\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கடவுளின் எல்லையற்ற அன்பு

     கடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும்,  கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது.

      கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார்.

      மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள்  மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து அவற்றை உருவாக்க ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டார், ஒவ்வொரு நாளும் தான் உருவாக்கிய படைப்பின் முடிவில் அவர் மகிழ்ச்சியடைந்தார், காரணம் தன்னுடைய படைப்புகள் அனைத்தும் மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு உருவாக்கியிருந்தார்.

      கடவுளின் சாயலும் அவருடைய விருப்பமும்தான்  மனிதத்திற்கு அடித்தளம். கடலில் உள்ள மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியில் உள்ள விலங்குகளையும் ஆளும் அதிகாரத்தைக் கடவுள்  மனிதனுக்குக் கொடுத்தார் . (ஆதி ஆகமம் 1:26)

      கடவுள் தனது வார்த்தை மூலமாக உலகத்தையும், அதிலுள்ள படைப்புகளையும் உருவாக்கினார்.  அதே சமயம், முதல் மனிதனான ஆதாமை, தன் கைகளால் தனது சாயலாகப் படைத்துத் தன் காற்றை அவனுடைய சுவாச உறுப்புகளில் ஊதி, அவனுக்கு உயிர் கொடுத்தார். இதன் மூலம்   கடவுள், தான் படைத்த மனித குலத்தின் மீது தான் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்தினார்.

  

இயேசுவின் போதனை ‘அன்பு’

           தேவ மகனாகிய இயேசு, உலகத்திலிருந்த போது மக்களுக்குக் கடவுளின் அன்பினை, மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு பல்வேறு உவமைகளின் மூலமாகப்  போதித்தார். அவ்வாறே, ​​ஊதாரி மைந்தன் என்ற உவமையையும் மக்களுக்குப் போதித்தார்.

           ஒரு மனிதருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு நாள் இளைய மகன் தனது தந்தையை நோக்கி, ‘அப்பா, என் பங்கை என்னிடம் பிரித்துக் கொடுங்கள்.’ என்று கேட்டான்.

     

      யூத சட்டத்தின்படி ஒரு தகப்பன் தன் உடைமைகளைத் தான் விரும்பியபடி எளிதாகப் பிரிக்கவோ, விட்டு விடவோ முடியாது. தனது சொத்தில் மூத்த மகனுக்கு  மூன்றில் இரண்டு பங்கும், இளைய மகனுக்கு மூன்றில் ஒரு பங்குமாகப் பிரிக்க வேண்டும் (உபாகமம் 21:17) என்பது வழக்கமாக இருந்தது.

      தனது சொத்தை பிரித்துக் கேட்ட இளைய மகனிடம் தந்தை வாதிடவில்லை. காரணம் நற்பண்புகளை இதுவரை அவன் கற்றிருக்கவில்லை என்றால், கடினமான வழியில் கற்றுக் கொள்வான் என்று தந்தை அறிந்திருந்தார்.  எனவே, இளைய மகனின் வேண்டுகோளை ஏற்றுத் தனது இரண்டு மகன்களுக்கும் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தார்.

            இளைய மகனோ தனக்குக் கிடைத்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தொலை தூர நாடுகளுக்குச் சென்று,  பொறுப்பற்ற, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, தனது செல்வத்தை வீணாக்கினான். தனது எல்லாச் செல்வத்தையும் இழந்த நேரத்தில் அந்த நாட்டில் கொடிய  பஞ்சம் பரவி இருந்தது. வயிற்றுப் பசியால் வாடியபோது, அவன் கையில் உணவுமில்லை, உணவு வாங்கப் பணமுமில்லை.

      உயிர் வாழ வேறு வழியில்லாத நிலையில்,   அந்த நாட்டிலுள்ள ஒரு குடிமகனிடம் வேலை கேட்டு நின்றான். அப்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டதோ பன்றிகளுக்கு உணவு கொடுக்கும் வேலைதான். ஒருநாள்  அவனுக்கு வயிற்றுப் பசி அதிகமானதால், பன்றிகள் சாப்பிடும் உணவுகளை அள்ளிச் சாப்பிட்டான். ஆனால் அதை அந்த எசமானன் அனுமதிக்கவில்லை.

      அப்போதுதான் தன் அவல நிலையை உணர்ந்தான். ​​’என் தந்தையிடம் எத்தனை பேர் கூலிகளாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு என் தந்தை வயிறார உணவளிக்கிறார். அனால் நானோ, இங்கு பசியால் துவண்டு போய்க் கிடக்கிறேன்.” என்று கதறி அழுதான்.

      மேலும் “நான், என்  தந்தையிடம் திரும்பிப்போய், தந்தையே, கடவுளுக்கும்  உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்; நான் இனி உன் மகன் என்று அழைக்கப்படத் தகுதியில்லாதவன். உம்மிடம் வேலை செய்யும் கூலிக்காரரில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்பேன்” என்று  சொல்லிக் கொண்டே தன் தந்தையைத் தேடிப் போனான்.

      கடவுளுக்கு எதிராகவும், தனது  தந்தைக்கு எதிராகவும் பாவம் செய்ததை உணர்ந்து, மனம் திருந்தி,  தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்கச் சென்றான். தன்னை மகனைபோல அல்ல, ஒரு வேலைக்காரனாக சேர்த்துக் கொண்டாலே போதும் என்ற மனநிலையில் தந்தையைத் தேடிச் சென்றான்.

             தனது மகனின் பிரிவில் வாடும் தந்தை, தூரத்தில் சோர்ந்து போனவனாக நடந்து வரும் தன் மகனைப் பார்த்தார். ஓடி வந்து தன் மகனைக் கைகளால் அணைத்து முத்தமிட்டார். அவர் அவன் மேல் இரக்கம் கொண்டார்.

      மனம் திருந்தி வந்த மகன் தந்தையை நோக்கி “அப்பா, கடவுளுக்கு  விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தேன். நான் இனி உங்களுடைய மகன் என்று சொல்லுவதற்குக் கூடத் தகுதியில்லாதவன்.” என்று கதறி அழுதான்.

      தந்தையோ மனம் திருந்தி வந்த மகனை அன்போடு ஏற்றுக் கொண்டார்.      

      தந்தை தன் ஊழியர்களிடம், “உடனே என் மகனுக்குச் சிறந்த, புத்தம் புதிய ஆடைகளைக் கொண்டு வாருங்கள். அவருடைய விரல்களுக்கு மோதிரத்தையும் காலுக்குக் காலணியும் அணியுங்கள். அனைவருக்கும்  பெரிய விருந்தைத் தயார் செய்யுங்கள். என் மகன் திரும்பி வந்ததை நாம் எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்” என்றார்.

      அங்கு கூடியிருந்தோரிடம் அந்தத் தந்தை, “இறந்து போயிருந்த என் மகன் உயிர்த்து விட்டான்.  காணாமல் போயிருந்த என் மகன் கிடைத்து விட்டான். ” என்று மிகுந்த பூரிப்போடு கூறினார்.

     

      உறவுகளைத் தவிர்த்து தனது தந்தையை அவமானபடுத்திவிட்டு, தீயவழியில் சென்ற மகன் இறந்துவிட்டதற்கு ஒப்பாவான். மனம் திருந்தியவனாக  எப்போது மீண்டும் வருகிறானோ அப்போதே உயிர்த்து விட்டான்.

      இந்த உவமையானது, கடவுள் மனிதர்கள் அனைவர் மேலும் எவ்வளவு அன்பைப் பொழிகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பாவச் செயல்களினால் கடவுளிடமிருந்து விலகிச் சென்ற எந்த மனிதனும் மனம் திருந்தி மீண்டு வரும்போது, கடவுள் அந்த மனிதனைத் தேடி வந்து, பாவங்களை மன்னித்து அன்போடு அணைத்துக் கொள்கிறார்.

      எனவே தான், இயேசு கிறிஸ்து, “நல்மனம் கொண்ட தொண்ணூத்தி ஒன்பது நீதிமான்களைக் காட்டிலும், மனந்திருந்தி வரும் ஒரே ஒரு பாவியின்மேல் பரலோக ராஜ்யத்தில்  அதிக மகிழ்ச்சி உண்டாகிறது” (லூக்கா 15: 7). என்றார்.

      ஊதாரி மைந்தன் மனம் திருந்தி தன் வீட்டிற்குச் சென்றபோது, தனது தந்தையிடம் முன்பு பார்த்ததைவிடப் பலமடங்கு அதிகமான அன்புள்ளத்தைக் கண்டார். இந்த உவமை தந்தையாகிய கடவுளின் மேன்மையைக்  காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் எல்லையில்லாத அன்பைக் கடவுள் மனித சமுதாயத்தின் மீது பொழிகிறார்.

கடவுள், மனித சமுதாயத்தின் மேல்  கொண்டுள்ள

அன்பு எல்லையற்றது….

Dr. அந்தோனி தாமஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad