\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒரு நாள் விரதம்

Filed in கதை, வார வெளியீடு by on May 28, 2018 1 Comment

அப்பா

பத்து வயது விக்னேஷ் குரல் கொடுத்தான்.

ம்என்ற ஒற்றை எழுத்தாக  பதில் அளித்தான் அரவிந்த்.

அப்பாமீண்டும் கவனம் ஈர்க்கும் விதமாக ஒரு ஏற்றத்துடன் அழைத்தான் விக்னேஷ்.

சொல்லு “..  ஒரு எழுத்து ஒரு சொல்லாக மாறி பதில் வந்தது.

சமையல்  அறையில் இருந்து கௌசி,

அரவிந்த் , விக்னேஷ் ஏதோ உங்க கிட்ட சொல்ல வரான் . தயவு செய்து கொஞ்சம் என்னன்னு கேளுங்க

கணிப்பொறி  திரையில் ஒரு கண் வைத்தபடியே,

“சொல்லு கண்ணா ” என்று சொற்களை அதிகரித்தான்.

விக்னேஷ் பதில் சொல்லாமல் இவன் முகம் மட்டும் பார்க்கவே, மீண்டும் உள்ளே இருந்து சிபாரிசு பலமாக வந்தது. இம்முறை கணிப்பொறித் திரையில் இருந்து  கண்ணை எடுத்து விட்டு , என்ன என்று பாக்க,

“என்னோட விளையாடுறியா? “

“இப்போவா.. ? மணி 9 ஆகப் போகுது . நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும் . அதனால நீ இப்போ தூங்கப் போகணும்”

சற்று முகம் தொங்கிப் போனது விக்னேஷுக்கு.

கௌசி மீண்டும் உள்ளே இருந்து “எப்போ பாரு ஆபீஸ் வேலை, இல்லை வாட்ஸ் அப் ல சாட்டிங் இல்லைனா , பேஸ் புக் ல வெட்டிக் கதை பாக்கிறது. குழந்தையோட கொஞ்சம் நேரம் செலவு பண்ண முடியுதா?

அரவிந்திற்கு ஒரு அரை மணி நேரம் முன்னால் வீட்டில் குமோனால் நடந்த களேபரம் நினைவிற்கு வந்தது.

விக்னேஷ் பண்ணமாட்டேன் என்று ஆடம் பிடித்ததும்.. கௌசி கோபமாகக் கத்திக் கொண்டு இருந்ததும்.

அப்பொழுது விக்னேஷ் குழந்தையாக இல்லை கோட்டானாக தெரிந்தான். இப்போ குழந்தையா ?

கேள்வி கேட்க முடியாது. அந்த உரிமை கல்யாணம் செய்த அன்றே பறி போனது.

கௌசியின் குரலில் மீண்டும் நிதர்சனத்திற்கு வந்தான்.

“எங்கே தான் போவீங்களோ பேசிட்டே இருக்கேன் .. காதிலேயே விழாது. அவனை கொஞ்சம் தூங்கவாவது கூட்டிட்டு போங்க.. ஏதாவது கதை சொல்லி தூங்க வைங்க”..

கதை என்றதும் குதித்தபடி கிளம்பினான் விக்னேஷ் ..

கணிப்பொறியை நகர்த்தி வைத்து விட்டு, அவன் பின்னே மாடிக்குத் தொடர்ந்தான்.

என்ன கதை சொல்றது…யோசித்தபடி அரவிந்த் இருக்க ,

“விக்னேஷ் நீயே ஒரு கதை சொல்லேன் “

விக்னேஷ் கட கட என்று ரொம்ப நேரம் பேசியபடியே இருந்தான். ஏதோ அவனோட வகுப்பில் நடந்தது, விளையாடும் போது நடந்தது , என நிறுத்தாமல் பேசியபடி இருந்தான்.

கொஞ்ச நேரம் அவன் பேசியதைக் கவனித்தான் அரவிந்த். அப்புறம் கவனம் எங்கோ சென்றது.

“அப்பா..”  என நடுவில் நிறுத்தி இவன் கவனிக்கிறானா என விக்னேஷ் பார்க்க “

“அப்படியே உங்க அம்மா மாதிரிடா நீ, தொண தொணன்னு நிறுத்தாம எப்படி தான் பேசறியோ. உங்களுக்கு எல்லாம் அந்தக் காலத்தில இருந்த மாதிரி மௌன விரதம் எப்படி இருக்கறதுன்னு சொல்லித் தரலாம் “

“மௌன விரதமா? அப்படினா ?”

“பேசாம இருக்கறது.”

“ஒண்ணுமே பேசக் கூடாதா? “

“ஆமாம் ஜாடை கூட காட்டக் கூடாது “.

“ஒரு நாளைக்கு முழுக்கவா ?”

குறைஞ்ச பட்சம் காலை ஆறுலேந்து மாலை ஆறு வரை இருக்கணும் “

“அது எப்படி முடியும் ஒருத்தரால ?”

“ஏன் முடியாது. நிறைய பேரு  இருந்திருக்காங்க .. எங்க பாட்டி , எங்க அப்பா இப்படி நிறைய பேர் நான் பாத்திருக்கேன் “

“இருந்தா என்ன ஆகும்”.

ஹ்ம்ம் இவனுக்கு புரியற மாதிரி சொல்லணுமே … கொஞ்ச நேரம் யோசித்து,

“ஒரு வித பவர் வரும் spider man மாதிரி”

“நீ இருந்திருக்கியா”

“இல்ல”

“உன்னால முடிஞ்சிருக்காதே”  என கேலி செய்து சிரிக்க

“டேய் ஏன்டா .. என்னால முடியாதா என்ன .. “

“சரி இருந்து காட்டு பாக்கறேன் “.

“நாளைக்கே .. “

“சரி”

விக்னேஷ் அரை தூக்கத்தில் ஏதோ கேட்கிறான் என்று இவனும் சரி சொல்லி வைத்தான் .

“ஆனா இப்போ எல்லாம் டெக்னால ஜி அதிக மாயிட்ட காலத்தில மௌன விரதம்ன்னா ரொம்ப சுளுவாச்சே. நம்ம தான் பேசறதே இல்லையே எப்போ பாரு போன்ல தானே பதில் ரிப்ளை பண்றோம். அது எப்படி மௌன விரதம் கணக்கு ஆகும் “

இதுவரை நாங்க பேசியதை கேட்டு கொண்டு இருந்தாள் போலும், அறையின் உள்ளே வந்தபடி கௌசி எடுத்து கொடுக்க ,

உடனே விக்னேஷ் “ஆமாம் ஆமாம்.. நாளைக்கு நீ மௌன விரதம் இருக்கணும்னா எதிலையும் பேசக்  கூடாது. ஜாடை காட்ட கூடாதுன்னு சொன்ன மாதிரி எல்லாத்திலயும் பேசாம இருக்கணும் .. இருந்து காட்டு பாக்கலாம்”

“அதெல்லாம் உங்க அப்பா வால இருக்கவே முடியாது “

கௌசியும் சேர்ந்து சீண்ட,

ரோஷம் பொத்துக் கொண்ட ஆண்மகனாய், “சரிடா சவால் . நாளைக்கு நான் இருக்கேன் “

“ஏதோ அசட்டுத் தைரியத்தில் அந்த நிமிடத்தில் சொல்லியாச்சு… இது தேவையா ன்னு யோசிக்கிற திற்கு முன்னே”.

அலுவலக வேலைக்கு வேண்டி ,கணினி மட்டும் உபயோகப்படுத்தலாம் என்று கௌசி அதற்கு விதி விலக்கு கொடுத்தாள்.

“எனக்கு தொண்டை அதிகமாக கட்டி உள்ளபடியால் வீட்டில் இருந்து பணி செய்வேன். என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று மின் அஞ்சல் அனுப்ப வைத்தாள்” .எல்லா ஊடகங்களிலும், நான் கடைசியாக எப்பொழுது லாகின் ஆகி இருந்தேன் என்று பார்க்க முடியும் ஆதலால் எல்லா ஊடகங்களிலும் என்னை கடமையாக லாக் ஆப் செய்தாள்.

என் கண் முன்னே என் உரிமைகள் பறிக்கப்பட்டது போல உணர்ந்தேன்.

“நாளைக்கு ஒரு நாள் உங்க  வாட்ஸ் அப், டெலி கிராம் , இன்ஸ்டா கிராம், பேஸ் புக், ஸ்னாப் சாட் , ட்விட்டர் என எல்லாத்தையும் மூடியாச்சு .”

“ஏதோ ஒரு குரூர வில்லி போல் தெரிந்தாள் கௌசி . இவளுக்குத் தான் என் சுதந்திரம் பறி போவதில் முதல் சந்தோஷம் .

ஏதோ பெரிய சோகம் வர போகிற சகுனம் தோன்றியது . அதை யோசித்தபடியே தூங்கச் சென்றான் அரவிந்த்.

*****

மறு நாள் காலை. பழக்கத் தோஷத்தில் அரைக் கண்ணை மூடியபடி கை நீட்டி படுக்கை அறையில் அருகில் இருக்கும் அலைபேசியைத் தேடினான். எங்கும் தட்டுப் படாமல் கை தடவியபடியே இருக்க, அருகில் இருந்து “இன்னிக்கு ஊடகம் இல்லை நாளைக்கு தான்  ” என்று இவன் ஃபோனை கையில் வைத்து கொண்டு விளையாடியபடி , சிரித்தபடி , விக்னேஷ் நினைவூட்ட,

 

“அய்யகோ இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு சிறுவனும் ” என டீ.கே பகவதி போல சோகமாக பாட வேண்டும் போல இருந்தது.

“எண் திசை கண்டேனே என் அலை பேசியில் .. ” என இன்னும் பாடல் மனதில் தொடர்ந்தது. நாள் தொடங்கிய ஒரு நிமிஷத்தில் மௌன விரதத்தில் தோற்றதாக ஒத்துக் கொள்வதா? என்ன ஆவது ஆணின் கர்வம்?.

காலை கடன்களை முடிக்கும் பொழுது எதையோ இழந்ததை போல உணர்ந்தான் அரவிந்த்.

உலகமே அமைதியாக இருந்தது போல இருந்தது. கை பரபரவென அரித்தது . எதையோ தேடியது.

விக்னேஷ் கிளம்பிச் சென்றான். கௌசியும் கிளம்பினாள். இவனுக்குக் காலை மற்றும் மதிய உணவை சிறு சிறு டப்பாக்களில் அடைத்து மேஜையில் வைத்துச் சென்று விட்டாள் .

வீடே அமைதி. அலுவலகத் தொடர்பான வேலைகளைத் தொடங்கினான். ஒரு ஈமெயில் அனுப்பி விட்டு. கை தன்னிச்சையாக இன்னொரு பக்கம் பேஸ் புக் பேஜ் திறந்தது . லாக் ஆப்(logoff) ஆகி இருந்தது பார்த்ததும் தான் மீண்டும் நினைவிற்கு வந்தது..

“அய்யயோ !!!”

வயிறை என்னமோ செய்தது. கை பரபரவென ஃபோனை தேடியது. மண்டைக்குள் ஏதோ ஒரு அழுத்தம் உண்டானது போல ஆனது. வீட்டில் இருந்த அத்தனை கடிகாரங்களும் டிக் டாக் டிக் டாக் என்று சத்தமாக ஒலி எழுப்பியது .

நல்ல வேலையாக மேனேஜரிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்தது. மனம் சிறிது நேரம் வேலையில் ஈடுபட்டது..

கொஞ்சம் வேலை ஆனபிறகு, மீண்டும் கைகள் அரிப்பு, மண்டையில் கூவும் குருவிகள்…

மாலை ஆகி விட்டதோ என்று நேரம் பார்க்க, மணி 8.00 என்று காட்டியது. அரை மணி நேரம் தான் சென்றிருக்கிறதா ?”

புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களோ, இல்லை போதை மருந்து பழக்கம் இருப்பவர்களோ இப்படி தான் கஷ்டப்படுவார்களோ.?!!!

ஃபோனை எங்கேயானும் ஒளித்து வைத்து இருக்கிறாளோ கௌசி என்று வேகமாகத் தேட ஆரம்பித்தான் . சமையல்  அறையின் எல்லா அலமாரியையும், வீடு முழுக்கவும், அலசியபடி தேடத் தொடங்கினான்.

இந்நேரத்தில் யார் யாரெல்லேயாம் மெசேஜ் அனுப்பி இருப்பார்களோ?!!எந்தெந்த  குரூப் லயும் எந்த மீம் போகிறதோ?. ஒரே பதட்டம்!!!.

“சண்டாளி எங்க ஒளிச்சு வெச்சா தெரியலையே? “

குனிஞ்சு நிமிர்ந்து எல்லா இடத்திலேயும் தேடி, வேர்த்து விறுவிறுத்துப் போனது தான் மிச்சம்.

“சரி. பேஸ் புக் லாகின் டக்குனு பண்ணினா கண்டு பிடிக்க போறாளா என்ன ?”

உள்ளே போக முயற்சித்த பொழுது போட்ட பாஸ்வர்ட் தவறு என்று காட்டியது. நேற்று ராத்திரி எல்லாத்தையும் மாத்தி இருப்பா போல.

ஸ்னாப் சாட், இன்ஸ்டா கிராம், ட்விட்டர் எல்லா பாஸ்வர்டும் மாற்றி இருந்தாள்.

“கிராதகி எத்தனை நாளா போட்ட பிளானோ இது?”

ரொம்ப நாளைக்கு அப்புறம் வராத அழுகை முட்டியது.

அலுவலகப் பணியில் மனம் செல்லவில்லை. உண்மையிலேயே தொண்டையைக் கட்டியது போல ஆனது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல கடந்தது.

காலை மற்றும் மதிய உணவு உட்கொள்ள மனம் இல்லை. உடல் நலம் சரி இல்லை என்று விடுப்பு சொல்லிவிட்டு. படுத்துத் தூங்கிவிட்டான்.

எழுந்த பொழுது ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லத் தெளிவாக இருந்தது.

மதியம் முதலில் விக்னேஷ் தான் வந்தான். பேருந்தில் இருந்து இறங்கிய அவனைக் கண்டதும் ஓடிச் சென்று ஆரத் தழுவினான். விக்னேஷ் “அப்பா பேசக்  கூடாது இன்னும் 3 மணி நேரம் இருக்கு 6 மணி வரைக்கும் பேசக் கூடாது” என்று நினைவூட்டினான்.

அவனிடம் அமைதியாகத் தலையை ஆட்டினான். விக்னேஷ் ஏதேதோ அவனுடைய நண்பர்கள் பற்றியும், அன்று நடந்தது பற்றியும், பேசியபடி இருந்தான் .

அவனுக்குச் சிற்றுண்டி தயாரித்து அளித்து, உண்மையிலேயே அவன் பேசுவதில் கவனம் செலுத்தினான். பின் கௌசி வரும் வரை இருவரும் பந்து விளையாடினார்கள். மூன்று மணி நேரம் போனது தெரியவில்லை.

5.45 க்கு கௌசி வந்தாள். வரும் பொழுதே ஒரு சிறிய புன்னகையுடன் வந்தாள். அவளது பையில் இவனுடைய அலைபேசியும் சேர்த்து எடுத்து சென்று இருந்தாள்.

ஏனோ கை பரபரக்கவில்லை. அமைதியாக ஃபோனை வாங்கினான். அதைப் பார்க்காமல் தன் பையில் வைத்து விட்டு விளையாட்டைத் தொடர்ந்தான்.

நாளை மீண்டும் ஊடகப் போதை ஏறலாம் . ஆனால் இன்றைய விரதம் இனிதே முடிவடைந்தது என்ற மகிழ்ச்சியில் கௌசி உள்ளே சென்றாள் .

*****

-லட்சுமி சுப்பு

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Saisubbulakshmi Dakshinamoorthy says:

    Super story Lakshmi Subbu..Vazhugal

Leave a Reply to Saisubbulakshmi Dakshinamoorthy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad