அழகிய ஐரோப்பா – 14
(அழகிய ஐரோப்பா – 13/போகும் வழியில்)
வாவ்… டிஸ்னி!
டிஸ்னி லேண்டின் நுழை வாசல் மிகவும் அழகிய தோற்றத்தில் எங்களை வரவேற்றது. நுழைவாசலைக் கண்டதுதான் தாமதம் கனவுலகை நிஜமாக கண் முன்னே கண்ட ஆவலில் என் பிள்ளைகள் வாவ்… டிஸ்னி என்று துள்ளிக் குதித்தனர்.

சந்தோஷம் மிகுந்து கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்துடன் என் முன்னே வந்து சிரித்தாள் என் மகள். அவளின் கனவுலகம் இன்று அவள் முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது. 
அழகிய தேவதைகள் போல் மெல்லிய புன் சிரிப்புடன் வரவேற்ற இளம் பெண்கள் கைகளில் ஒரு இலவச வரைபடத்தைத் தந்து அது பற்றிய சிறு விளக்கமும் கொடுத்தனர்.

எங்கே என்ன ஷோ நடக்கிறது… கூட்ட நெரிசலில் காத்திருக்க வேண்டிய நேர அளவு… சிற்றுண்டி சாலைகளின் விவரம் என எல்லாமே அந்த வரை படத்தில் இருந்தது.
ஒரு காட்சியைப் பார்ப்பதற்கு குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் எந்த இடத்திலும் தள்ளுமுள்ளு இல்லை.
என் மனைவி பிள்ளைகளைக் கட்டியணைத்து ஒரு முத்தமிட்டாள். நான் கேமரா மேன் என்றதால் மிஸ்ஸிங். ஆளாளுக்கு விரும்பிய இடங்களில் எல்லாம் நின்று படங்களை எடுத்தனர். தனியாக குடும்பமாக என விரும்பிய படி படங்களை எடுத்துக் கொண்டோம்.
பாதையின் இரு மருங்கும் டிராம்கள் (Tram) அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தன. சில ட்ராம்கள் டிஸ்னி ஸ்டூடியோஸ் (Disney Studios) பக்கமாகவும் மற்றும் சில டிஸ்னி பார்க் (Disney park) பக்கமாகவும் சென்றன. இரண்டுக்கும் தனித்தனியாக நுழைவு சீட்டு வாங்கி இரண்டு நாட்கள் தனித்தனியாக காணலாம். நாங்கள் குழந்தைகளுடன் வந்தமையால் டிஸ்னி பார்க் (Disney park) நுழைவு சீட்டு வாங்கி இருந்தோம்.
உள்ளே சென்றவுடன் மங்கலான விளக்கொளியில் பாழடைந்த மாளிகைக்கான அனைத்து பொருட்களும் தென்படுகின்றன. “க்ரீச் க்ரீச்” என்ற ஒலிகள் வேறு கேட்கின்றன.
நாம் பல அறைகளுக்கு அழைத்து செல்லப்படுகிறோம். சந்திரமுகி படத்தில் வரும் “மாப்பு வைச்சிட்டான்யா ஆப்பு” என்ற காமெடி தான் கண் முன் வந்து நிழலாடியது.

அதன்பின் அடுக்கடுக்காக இரண்டு டிராம் பயணங்கள் நாங்கள் அமர்ந்து இருக்கும் டிராம் வேகமாக குலுங்கி புரண்டு விழுவது போல் போக்கு காட்டுகிறது.

அனைவரும் அடிவயிற்றில் இருந்து கிளம்பிய பீதியில் வீல் என அலறிக்கொண்டேயிருக்கும் அடுத்த நொடியில், வந்த வெள்ளம் நம்மை நெருங்காமல் அங்கே இருக்கும் பள்ளத்தில் காணாமல் போகிறது.
நாம் அமர்ந்திருக்கும் டிராம் ஒன்றுமே நடவாதது போல் உடலைக் குலுக்கிக்கொண்டு அடுத்த இடம் நகர்கிறது. எல்லாமே ஓரிரு கணப்பொழுதில் முடிந்து விடுவதுதான் அதன் சிறப்பு.
மேலும் சில பல காட்சிகளைப் பார்த்து விட்டு ஒரு கேபசீனோ (cappuccino ) குடித்தோம். பிள்ளைகள் பழரசமும் தோசை போன்ற அமைப்புடன் சொக்கோலேட் பூசப்பட்டு அழகாக மடிக்கப் பட்டிருந்த ஒரு வகைப் பணியாரமும் சாப்பிட்டனர்.
இன்னும் மறக்க முடியாத நினைவாக இருப்பது ‘பைரட்ஸ் ஆப் தி கரிபீயன் ரைட்’ (Pirates of the Caribbean Ride).
ஹொலிவுட் படத்தை அப்படியே காட்சிகளாக்கி கண்ணுக்கு விருந்தாக்கிய விதம் நினைத்துக்கூட பார்க்க இயலாதது. நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி அமைப்புகளுடன் தொடங்கியதிலிருந்து முடியும் வரை திகில் நிறைந்ததாக இது அமைந்து காணப்பட்டது.
அதன் பின் பெரீஸ் வீல் ரைட் ரோலர் கோஸ்டர் ரைட் என பல விளையாட்டுகள் போனோம். மின் தூக்கி மேலேயும் கீழேயும் என நர்த்தனமாடிய போது நமது வயிற்றின் அனைத்து உறுப்புகளும் தொண்டையில் வந்து நின்று அடைத்துக் கொள்வது போல் ஒரு விவரிக்க முடியாத உணர்வு. இத்தனைக்கும் என் பிள்ளைகள் பயமேதுமின்றி விளையாடியது தான் வியப்பாக இருந்தது.

பார்க்க வந்த மக்கள் எல்லோரும் வித வித உடைகள் அணிந்து வருகிறார்கள். அதைப் பார்ப்பதே நமக்கு நல்ல பொழுது போக்காயுள்ளது.
பெரியவர், சிறியவர், குழந்தைகள் என மின்னி, மிக்கி, டோணால்டக் இவர்களுடன் நாங்களும் படம் எடுத்துக் கொண்டோம். என் பிள்ளைகள் மிக்கி மௌஸைக் கட்டி அணைத்தபடி படம் எடுத்துக் கொண்டனர்.
அன்றையப் பொழுதை டிஸ்னி லேண்டில் மகிழ்ச்சியாகக் களித்த பின்னர் நாங்கள் அங்கிருந்து நேராக 15 நிமிடங்கள் பயணம் செய்து ஒரு உறவினர் வீட்டினைச் சென்றடைந்த போது மணி இரவு எட்டாகியிருந்தது.
பயணம் தொடரும்…
-தியா-















