banner ad
Top Ad
banner ad

சிகாகோ பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தினங்களில் சிகாகோ மாநகரில் நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இதுவாகும். இதற்கு முன்னால் மலேசியா, இந்தியா, ப்ரான்ஸ், இலங்கை, மொரிசியஸ் ஆகிய நாடுகளில் முந்தைய ஒன்பது மாநாடுகள் நடைபெற்றிருந்தன. 1966 ஆம் ஆண்டு முதல் இந்த மாநாடுகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்பது தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த ஆய்வுகளை உலக மக்களிடையே கொண்டுசெல்ல நடத்துவதாகும். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association for Tamil Research) தமிழின் தொன்மையை, சிறப்பினை ஆய்வு செய்து, ஆராய்ச்சிக் கருத்துகளை, உலக அறிஞர்களிடம் எடுத்துச்சொல்லும்  நோக்கில், தனிநாயகம் அடிகளாரால் 1964 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு 1966 ஆம் ஆண்டு முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை பல்வேறு உலக நாடுகளில் நடத்தி வருகின்றது.

இலங்கை யாழ்பாணத்தில் ஒரு கிருஸ்துவக் குடும்பத்தில் பிறந்த தனிநாயகம் அடிகளார், தன் வாழ்நாளில் உலகம் முழுக்கச் சென்று தமிழ்ப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் வடக்கன்குளத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியாகப் பணியாற்றியிருக்கிறார். தூத்துக்குடியில் பணியாற்றிய சமயத்தில் தமிழ் இலக்கியக் கழகம் துவங்கி தமிழ்க் கலாச்சாரம் என்னும் இதழைத் தொடங்கி நடத்திவந்தார். சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஆரம்பித்தவர், பல ஆய்வுக்கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். முதல் நான்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைக் கோலாலம்பூர், சென்னை, பாரிஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் முன்னின்று நடத்தினார்.

இத்தகைய பெருமைமிக்க இந்த மாநாடானது, ஃபெட்னாவின் 32வது தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50வது ஆண்டு விழா ஆகியவற்றுடன் இணைந்து சிகாகோவில் ஷாம்பர்க் கன்வென்ஷன் செண்டரில் (Schaumburg Convention Center) ஜுலை முதல் வாரயிறுதியில் விமரிசையாக நடைபெற்றது. இம்மாநாட்டின் துவக்கவிழா ஜுலை 5ஆம் தேதி மாலை உலகத்தமிழ் மக்களின் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தற்போதைய தலைவர் திரு. த. மாரிமுத்து, தமிழ்நாட்டின் தமிழ் ஆட்சிமொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு. பாண்டியராஜன், அமெரிக்கக் கீழவை உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்தசங்கரி ஆகியோருடன் ஃபெட்னா அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்கத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

அடுத்த இரு தினங்களும் (ஜுலை 6 & 7) பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் அங்கிருந்த அரங்குகளில் நடைபெற்றன. குமரிக் கண்டம், ஆசிவகம், சங்கத்தமிழரின் மருத்துவ மேலாண்மை, திருக்குறள், தொல்காப்பியம், மணிமேகலை, புறநானூறு, ஆதிச்சநல்லூர், தமிழ் எழுத்தியல், தனித்தமிழ் குறித்த தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஒவ்வொரு தலைப்பிலும் ஆய்வாளர்கள் சுமார் 30 நிமிடங்கள் பேசினார்கள். அவர்களின் உரைக்குப் பிறகு பார்வையாளர்கள் கேள்விகளை எழுப்பி, சந்தேகங்களை நிவர்த்திச் செய்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் சொற்குவை என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் சொற்களைத் தொகுத்து, பாதுகாத்து, சேகரிக்கும் நோக்கில் இந்த இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் திரு. பாண்டியராஜன், திருமதி. வளர்மதி, திரு. வைகை செல்வன் ஆகியோர் சொற்குவை திட்டம் குறித்து  விளக்கமளித்தனர்.

உலகமெங்கும் திருவள்ளுவர் சிலைகளை அமைத்து வரும் தமிழகத் தொழிலதிபர் திரு. வி.ஜி. சந்தோஷம் அவர்கள், அந்த வரிசையில் 50வது திருவள்ளுவர் சிலையைச் சிகாகோவில் நிறுவிட வழங்கினார். அந்தச் சிலை, இந்த மாநாட்டின் போது திறந்து வைக்கப்பட்டது. தமிழுக்கு அரும்பணியாற்றிய ஜி.யு. போப் அவர்களின் 200 ஆம் அகவை ஆண்டை முன்னிட்டு அவரின் சிறப்புகள் [பகிரப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு அவருடைய கொள்ளு பேத்தியும் எள்ளு பேரனும்  வந்திருந்தது தனிச்சிறப்பு.

இந்த மாநாட்டில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள், இலங்கைத் தமிழர்கள், நார்வே தமிழர்கள், கனடா தமிழர்கள், லண்டன் தமிழர்கள், ஆஸ்திரேலியத் தமிழர்கள் என உலகம் முழுக்க இருந்து தமிழர்கள் வந்து கலந்துகொண்டனர். சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர், ஞானசம்பந்தம், ஸ்டாலின் குணசேகரன் எனப் பல பேச்சாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர். அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து தமிழர்கள் பெரும்திரளாக வந்திருந்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை மேலும் சிறப்பித்தனர்.

இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.

  • சரவணகுமரன்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad