banner ad
Top Ad
banner ad

ஆண்டாள் கல்யாணம்

ஏதோ  ஒரு காரணத்தினால் பரம்பொருளை பிரிந்த ஜீவாத்மா, லோக வியாபாரம் என்னும் சுழற்சியில் பிறப்பு, இறப்பு என்னும் மாய வலைக்குள் சிக்கி உழல்கிறது.

“அந் நாள்  நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்” என்ற வாக்கிற்கிணங்க ஜீவாத்மா மீண்டும் மீண்டும் சுழன்றபடியே இருக்கிறது.அந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு, பரம்பொருளை அடைவதற்கு ஒரு  மார்க்கமே பக்தி மார்க்கம்.

“பவ்யதே இதி பக்தி: ” என பக்தி தோன்றுவதற்கு முதலில் மனதில் பவ்யம் மிக அவசியம். பக்தி மார்க்கத்தில் இறைவனை உணர்ந்து அடைந்த ஆழ்வார்களும் , ஆச்சார்யர்களும் எண்ணற்று பாரத பூமியில் இருக்க, அவர்களில் மிக முக்கியமானவர் ஆண்டாள். பெண் ஆழ்வாராகவும், பூதேவியாகவும் , கோதா ரத்தினமாகவும் போற்றப்படுகிறார்.

மென்னடை அன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூர் ” என அழைக்கப்படும் வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தருக்கு மகளாக, துளசிச் செடிகளுக்கிடையில், தோன்றினார்.  பக்தியால் உருகிப் பாவை நோன்பிருந்து, திருப்பாவைப் பாடி , “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து  ”  என கனவு கண்டு ரங்கராஜப் பெருமாளை மணம் முடிக்கிறார். “சூடிக் கொடுத்த” அச்சுடர்க்கொடியின் மாலையை வரித்தார் பெருமாள்.

“ஒரு மகள் தன்ன உடையேன் உலகம் நிறைந்த புகழாள்

திருமகள் போல வளர்த்தேன் செங்கன் மால் தான்  கொண்டு போனார்.”

விஷ்ணு சித்தரின் இந்தப் பாசுரத்தின் வழி மனிதர்கள் எத்துனை அடக்கத்துடன் இருக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இறைவன் தன்னுடைய சொத்தைத் தானே கொண்டு செல்கிறான்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில்  நாம் செய்யும் ஆண்டாள் திருக்கல்யாணம் இதை உணர்த்துவதற்காகவே .

சனவரி 13ஆம் தேதியன்று , எடைனா எஸ்.வி. ஆலயத்தில் ஆண்டாள் கல்யாணம் மிக விமரிசையாக நடந்தேறியது. கடந்த நான்கு வாரமாக நடந்த மார்கழி மகா உத்சவத்தின் இறுதி வாரமாக கல்யாண உத்சவம் நடைபெற்றது.

“ஓங்கி உலகளந்த” என்கிற பாசுரத்தில்  துவங்கி, கல்யாண உத்சவத்திற்கும் பொருத்தமான பாடல்களை இணைத்து  இசை கூட்டினார்கள் மினசோட்டா தேவகானம் குழுவினர். இணையாக வயலினில் திருமதி.தீபிகாவும், மிருதங்கத்தில் செல்வன்.பிரஸீத் பாலாஜியும்.

பொருத்தமான இடங்களில் பாசுரத்திற்கு அபிநயமும், நடனமும்  சேர்த்ததோடு, சிறுவர் சிறுமியரின் துள்ளலான கோலாட்டம், மகளிரின் கை கொட்டி களி நடனமென உத்சவத்திற்கு அழகு  கூட்டினர் திருமதி. அம்ரிதாவின் தரங்கிணி குழுவினர்.

ராமானுஜ  கோஷ்டி குழுவினர் மந்திரங்கள் ஓத, ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு  விமரிசையாக நடந்தது. ஆண்டாள் கோஷ்டி குழுவினர் உழைப்பில் தயாரிக்கப்பட்ட உணவு அமுதம் போலவே இனித்தது.

இந்நிகழ்விற்காக  உழைத்த அனைத்து தன்னார்வல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

“மனம் முழுவதும் பக்தி இருந்தால் வாய் வழியே வெளியே வருவது திருப்பாவை” என மார்கழிக்கே உரிய திருப்பாவையைப் பாடி பவ்யமாக பக்தி செய்தோமாயின் நாமும் பரம்பொருளை அடையலாம்.

  • லக்ஷ்மி சுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad