Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கக் கெய்ஜின் உணவு

கடல் உணவு ரசிகரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு, தட்பவெட்பம், உணவு பொருட்கள் என இவர்கள் சந்தித்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது சமையல் முறையை அமைத்துக்கொண்டனர். அதுதான் கஜுன் உணவுமுறை. கஜுன் மசாலா என்பது மிளகுடன் லூசியானா நிலப்பரப்பில் கிடைத்த பிற மூலிகைப்பொருட்கள் கலந்த மிளகாய்த்தூள். கடல் வாழ் உயிரினங்கள், சதுப்பு நில உயிரினங்கள், இந்த உணவில் பிரதானமாக இடம்பிடிக்கும் சமாச்சாரங்கள். பிறகு, இந்தக் கஜுன் உணவு முறையில் ஆசிய சமைக்கும் முறையும் கலந்து, ஆசிய கஜுன் (Asian Cajun) உணவுமுறை உருவானது.

நகரிலிருக்கும் அமேசிங் கஜுன் (Amazing Cajun) உணவகத்தில் இந்த ஆசிய கஜூன் உணவு பதார்த்தங்கள் கிடைக்கின்றன. கடல் உணவு பிரியர்கள் இதுவரை இவ்வகை உணவைச் சுவைத்ததில்லை என்றால் இங்குச் சென்று சுவைத்துப் பார்க்கலாம். பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாத எளிமையான கடை. வரவேற்கவும், பரிமாறவும், வழியனுப்பி வைக்கவும் ஒரே பெண் தான். தேவைக்கேற்ப கடையின் வரவேற்பாளர், காசாளர், சர்வர் எனப் பலவித பாத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார்.

இது கடல் உணவகம் என்பதைக் காட்டும்வண்ணம் கடையின் சுவர்களில் மீன், வலை, நண்டு, நங்கூரம் போன்ற கலைப்பொருட்கள் மாட்டப்பட்டுள்ளது. போனவுடன், மேஜையில் ஒரு நீண்ட பேப்பர் விரிக்கப்படுகிறது. கழுத்தில் மாட்டிக்கொள்ள ஏப்ரான் கொடுக்கிறார்கள். அடுத்தது கையில் மாட்டிக்கொள்ளக் கையுறை தரப்படுகிறது. இதுவே இது என்ன மாதிரியான கடை என்பதைக் காட்டிவிடுகிறது. நவ நாகரீக கோமான்களுக்கான கடை அல்ல இது. அடிமை மக்களின் எளிய உணவை, எவ்வித பந்தாவும் இல்லாமல், சுவையை நேரடியாக அணுகும் விதத்தில் பரிமாறப்படுகிறது.

ஒரு பெரிய பவுலில் நாம் கேட்கும் கடல் உணவு உருளைக்கிழங்கு, சோளம் போன்றவற்றுடன் கொடுக்கிறார்கள். விதவிதமான நண்டுகள், இறால்கள், சிப்பிகள், கணவாய் வகைகள் இங்கே கிடைக்கின்றன. இவற்றின் விலை சந்தை நிலவரத்தைப் பொறுத்தது. இதனுடன் ஒரு சிறிய பவுலில் அரிசி சோறு கொடுக்கிறார்கள். லூசியானாவின் கஜூன் உணவிலும் சரி, ஆசிய கஜூன் உணவிலும் சரி, கண்டிப்பாக அரிசி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி, எங்கும் எப்போதும் எளியவர்களுக்கான உணவாகவே இருந்து வருகிறது.

ஏப்ரான், க்ளவுஸ் மாட்டிக்கொண்டு பவுலில் இருக்கும் உணவை எடுத்து சாப்பிட வேண்டியது தான். ஸ்பூன், ஃபோர்க் எல்லாம் கொடுத்தாலும், அது நமக்குத் தேவையிருக்காது. நம் கையே நமக்கு உதவி. இந்தக் கடல் உணவுடன் அவர்கள் சேர்த்துக்கொடுக்கும் சாறானது, கஜூன் பிரத்யேக மசாலா சுவை கொண்டது. சில வகைச் சாஸ், நம்மூர் மசாலா க்ரேவி போன்ற சுவையில் இருக்கிறது. இந்த க்ரேவியுடன் சாதத்தை ஒருபக்கம் கலந்து சாப்பிட்டுக்கொண்டு, இன்னொரு பக்கம் நண்டையோ, இறாலையோ உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் நேரம் போவதும் தெரியாது, வயிறு நிறைவதும் தெரியாது. அடிமை மக்களின் உணவுக்கு நம் நாக்கு அடிமையாவது நிச்சயம்.

கஜூன் ஐட்டங்கள், இங்குள்ள சிறப்பு உணவாகும். இது தவிர, பபுள் டீ, ஹாட் பாட், ப்ரைஸ், கெபா போன்ற பிற வகைகளும் இங்குக் கிடைக்கின்றன. எல்லாமும் நிறைவாகவே பரிமாறுகிறார்கள். லூசியானா கஜுன் உணவுக்கும், ஆசிய கஜுன் உணவுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. ஆசிய கஜுன் உணவுமுறை பிடிக்காதவர்கள், கடல் உணவு அலர்ஜி கொண்டவர்கள் இங்குச் செல்வதைத் தவிர்த்துவிடலாம். நாம் சென்ற அன்று வார நாள் என்பதால், அதிகம் கூட்டம் இல்லை. ஆல்-இன்-ஆல் வேலை பார்த்த பெண்மணி சுலபமாகச் சமாளித்துவிட்டார். கூட்டம் அதிகம் இருந்தால், அவருக்கும் சிரமம். காத்திருப்போர்க்கும் சிரமமாக இருக்கும்.

வித்தியாசமாக உணவைத் தேடி விரும்பி உண்ணுபவர் என்றால், இது எதையும் யோசிக்க வேண்டாம். தாராளமாக ஒருமுறை சுவைத்துப்பார்க்கலாம். பிடித்தால் எப்படியும் பிறகு தொடருவீர்கள்.

 

முகவரி

Amazing Cajun

3995 Egan Dr

Savage, MN 55378

 

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad