\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பச்சையட்டைப் போட்டி

தற்காலிக அடிப்படையில் பணி நிமித்தம் நுழைவுச்சான்று (H1 VISA) பெற்ற ஆசியர்களுக்கு  அமெரிக்கக் குடிவரவுச் சட்டம் ஏற்கனவே மிகத் தலையிடித் தரும் விடயம். 2019 ஆம் கொணரப்பட்ட நிரந்தர வதிவிட உரிமைத் திருத்தங்கள், அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட விண்ணப்ப பரிசீலனை தாமதங்கள் பலரை, குறிப்பாக அரை மில்லியன் இந்தியர்களையும், பல நூறாயிரம் சீனர்களையும் பாதித்துள்ளன.

நிரந்தர வதிவிட விண்ணப்ப பின்தங்கல்களை நிவர்த்தி செய்ய பல்வேறு அமெரிக்கத் தொழில்நுட்ப பெருநிறுவனங்களும் முயல்கின்றன. அவர்களுக்கு  பயிற்சிபெற்ற தொழில்நுட்ப பட்டதாரிகள் பலர் தேவைப்படுகின்றனர். தற்போது, ஒவ்வொரு நாட்டுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரந்தர வதிவிட அனுமதி வழங்கப்பட்டு வருவதை விடுத்து, விண்ணப்பத் தேதி முன்னுரிமைப்படி  அனுமதி வழங்க வேண்டும் என்ற திருத்தங்கள ஒரு சாரார் முன் வைத்தனர்.

சென்ற சில வாரங்களுக்கு முன்பு இந்தக் கோரிக்கையை குடியேற்றத் துறை நிராகரித்தது இந்திய, சீன விண்ணபதாரிகளிடையே வெகுவித்தியாசமான அபிப்பிராயங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தக் குடிவரவுத் திருத்தம் ஒப்பேறினால் சீன மக்களைப் பொறுத்தளவில் பார தூர விளைவுகளை ஏற்படுத்துமெனக் கருதப்படுகிறது. அதே சமயம் இந்தத்  திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டாலொழிய தமக்கு அமெரிக்காவில் எதிர்காலம் இல்லையென்று நம்புகின்றனர் இந்தியர்கள்.

இந்த அதிநுட்பத் தொழிலாளர் நியாயமான குடிவரவுச் செய்கை (The Fairness for High-Skilled Immigration Act) தற்போதைய ஒவ்வோரு நாட்டினருக்கும் தலா 7 சதவித அனுமதியை வழங்குகிறது. இந்த 7 சதவீதக் கோட்டாவானது இந்திய, சீன நாட்டுப் பிரசைகளைப் பாதிக்கிறது. அதிக சனத்தொகை கொண்ட இந்த இரு நாடுகளும்  திறமை வாய்ந்த தொழிநுட்ப, விஞ்ஞானஅனுபவம் உள்ள தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னணி வகிக்கின்றன.

அமெரிக்க கீழ் சபையில் (House) புதிய திருத்தப் பிரேரணை 2019 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பிரேரணை இந்தந்த நாடுகளென குறிப்பிட்ட சதவீதக் கோட்பாடு இன்றி, விண்ணப்பித்த தேதி முன்னுரிமை அடிப்படையில் நிரந்தர வதிவிட அனுமதி பெற வசதி செய்யப்படவேண்டும் என்று கேட்டிருந்தது. இந்தப் பிரேரணை கூகிள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற அதி தொழிநுட்பக் கம்பனிகள் ஆதரவுடன் முன்வைக்கப்பட்டது. இந்த பிரேரணை அமெரிக்கக் கீழ்ச்சபையில் யுலை மாதம் 365-65 வாக்குகளில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த மாற்றம் இல்லாவிட்டால் தற்போது நிரந்தர வதிவிடம் நாடி விண்ணப்பித்துள்ள இந்தியர் ஏறத்தாழ 49ஆண்டுகள் வரை காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இதே சமயம் சீனர்கள் ஏறத்தாழ 6 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. எனினும் மற்றைய நாடுகளில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்போர் ஏதுவித தடையுமின்றி அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் இவ்விடம் குறிப்பிடத் தக்கது.

தொழில் சார்ந்த நுழைவுச்சான்று பெற்று அமெரிக்க நிறுவனங்களில் சேருவோர், நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கும் வரை அதே நிறுவனத்தில், அதே பணியில் நீடிக்கவேண்டியுள்ளது. ஒருவேளை இவர்கள் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப் பட்டால், அவர்களது குடிவரவுப் பத்திரங்களும் சட்டப்படி ரத்தாகிவிடும். இதனால் இந்நிலையில் உள்ள பலர், தேவையேற்பட்டால் கூட  நாட்டை விட்டுப் போகத் தயங்குவர். காரணம் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்புகையில் போது ஏதாவது தகராறு வந்திடுமோ என்ற பயம்.

இந்த அதிநுட்பத் தொழிலாளர் நியாயமான குடிவரவுச் செய்கை திருத்தத்தால் பயனடைவோர் பிரதானமாக இந்தியர் மாத்திரமே என்று மற்ற குடியேற்ற சட்ட அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்க சீனச் சம்மேளனம், தற்போதைய சூழலில் இந்திய விண்ணப்பதாரர்களுக்காக அனுதாபப்பட்டாலும் புதிய திருத்தம்வேறு சில இன்னல்களை உண்டாக்கும் என்கின்றனர். 

அனுமதிக்கும் எண்ணிக்கை மாறவில்லையானால் அது, வருங்கால சர்வதேச மாணவர்கள், ஏனைய வேற்றுநாட்டுப் பிரசைகள் நிரந்தர வதிவிடம் தேடும் சந்தர்ப்பங்களை ஒட்டு மொத்தமாக நீக்கிவிடும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கின்றது அமெரிக்கச் சீனச் சம்மேளனம். மேலும் இத்தகைய திருத்தம் சீன நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களை, தற்போதைய 6 வருட காத்திருப்பிலிருந்து 10 வருடக் காத்திருப்பாக பிந்திக்க வைக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்கத் தொழில் சார்ந்த குடிவரவு சட்ட மாற்றங்களுக்கு பல இந்திய நிறுவனங்களின் தில்லுமுல்லுகள், குறுக்குவழிகள் , முறைகேடுகள் பிரதான காரணி என்று கருதப்படுகிறது. குறிப்பாக பல தசாப்தங்களில் காணப்படாத சந்தேகத்திற்குரிய விடயங்கள் அண்மை ஆண்டுகளில் நடைபெற்று வந்துள்ளன. உதாரணமாக 2014இல் 20 சதவீத H1-B வேலை விசாக்கள் சூசகமாக, இந்தியத் தொழிநுட்ப முகாமைக் கம்பனிகள் கைப்பற்றின என்று புலனாய்வில் தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டு 2018இல் இந்தியப் பிரசைகள் 74 சதவீத H1-B விசாக்களிற்கு முகாமைக் கம்பனிகள் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இந்த அதிக்குதிகளை அடக்க அமெரிக்க அரசு மோசடி நிவர்த்தி திட்டங்களை அமுலாக்கியுள்ளது.

மேலும் அமெரிக்கக் கீழ்ச் சபை அங்கிகரித்த நிரந்தரக் குடியேற்றத் திருத்தத்தை மேல் சபையிலும் கேட்புக்கள், விவாதங்கள் வைக்காமல் ஒரு மனதாக ஒப்புக்கொள்ளப் பிரேரணை ஆக்டோபர் மத்தியில் வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணை இந்தியர்களுக்கு  உதவினும் ஒட்டு மொத்த நிரந்திரப் புகலிட எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்று செனட்டர் டிக் டேர்பன் அவர்கள் நிராகரித்து விட்டார். மேலும் நிரந்தர வதிவிட அனுமதித்தொகையை உயர்த்த அவர் திருத்தத்தை முன்வைத்துள்ளார்.

சகல குடிவரவுகளையுமே கட்டுப்படுத்த வேண்டும் என்று சிந்திக்கும் சனாதிபதி டிரம்ப் காலத்தில்  இந்தத் திருத்தங்கள் சட்டமாவது சாந்தியமற்ற விடயம் என்று விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 2019ஆண்டில் நிரந்தரக் குடிவரவு விண்ணப்பச் சூழல், நிரந்தரமற்ற பரிதாபப் போட்டித் தன்மையுடனே தொடர்கிறது எனலாம்.

    யோகி

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad