Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

லவ் பேர்ட்ஸ்

Filed in கதை, வார வெளியீடு by on February 14, 2019 0 Comments

2019 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதம், பதினான்காம் தேதி… மாலை ஐந்து மணி………

பாக்மேன்ஸ் ஃப்ளவர் ஷாப்….

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், மனைவி லக்‌ஷ்மிக்கு வேலண்டைன்ஸ் டே ரோஸஸ் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று திட்டம். பாக்மேன்ஸ் பார்க்கிங்க் லாட்டுக்குள் நுழைந்தால், எங்கெங்கு காணினும் கார்களடா எனும் வகையில், தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம். பார்க்கிங்க் லாட்டில், இரண்டு மூன்று முறை சுற்றி, ஒரு வழியாக கடையின் எண்ட்ரன்ஸிலிருந்து வெகு தொலைவில் ஒரு ஸ்பாட் கிடைத்து, பார்க்கிங்க் செய்தான். எல்லாம் நம்மைப் போல, கடைசி நேர ‘ரோஸ் ஃப்ளவர் கேஸ்’கள் என்று நினைத்துக் கொண்டே காரை விட்டு இறங்கி, கடையை நோக்கி நடக்கலானான்.

மினசோட்டா, தனக்கே உரிய ஃபிப்ரவரி மாதப் பனியை எங்கெங்கும் அள்ளித் தெளித்திருந்தது. காலையிலிருந்து பனி பொழிந்து கொண்டிருந்ததாலும், குளிரின் கணக்கு மைனஸில் சென்றிருந்ததாலும் பெய்துகொண்டிருந்த பனி ஐஸாக மாறி, நடந்து செல்வதையே பெரும் சவாலாக மாற்றியிருந்தது. தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் காற்று, குளிரை மேலும் பல மடங்கு அதிகப்படுத்தி, சிறிது சிறிதாக வெளியில் தெரியும் உடற்பாகங்களைக் கூர்மையான ஐஸ் கட்டியைக் கொண்டு குத்திக் கொண்டிருந்தது. ‘எவண்டா இந்த வேலண்டைன்ஸ் டேய விண்டர்ல வச்சது’ என மனதால் வைது கொண்டே, தலையைக் குனிந்து காற்று முகத்தில் பெருமளவு விழாதது போல நடந்தான்.

கடைக்குள் வந்ததும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இரத்தம் சற்று உறைந்து போன விரல் நுனி, மூக்கு, காதுகள் என உடலின் நுனிப் பாகங்களைச் சற்று தேய்த்து விட்டுக் கொண்டு, கதகதப்பு மூட்டினான். ஜனத் திரளின் மத்தியிலே நீந்தி, ரோஜாப் பூக்கள் வைக்கப்பட்டிருந்த சுவரை நோக்கி படிப்படியாக முன்னேறினான். கண்ணாடிக் கதவுகளின் பின்னால், அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த ரோஜாப்பூக் கொத்துக்களைக் கண்டான். எத்தனை விதமான வண்ணங்கள், ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க, அதுவரை குளிரில் புலம்பிக் கொண்டே வந்த அத்தனைத் துயரங்களும் பறந்து போய், மனம் முழுதும் காதல் வந்து தொற்றிக் கொண்டது.

பார்க்கும் ஒவ்வொரு ரோஜாப் பூவிலும் லக்‌ஷ்மியின் முகம் சிரிப்பதாக உணர்கிறான். ஒவ்வொரு வண்ண ரோஜாவிலும், ஒவ்வொரு விதமான உணர்வுகளைக் காட்டுகின்றாள் லக்‌ஷ்மி. அங்கிருக்கும் அத்தனை வண்ண ரோஜாக்களையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று தோன்றினாலும், பனிரெண்டு ரோஜாக்கள் வைத்துக் கட்டப்பட்ட, அவளுக்கு மிகவும் பிடித்தமான பிங்க் கொத்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டான். பணம் செலுத்துவதற்காக, நீளமாக நின்ற க்யூவின் பின்னால் வால் பிடித்துக் கொண்டு நின்ற கணேஷிற்கு, இரண்டு மூன்று மனிதர்களுக்கு முன்னால் நின்ற டாக்டர். ராமலிங்கம் கண்ணில் பட்டார்.

தன் வீடு இருக்கும் அதே தெருவில் வசிக்கும் நண்பன் சரவ்’வின் தந்தை டாக்டர் ராமலிங்கம். சில வருடங்களுக்கு முன்னர் அதே தெருவில் வீடு வாங்கிக் குடி வந்த சரவ் மற்றும் அவன் மனைவி வேணி இருவரும் சொற்ப தினங்களிலேயே இவர்களுக்கு நண்பர்களாகியிருந்தனர். சரவ்’வின் பெற்றோரான டாக்டர் ராமலிங்கமும், அவரின் மனைவி நித்யாவும் இந்தியாவிலிருந்து இங்கு வந்து சில மாதங்கள் தங்கிச் செல்வது வழக்கம். கணேஷின் குடும்பம் அவர்களுடன் அந்நியோன்னியமாகப் பழகுவதும் வழக்கமானது. அவர்களைப்பற்றி பெருமளவு தெரிந்து வைத்திருந்த கணேஷின்மேலும் அவர்களுக்கு அன்பு அதிகம், குழந்தைகளுடன் பொழுது போக்குவதும் அவர்களின் அன்றாடச் செயல்களில் ஒன்று.

அங்க்கிள்… அங்க்கிள்… என்று சற்று உரக்க அழைத்தான் கணேஷ். இரண்டு மூன்று முறை அழைத்து அவருக்குக் காதில் விழாததைக் கண்டு, இடையில் நின்று கொண்டிருந்த வெள்ளையர்கள் வழிவிட்டு முன்னால் செல் என்றனர். இல்லை, பரவாயில்லை என்று நின்று கொண்டிருக்க, முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளையன், டாக்டரைத் தோளில் தட்டித் திரும்பச் செய்தான். திரும்பிப் பார்த்த டாக்டர், ‘ஹே கணேஷ்… ஹவ் ஆர் யூ’, என்று புன்னகைத்து, பின்னிருந்த இரண்டு வெள்ளையர்களை முன்னுக்கு அனுப்பி, கணேஷ் அருகில் வந்து நின்றுகொண்டார்.

சென்ற மாதம் எண்பதைத் தொட்டிருந்தார் டாக்டர். ஆறடி உயரம், சற்றும் மிடுக்குக் குறையாத தோற்றம். பார்க்கும் எவரும் அறுபத்தி ஐந்தைத் தாண்டியதாக நம்ப மாட்டார்கள். அதுவும், அவரின் தலைமுடியும், கம்பீர மீசையும் நரைத்த காரணத்தால். இல்லையென்றால் அறுபதுக்கும் குறைவுபோல் தோற்றப் பொலிவு கொண்டவர். அழகான புன்னகையில், வாழ்க்கையில் எல்லா அனுபவங்களையும் மகிழ்ச்சியாய் எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டவர். “கணேஷ், இந்த ரோஸ் சூப்பர்ப்பா.. என் பொண்ணு லக்‌ஷ்மி முகம் மாதிரியா ப்ளாஸம் ஆயிருக்கு” கணேஷின் மனைவி லக்‌ஷ்மியையும், தனது மருமகள் வேணியையும் தனது மகள்களாகவே நினைப்பவர் அவர்.

“இஸ் இட் ஸோ அங்க்கிள்? அதை விடுங்க, நீங்க ஆண்டிக்கு என்ன வாங்கினீங்க?” என்று சற்றுக் கிண்டல் ததும்பும் குரலில் கேட்டான் கணேஷ். ”நோப்பா… உங்க ஆண்டி டஸிண்ட் லைக் செலப்ரேட்டிங்க் வேலண்டைன்ஸ் டே… நான் இங்க வந்தது சரவ் கேட்டுக்கிட்டதால… அவனுக்கு இன்னைக்கி ஆஃபிஸ்ல ஏதோ லாஞ்ச்சாம்… வர்ற நேரத்தில கடை மூடியிருப்பாங்க, ஒரு ரோஸ் வாங்கி வைக்கிறீங்களான்னு கேட்டான்… லக்கி மீ, ஐ கேன் ட்ரைவ்… அதுதான் வந்து க்யூவுல நின்னுக்கிட்டு இருக்கேன்…” என்று பதிலளித்தார்… “ராஸ்கல்.. வேணிக்கு நீங்க வாங்குறீங்கன்னு தெரியாதுதானே?” எனக் கேட்க, “யெஸ் யெஸ், போனாப் போறான், ஏதோ பிஸியா இருக்கான்..” என்றார். “அவன நீங்க விட்டுக் குடுப்பீங்களா….. அது சரி அங்கிள், எதுக்கு ஆண்டிக்கு வேலண்டைன்ஸ் டே பிடிக்காது?” எனக் கேட்க, அங்க்கிள் மெதுவாகக் கண்ணாடியைக் கழட்டித் துடைத்துக் கொண்டே, “அது ஒரு பெரிய கதை..” என்று தொடர்ந்தார்.

1971 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள்…. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையேயான போர் துவங்கி கிட்டத்தட்ட பத்து தினங்கள் முடிவுற்றிருந்தன. இந்தியாவின் 11 போர் விமான தளங்களில் அத்துமீறிய பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் வெறிகொண்டு போராடி, பாகிஸ்தானிய எல்லை வரை உள்ளே சென்று, ஐயாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் மேலான பாகிஸ்தானிய நிலத்தைக் கையகப்படுத்தி, தொடர்ந்து அவர்களைத் துரத்தி, பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் ம்யூரிட் நகர விமான தளம்வரை சென்று அதனையும் கைப்பற்றியது. பாகிஸ்தான் சரணடைந்ததாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பதிமூன்று நாட்களே தொடர்ந்த அந்தப் போர் இந்தியாவுக்கு முழுமையான வெற்றி வாங்கித் தந்தது. கையொப்பமிட்ட நாள், டிசம்பர் 16… அதே நாளில், ம்யூரிட் நகரிலிருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில், பாலைவனம் போன்ற அத்துவானத்தில், இந்திய டாங்கிகள் திரும்பிப் போய்க் கொண்டிருந்த நேரம்.

வெற்றிக் களிப்பைக் கொண்டாடியபடி, சென்று கொண்டிருந்த டாங்கிகளில், கடைசியாகப் போய்க் கொண்டிருந்த டாங்கியை ஓட்டிக் கொண்டிருந்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி நித்யா தேவி. இந்திய இராணுவத்தின், ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்த முதல் பெண்மணி. போர் முனையில், ஆயுதமேந்திய பிரிவிற்குப் பெண்களை ஈடுபடுத்துவதில்லை என்ற விதிமுறையிலிருந்து விலகி, அவர்களையும் அதில் ஈடுபடுத்திய முதல் வருடம் அது. இயற்கையிலேயே பயமென்றால் என்னவென்றறியாத தென் தமிழகம், குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் காரைக்குடியைச் சார்ந்த நித்யா, தானே முன்வந்து டாங்கியை ஓட்டும் பொறுப்பை மேற்கொண்டிருந்தார்.

திறமையாகப் போராடி, வெற்றியும் பெற்று திரும்பும் அந்த வேளையில், புதர்களில் மறைந்திருந்த மூன்று பாகிஸ்தானிய வீரர்கள், யாரும் எதிர்பார்த்திரா வேளையில் முன்னே குதித்து, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்த டாங்கியிலிருந்த அனைவருமே இறந்துபட்டனர். ஓட்டிக் கொண்டிருந்த நித்யாவுக்கும் பலமான காயங்கள். ஆனால், தனது கைத்துப்பாக்கியால் அந்த மூவரையும் சுட்டு வீழ்த்தினார் அவர். எதிரிகளின் குண்டு அவரின் தொடையில் பாய்ந்து, சதைக்கூளமாய் வெளியில் தொங்கிக் கொண்டிருக்க, சற்றே உடைந்த எலும்பு தோலையும் கிழித்து வெளியே நீட்டிக் கொண்டிருதந்து. அந்த நிலையிலும், மூன்று எதிரிகளில் ஒருவனை தொண்டைக் குழியிலும், இன்னொருவனை நெற்றிப் பொட்டிலும், மூன்றாமவனை நெஞ்சு நோக்கியும் குறிபார்த்துச் சுட்டு வீழ்த்திய வீராங்கனை அவர். அவர்கள் மூவரும் இறந்து விட்டனர் என்றும், வேறெவரும் அங்கில்லையெனவும் உறுதி செய்தி கொண்ட பின்னர், தனது வாக்கி டாக்கியை எடுத்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பேஸ் கேம்புடன் தொடர்பு கொண்டாள்.

”மென் டவுன், மென் டவுன்…..” என்று ஆரம்பித்து, தன்னுடன் வந்த அனைவரும் இறந்தனர் என்றும், எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்றும், தான் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் சொல்லி முடித்தார். கடைசியாக, “லாட்ஸ் ஆஃப் ப்ளட் லாஸ் ஃப்ரம் மி… நாட் ஷ்யூர் ஹௌ லாங்க் ஐ வில் சர்வைவ்… ப்ளீஸ் ஸெண்ட் த ஃபோர்ஸ் டு ரெகவர் த டாங்க்…. ஜெய் ஹிந்த்..” என்று முடித்தார். அதாவது, தனது மரணத்தைத் தழுவுவதற்கு முழுவதும் தயாரான அந்த வீராங்கனை, தாய் நாட்டின் இராணுவ தளவாடம் எதிரிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கைகளில் வைத்துப் பேசிக் கொண்டிருந்த வாக்கி டாக்கி நழுவி விழ, மெதுவாக சுய நினைவிழக்க, மண்ணில் அமர்ந்து, டாங்கியின் இரும்புச் சக்கரத்தில் சாய்ந்தாள் நித்யா.

“ராம்…. வி காட் அ கால் ஃப்ரம் ஆஃபிஸர் நித்யா தேவி..” என்று தொடங்கி அத்தனையையும் விளக்கினார் மெஸஞ்சர் மகாதேவன். திருநெல்வேலியைச் சேர்ந்த ஐயங்கார். தமிழ்நாட்டிலிருந்து வந்து, மிலிட்டரி கேம்புடன் ஊர் ஊராய் டெண்டடிக்கும் டாக்டர் ராமலிங்கத்துடன் நண்பராகியிருந்தார். “என்ன ஓய், நான் சொல்றது காதுல விழறதா, இல்லையா?” என்று தொடர, “ஐயங்கார்வாள், எனக்கு நல்லாக் காதுல விழுகுது, அந்த நித்யா எப்டி?” என்று கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வாழ்ந்தாலும், எப்போதுமுள்ள நகைச்சுவையுணர்வுடன் கேட்டார் ராம் என்கிற ராமலிங்கம். “தெரியல ஓய், உயிர் போற மாதிரி நிலை… ஆனாலும் குரல்ல ஒரு உறுதி… சீக்கிரம் போங்கோ” என்று துரிதப்படுத்த, ஜீப்பில் ஏறி, தானே ஓட்டிக் கொண்டு தனி ஒருவராய்ப் புறப்படத் தயாரானார் ராம். மெடிக்கல் க்ரூ எல்லாத் திசைகளிலும், பணிகளில் மும்முரமாய் இருக்க, துணைக்கு எவரும் இல்லாத நிலையில் தான் மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம் ராமுக்கு. அதனைக் கண்டவுடன் மகாதேவன், “நான் வேணாக் கூட வரட்டுமா” எனக் கேட்க, “மெஸேஜ் யார் ரிஸீவ் பண்ணுவா?” எனக் கேட்டார் ராம். “ஐ வில் அரேஞ்ச் சம் ஒன்” என்று சொல்லி உள்ளே சென்ற மகாதேவன் சில விநாடிகளில் திரும்ப வந்து ஜீப்பில் ஏறிக் கொண்டார்.

கம்பஸ் காட்டிய வழியில் ஜீப்பை ஓட்டிக் கொண்டு செல்ல, கரடு முரடான பாதைகளைக் கடந்து, கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களில் அந்த இடத்தை அடைந்து விட்டார்கள் இருவரும். சற்றுத் தொலைவிற்கு முன்னமேயே டாங்கி தெரியத் தொடங்க, அதனைச் சுற்றி மயானச் சூழல்.. இரத்த வெள்ளத்தில் ஆறு பிணங்கள்… அவற்றைத் தாண்டி சுற்று முற்றும் பார்க்கையில், இராணுவ உடையில், கையில் பிடித்த கைத்துப்பாக்கியுடன் மூர்ச்சையுற்ற நிலையில் ஒரு பெண், டாங்கியின் ராட்சத இரும்புச் சக்கரத்தில் மேல் சாய்ந்திருந்தாள். பார்த்தவுடனேயே இருவருக்கும் விளங்கிவிட்டது அவள்தான் நித்யாவாக இருக்க வேண்டுமென்று. அருகில் சென்று உடனடியாக பல்ஸ் பார்த்த ராம், “ஷி இஸ் அலைவ்” என்று பெரு மூச்சு விட்டார். “பெருமாள் தயவு” என்று தன்னையுமறியாமல் கூறிய மகாதேவன், அவசர கால நர்ஸ்ஸாக மாறி ராமிற்கு மருத்துவ உதவிகள் புரிய, முதலுதவி செய்தனர் இருவரும்.

சில மணித்துளிகள் போராட்டத்திற்குப் பிறகு நித்யாவிற்கு பிரக்ஞை திரும்ப வர, அவரை ஜீப்பில் ஏற்றி, ராமும் மகாதேவனும் அருகிலுள்ள மருத்துவக் கூடத்திற்கு அழைத்துச் செல்லலாம் எனப் புறப்பட்டனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பார்த்திரா வண்ணம் நான்கைந்து பாகிஸ்தானிய வீரர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ள துப்பாக்கி முனையில் மூவரும் பிடிபட்டனர்.

பிடிபட்ட மூவரும், பாகிஸ்தானின் பணயக் கைதிகளாக நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லாகூர் போர்க் குற்றவாளிகளில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் ஒரே திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட, எலும்புகள் உடைந்த எங்கும் நகர முடியாமல் படுத்திருந்ததே நித்யாவின் கற்புக்குப் பாதுகாப்பாக மாறிவிட்டிருந்தது. அவரின் அருகில் மகாதேவனும் ராமும் கூடவே இருக்க, மூவரும் தமிழர்களாக இருந்ததால் நட்பு மிக வேகமாக வளர்ந்துவிட்டிருந்தது.

நித்யாவின் வீரத்திலும், தைரியத்திலும், நாட்டுப் பற்றிலும் தன்னையே இழந்து விட்டிருந்தார் ராம். எலும்பு முறிவு மற்றும் இரத்த இழப்புடன் இருந்த தன்னை டாக்டர் என்ற முறையையும் தாண்டி, கரிசனமாகப் பார்த்துக் கொள்ளும் டாக்டர் ராமின்மீது தன்னையுமறியாமல் ஒரு ஈர்ப்புத் தொடங்கியது நித்யாவிற்கு. படிக்கும் காலத்திலும், இராணுவத்தில் சேருவதற்கு முன்னரும், சேர்ந்த பின்னரும் கண்டதும் காதல் எனப் பேசுபவர்களையோ, திரைப்படங்களையோ பார்த்து பெருமளவு எரிச்சல் கொள்ளும் நித்யா தன்னையுமறியாமல் ராமின் மீது காதலில் விழுந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். விதவிதமாய், பளபளப்பான உடைகளில் பருவ வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு வரும் பெண்ணிடம் மட்டுந்தான் காதல் வருமென்று எவன் சொன்னது? குண்டடிபட்டு, தொடையெலும்பு துருத்துக் கொண்டிருக்க, நான்கு நாட்களுக்கு மேலாக மாற்றாத இராணுவ உடைகளும், அருகில் நெருங்கினாலே தாங்க முடியாத வியர்வை நாற்றமும் கொண்ட பெண்ணிடம்கூட காதல் வருமென்பது ராமையும் நித்யாவையும் பார்த்தவர்களுக்குப் புரியும்…

இந்திய, பாகிஸ்தானிய அரசாங்கங்கள் போரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தின. இந்தியா போரில் வெற்றி பெற்று, பாகிஸ்தானின் சரணடைவதென கையொப்பமிட்டிருப்பினும், அரசாங்க அதிகாரிகள் பேசி, ஒரு முடிவுக்கு வர கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன. அந்த இரண்டு மாதங்களுக்குள் நித்யாவின் காயங்களும் நன்கு குணமடையத் துவங்க, ராமின் மீதான காதலும் நன்கு வளரத்துவங்கியது. இருவருக்கும் தமிழ் மொழிமீது ஆவலதிகம் என்பதை இருவரும் உணர, நித்யா கவிதை எழுத வல்லவள் என்பதையும் ராம் தெரிந்து கொண்டார்.

“ஒய் டோண்ட் யூ ரைட் அ லிரிக் இன் டமில் ஃபார் த ஸிச்சுவேஷன்?” என ராம் கேட்க, சற்றும் சங்கோஜப் படாமல், சில நிமிடங்கள் யோசித்து விட்டு, எழுதத் தொடங்கினார்.

“கண்ணெதிரே காளையவன்

கலக்கமின்றி வீற்றிருக்க

கலக பூமியதும்

களிப்பாய்க் காண்கிலையோ?

கால்கள் உடைந்ததும்

காதகர்கள் சிறை பிடித்ததும்

காதலனைக் கண்காட்ட

காமாட்சியின் திருவிளையாடலோ?”

என்று முடித்தார். கவிதையைக் கேட்டதும், தன்னைக் காதலிப்பதாக நளினமாக உரைப்பதை உணர்ந்ததும் பேருவகையால் மகிழ்ந்து நிற்க, அவர்களனைவருக்கும் விடுதலையென அறிவிப்பு வந்தது. அனைவரும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது மகாதேவன் ராமருகினில் வந்தார். “என்ன ஓய், இன்னைக்கு நமக்கெல்லாம் விடுதலை போல” என்றிழுக்க, “ஆமாம் சார்… அதோட, உங்களுக்குச் சொல்லணும்னு நெனச்சேன்… நித்யாவும், நானும்….” என்று முடிப்பதற்குள், “என்ன, லவ்வா?? நேக்கு அப்பவே தெரியும்… சொன்னா நம்ப மாட்டேள், சாட்சாத் அந்த ரங்கநாதனும், அம்பாளும் நேக்கு கனவுல உங்க ரெண்டு பேர் ரூபத்துல….” என்று சொல்லி, அதனை முடிக்காமல், “ராம், டுடே இஸ் வேலண்டைன்ஸ் டே… எனக்கு இந்த டே’ஸ்ல எல்லாம் நம்பிக்கையில்ல.. ஆனா இப்ப தோண்றது.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ரது…”. ராம் அவரின் பேச்சுக்களுக்கு பதிலேதும் சொல்லாமல் அவரைக் கட்டியணைத்தான்.

அனைவரும் புறப்படத் தயாரான நிலையில், “ஃப்ரம் லாகூர் டூ த இண்டியன் பார்டர், இட் வில் டேக் நாட் லெஸ் தேன் த்ரீ அவர்ஸ்… அண்டில் வி ஹேண்ட் யூ ஓவர் டு இண்டியன் அதாரிடீஸ், யூ ஆர் அவர் ரெஸ்பான்ஸிபிலிட்டி…” என்று சொல்லி, உணவு படைத்தனர். அனைவரும் தங்களின் தட்டுக்களில் உணவு வாங்கிக் கொண்டிருக்க, மகாதேவனின் மேல் எப்போதுமே வெறுப்புக் கொண்ட அந்த ஜெயிலர் அவரின் தட்டில் இறைச்சித் துண்டு ஒன்றை வேண்டுமென்றே போட்டு விட்டார். பிறந்ததிலிருந்தே வெஜிடேரியனான மகாதேவன், இதனைப் பொறுக்க முடியாமல் கோபத்துடன் அந்த ஜெயிலரை நோக்கிச் சற்றுச் சத்தமிட, சற்றும் பரபரப்பில்லாமல் அந்த பாகிஸ்தானி மிலிட்டரி மேன் துப்பாக்கியால் மகாதேவனின் நெஞ்சு நோக்கிச் சுட்டான். நூற்றுக் கணக்கான இந்தியர்கள் பார்த்திருக்க, யாருக்கும் தீங்கு நினைக்காத மகாதேவன், குருதி சொட்டச் சொட்ட மண்ணில் சரிந்தார். அதனைப் பார்த்த ராமும் நித்யாவும் கதறிய கதறலுக்கு அளவே இல்லை.

நேத்து நடந்தது மாதிரி இருக்கு. பட், வி காண்ட் ஃபர்கெட்… நித்யா மனசுல இருந்து கொஞ்சம் கூடப் போகல… திஸ் இஸ் ஒய் ஷி டஸிண்ட் ஸெலப்ரேட் வேலண்டைன்ஸ் டே…” என்று முடித்தார் டாக்டர் ராமலிங்கம். “புரியுது அங்கிள், யூ டுக் மி டூ த வார் ஸெட்டிங்க் கம்ப்ளீட்லி” என்று பதிலுரைத்துவிட்டு, எதுவும் பேசாமல் நின்றான் கணேஷ்.

இதனைத் தொடர்ந்து, இவர்களிருவரின் முறை வர, தாங்கள் வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்திவிட்டு, கடையைவிட்டு வெளி வந்தனர். அங்கிள் குளிரில், ஸ்னோவில் காரை எடுத்து, சரியாகப் போகிறாரா என்பதை முழுவதும் பார்த்த பின்னர், கணேஷ் தன் கார் நோக்கி நடக்கத் தொடங்கினான்.

ன்னா… சத்த வாங்கோளேன்” லக்‌ஷ்மியின் குரலிலிருந்த பதட்டத்தை உணர்ந்த கணேஷ், உடனடியாக அவளருகில் வந்தான். பாக்மேன்ஸ் ரோஜாப்பூவெல்லாம் கொடுத்து, வேலண்டைன்ஸ் டே கொண்டாடி முடித்து, இரவுச் சாப்பாடு முடித்து, படுப்பதற்கு முன்னால் சற்று டி.வி. பார்க்கலாம் என்று உட்கார்ந்திருந்த கணேஷை அவனது மனைவி அழைத்த குரல்தான் அது.

”வேணி கால்ட்னா…” என்று தொடங்கியவள், அதற்கு மேல் சொல்ல முடியாமல் நா தழுதழுக்க, தொடர்ந்தாள். “வாட்? டெல் மி…. ஐ நோ ஹீ ஹேட் டு கெட் தெய்ர் வேலண்டைன்ஸ் டே கிஃப்ட் த்ரூ அங்க்கிள்..” எனச் சொல்ல, அவனின் சிரிப்பைப் பொருட்படுத்தாமல், லக்‌ஷ்மி, “வெல், இட்ஸ் மச் மோர் ஸீரியஸ்…” என்றாள். என்ன சொல்லு என அவளை ஆசுவாசப்படுத்த, “நித்யா ஆண்ட்டி ஸீம்ஸ் டு ஹேவ் ட்ரபிள் ப்ரீத்திங்க் ஆல் ஆஃப் அ ஸடன்..” எனச் சொல்ல, லெட்ஸ் கோ ஸீ என்றான் கணேஷ். இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேற, நான்கு வீடு தாண்டியிருந்த சரவ் வீடு சென்று சேர்ந்தனர். அவர்கள் காலிங்க் பெல்லடித்து, உள்ளே நுழைகையிலேயே நித்யா ஆண்ட்டி இவ்வுலகு விட்டுப் போயிருந்தார். முழுவதுமாகப் புரிவதற்கே பல விநாடிகள் பிடித்தன கணேஷிற்கு. அவனை நோக்கி முன்வந்த டாக்டர் ராம், “கணேஷ், யூ ரிமம்பர் வாட் ஐ டோல்ட் யூ? அவளால, மகாதேவனை மறக்க முடியல…. கிட்டத்தட்ட நாப்பத்தேழு வருஷமாச்சு… இன்னும் அதே நினைப்புத்தான்.. திஸ் இஸ் ஒய் ஷி டஸ்ஸிண்ட் வாண்ட் டு ஸெலப்ரேட் வேலண்டைன்ஸ் டே” என்றார் அங்கிள். “ஐ அண்டர்ஸ்டேண்ட் அங்க்கிள்..’ என்று சொல்லிவிட்டு, அவர் ஸ்ட்ரெஸ்ஸாகி இருக்கிறார் என்றுணர்ந்து, அவரைச் சமாளிக்கலாம் என்றெண்ணித் கணேஷ் தொடர, அங்கிள் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து தானாகவே சாய்ந்து விழுந்தார். அதாவது, அவரும் நிலவுலக வாழ்வு நீத்திருந்தார்.

சரவ், வேணி, லக்‌ஷ்மி மற்றும் கணேஷ் என்று அழாதவர்களே அந்த குடியிருப்புப் பகுதிகளில் இல்லை. அழுகைகளினூடே அனைவரும் பொதுவாகப் பேசிக் கொண்டது அவர்களிருவரும் ஒன்றாய்ப் போய்ச் சேர்ந்தது குறித்தே: “என்ன அந்நியோன்யம், எப்டி ரெண்டு பேரும் ஒண்ணா போய்ட்டா, பாத்தேளா?” என்ற லக்‌ஷ்மி, “இதைத்தான் நெஜமான காதலர் தினம்னு சொல்றாளோ?” என்று தொடர்ந்தான் கணேஷ்..

வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad