banner ad
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

எப்பேர்ப்பட்ட கவிஞனுக்கும் சில சமயங்களில் சொற்பஞ்சம் ஏற்படுவதுண்டு. எதுகை, மோனை, இயைபு நயங்களுக்காகச் சொற்கள் திணிக்கப்பட்டிருப்பதைப் பல கவிதைகளில் காணலாம். இவ்விதச் சொற்கள் வரிகளில் துருத்திக்கொண்டு நின்று அழகையும், கருத்தையும் கெடுத்துவிடும். சினிமாப் பாடல்களில் இந்தக் குறையற்ற கவிநயத்தைப் பலரும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கண்ணதாசனின் சொற்கள், தேர்ந்த சேவகன் ஒருவன் சிந்தாமல் சிதறாமால் தேனைக் கோப்பையில் ஊற்றினால் அந்தத் தேன் எப்படி கோப்பையின் வடிவத்துக்கேற்ப பரவி நிற்குமோ  அது போல வரிகளில் அழகாகப் பொருந்தி அடைக்கலமாகும். இன்னும் சொல்லப்போனால் அவரது பாடல் வரிகளில் ஒரு சொல்லுக்கு கருத்தும். சந்தமும், இசைக்கட்டும் சிதையாமல் மாற்றுச் சொல்லைத் தேடிப்பிடித்துப் போடுவது மிகக் கடினம். அது காதல், சோகம், தத்துவம், வீரம் என்று எந்த வகைப் பாடலாக இருந்தாலும் சரி, சொற்களை இணைக்கும் தளையை மிகச் சீராக அமைப்பது கவியரசருக்கு கைவந்த கலை.

சென்ற மாதங்களில் தொடங்கி  வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடல்கள் சிலவற்றைப் பார்த்து வருகிறோம். அவ்வகையான, மேலும் சில பாடல்களைக் காண்போம்.

பார்த்தால் பசி தீரும் – சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி எனப் பலர் நடிக்க, பீம்சிங் இயக்கத்தில் 1962ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வலுவான கதை, உணர்வு மிகுந்த பாத்திரங்கள், அதற்கேற்ற நடிகர்கள் எனக் கச்சிதமாகச் செதுக்கப்பட்டிருந்த படைப்பு.

திருமண வயதை எட்டி நிற்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனக்கு யார் துணையாக வருவார், எப்படி இருப்பார் என்ற கேள்விகள் தொக்கி நிற்கும். இந்தச் சூழலில் நிற்கும் நாயகனும் நாயகியும் ஒருவர் மீதொருவர்  பிரியப்பட்டாலும் அந்தஸ்து பேதங்கள் அவர்களைச் சேர விடுமா என்று நாயகன் தயங்கி நிற்பதாகக் காட்சி. அந்த அச்சத்தைப் போக்குவதற்காக நாயகி பாடும் பாடல்.

யாருக்கு மாப்பிள்ளை யாரோ?
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?
எந்தப் பார்வை பட்டு,
சொந்த உள்ளம் கெட்டு,
எங்கே மயங்கி நின்றாரோ?

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ?
அதில் கைகலந்து காதல் புரிவாரோ?
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ?
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ?

ஊர் அறிய மாலையிடுவாரோ?
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ?
சீர் வரிசை தேடி வருவாரோ? இல்லை
சின்ன இடை எண்ணி வருவாரோ?

சின்னதாகக் கேலியும், சன்னமான காதலும் இழையோடும் பாடல். சின்ன இடைக்காக (தனக்காக) வருவாரோ, இல்லை சீர்வரிசைக்காக வருவாரோ என்று எண்ணி பயந்த காலமது. ஆண்கள் தொட்டுத் தொட்டுப் பேச வெட்கப்பட்டு, தூர நின்று ஜாடை காட்டி பேசிய காலம். பிற்காலத்தில் மாப்பிள்ளை பற்றிய எதிர்பார்ப்பு ‘முத்தமிட்டு இங்கே தொடுங்க, மொத்தமாகச் சொல்லிக் கொடுங்க (யாரோ, யாரோடி உன்னோட புருசன்)’ என்று வளர்ந்துவிட்டது.

சரி, மேற்கண்ட பாடல் வினாக்களாலேயே தொடுக்கப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா? காட்சிப்படி நாயகி மட்டுமே பாடுவதாய் அமைந்த பாடலாகையால் விடை ஏதுமின்றி, வினாக்களால் மட்டுமே உண்டான இந்தப் பாடலைப் பாடியவர் ‘இசையரசி’ பி. சுசிலா. ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ ஓ ஓ ஓஹோ’ என்று பாடுகையில் அவரது குரலிலுள்ள இனிமையைக் கவனியுங்கள். இடையிசையில் ஹம்மிங்கைப் பிரதானப்படுத்தி மெல்லிசை மன்னர்கள்  இசை விந்தை புரிந்திருப்பார்கள்.

சென்ற வாரம் நான் குறிப்பிட்ட ‘எதனால் எது’ என்ற வினாப் பாடலும் இதே ”பார்த்தால் பசி தீரும்” படத்தில் இடம்பெற்றது தான். இப்போது கண்டு பிடித்துவிட்டீர்களா?

கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்தது ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?

இந்தப் பாட்டை பற்றி என்ன சொல்வது? முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற சிறுபிள்ளைகளின் வியப்பு, நாயகனும் நாயகியும் பாடும் திரைப்படப் பாடலாய் உருவாக்க எவ்வளவு தைரியம் வேண்டும். அதில் சுவை சேர்க்க எவ்வளவு திறமை வேண்டும்? எப்படி வினாக்களால் தொடர்ந்து நான்கு வரிகள் எழுதிவிட்டேன் பார்த்தீர்களா?

‘பருவம் வந்ததும் ஆசை வந்ததா? ஆசை வந்ததும் பருவம் வந்ததா?’- உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் விடை தெரியாத கேள்வி இது. ‘காதல் என்பதா பாசம் என்பதா கருணை என்பதா, உரிமை என்பதா?’ என்று கணவன் மனைவி உறவை எந்தப் பரிமாணத்தில் பொருத்துவது என கவிஞர் வியந்திருப்பது பெரும் ஆய்வுக்குரியது.

எளிய, சின்னச் சின்னக் கேள்விகளை மெட்டமைத்து, இசை கோர்த்து அற்புதப்படுத்தியிருப்பார்கள்

விஸ்வநாதன் ராமமூர்த்தி எனும் இசைச் சக்கரவர்த்திகள்.  கிட்டாரும், வயலினும் மெல்லிய பின்னிசை அமைத்துத் தந்த பல்லவியைத் தொடர்ந்து சரணத்தில்  தபலாவின் நடையில் முற்றிலும் வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். ‘வந்ததா’, ‘அசைந்ததா’ என்று பி.சுசிலா பாடுமிடங்களில் நாயகியின் இளமைத் துடுக்கை அடிக்கோடிட்டு காட்டியிருப்பார்கள். நாயகனின் மிடுக்குத் தெறிக்கும் வகையில் எழிலிசை வேந்தன் டி.எம். சௌந்தரராஜன் சொற்களை உச்சரிக்கும் விதமே அலாதிதான்.

இரண்டு பாடல்களிலும் இடம்பெற்றிருப்பது சரோஜாதேவி சிவாஜிகணேசன்  ஜோடி தான். தனது வழக்கமான துள்ளல்களால், துடிக்கும் விழிகளால் சுவை சேர்த்திருப்பார் சரோஜாதேவி.  

இத்தனை அதிசயங்களையும் தனது நடையால் மட்டுமே விழுங்கியிருப்பார் நடிகர் திலகம். முதல் பாடலில் இறுதிப் பகுதியில் சிறிய வெட்கத்துடன் நடந்து வரும் நாயகனுக்கும், இரண்டாவது பாடலில் சற்றே முதிர்வடைந்த நடையில் இருக்கும் அழுத்தத்தையும் பாருங்கள்.

கதையையும் பாத்திரத்தையும் உணர்ந்து அனைத்துக் கலைஞரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு  நின்றிருப்பர்.

‘அன்று ஊமைப் பெண்ணல்லோ, இன்று பேசும் பெண்ணல்லோ’ (இதுவும் வியப்பு கலந்த ஐய  வினாவன்றோ?) ,’பார்த்தால் பசி தீரும்’, ‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன்’, ‘உள்ளம் என்பது ஆமை’ என இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் எத்தனை தடவை கேட்டாலும் இசைப்பசி தீரவே தீராது.

       பாடல் வந்ததும் தாளம் வந்ததா? தாளம் வந்ததும் பாடல் வந்ததா?

       பாவம் வந்ததும் ராகம் வந்ததா? ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

என்று பிரித்தறிய முடியாமல்,  நம்மை வியக்க வைக்கும் பாடல்கள் இவை.

‘நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது’  எனும் பாடலுக்கு முன்னோடியான அடுத்த வினாப் பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.

–    ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad