\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எதிர்பாராதது…!? (பாகம் 8)

Filed in கதை, வார வெளியீடு by on January 14, 2018 0 Comments

 

( * பாகம் 7 * )

டச் அப் பாயை அழைத்தான். கண்ணாடியைப் பிடுங்கி முகத்தைத் துடைக்கப்போனான். அப்படித் திடீரென்று துடைப்பதற்கு என்ன வந்தது? அப்படியானால் அன்று படப்பிடிப்பு அவ்வளவுதானா? தன்னை நம்பிக் காத்திருக்கும் மொத்த யூனிட்டும் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? கண்ணாடியில் முகம் வித்தியாசமாய் இருப்பதை அப்பொழுதுதான் கூர்ந்து உணர்ந்தான் பிரேம்.

உண்மையிலேயே தன் முகம் முற்றி விட்டதா என்ன? வயதான கதாபாத்திரத்திற்கு இப்படிப் பொருந்துகிறது? இரட்டை வேடத்தின் இன்னொரு பாத்திரமான கதையின் நாயகன் வேடத்தின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே அவன் மனம் எச்சரித்தது. எப்படியும் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியே தீர வேண்டும். இதுவும் கைவிட்டுப் போனதென்றால் பிறகு தன்னை அடியோடு மறந்து விடுவார்கள் எல்லோரும். அதற்காகத்தான் ரிலீஸ் தேதியைக் கூட இன்னும் நிர்ணயிக்கவில்லை. திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து, திருத்தித் திருத்தி, சே…! என்னவாயிற்று தனக்கு? ஏனிப்படி இழுத்தடிக்கிறது? கெட்ட நேரத்திற்கு எல்லாமும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுமோ? எதைத் தொட்டாலும் பிசகு வருகிறதே? செய்ததையே திரும்பத் திரும்பச் செய்ய வைக்கிறதே? எவ்வளவுதான் செலவு செய்வது? பணம் அத்தனையும், கண்கொண்டு விரயமாகிறதே? ஏன் எது செய்தாலும் திருப்தி வரவேமாட்டேன் என்கிறது? பயம் படுத்தும் பாடா இது? படம் பெட்டிக்குள் முடங்கி விட்டால் என்ன செய்வது? என்ற பயம் இப்பொழுதே போட்டு உலுக்குகிறதே?  

எச்சரிக்கை, எச்சரிக்கை…மனசுக்குள் மணி  அடித்தது. மேற்கொண்டு தொடர்வதுபற்றித் தீவிரமாய் யோசி. முடியுமானால் நிறுத்தி விடு. வீம்புக்குச் செய்யாதே. மற்றவர்களுக்கு உன் பணத்தைப் பற்றிக் கவலையில்லை. நீதான் கவலைப்பட்டாக வேண்டும். அதற்கு நீதான் மொத்தப் படத்திலும் கவனமாய், கருத்தாய், கண்ணுக்குள் எண்ணை விட்டுக் கொண்டு பார்த்திருக்க வேண்டும். மனம் குழம்பித் தவித்தது பிரேம்குமாருக்கு.

கதையின் ஸ்வாரஸ்யம் குன்றாமல், காட்சிகள் போரடிக்காமல் இருக்கின்றதா என்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முழு லாயக்கானவன் அத்யந்த நண்பன் திவாகரன்தான். அவன்தான் ஆரம்பம் முதல் அவன் கூடவே இருப்பவன்.  தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாய் இருந்தவன். சில தோல்விகளுக்கான சரியான காரணங்களைக் கண்டு பிடித்தவன். சினி உலகைக் கரைத்துக் குடித்தவன்.  அடுத்தடுத்த படங்களில் அந்தக் குறைகளை முழுமையாக விரட்டியடித்தவன். அவனுக்குத் தன் மீது இருக்கும் அக்கறை இதுவரை வேறு எவனுக்கும் இருந்ததில்லை. என் வெற்றியே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன். அதற்காகக் கடுமையாகத் தன் உழைப்பைச் செலுத்தியவன்.

ஆனால் விதி அவனைத் தன்னிடமிருந்து எப்படியோ பிரித்து விட்டது. உற்ற நண்பனைச் சந்தேகிக்கலாமா? எதெல்லாம் கூடாதோ அதையெல்லாம் செய்தேன் நான். வெற்றியின் எக்களிப்பில் போதை ஏறிப் போய்க் கிடந்தேன். அவனைக் கை நீட்டி அடிக்கும் அளவுக்கு வந்தேன். அந்தளவுக்கு ஏன் என் புத்தி சிதறியது? எதற்காக அப்படி நிதானமில்லாமல் போனது. தேவையில்லாமல் அவனை விரட்டியாயிற்று. விரட்டுவதென்ன? அவனாகத் தானே போய்விட்டான்?

     மானஸ்தன் அவன். உண்மையாய் உழைத்தவனைச் சந்தேகித்த பாவி நான். அதற்குப் பின் அவன் என்ன ஆனான் என்று கூட இன்றுவரை கண்டு கொள்ளவேயில்லையே? டைரக்டர் சித்தண்ணாவிடம் இருப்பதாக யாரோ சொன்னது காதுக்கு வந்ததுதான். ஏன் திரும்ப இழுக்க மனம் விழையவில்லை? அவர் எவ்வளவு திறமையான இயக்குநர். போய்ச் சேர்ந்த இடம் பொன்னான இடம். அவன் திறமைக்கு ஏற்ற இடத்தில்தான் போய் நின்றிருக்கிறான்.  இப்பொழுது அழைத்தால் வருவானா? கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் விட்டதுபோல் ஆகிப்போயிற்றே. ஒரு உற்ற நண்பனை இப்படியா பகைத்துக் கொள்வது, காலக் கேடு என்னை அப்படிச் செய்ய வைத்து விட்டதா? உச்சியில் நின்று கூத்தாடிய என் புகழ் போதை. எல்லாம் இந்த நந்தினியால் வந்தது. அவள் தந்த மயக்கம். என்னை ஏணியாய்ப் பயன்படுத்திக் கொள்ள அவள் செய்த ரகசிய உத்தி.  அவள் மட்டும் என்னுடைய முந்தைய இரண்டு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தால் இந்த அளவுக்கான தோல்வியை நான் சந்தித்திருக்க நேர்ந்திருக்குமா? கண்களை மூடி அமர்ந்திருந்தான் பிரேம்.

டைரக்டர் நவீன் பேச வார்த்தை வராமல் காத்திருந்தார். பிரேமின் மனது அன்று என்னவோ ஒரே குழப்பத்தில் கிடந்தது. சரி செய்யவே முடியாமல் தவித்தான். நந்தினியை நினைக்க நினைக்க வயிறு பற்றியெறிந்தது. நான் அடையாளம் காண்பிச்ச நாயி? என்னையே போட்டுப் பார்த்திட்டாளே? அவ ஜோடி இல்லாம எத்தனை தோல்விகள் எனக்கு? என் பின்னாடியே சுத்தின ப்ரொட்யூஸர்ஸ் எல்லாம் காணாமப் போயிட்டாங்களே? என் சொந்தப் படத்துக்கே என் கூட நின்ன பார்ட்டனர்சும் மறுத்துட்டாங்களே? இந்தப் படத்துலயும் எனக்கு இன்னும் நம்பிக்கை வர மாட்டேங்குதே? என்கிட்ட இருக்கிற மீதிச் சொத்தை முழுங்கிறதுக்குத்தான் இவங்கல்லாம் என் கூடத் திரியறாங்களா? எது இருக்கு எங்கிட்ட, எல்லாத்தையும்தான் அடகு வச்சாச்சே…? அப்போ இவுங்கல்லாம் என் மூலமா எதை எதிர்பார்க்கிறாங்க? ஆத்மார்த்தமா என் வெற்றிக்குப் பாடுபடுவாங்களா? இல்ல காசுக்காக ஒண்டிக்கிட்டுக் கிடக்காங்களா?  எல்லாரும் வெறும் வேஷதாரிங்களா? நான் படத்துலதான் வேஷம் போட்டேன். இவுங்க நிஜ வாழ்க்கைலல்ல வேஷம் போட்டு என்னை ஏமாத்தறாங்க? எவ்வளவோ துட்டு கரைஞ்சு போச்சே…இனி பாதில நிறுத்த முடியுமா? அப்படி நிறுத்தினா எனக்குத்தானே நஷ்டம். அவமானம்.  இந்த நஷ்டத்தை சரி பண்ண முடியுமா என்னால? கைவசம் படமே இல்லையே? …எப்பவும் அக்ரிமென்ட் போட்டமேனிக்கே இருப்பேனே? அது நண்பன் திவா இருந்தபோது கிடைச்ச அதிர்ஷ்டம். அவன் கைராசி. . அவனும் கழன்டுக்கிட்டானா? கூடவே என் அதிர்ஷ்டத்தையும் பிடுங்கிட்டுப் போயிட்டானா?  – நினைக்க நினைக்க அவன் உடம்பு மொத்தமும் பதற்றத்துக்குள்ளானது. மூளையின் கொதி நிலை ஆவியாய்ப் பிரிந்து தலை உச்சியில் சூடாய் வெளியேறுவது போலான பிரமை.

ந்தப் பாரும்மா,  காட்சி நேச்சுரலா இருக்கணும்னா கொஞ்சம் பொறுத்துக்கத்தான் வேணும். கை பலமாத்தான் இறங்கும். அது தெரியாதபடி நேக்கா விலகிக்க வேண்டியது உன் சாமர்த்தியம்…ஆனா சரியான அடின்னு கண்டிப்பாத் தெரிஞ்சாகணும்…அது தெரியாத அளவுக்கு விலகிடாதே…ஓ.கே….”

நவீன் கருத்தாகத்தான் அறிவுறுத்தியிருந்தார் அந்தப் புதுப் பெண்ணிடம்.  அதைப்போடுங்கள் என்று பிரேம்தான் சொல்லியிருந்தான். மலையாளத்தில் அந்தப் பெண் அறிமுகமாகி இரண்டு படங்கள் வெற்றிகரமாய்ப் போயிருந்தன. சூட்டோடு சூடாக அதை எப்படியாவது இங்கு இழுத்து வந்து நிற்க வைத்து விட வேண்டும் என்று மனதில் வன்மமான எண்ணம் தோன்றி பல நாளாய் பிரேமை உறுத்திக் கொண்டேயிருந்தது. நினைத்தாற்போல் அந்தப் ப்ராஜக்ட் அமைந்தபோது தனக்கு ஜோடியாகவே கூட்டி வந்து நிறுத்தியிருந்தான். அப்படித்தானே நந்தினியையும் அழைத்து வந்தது? அவள் அதிர்ஷ்டம், அவள் எங்கோ போய் விட்டாள். இன்று என்னையே உதைக்கிறாள். இவளை வைத்து அவளைத் தோற்கடிக்க வேண்டும். காணாமல் போகச் செய்ய வேண்டும். அதுவரை இந்த மனசு பொறுக்குமா? யாருமில்லாத அநாதைப் பிணம் அவள். அவளுக்கா இந்தத் திமிறு? காலடியில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டியவள். இத்தனை வருஷத்திற்கு என்று ஒப்பந்தம் போட்டிருந்தேனேயானால் இப்படி வாலாட்டுவாளா? ஃபீல்டுக்கு வந்தே சில வருஷம்தான் ஆகிறது. அதற்குள் எத்தனை படங்கள் தாண்டி விட்டாள். திறந்து போட்டால் எவன்தான் வேண்டாம் என்பான்? கவர்ச்சியைப் பொழிகிறாள். கிறங்கிக் கிடக்கிறார்கள். அதுதானே? நடிப்புத்தானே நிற்க வைக்கும். திறமைதானே நிலை நிறுத்தும். எத்தனை நாளைக்கு இந்தப் பகட்டு? அது கிடக்கட்டும்.

ஆனால் இந்த இடைக்காலத்தில் என் மார்க்கெட் ஏனிப்படிச் சரிந்து போனது? அவளுக்கு முன்பே சினி ஃபீல்டைக் கரைத்துக் குடித்தவன் நான். யாரும் அசைக்க முடியாமல் மலையாய் நின்றவன். நான் ஏன் இப்படி ஆனேன்? என்னையே அசைத்துப் பார்த்து விட்டாளே….? அவள் என்னோடு நடிக்காமல்  போன பிற்பாடுதானே இந்த வீழ்ச்சி. என்னை மறுத்தபின்புதானே அவள் மேலே போனாள். மேலே போவதற்குத்தான் அப்படி மறுத்தாளா? ஏன் என்னால் அவளைக் கட்டிப்போட முடியாமல் போனது. எந்தக் கவர்ச்சியைக் காட்டி அவள் மேலே ஏறினாளோ, அதையே என் மேலேயும் ஏற்றிவிட்டு ஏமாற்றி விட்டாளே…படு பாதகி அவள்…விஷ நாகம்…..படமெடுத்து ஆடி ஆடி என்னை மயக்கி விட்டாள்.

பேக் அப்…..என்று அவன் அலறிய போது மொத்த யூனிட்டும் பதை பதைப்போடு திரும்பிப் பார்த்தது.

”என்னங்க…இந்தாளுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சா? திடீர்னு பேக்அப்ங்கிறான்…” – தூரத்தில் கூடியிருந்த உதவி இயக்குநர்களில் ஒருவன் அங்கலாய்க்க, மற்றவர்கள் பிரேமையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். காதில் விழுந்திருக்குமோ என்கிற பயம் அவர்கள் கண்களில் தெரிந்தது. பெரிய ப்ராஜக்ட். கைவிட்டுப் போயிடக் கூடாது என்கிற ஏக்கம் அவர்களுக்கு.

“பாதிப் படத்தை முடிச்சிட்டுத்தான் நகரணும்னு நேத்து சொன்னாரு…இன்னும் ரேக்ளா ரேசு, ஃபைட்டு சீன்ஸ் எடுக்கலே…அப்புறம் மலையடிவாரத்துல ஒரு டூயட் வேறே இருக்கு…அந்தப் பொண்ணை வேறே இதுக்காகவே ரூம் போட்டு இருத்தி வச்சிருக்காரு…எதுவுமே முடியாம அதுக்குள்ளே பேக் அப் பண்ணினா எப்டி?”

“நேத்துக் கூட ராம்ஜி சேட்டுக்கிட்ட அக்ரிமென்ட் போட்டதா சொன்னாங்கப்பா… சேத்துப்பட்டு பங்களாவை அடகு வச்சிட்டாராம். ரெண்டுல ஒண்ணு பார்த்துடறதுன்னு பேசிட்டிருந்த ஆளுதான், இப்ப என்ன வந்ததுன்னு தெரில…”

“எப்போ எது நடக்கும்னு சொல்ல முடிலப்பா…நாறப் பொழப்பு நம்ம பொழப்பு. இன்னும் ரெண்டு மூணு மாசத்த ஓட்டிடலாம்னு கற்பனைல இருந்தா அதுக்கே பங்கம் வந்திரும் போலிக்கே? “

ஆனாலும் அந்த டைரக்டர் ரொம்பவும் சாமர்த்தியமானவன். “ஒண்ணும் பிரச்னையில்லண்ணே…நாளைக்குப் பார்த்துக்கிடுவோம்….- “

பிரேமைக் கைத்தாங்கலாய் அவர்கள் அழைத்து வந்து அறையில் விட்டது கூட அவனுக்குத் தெரியாது. தான் எப்பொழுது ஊற்றினோம். யூனிட்டில் வைத்து என்றுமே அதைச் செய்ததேயில்லையே…? பான்ட் பாக்கெட்டில் இருந்த அந்த உயர்ரக விஸ்கியை எடுத்து தூரமாய் வீசினான் பிரேம். அது வா…வா… என்பது போல் பரந்து கிடந்த அந்தப் பஞ்சு மெத்தையின் தலையணைக்கடியில் போய் பவ்யமாய் உட்கார்ந்து  கொண்டது. ‘உனக்கிருக்கிற நன்றி கூட அவளுக்கில்லையே….! ‘

போதையில் பாட்டிலைப் பார்த்துப் புலம்பி அதை மீண்டும் கையிலெடுத்து முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சினான். மனதுக்குள் இருக்கும் பாரத்திற்கு நினைவே இல்லாமல் கிடக்கலாம் போலிருக்கிறது. இந்த அளவுக்கான வீழ்ச்சியை எதிர்பார்க்கவேயில்லை. சொல்லி அழுவதற்கு ஆப்த நண்பனில்லை. அவனையாவது கூட வைத்துக் கொண்டேனா? உயிர் நண்பன் அவன். ஆனாலும் எவ்வளவுதான் அவமானங்களைப் பொறுத்துக் கொள்வான். தனிமையிலாவது அவனைத் திட்டியிருக்கலாம். கோபத்தைக் காண்பித்திருக்கலாம். யூனிட்டில் எல்லோர் முன்னிலையிலும் அவனை இகழ்ந்தேனே…எப்படிப் பொறுப்பான்? அனைவரையும் ஆட்டி வைக்கும் அவன் அவர்கள் முன் அவமானப்படுவதை ஏற்றுக் கொள்வானா? போய் விட்டான். போயே விட்டான். என்னை உதறித் தள்ளி அவள் பிரிந்தாள். கூடவே அவனும் பிரிந்து விட்டான். கெட்ட நேரம் வந்தால் எல்லாமும்தான் நடக்கும் போலும்.

இந்த இயக்குநர் நவீன், தான் சொல்வதை மட்டும் செய்கிறான். அப்படியே செய்து விடுகிறான். வேறு மறு பேச்சே இல்லை. ‘இல்லண்ணே நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க… நாளைக்குப் பார்த்துக்கலாம்’ என்று ஒத்திப் போடக் கூடாதா? பேக் அப் சொன்னால் உடனேயேவா மூட்டையைக் கட்டி விடுவது? கலைந்த கூடு போல் கணத்தில் பறந்து விடுகிறார்களே? என்னையே மதித்து நின்ற கூட்டம், என் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருந்த கும்பல், இப்போது என் வசம் இல்லை. என் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் நிற்கவில்லை. கலைந்த சித்திரம் ஆகி விட்டதா என் வாழ்க்கை? திட்டமிட்ட என் நியமங்கள் என்ன ஆயின? நில் என்றால் நில், செல் என்றால் செல் என்கிற கட்டுப்பாடுகள் எப்படிச் சிதறின?

”காலைல ஆறு மணிக்கு ஷூட்டிங் வருவாரு. சாயங்காலம் ஆறு, தவறினா ஏழுக்கெல்லாம் அவரை விட்டிடணும்…ஏழரைக்குள்ள அவர் வீட்டுல இருக்கணும். இதுக்கு சம்மதிச்சா அக்ரிமென்ட்…என்ன சொல்றீங்க?

என் உடல் நலத்தில் எப்படி அக்கறை செலுத்தினாள் அம்மா. அவள் நம்பிக்கையாய்ச் சொன்னதினால்தானே திவாகரையே எனக்குப் பி.ஏ. வாக வைத்தேன். உன் நண்பன் மேலே உனக்கே நம்பிக்கை இல்ல போலிருக்கு…அதுக்காகத்தான் அம்மாவோட   ரெக்கமன்டேஷன் வேண்டிருக்கு …என்று தமாஷாகச் சொன்னானே….இன்று எல்லாவற்றையும் உதறி விட்டு இப்படி நிர்க்கதியாய் நிற்பதற்கு யார் காரணம்? அந்த நந்தினி மயக்கிய வலையில் வீழ்ந்ததுதான் காரணமா?

தன் செழுமையான உடம்பை வைத்து என்னை ஆக்ரமித்து விட்ட காமப் பேய் அவள். எங்கோ சோற்றுக்கே திண்டாடிக் கொண்டிருந்தவளுக்கு, கனவிலும் கிட்டாத வாழ்க்கை தட்டுப் பட்டபோது ஏற்பட்ட கண்மூடித்தனமான வெறி. தன் முந்தானைக்குள் என்னை முடிந்து கொண்டு எனக்கே இன்று டேக்கா கொடுத்துவிட்டவள். என் மீது உண்மையான அக்கறை கொண்ட முறைப் பெண் சாம்பவியை நம்பாமல் இவளின் பிருஷ்டங்களே கதி என்று கிடந்ததுதான் நான் செய்த மகத்தான பிழை. என் பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட துர் தேவதை அவள். அவளின் உள்ளார்ந்த குறிக்கோள் அறியாமல் மயங்கிக் கிடந்தேன் அவள் மடியில். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்.

தன் தோல்விக்காக மனமுடைந்து தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறான் பிரேம். அதன் உச்சம் அவனை எங்கே கொண்டு விடப் போகிறதோ?

சற்றே தன் நினைவு வந்தபோது, தடுமாறி எழுந்து வந்து ஜன்னல் வழி மலைச்சாரல் பகுதியை நோக்குகிறான். வெற்றிடம்தான் கண்ணில் படுகிறது. காக்காய்க் கூட்டம் பறந்து விட்டது. அடுத்த முறை புத்தி தெளிந்து அந்த இடம் மறுபடியும் தேவைப்பட்டால் மீண்டும் அத்தனை பேரையும் அங்கே அழைத்து வந்தாக வேண்டும். இப்போது கிளப்பியதற்கு எது காரணமில்லையோ அதுபோலவே மறுபடியும் அங்கே கூட்டுவதற்கும் வலுவான காரணமின்றித்தான் அழைத்துவர வேண்டியிருக்கும். சந்தேகிப்பார்கள்.

“என்னய்யா, இந்தாளு இப்டி அலைக்கழிக்கிறான்? என் நிலைமை இன்று’ இதுதான். மதிப்பிழந்த நாட்கள். வெறித்தவனாய் வெற்றிடத்தை நோக்குகிறான் பிரேம். மொத்த யூனிட்டும் இப்போது சென்னையை அடைந்திருக்கும். ஒரு மறு யோசனையாவது எவனாவது சொன்னானா? எனக்கென்ன என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். எவன் பணத்தை யார் வாரி இறைப்பது? மனம் உடைந்தது பிரேமுக்கு. தேற்றிக் கொள்ள என்ன செய்வது என்று புரியாமல் தவியாய்த் தவித்தான் அவன். ஆனாது ஆயிற்று. பார்ப்போம் என்று மட்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான். சற்றே நிதானத்திற்கு வந்தவனாய் உணர்ந்தான்.

ந்த முறை சென்னை வந்தடைந்த போது கிஞ்சித்தும் நிறைவே இல்லை பிரேமுக்கு. பாதிப் படத்தை முடித்து விட வேண்டும் என்று போனவன் சில காட்சிகளோடு திரும்பியிருந்ததும், அந்தப் பெண் ஜீவனா கேரளாவுக்குப் போய்விட்டதும், டைரக்டர் சொல்லித்தான் இவனுக்கே தெரிய வந்தது. அதை அறிமுகம் என்று இழுத்து வந்ததே பெரிய விஷயம். அந்த அப்பன்காரன் எந்நேரமும் ஆந்தையாய் உட்கார்ந்திருக்கிறான். பத்திரிகையாளர் அறிமுகக் கூட்டம் என்றபோது கூட இப்போது வேண்டாம் என்று சொன்னான் அந்த ஆள்? என்ன பொருள் அதற்கு? வேறு ஏதேனும் திட்டம் இருக்குமோ? அல்லது தன் மீது நம்பிக்கை வரவில்லையா? தனது சமீபத்திய நிலையைத் துருவியிருப்பானோ? அதுதான் அப்படி நினைக்க வைத்துவிட்டதோ? நானாய் ஏன் இப்படியெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டும்?  தன்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே….சொல்லும் நிலையிலா தான் இருந்தோம்? அடுத்தாற்போல் ஷூட்டிங்கிற்குத் தவறாமல் வந்தால் சரி. அதுதான் இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லையே?

“மெட்ராசுக்கு வந்தாச்சுல்ல…போய் அவுங்கவுங்க வேலையைப் பாருங்க…அடுத்த ஷெட்யூல் எப்பன்னு பின்னாடி சொல்றேன்….” – முகத்தில் ஈயாடவில்லையே யாருக்கும்? காலையில் பொழுது விடிந்ததுமே வந்து நின்று விட்டார்களே? எவனாவது ஒருத்தன் ஃபோனில் கேட்டுக் கொண்டால் போதாதா? மொத்தப் பேருமா இப்படிக் கூட்டமாய் வந்து வரிசை போட வேண்டும்? ஏண்டா தலையைக் கொடுத்தோம் என்று நினைக்கிறார்களோ? கழன்று கொள்வார்களோ? பழகிய பழக்கத்தில் அழைத்தாயிற்று. வந்தாயிற்று. அவர்களுக்குமே நம்பிக்கை இல்லை போல்தான் தெரிகிறது. உறுதிப் படுத்திக் கொள்ளும் ஆர்வம். அவனவனுக்கு அவனவன் பிழைப்பு.

“நம்பிக்கை இருந்திருந்தால்தான் எக்ரிமென்ட் போட்ருவமேண்ணே” என்று அனத்தியிருப்பார்களே….ரெண்டு ஷெட்யூல் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுப் பிடிக்கிறார்களா? எல்லாம் என் நேரம்….என் மீது இத்தனை அவநம்பிக்கை விழ, என் தோல்விகள்தான் காரணம். இந்தத் தொடர்ச்சியான தோல்விகளுக்கு அவள் காரணம். அதன் மூலமாய் பிரபலமாய் உள்ள வேறு சிலரும் என்னை வேண்டாம் என்று சொல்ல வைத்தது இன்னொரு காரணம். எல்லாச் சீரழிவுகளுக்கும் ஆதாரம் அந்த மாயப் பிசாசு. அவளின் மாயத் தோற்றத்தில் என்னைச் சீரழித்துவிட்டாள். அந்தக் கிடங்கில் வீழ்ந்து அழிந்துபட்டேன் நான். இன்று தன்னந்தனியனாய், ஒற்றை மரமாய்த் தனித்து நிற்கிறேன். என்ன அவலம் இது? ஒரு மனிதனுக்கு இத்தனை வேகமான ஏற்றமும் வேண்டாம். இத்தனை புயலான இறக்கமும் வேண்டாம். என் தோல்விகளே என்னை முடங்கச் செய்து விட்டனவா? என் முயற்சிகளை வீணடித்துவிட்டனவா?

உடம்பில் வெறி ஏறியது. கண்கள் ஜிவ்வென்று சிவப்பேறின. தலை வெடித்து விடும்போல் கொதித்தது. கைகளும், கால் நரம்புகளும் முறுக்கேறி நின்றன. இருக்கும் மதர்ப்புக்கு என்னமாவது செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் இந்த ராட்ச்சசம் அடங்கும். புயலாய் எழுந்தான் பிரேம். இரண்டில் ஒன்று. இப்போது இதுதான் அவன் முடிவு. என்னை ஒருவனும் அல்லது ஒருத்தியும் ஏமாற்றியதாக, நான் ஏமாந்ததாக சரித்திரம் முடிவடையக் கூடாது. என் கதைக்கு நானே முதலும் முடிவும். எல்லாமும் என்னாலேயே துவக்கப்பட்டு, என்னாலேயே முடிக்கப்படவும் வேண்டும். அதுதான் என் வீழாத சரித்திரம். எழுந்து நின்று கைகளை அகல விரித்து ஓங்காரமாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டான் பிரேம். அடுத்த சில நாட்களில், அவன் மனம் எதிர்பாராத ஒரு தீவிர முடிவுக்கு வந்திருந்ததைத் தவிர்க்கவே முடியவில்லை அவனால். விளைவுகளைப்பற்றி சிந்திக்காத மனம் குறிப்பிட்ட புள்ளியில் வெறியோடு நிலை குத்தியிருந்தது.

— உஷா தீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad