\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சாகித்ய அகாடமி

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments

கண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை.

அங்கிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்த அவரின் கனவுகள் அவரை இத்தனை வருட போராட்டக் காலத்துக்கு  இழுத்துச் சென்றன. எத்தனை வருட உழைப்பின் எதிர்பார்ப்பு? தனது நரைத்த மீசையைத் தடவி விட்டுக்கொண்டவர் இருபத்தி ஐந்து வயதில் எழுத ஆரம்பித்திருப்போமா? ம்..  இருக்கும், ஆரம்பத்தில் பிரபலமாக வேண்டி எத்தனை சிறு கதைகளைப் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியிருப்பார். எல்லாமே கிணற்றில் போட்ட கல்லாய்ப் போனது. இருந்தும் மனம் தளர்ந்து விடவில்லை. இதனால் வருடா வருடம் அவர் கதைகள் எழுதி அனுப்புவது அதிகமானதே தவிர குறையவே இல்லை. இலக்கிய உலகில் அவர் பெயர் ஓரளவுக்கு வெளியே வரும்போது அவருக்கு ஐம்பது ஆகி விட்டது.

இப்பொழுதெல்லாம் கொஞ்சம் நிதானப்பட்டு விட்டார். முன்னைப்போல் நிறைய கதைகளை எழுதுவதில்லை. வாசகர்களும், நண்பர்களும் அவரிடம் ஏன் உங்களின் கதைகள் அதிகம் வருவதில்லை என்று கேட்டால், இவர் புன்சிரிப்புடன் ‘நல்ல கருவுக்காகக் காத்திருக்கிறேன். நல்ல கதைக்கரு கிடைத்து விட்டால் கண்டிப்பாக எழுதுவேன்’ என்று சொல்லி வைப்பார்.

அவருடையக் காத்திருப்பு வீண் போகவில்லை. எதிர்பாராவிதமாக ஒரு  நண்பரின் இறப்புக்குப் போனவருக்கு அங்கு நடந்த சடங்குகளுக்கான சண்டையில் புதிய கரு கிடைக்க அதன் பின் அவர் கற்பனைகள் விரிய ஆரம்பித்தன.

அன்று வீட்டுக்கு வந்தவர் ஒரே வாரத்தில் முழு கதையையும் எழுதி முடித்து விட்டார். நண்பர்களுக்கு முதலில் அதை படித்து பார்க்க கொடுக்க, அவர்கள் அதைப் படித்து இன்றைய வருடத்தில் மிக சிறந்த கதையாக இது இருக்கும் என்று சொன்னார்கள். மனதில் அப்படி ஒரு பூரிப்பு, சாதித்து விட்டோம் மனதுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை அவரால் மறைக்க முடியவில்லை.

சட்டென அவரின் கனவு கனவு கலைந்தது. வீட்டுக்கு வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் ஓசை. கண்ணபிரானின் மனைவி காரின் சத்தம் கேட்டவுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள், ‘அம்மா..’  எனக் கூப்பிட்டுக்கொண்டே மகள் பரிமளம் உள்ளே வந்தாள். கூட அவளை ஒட்டிக்கொண்டு மூன்று வயது பேத்தி செளம்யா. ‘வா..வா.’ கண்ணபிரானின் மனைவி மகளை அணைத்துக்கொண்டு வரவேற்க உட்கார்ந்திருந்த கண்ணபிரானின் மனம் ‘எப்படித்தான் இந்த அம்மாமார்களுக்கு தனது மகள்களின் வருகை தெரிகிறதோ?’ என்று வியந்தது. சமையலறையில் இருந்தவள், இத்தனை வண்டி வாகனங்கள் வீட்டைக் கடந்து சென்றாலும், வீட்டுக்கு முன் காரின் சத்தம் சத்தம் கேட்டவுடன் தன் மகளின் கார் என்று அடையாளம் கண்டு ஓடி வர முடிகிறது.

‘காங்கிராட்ஸ் டாட்’, மகள் அப்பாவின் அருகில் வந்து அவரின் தலையைக் கலைத்தாள். இது சிறு வயது முதல் இவளுக்கு விளையாட்டு. மகளின் பாராட்டு கலந்த அன்பு இவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

‘சரி உள்ளே வா..’, அம்மா அதற்குள் மகளை இழுத்துச் சென்றாள். இவர் அவர்கள் போவதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். மீண்டும் தனது மனதை முற்கால நினைவுகளுக்கு இழுத்துப் போக முயற்சிக்கும் போது, பேத்தி ஓடி வந்து தொம்மென்று அவர் மடியில் உட்கார்ந்தாள். சற்று வலித்தாலும் ‘என்னடா?’ அன்புடன் கேட்டார் கண்ணபிரான்.

‘போ தாத்தா அங்க பாட்டியும், அம்மாவுமே லொட லொடன்னு பேசிகிட்டு இருக்காங்க. எனக்கு போரடிக்குது’, சலித்துக்கொண்ட பேத்தியின் தலையைத் தடவியவர், ‘சரி விடு நீ தாத்தாகிட்ட பேசிகிட்டு இருப்பியாமா.. சரியா?’ என்றார். ‘எனக்கு ஒரு கதை சொல்லு தாத்தா..’ பேத்தியின் திடீர் கோர்க்கை இவரைச் சற்று தடுமாற வைத்தாலும், சமாளித்துக்கொண்டு ‘சொல்றண்டா கண்ணா..’ என்று கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடங்கள் கூட அந்த கதை தொடர்ந்திருக்காது, ‘போங்க தாத்தா இந்தக் கதை போரடிக்குது, வேற கதை சொல்லு’, பேத்தி கேட்கவும், ‘அப்படியா? சரி இந்தக் கதை சொல்றேன்’, என்று மற்றொரு கதை சொல்ல ஆரம்பித்தார். இந்தக் கதை இரண்டு நிமிடங்கள் கூட சொல்ல விடவில்லை. ‘தாத்தா உனக்குக் கதை சொல்லவே தெரியலை, சும்மா சும்மா போரடிக்கற கதையாவே சொல்றே..’ பேத்தியின் குற்றச்சாட்டு இவரை திகைக்க வைத்தது. 

‘சரி இந்தக் கதை கேளு..’ என்று அவளை இறக்கி விட்டு விட்டு கைகளை விரித்து கதை சொல்ல ஆரம்பித்தார். ‘உனக்குக் கதை சொல்லவே தெரியலை, போ தாத்தா, நான் அம்மா கிட்டயே போறேன்..’. பேத்தி குடு குடுவென அம்மாவிடம் ஓடி விட்டாள்.

அப்படியே திகைத்து உட்கார்ந்து விட்டார் கண்ணபிரான். “உனக்கு கதை சொல்ல தெரியவில்லை”, பேத்தியின் அந்த வார்த்தை அவரை அப்படியே பிரமித்து உட்காரவைத்து விட்டது.  ‘சார் தபால்..’ குரல் கேட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தவரிடம் தபால்காரர் கொடுத்த கவரை உடைத்து படித்து பார்த்தார். தான் எழுதிய சிறு கதைக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக அறிவித்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது.

இப்பொழுது இந்தத் தகவல் இவருக்கு மிகச் சாதாரணமாய் பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad