Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சவுத் டக்கோடாவில் என்ன பார்க்கலாம்?

ஒரு வழியா மினசோட்டாவில் சம்மர் தொடங்கிவிட்டது. மக்கள் எங்குப் போகலாம் என்று திட்டமிடலை ஏற்கனவே தொடங்கியிருப்பார்கள். மினசோட்டாவுக்குப் பக்கத்து மாநிலமான சவுத் டக்கோடா வாரயிறுதியில் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டே காரில் சென்று வருவதற்கு நல்ல சாய்ஸ். மினியாபொலிஸிலிருந்து மூன்று மணி நேரத்தில் சவுத் டகோடாவை அடைந்துவிடலாம் என்றாலும், அங்கு நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் காண இன்னும் அதிகத்தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால், பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது அவசியம்.

இனி சவுத் டக்கோடாவிலிருக்கும் காண வேண்டிய சில இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore)

மவுண்ட் ரஷ்மோருக்காகத் தான் பலர் சவுத் டக்கோடாவிற்கே செல்வார்கள். வருடத்திற்கு 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்துபோகும் இடம். பலருக்கும் நன்றாகவே தெரிந்த இடம். அமெரிக்காவின் நான்கு முக்கிய அதிபர்களின் முகத்தை மலை முகட்டில் செதுக்கி வைத்திருக்கும் காட்சியைப்  பலரும் புகைப்படத்தில் பார்த்திருப்பார்கள். நேரில் பார்ப்பது என்பது அவரவர் வாழ்வில் ஒரு வரலாற்றுத் தருணம் தான். மலை முகட்டில் இருப்பது, ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடொர் ரூஸ்வொல்ட் மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகிய, அமெரிக்காவை உருவாக்கி, வளர்த்து, முன்னேற்றி, பாதுகாத்து வந்த நான்மூர்த்திகள். அமெரிக்காவில் இருந்துகொண்டு இவர்களைத் தரிசிக்காமல் எப்படி?

பேட் லேண்ட்ஸ் நேஷனல் பார்க் (Badlands )

ரத்தப் பூமி என்பது போல் இது கெட்ட பூமி. பயப்பட வேண்டாம், அப்படிப் பயப்படும் அளவுக்குக் கெட்ட இடம் இல்லை. இது ஒரு காஞ்ச பூமி. ரொம்ப ரம்மியமா இருக்கும்’ன்னு சொல்ல முடியாத இடம். ஆனால், இப்படியும் ஒரு நிலப்பரப்பா என்று அந்த விதத்தில் ரசிக்க வைக்கும் இடம். இயற்கையை வியக்க வைக்கும் இந்த இடத்தை அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். ட்ரக்கிங், கேம்பிங் வசதிகள் உள்ளன. மினசோட்டாவிலிருந்து மவுண்ட் ரஷ்மோர் போகும் வழியில் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே இந்த இடத்தை அடையலாம்.

க்ரேஸி ஹார்ஸ் மெமொரியல் (Crazy Horse Memorial)

‘க்ரேஸி ஹார்ஸ்’ என்பவர் அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்து போரிட்ட ஒரு பழங்குடி வீரன். அவர் நினைவாக 1948இல் ஒரு பிரமாண்ட சிலையைத் தொடங்கினார்கள். இன்னமும் அந்த வேலை முடியவில்லை. இதுவரை பாதி முகம் தான் செதுக்கியிருக்கிறார்கள். இன்னும் அவரின் உடல், குதிரை போன்றவற்றைச் செதுக்க வேண்டி உள்ளது. முடிப்பார்களோ, இல்லையோ இப்போதே இது சுற்றுலாத்தளம் ஆகிவிட்டது. முடித்தால் இது தான் உலகின் மிகப் பெரிய சிலை என்றிருந்திருக்கும். மோடி குறுக்கே புகுந்து பட்டேல் சிலையை வைத்துவிட்டார். இனி முடித்தாலும், இரண்டாம் இடம் தான்.

கஸ்டர் ஸ்டேட் பார்க் (Custer State Park)

இந்தப் பூங்கா தான் சவுத் டக்கோடாவிலிருக்கும் மிகப் பெரிய பூங்கா. மிகவும் அழகான பூங்கா. எருமை, ஆடு, மான், கழுதை எனப் பல உயிரினங்களுக்கு இது ஒரு இயற்கையான வசிப்பிடம். ஆண்டுதோறும் இங்கிருக்கும் காட்டெருமைகள் ஒரு இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு ஏலத்திற்கு விடப்படும். முடிந்தால் அந்தச் சமயம் சென்று பாருங்கள். இங்கிருக்கும் கழுதைகள் உங்கள் காருக்கே வந்து உணவு கேட்கும். இதற்காகவே சுற்றுலா பயணிகள் இந்தப் பூங்காவிற்கு வரும்போது உணவு கொண்டு வருவார்கள்.

ஜுவல் கேவ் (Jewel Cave national moument)

உலகிலிருக்கும் குகைகளில் மிக நீளமாக அமைந்திருக்கும் குகை இது. சுமார் 200 மைல்களுக்கு உள்ளே பாதைகள் உள்ளன. இந்தப் பெயர் வந்ததற்குக் காரணம், உள்ளே இயற்கையாகப் படிந்திருக்கும் உப்புப் படிமங்கள். எல்லாம் ஆபரணக் கற்கள் போலவே காட்சியளிக்கும். வெயிலோ, குளிரோ வருடம் முழுக்க இந்த இடம் திறந்திருக்கும். குகைக்குள் இயற்கை எப்பொழுது ஒரே வித தட்பவெப்பத்தை மெயிண்டெயின் செய்வதால் எந்த நேரமும் சென்று வரலாம். வரும் குளிர்காலத்தில் உள்ளே வேலை இருப்பதால், இவ்வருடம் மட்டும் அக்டோபருக்கு மேல் குகையை மூடி வைக்கப் போகிறார்களாம்.

விண்ட் கேவ் நேஷனல் பார்க் (Wind Cave National park)

இது அங்கேயே பக்கத்தில் இருக்கும் இன்னொரு குகை. ‘நேஷனல் பார்க்’ஆக முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்ட குகை இது தான். உறைந்த நிலையில் வித்தியாசமான அமைப்பில் இருக்கும் உப்புப் படிமங்கள் தான் இந்தக் குகையின் சிறப்பம்சம்.

பியர் கண்ட்ரி (Bear Country)

தமிழில் கொடுக்கப்பட்டிருக்கும் பேரைக் கேட்டு, அந்த பியர் என்று எண்ணி விடாதீர்கள். இது கரடி தேசமாம். இதனுள் நீங்கள் காரில் செல்லும் போது, கரடிகள் குறுக்கே மறுக்கே செல்லும். நீங்கள் ‘ஹாய்’ சொல்லிவிட்டுத் தொடரலாம். ரொம்பப் பெரிய இடம் கிடையாது. குழந்தைகளுக்குப் பிடிக்கும். சொல்லி வைத்தது போல் கரடிகள் கரெக்டாகக் குறுக்கே வந்து நின்றுவிட்டு பிறகு அதுவே அதன் இடத்திற்குச் சென்று விடும். ட்ரெயினிங் அப்படி, ஆங்!!

இவற்றை கவர் செய்யவே, இரண்டு நாட்கள் போய்விடும். அதற்கு மேல் நேரமிருந்தால் Deadwood, Corn Palace, National Music Museum, Spearfish canyon, Sertoma Butterfly House, Sioux falls போன்ற இடங்களையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரவும்.

ஹாப்பி ஜர்னி கய்ஸ்!!

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad