ஆசை…
வண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும்
சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல்!
எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை
திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை!
நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில்
பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார்
இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது
துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம்!!
கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும்
வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய்
அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும்
என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட
ஏரிக் கரையினில் எழிலான கிராமம்
மாரி மூன்றுமுறை மாதத்தில் பொழிவதனால்
வாரி வழங்கிடும் வளமான வயல்கள்
ஊரின் மத்தியில் ஓலைவேய்ந்த திரையரங்கம்
அவசரத் தேவைக்கு அருகினில் மருத்துவம்
சமரசம் பேசிட ஆலமரத்தடி நீதிமன்றம்
அவசியம் என்பதால் அங்கங்கே மின்சாரம்
பரவசம் வந்திட பக்திநிறைத் தொழுமிடங்கள்
தொலைவினில் இருப்பவரை அழைத்திடக் கருவி
தொல்லைகள் தவிர்த்திட்ட தூய்மைமிகு அமைதி
கல்லையும் சிலைகளாய்க் கருத்துடன் நிறுவி
கலைநயம் மட்டுமின்றிக் கடவுளர் வளர்ச்சி
எளிமையும் அமைதியும் எங்கெங்கும் நிறைந்த
இணையிலா இவ்வாழ்வு இகத்தினில் பெருகிட
அனைவரும் இவைபெற்று அருமையாய் வாழ்ந்திட
இறைவனைத் தொழுதிங்கு இயைந்து ஏத்துவம்!!!
– வெ. மதுசூதனன்







