banner ad
Top Ad
banner ad

பெப்பா பிக் பார்க்கலாமா?

இந்தத் தலைமுறை சிறு குழந்தைகளின் ஆதர்சமாக இருக்கும் கார்ட்டூன் கேரக்டர், பெப்பா பிக் (Peppa pig). இங்கிலாந்து தொலைக் காட்சியில் அறிமுகமான இந்தச் செல்லப் பன்றிக் குட்டி, இன்று உலகமெங்கும் ஒளி பரப்பப்பட்டு, சிறு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பெப்பா பிக் படம் போட்ட ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பெருமளவு விற்பனை ஆகி வருகின்றன. பெப்பா பிக் தீம் பார்க்குகள் இங்கிலாத்திலும், சீனாவிலும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் பட்டியலில் இடம்பெறும் இடமாக இது மாறி வருகிறது. தொலைகாட்சியைத் தாண்டி இன்று திரையரங்குகளுக்கும் பெப்பா பிக் வந்துவிட்டாள்.

அதே சமயம், சமீபத்தில் குழந்தைகள் பெப்பா பிக் பார்ப்பது நல்லதல்ல என்றொரு கருத்தும், சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பெப்பா பிக் அவ்வப்போது கெட்ட வார்த்தைகள் பேசுகிறது, தன் பெற்றோர்களை மரியாதைக் குறைவாகப் பேசுகிறது, அதிகம் கோபப்படுகிறது என்று பல சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. இதன் மூலம் சில விஷயங்கள் புரிகிறது. ஒன்று, பெப்பா பிக் கதாபாத்திரத்தின் குழுந்தைகளிடையேயான வளர்ச்சி. அதன் மூலம் வரும் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற பெற்றோர்களின் நியாயமான பயம்.

பெப்பா பிக் போன்றே குழந்தைகள் பேசுகிறது என்பது ஒரு பரவலான குற்றச்சாட்டு. அமெரிக்கக் குழந்தைகள், ஐரோப்பிய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவது, அகங்காரத்துடன் பேசுவது, சிலந்தியுடன் விளையாடுவது, பிறரைத் தள்ளி விடுவது, அழுவது என்பது இதனுடனான குற்றச்சாட்டுகள். ஒரே நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்ப்பதால் வரும் பாதிப்பு இது. அதே போல், ஒரு கதாபாத்திரம் ரொம்பவும் பிடித்துப் போய், அதன் மூலம் வரும் பாதிப்பும் ஆகும் இது. பெரியவர்கள் எப்படி தான் ரசித்த கதாநாயகன் பேசும் வசனங்களை, மேனரிசங்களைத் தங்கள் தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களோ, அது போலத் தான் இது. (வடிவேலுவின் வசனத்தைப் பேசிக் கடக்காத நாள் ஏதும் இருக்கிறதா?!!) குழந்தைகள் பெப்பா பிக் மட்டும் பார்க்காமல், பிற குழந்தைகள் சார்ந்த நிகழ்ச்சிகளையும் மாற்றி மாற்றிப் பார்க்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்துவது அவசியம்.

முழுமையாகத் தடை செய்து விடலாமா என்பதைப் பெற்றோர்கள் பார்த்து முடிவெடுக்கலாம். பெப்பா பிக் ஒன்றுமே கற்றுக் கொடுப்பதில்லை என்று சொல்ல முடியாது. ரொம்பவும் எளிமையாக உருவாக்கப்பட்ட கார்ட்டூன் இது. தாத்தா, பாட்டியை அடிக்கடி சென்று பார்ப்பது, குழுவாக விளையாடுவது, வெளியே சென்று சைக்கிள் ஓட்டுவது, அண்ணனுடனான யதார்த்தமான நட்புறவு, மகிழ்ச்சியான முடிவு போன்ற நல்ல விஷயங்கள் இல்லாமல் இல்லை. உங்கள் வீட்டில் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு, நக்கல் செய்து கொண்டு இருப்பது உங்களுக்குப் பெரிய விஷயம் இல்லை என்றால், பெப்பா பிக் பெரும் ரோதனையாக உங்களுக்குத் தெரியாது.

பெப்பா பிக்கிற்கு எதிரான கருத்துகளை வேறு விதங்களிலும் காண வேண்டி உள்ளது. ஊடகங்களின் வளர்ச்சியால் பரவும் அதீத பொறுப்புணர்ச்சிக் கருத்துக்கள் இவை என்றும் எடுத்துக் கொள்ளலாம். முன்பு எடுத்த படங்களில், டாக்டர், வக்கீல், பிச்சைக்காரர்கள் என எந்தத் தொழில் புரிவோரையும் கலாய்த்துப் படம் எடுக்கலாம். இன்றைய நிலைமையில், ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது. எங்கிருந்து எப்போது சர்ச்சை கிளம்பும் என்றே தெரியாது. மிருகங்களை வைத்துப் படமெடுக்கும் போது, பல முன்னெச்சரிக்கை மற்றும் அனுமதி நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அனைத்து விஷயங்களுமே எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியதாக மாறி வருகிறது. இதில் நன்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அனைவற்றையும் தடையில் கொண்டு நிறுத்துவது சரியான தீர்வாகவும் இருக்காது. தொழில் போட்டியாளர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்களும் இவற்றில் இருக்கலாம் என்பதும் நினைவில் வைக்க வேண்டும்.

போன தலைமுறையில் பார்த்த கார்ட்டூன்கள் என்னென்ன சேட்டைகள் செய்தன என்று நினைவிருக்கிறதா? டாம் அண்ட் ஜெர்ரியில் (Tom and Jerry) ஒரு எலியும் பூனையும் சதா சண்டை போட்டுக் கொண்டு, வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் உடைத்துப் போடும். பாப்பாய் (Popeye) என்ற மாலுமி கதாபாத்திரம், பசளிக்கீரை சாப்பிட்டுவிட்டு, தன் ஆளைக் கடத்திச் சென்ற வில்லனை அடி பொளந்து கட்டும். ஹி-மேன் (He-man) சண்டை போடும் ஒரு ஆண் வீரன். இன்றைய கால கட்டத்தில் இவை வந்தால், வன்முறை, ஆணாதிக்கம் என்று இரண்டு நாட்களில் பொட்டியை மூட வைத்திருப்பார்கள். நல்லவேளை, இவற்றை இந்தத் தலைமுறைக் குழந்தைகள் பார்ப்பதில்லை.

சரி, பெப்பா பிக் தவிர வேறு என்னென்ன பார்க்கலாம்? இன்றைய கார்ட்டூன் கதாபாத்திரங்களை வடிவமைப்பவர்கள், உண்மையிலேயே குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் நோக்கத்தைப் புகுத்தியே கதாபாத்திரங்களை வடிவமைக்கிறார்கள். இல்லாவிட்டால், இன்றைய பெற்றோர்களிடம் இருந்து அவர்களது நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு இருக்காது என்று தெரிந்திருக்கிறது. டேனியல் டைகர், பென் & ஹோலி, டாக் மெக்ஸ்டபின்ஸ், டோரா, வேர்ட் கேர்ஸ் என நிறைய இருக்கிறது. தமிழில் கண்மணி ஒரு பெண் குழந்தை கதாபாத்திரமும் வருகிறது. வாசகர்களும் தங்கள் பரிந்துரைகளையும், அனுபவங்களையும் இங்கு கூறலாம்.

எதுவாக இருந்தாலும், தொடர்ந்து ரொம்ப நேரம் பார்க்கக் கூடாது. ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறு குழந்தைகள் டி.வி, ஃபோன், டேப்லட், கணினி பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர் குழு பரிந்துரைக்கிறது. அதுவும் இடைவெளி விட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த ஒரு மணி நேரத்தில் என்ன பார்க்கலாம் என்றுதான் நாம் இப்போது பார்த்தோம். முக்கியமாக, குழந்தைகளுடன் அமர்ந்து நாமும் பார்த்தால், நமக்கே தெரிந்துவிடும், எது நல்லது, எது கெட்டது என்று.

  • சரவணகுமரன்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad