\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இம்பீச்மென்ட் – இன்றைய நிலை

2019 ஆகஸ்ட் 12ஆம் நாள், அமெரிக்க அதிபரான டானல்ட் ட்ரம்ப், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, சில தனிப்பட்ட காரணங்களுக்காக உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படவிருந்த ராணுவ உதவியை நிறுத்தினார் என்று புகார் எழுப்பினார் அடையாளம் காட்டிக்கொள்ளாத நபர் ஒருவர். விசில் ப்ளோயர் (whistle blower) எனும் இடித்துரைப்பாளரான இவர் திருவாளர் ட்ரம்ப் அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உக்ரைன் அதிபர் வோளோடிமரிடம், அந்நாட்டுக்கு அளிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் தந்திருந்த $250 மில்லியன் ராணுவ உதவிக்கு  மாறாக, அவரிடமிருந்து சில உதவிகளை எதிர்பார்த்து மறைமுக பேரம் நடத்தியதாகத் தெரிவித்திருந்தார். . முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடன், உக்ரைன் நிறுவனமொன்றின் இயக்குனராகப் பணியாற்றியபோது நடந்த ஊழல்களின் பின்புலம், மற்றும் 2016 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலின் போது ஜனநாயகக் கட்சியினரின் கணினிகள் ஊடுருவப்பட்டதில் கிடைத்த தகவல் ஆகிய விவரங்களை எதிர்ப்பார்த்து இந்தப் பேரம் நடந்ததாகத் தெரிவித்தார் விசில் ப்ளோயர். (இந்த ஊடுருவல் ரஷ்யர்களால் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அந்தத் தகவல் தற்போது உக்ரைனில் இருக்கிறது என்றும், அந்த ஊடுருவலை நிகழ்த்தியவர்களே உக்ரைன் நாட்டினர் என்றும் ஊர்ஜிதம் செய்யப்படாத  இருவேறு சித்தாந்தங்கள் நிலவுகின்றன)

நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த சமாச்சாரம் என்பதால் இந்தப் புகாரின் பேரில் விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரியதன் பேரில் கீழவையின்  சபாநாயகரான (House of Representatives) நான்சி பெலோசி கீழவைப் புலன் விசாரணைக் குழுவைக் கேட்டுக்கொண்டார். குழுவின் தலைவராக ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஆடம் ஷிஃப் இடம் பெற, அக்கட்சி சார்பாக மேலும் 12 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி சார்பில், டெவின் நூனஸ் தலைமையில், மேலும் 8 உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தார்கள்.

இந்தப் புலன் விசாரணையில் சாட்சியமளிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், அரசாங்க, சட்ட அலுவலர்கள், அமெரிக்க அயல்நாட்டுத் தூதர்கள் உட்பட 28 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் அதிபரின் உத்தரவின் பேரில் வெள்ளை மாளிகை பலருக்கு  அனுமதியளிக்கவில்லை. மேலும் ஜூலை 25 ஆம் நாள் திருவாளர் ட்ரம்ப் உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலின் ஒலி வடிவத்தையும் வெள்ளை மாளிகை தர மறுத்துவிட்டது. விசாரணைக் குழுவினருக்கு உரையாடலின் தொகுக்கப்பட்ட ஆவணமே அளிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் 11ஆம் நாள் தொடங்கி பல வாரங்கள் நடைபெற்ற விசாரணையில் விசில் ப்ளோயரின் புகார்கள் வலுப்பெற்றன. முன்னாள் அதிகாரிகள், தூதர்கள், செயலர் எனப் பனிரெண்டு பேர் விசாரணைக்கு உடன்பட்டு வந்திருந்தனர்.

மேரி யோவோனோவிச்

உக்ரைனின் முன்னாள் அமெரிக்கத் தூதரான மேரி யோவோனோவிச், திருவாளர் ட்ரம்பின் நண்பரும், வக்கீலுமான ரூடி ஜூலியானி, தன் மீது புகார்களைச் சுமத்த உக்ரைன் அரசாங்க அதிகாரிகளை நிர்பந்தித்ததாகத் தெரிவித்தார். சந்தேகத்துக்குரிய தூதரக உடன்படிக்கைகள் சிலவற்றுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், ரூடி ஜூலியானி வற்புறுத்தியதன் பேரில், அதிபர் ட்ரம்ப் தன்னை தூதர் பதவியிலிருந்து விலக்கியதாக அவர் தெரிவித்தார்.

ஃபியோனா ஹில்

முன்னாட்களில் வெள்ளை மாளிகையில் ரஷ்ய அலுவல் அதிகாரியாகப் பணியாற்றிய ஃபியோனா ஹில், ரூடி ஜூலியானி உக்ரைன் அலுவல்களில் தலையிட்டதையும், கார்டன் சான்ட்லான்ட், மைக் மல்வேணி, ரிக் பெரி ஆகியோர் சதியாலோசனைகளில் ஈடுபட்டதையும் விசாரணையில் குறிப்பிட்டார்.

மைக் மல்வேனி

உள்துறைச் செயலரான மைக் மல்வேனிக்கு விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பியிருந்த போதிலும் அவர் விசாரணைக்கு வரவில்லை. மாறாக செய்தியாளர்கள் பேட்டியொன்றில் உதவி நல்கும் சமயங்களில் அமெரிக்க அதிபர்கள், அதற்குப் பிரதிபலனாக மாற்று  உதவிகள் வேண்டி பேரம் பேசுவது சகஜமென்றும், ட்ரம்ப் உக்ரைன் அதிபரிடம் எதிர்பார்த்த பிரதிபலன்களில் தவறேதும் இல்லையென்றும் குறிப்பிட்டார். ஆனால் அன்று மாலையே செய்தியாளர்களை அழைத்து, திருவாளர் ட்ரம்ப் அமெரிக்கா அளிக்கும் ராணுவ உதவி சரியான வகையில் செயல்படுத்தப்படுமா என்று அறியவே திருவாளர் செலன்ஸ்கியிடம் அப்படிப் பேசினாரே தவிர பிரதிபலன் எதிர்பார்த்த பேரம் எதுவும் இல்லை என்று மாற்றினார்.  

ஜான் சான்ட்லான்ட்

அதிபர் ட்ரம்பின் அனுமதி கிடைக்காததால் முதலில் விசாரணைக்கு மறுத்த ஜான் சான்ட்லான்ட் மறுபடி அழைப்பு விடுத்தபோது விசாரணையில் பங்கெடுத்தார். தனக்கும் அதிபர் டிரம்புக்கும் நடந்த உரையாடல் தொடர்பாக டேவிட் ஹோல்ம்ஸ் தெரிவித்த குறிப்புகள் உண்மையென்று தெரிவித்த சான்ட்லான்ட். உக்ரைனுக்கு ராணுவ உதவி வேண்டுமென்பதால் அதிபர் செலன்ஸ்கி, அமெரிக்க அதிபரின் எல்லாவித கோரிக்கைகளுக்கும் அடிபணிவார் என்று தான் அதிபர் ட்ரம்பிடம் தெரிவித்ததை  ஊர்ஜிதப்படுத்தினார். மேலும் அதிபர் ட்ரம்புக்கு உக்ரைன் நாட்டைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை, அவரது தேவையெல்லாம் வேறொரு ‘பெரிய விஷயம்’ தான் என்று டேவிட் ஹோல்ம்ஸிடம் தெரிவித்ததையும் உறுதிப்படுத்தினார் சான்ட்லான்ட். உக்ரைன் அதிபருக்கு ராணுவ உதவி தொடர்பாக விதிக்கப்பட்ட நிர்பந்தங்கள் பற்றி துணை அதிபர் மைக் பென்ஸ் உட்பட, உள்துறை செயலர் மைக் மல்வேணி, ஜான் போல்டன், மைக் பாம்பேயோ, ருடி ஜிலியானி எனப் பலரும் அறிவர் என்றார் அவர். உக்ரைன் அரசு ஹன்டர் பைடன் மீதான வழக்குகளை முடுக்கிவிட்டதற்குப் பிறகே வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்புடனான சந்திப்பு நடைபெறுமென்று அதிபர் செலன்ஸ்கியிடம் மறைமுகமாகத் தெரிவித்ததையும் சான்ட்லான்ட் குறிப்பிட்டார்.  கூடவே, இது தொடார்பாக உக்ரைன் நாட்டுக்கான தூதரான பில் டைலருடன் தான் உரையாடிய குறுஞ்செய்திகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

லாரா கூப்பர்

ரஷ்ய, உக்ரேனிய நாடுகளின் ராணுவ செயலாக்கத்தினை பார்வையிடும் அமெரிக்கத் துணைச் செயலரான லாரா கூப்பர், அதிபர் ட்ரம்ப் பிரதிபலன் நாடி ராணுவ உதவியை நிறுத்திவைத்துள்ளார் என்பதை உக்ரைன் அரசு ஊகித்திருந்தது என்று தெரிவித்தார்.

அலெக்சாண்டர் வின்மன்

அமெரிக்க ராணுவ லெஃப்டினன்ட் கர்னல் அலெக்சாண்டர் வின்மன், இரு அதிபர்களுக்கான உரையாடலை நேரிடையாகக் கேட்டதாகவும், அந்த உரையாடல் அரசு முறையானதாக இருக்கவில்லை என்பதை அப்போதே மற்ற அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகவும் சுட்டிக் காட்டினார். இந்த உரையாடல் நடைபெற்றபோது நேரிடையாகக் கேட்ட இன்னொரு நபரான ஜெனிஃபர் வில்லியமும், இரு அதிபர்களிடையே நடந்த பேச்சு வார்த்தை வழக்கத்துக்கு மாறாக இருந்ததையும், உரையாடலில் ஹன்டர் பைடன் பணியாற்றிய பரிஸ்மா நிறுவனம் குறித்த தகவல்களில் ஆர்வம் தொனித்ததையும் குறிப்பிட்டார்.

லெவ் பார்னாஸ், இகோர் ஃப்ருமன்

இதன் நடுவே ரூடி ஜுலியானியின் தொழிற் கூட்டாளிகளான லெவ் பார்னாஸ், இகோர் ஃப்ருமன் ஆகிய இருவரும் உக்ரைன் நாட்டுக்கான விமானத்தில் ஏறிப் பறக்க இருந்த நேரத்தில் வாஷிங்டன் விமான நிலையத்தில் அக்டோபர் 9ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவில் பிறந்து, உக்ரைனில் வளர்ந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இவர்கள் தங்களது ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு ரூடி ஜூலியானியை வக்கீலாக நியமித்துக் கொண்டனர். உக்ரைனில் இவர்களது செல்வாக்கை அறிந்த ரூடி ஜூலியானி, இவர்களைக் கொண்டு உக்ரைன் அதிபரை பரிஸ்மா குறித்த விசாரணையைத் தொடங்கிட வற்புறுத்தியுள்ளார். இவர்களும் உக்ரைன் நாட்டு அரசாங்க அதிகாரிகளை வளைத்து அதிபர் செலன்ஸ்கிக்கு அழுத்தந்தர உதவி புரிந்தனர். இருவருக்கும் இம்பீச்மென்ட் தொடர்பான விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பபட்டிருந்த போதும், இவர்கள் உக்ரைன் நாட்டுக்குப் பயணிக்க இருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாட்சிகளின் கூற்று அடிப்படையில், கீழவையின் நீதித்துறை உறுப்பினர் முன்னிலையில் மற்றுமொரு பொது விசாரணை நடத்தக் கோரி  அக்டோபர் 31 நடந்த வாக்கெடுப்பு 232-196 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புலன் விசாரணையில் சாட்சியளித்த சிலர் மீண்டும் வரவழைக்கப்பட்டு நீதித்துறை உறுப்பினர்கள் முன்பு பொது விசாரணை நடைபெற்றது. நவம்பர் 13ஆம் நாள் தொடங்கி 21ஆம் நாள் வரை நடந்த விசாரணையில் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இடையில், அவ்வப்போது தொலைக்காட்சி பேட்டிகளில் திருவாளர். ட்ரம்ப் உணர்ச்சிவயப்பட்டு ‘உக்ரைன் நாட்டில் நடந்த ஊழல்களை, குறிப்பாக ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனின் ஊழல் பின்னணியைப் பற்றி அறியுமாறு அந்நாட்டு அதிபரைக் கேட்டேன்.. இது ஒரு இயல்பான,  திருத்தமான பேச்சு’ என்று சொல்லி வந்தார்.  

விசாரணைக் குழுவின் அறிக்கை

இதனிடையே, டிசம்பர் மூன்றாம் நாள், புலன் விசாரணைக் குழுவின் தலைவர் ஆடம் ஷிஃப் விசாரணைக் குழுவின் முழு அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்த 300 பக்க அறிக்கையில் “குற்றச்சாட்டு விசாரணையில், ஜனாதிபதி டிரம்ப், தனிப்பட்ட முறையில் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகாரிகள் மூலமாகச்  செயல்பட்டு, 2020 இல் நடக்கவிருக்கும் தேர்தலில் தனக்குச் சாதகப் பயன் கிடைக்கும் வகையில், உக்ரைன் நாட்டு அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரினார்” என்று குறிப்பிட்டிருந்தார் ஷிஃப். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட அதே தினம் அதிபர் ட்ரம்பின் தனிப்பட்ட வக்கீலான ரூடி ஜூலியானி ஹங்கேரி நாட்டுக்குச் சென்று உக்ரைன் நாட்டு முன்னாள் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்ததுடன், நேராக உக்ரைனுக்கே சென்று சிலரைச் சந்தித்தார். ‘என்னைத் தவிர, என்னைப் போல  திருவாளர் ஜூலியானிக்குப் பல வாடிக்கையாளர் உள்ளனர்’ என்று சொல்லிச் சமாளித்து வந்தார் டானல்ட் ட்ரம்ப்.

அதிபர் மீது சுமத்தப்பட்டுள்ள 2 குற்றச்சாட்டுகள்

டிசம்பர் 10 அன்று, நீதித்துறைக் குழு குற்றச்சாட்டுக் கட்டுரைகளை வெளியிட்டது: அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸுக்கு தடையாக இருந்தது என்ற இரு பெரும் குற்றச்சாட்டுகள் அதிபர் டானல்ட் ட்ரம்ப் மீது தாக்கலானது. இந்த இரு குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக 23 நீதித்துறை உறுப்பினர்களும் எதிராக 17 உறுப்பினர்களும் வாக்களிக்க குற்றச்சாட்டுகளை மேலவைக்கு எடுத்துச் செல்ல முடிவானது.

இந்த நேரத்தில் கீழவைச் சபாநாயகரான நான்சி பெலோசிக்கு இந்தக் குற்றச்சாட்டை மேலவைக்குத் தாக்கல் செய்வதில் தயக்கம் ஏற்பட்டது. மேலவையில் அதிபர் ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக்கட்சி பெரும்பான்மை பலம் பெற்றிருப்பதால், மேலவைத் தலைவரான மிட்ச் மெக்கொனால் நடுநிலையான, பாரபட்சமற்ற கோணத்தில் இந்த வழக்கை விசாரிக்க உறுதியளித்தாலொழிய, இந்த இம்பீச்மென்ட் குற்றச்சாட்டை மேலவைக்குத் தாக்கல் செய்வதில் அர்த்தமில்லை என்பது அவரது எண்ணம். இது ஓரளவுக்கு உண்மை என்றாலும் மேலவையில் தாக்கல் செய்யாமல் இதனை நிலுவையில் வைத்திருப்பதிலும் அர்த்தமில்லை. அதாவது அதிபர் டானல்ட் ட்ரம்ப், பெயரளவில் குற்றம் சுமத்தப்பட்டு நின்றாலும் அவர் மீதான குற்றங்கள் மேலவையில் ஆய்வு செய்யப்படாமலேயே வழக்கு மரித்துப் போவதற்குச் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்படியே ஜனவரி மாத மத்தியில் மேலவைக்கு வழக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருப்பதால் குடியரசுக் கட்சியினர் இதனைச் செயலிழக்கச் செய்துவிடுவார்கள் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.   

ஒருவேளை இத்தனை நாட்கள், மக்களின் வரிப்பணத்தில் பெரிய செலவில் நடைபெற்ற விசாரணைக்குப் பெரிய மதிப்பேதும் இல்லாமல் போய்விட்டதே என்று அதிபர் ட்ரம்பும் அவரைச் சார்ந்தவர்களும் சந்தோஷப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் மெய்யா பொய்யா என்ற கேள்விக்கு விடையில்லாது போய்விடும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டு நீதியரசர் ஒருவர் “பத்துக் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது” என்று சொல்லியது, இன்றளவும் உலகளவில் நீதித்துறையின் வேதமாகக் கருதப்படுகிறது. இதில் அதிபர் ட்ரம்ப் எந்தப் பக்கத்தில் உள்ளார் என்பது, இன்றைய தேதியில்,  தனிப்பட்ட ஒவ்வொரு மனிதரின் முடிவில் விடப்பட்டுள்ளது.

–     ரவிக்குமார்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad