எழுத்தாளர் பாலகுமாரன்
‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ – தமிழ் பேசும் பலரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பயன்படுத்திய இந்த வரிகளை எழுதியவர் இன்று இல்லை!
1980களில் தமிழறிந்த இளவட்டங்களைத் தனது வசீகர எழுத்துக்களால் கட்டிப்போட்ட, ‘எழுத்துச் சித்தர்’ என்று கொண்டாடப்படும் பாலகுமாரன் மறைந்துவிட்டார்.
சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சமயத்தில்,புதுக்கவிதை எனும் கவிதைக் கிறுக்கல்கள் புற்றீசல் போல பெருகியபோது க. நா. சு என்ற இலக்கிய விமர்சகர் ‘எழுத சோம்பல் படுகிறவன் புதுக் கவிதை எழுதுகிறான்’ என்று சொன்னதைக் கேட்டு ரோஷத்துடன் கதை எழுதத் துவங்கியவர் பாலகுமாரன். நாற்பதாண்டுகளுக்கு மேல் எழுதி வரும் இவர் குமுதம், ஆனந்தவிகடன், கணையாழி, கல்கி போன்ற பிரபல வார இதழ்களில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும்,ஏறத்தாழ முந்நூறு நாவல்களையும் படைத்துள்ளார்.
இவரது சொல் ஆளுமைக்கு அடிமையாகி இவரை ஞானத்தந்தையாக, குருவாக, வழிகாட்டியாக ஏற்று மகிழ்ந்தவர் பலர். காதல் மற்றும் குடும்ப பந்தங்களை சிறுகதைகளிலும் புதினங்களிலும் இவர் படைத்தது போன்று தத்ரூபமாக எவரும் படித்ததில்லை எனலாம். அக்காலங்களில் எழுத்தாளர்கள்,குறிப்பாகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் தயங்கிய பல கருத்துக்களைத் துணிச்சலுடன் அதே சமயம் வக்கிரமில்லாமல்,கலாச்சார சீரழிவின்றி எழுதினார். கட்டுப்பாடுகள் மிகுந்த அக்காலச் சமூகத்தில் வீட்டு விலக்கு எனும் பெயரில் பெண்கள் வெராந்தாவில் அவஸ்தையுடன் இருத்தப்பட்டதை சிறுகதையாக எழுதியதைப் படித்து விட்டு, தங்கள் வீட்டு வழக்கத்தை மாற்றிக் கொண்டவர் பலர். பெண்கள் உயரே பறக்க வேண்டுமென்ற எண்ணம் அவரது எழுத்துக்களில் மிகுந்திருந்தது. பட்டுத்தறி நெசவு போன்ற சொல்லமைப்பு நேர்த்தியுடன் வாசகரின் மனதுக்குள் புகுந்து கோட்டை கட்டியமர்ந்தவர்.
பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் இவர் படைத்த ‘உடையார்’எனும் வரலாற்றுப் புதினம் தமிழ் இலக்கியவுலகில் தனியிடத்தைப் பிடித்துள்ளது. ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘இரும்புக் குதிரைகள்’, ‘அகல்யா’, ‘எட்ட நின்று சுட்ட நிலா’, ‘இனிது இனிது காதல் இனிது’ போன்ற எண்ணற்ற நாவல்கள் வாசகர் மனதில் பதிந்து போனவை. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’என்று தன் வரலாற்றையும் எழுதினார். ‘நாயகன்’, ‘சிந்து பைரவி’, ‘குணா’, ‘பாட்ஷா’, ‘ஜென்டில்மேன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற திரைப்படங்களில் பணியாற்றியதுடன், பாக்யராஜின் துணையுடன்‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தை இயக்கியும் உள்ளார்.
‘பறவைகள் அடையும் பெருமரங்கள் வீழ்ந்து மனிதர்கள் அடையும் கல்மரங்கள் முளைத்த காடு’ என்று சென்னையை வர்ணித்து கவிதை படைத்த பாலகுமாரன் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். ‘விசிறி சாமியார்’ என்று அறியப்பட்ட யோகிராம் சுரத்குமாரின் வரலாற்று நூலையும் இவர் படைத்துள்ளார்.
‘உங்கள் வாழ்நாள் ஆசை என்ன’ என்ற ஒரு கேள்விக்கு,‘நான் மறைந்த பின்னர் சில ஆண்டுகளாவது மக்கள் என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்,என்னுடைய வாழ்க்கையும், எழுத்தும் ஒரே கோட்டில் இருந்ததாக சொல்ல வேண்டும். அப்படி மற்றவர்களுக்கு உதவி மகிழுமாறு ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்’ என்றவர் பாலகுமாரன்.
எழுத்துத் தவம் புரிந்த இந்த ‘எழுத்துச் சித்தர்’பாலகுமாரன் தமிழுள்ளவரை நம் நெஞ்சில் நிறைந்திருப்பார்.
- ரவிக்குமார்
(Picture Courtesy: https://www.writerbalakumaran.com)







