக உள்ளவர் உள்ள காலகட்டமது. பொருளில்லை, புகழில்லை, இன்பமில்லை, நிம்மதியில்லை என்ற நிலையுள்ளவர்களே அதிகமென்ற இன்றைய நிலைக்கு வள்ளுவர் காட்டும் காரணம் இதுவே. நோன்பு நோற்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே ‘இல்லை’ என்ற நிலை அதிகமானதற்குக் காரணம் என்கிறார் அவர். அதாவது, தான் செய்யும் செயலின் தீமைகளை உணர்ந்து, தீய செயல்களைக் குறைப்பது, இல்லாமற் செய்வது ஆகிய நோன்பு நோற்காதவர்கள் குறைந்ததே ’இல்லை’ என்ற நிலை அதிகமானதற்குக் காரணமாகும் என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவனை நன்கு பயின்ற ஞானியான ஆண்டாள், அதே கருத்தில் நோன்பு குறித்துத் திருப்பாவையில் விளக்குகிறார். அதனைத் தொடர்ந்து பார்ப்போம்.

   வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad