\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கபீர்தாஸ்

இந்தி இலக்கிய உலகினை ஆதிகாலம் (1050-1375), பக்தி காலம் (1375-1700), ரீதி காலம் (1700-1900), தற்காலம் (1900 முதல் இன்றுவரை) எனப் பகுத்துள்ளனர்.

பக்தி காலத்தில் இடம் பெறுபவர் கபீர்தாஸ். நிர்குண பக்தி, சகுண பக்தி எனும் பக்தியின் இரு நெறிகளில் நிர்குணத்தைச் சார்ந்தவர் கபீர். நிர்குண பக்தர்கள் ஞானிகள் ஆவர். இவர்களின் பக்தி நெறியில் வணங்கப்படும் இறைவனுக்குப் பெயர், உருவம், நிறம், குலம் ஏதும் கிடையாது. எங்கும் நிறைந்தவன்; உருவமில்லாதவன், சாதி, மத வேறுபாடின்றி இருப்பவன் இறைவன். இறைவனை எங்கும் சென்று வழிபட வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே தூய இதயத்துடன், அளவற்ற அன்புடன் வழிபடுவதே நிர்குண பக்தி நெறியாகும். இவர்கள் இறைவனைவிட குரு உயர்ந்தவர் என எண்ணுபவர்கள்.

ஞானமார்க்கம், பிரேம மார்க்கம் எனும் இரு நிர்குண நெறியில் ஞானமார்க்கத்தைச் சேர்ந்தவர் கபீர்தாஸ். ஞானமார்க்கம் ‘சந்த் மார்க்கம்’ என்றும், பிரேம மார்க்கம் ‘சூஃபி மார்க்கம்’ என்றும் கூட அழைக்கப்படுகின்றன.

கபீர் சமூகத்தில் மதத்தின் பெயரால் நிலவிய தீயச் சக்திகளை அழித்து நன்னெறிகளை நிலை நாட்டியவர். பல்வேறு பா வடிவங்களில் பக்திப் பாடல்களைப் பாடியவர். இவருடைய இரண்டடிப் பாடல்கள் “தோஹா” எனப்படுகின்றன. இலக்கியச் சான்றோர்களின் கருத்துப்படி கபீர் 1398இல் காசிக்கு அருகிலிருக்கும் ‘மகஹர்’ என்ற இடத்தில் பிறந்தவர். கல்வி பயிலாத கபீர், குரு இராமானந்தரின் உபதேசங்களின் வழியாக ஞானத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுவாமி இராமானந்தரே கபீரின் குருவெனத் தெளிவாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்குச் சென்று முறையாக கல்வி பயிலாத கபீர் தன் அனுபவங்களையே பாடமாக மக்களுக்குத் தந்த மகான் ஆவார். கபீரின் இலக்கியத்தில் 15ஆம் நூற்றாண்டின் வட இந்தியாவின் சமுதாயப் பழக்க வழக்கங்கள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

இந்து, இஸ்லாமியர்களுக்குள் அமைதியில்லா சூழ்நிலையில் நாடு துடித்துக் கொண்டிருந்தது. ஜாதி, மத, இன வேறுபாட்டுடன் இந்து சமுதாயம் ஒரு புறமும், இந்துக்களை மிரட்டும் இஸ்லாமிய மன்னர்களின் பதவித் தாகம் ஒருபுறமும் நாட்டைச் சூழ்ந்திருந்தன. ஆதலால் கபீர் அதிகமாய் இந்து-இஸ்லாமியர்களின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு தன் பாக்களைப் படைத்தார். தன் பாக்களால் ஆன்மீக நெறியில் திருப்பி, அமைதியை சமுதாயத்தில் நிலைநாட்டி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வழி வகுத்தவர் கபீர்தாஸர் ஆவார். 

கபீர் தன் சமுதாயத்தில் ஜாதி அடிப்படையில் அழிகின்ற மனித நேயத்தை உயர்த்தி ஜாதி, சடங்கு முதலியவற்றின் பெயரில் நடைபெறும் தீய செயல்களை முற்றிலும் ஒழிக்கப் பாடுபட்டவர். தான் பெரிய சீர்திருத்தவாதி என்று கபீர் என்றும் கருதியதில்லை. ஆனால், தன் செயல்களால் சீர்திருத்தம் செய்தவர். இதை அவரது பாக்களில் காணலாம். 

படைப்பு : கபீரின் படைப்புகளின் தொகுப்பு ‘பீஜக்’ என அழைக்கப்படுகிறது. கபீரின் பீஜக்கில் சாகீ, சபத், ரமைனீ என்ற பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தோஹா எனப்படும் பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கபீர் படைப்புகள் 57லிருந்து 61 வரை என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் ஆய்வாளர்களால் அமோதிக்கப்பெற்ற ஒரே நூல் ‘பீஜக்’ மட்டுமே.

பாரத நாட்டின் மிகப் பழமையான சமயக் கொள்கைகளையும், ஆதிசங்கரரின் அத்வைத தத்துவங்களின் சாரத்தையும் இவர் படைப்பில் காணலாம். இவரால் போற்றப்பட்ட இறைவன் வைணவர்களின் சாகார மூர்த்தி(உருவமுடைய மூர்த்தி) அல்ல. யோக சாதனைக்கு முக்கியத்துவம் தந்து அன்பு வடிவமான ஆண்டவனை உருவமில்லாத, பெயரில்லாத கடவுளாகப் போற்றும் கபீர் கோயில், குளம், தீர்த்த யாத்திரை முதலியவற்றை எதிர்த்தார். இதைத் தெளிவாகத் தன் ‘தோஹா’க்களில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தஸ்ரத் திஹு லோக் பகானா

ராம் நாம் ஹை மரம் ஹை கானா”

அவரால் கூறப்பட்ட  ‘ராமர்’ தசரதனின் மைந்தன் அல்ல. குணமற்ற, உருவமற்ற, அலெளகீக, நாமமற்ற இறைவன்தான். இதே போல் கபீரின் பாக்களின் ஹரி, கோவிந்த், முராரி போன்ற சொற்கள் எல்லாம் ஜாதி, இன, மத, பெயர் எதுவுமற்ற உலக நாயகனாக இறைவனைக் குறிப்பிடும் பெயர்களே தவிர எந்த ஒரு சமயத்தையும் குறிப்பன அல்ல. 

இவர் சமய நெறிக்கு ஆதாரமானது தூய அன்பு ஒன்றுதான். ‘அன்பே சிவம்’ என்ற கொள்கையுடன், தான் வாழ்ந்திருந்த சமுதாயத்தில் ஜாதி, மதம் என்ற பெயரில் நிலவி வரும் தீய சக்திகளை அழித்து அன்பைப் போதித்தார். ஆனால் இவர்தன் பாக்களால் இந்து, இஸ்லாம் மதத்தின் செயல்களையும், பூஜை என்கிற பெயரில் வளர்ந்து வரும் கபடத்தையும், சுயநலத்தையும் தீவிரமாக எதிர்த்ததால் இந்தி இலக்கிய சமயப் புரட்சிக் கவி என்றும் கூறப்பட்டார். மதம், ஜாதி வெறியை ஒழிக்க இவர் பரம்பரை பரம்பரையாய் நடந்து வந்த பூஜைகளை வெளிப்படையாக எடுத்தெறிந்து சமுதாயத்தின் மதச் சங்கிலியை அறுத்து எறிந்தவர் ஆவார். நம் மனத்தில் உள்ள தூய அன்பினால் அந்த ஆண்டவனைத் தரிசிக்கலாம் என்கிறார். மனத்தூய்மைக்கு முக்கியத்துவம் தருபவர் கபீர். அவரின் பக்தி நெறியைப் பற்றி கோவிந்த திருகுணாயத் கூறுகையில் “கபீரின் பக்தி பாவமும் குணமும் உடையது. நாரத பக்தி சூத்திரங்கள், பாகவதம், பகவத்கீதையிலிருக்கும் பக்தி தத்துவத்தை சூஃபியின் அன்பினால் நிரப்பி உலகிற்குத் தந்தவர் கபீர்.

இறைவனிடம் மனம் கொள்ளும் தூய பேரன்பானது ‘மூகம் மதுரா ஸ்வாதனம்’ என்கிறார். அதாவது ஊமையானவன் எவ்வாறு வெல்லத்தின் சுவையைக் கூற இயலாதோ, அதேபோன்றுதான் பக்தி, அது தூய அன்பின் தோற்றம், விளக்க முடியாத பேரன்பு.

“பூஜாகர் ந நமாஸ் குஜார் ஏக்

நீராகார் ஸ்ருதய நமஸ்கார் 

ஹரிஜைஸா தைஸா ரஹீ ஹரக்கி குன் காவூ”

பூஜையோ நமாஸோ தேவையில்லை. இதயத்தில் உருவமில்லாத அன்பின் வடிவமான இறைவனையும் அவன் குணங்களையும் போற்றுவோம்.

கொள்கைகள் 

கபீர் இந்தி இலக்கியத்தின் ‘நிராகாரவாதி’ எனப் பெயர் பெற்ற புலவராவார். அதன் பொருள் உருவமற்ற, பெயரற்ற, எங்கும் நிறைந்த பரம்பொருளை நேசித்தவர். ஆண்டவனை வெளியில் தேட அவசியமில்லை. அவர் நம் இதயமென்னும் கோவிலிலேயே வீற்றிருப்பவர் என்பது இவர் கருத்து. எங்கும் நிறைந்துள்ள, அனைத்து சமயத்திற்கும் பொதுவான ஒரே இறைவன் என்கிறார். இவரால் வழிபடப்பட்ட இறைவன் அன்பின் பரிபூரண வடிவமானவர். அவரை அடைய சாத்திர, புராண நூல்களின் ஞானம் தேவையில்லை. தூய மனமே தேவை என்கிறார். பக்தியைக் கடைபிடிக்க சாத்திரங்களோ, சம்பிரதாயங்களோ, சடங்குகளோ அனுசரிக்கத் தேவையில்லை. தூய இதயத்துடன் கனிந்த சொற்களுடன் மற்றவர்களைப் புண்படுத்தாமல்  மனிதனுக்குள் வாழும் இறைவனைத் தரிசிப்போம் என்கிறார்.

துறவிகளுக்குத் தேவை மனத்தூய்மை எனக் கூறும் கபீர், ஜாதி, சமய வேறுபாடின்றி இறைவனிடம் பற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இறைவனைப் பக்தியுடன் துதிப்பவனின் உள்ளத்தில் இறைவன் புகுந்து விடுகிறான்.

“ஜாதி பாந்தி செ நஹி கோயி

ஹரி கோ பஜே ஸோ ஹரி கா ஹோயீ”

எவனொருவன் இறைவனைத் துதிக்கிறானோ அவன் இறைவனுடையவனாகிறான். அவனிடம் சாதியைப் பற்றிக் கேட்க அவசியமில்லை.

பக்தியில் அன்பிற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. கபீர் அன்பையும் ஓர் புதிய இயல்பான முறையை மக்களுக்குக் காண்பித்தார். அந்த பக்தி நெறியை அனுசரிக்கத் தூய மனம் வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அந்த ஆண்டவனின் அருளை எளிய மக்களின் புன்னகையில் காண வேண்டும் என்கிறார். ஆகவே அவரது இலக்கியம் மாபெரும் மனித நேயத்துடன் கூடிய இலக்கியமாகத் திகழ்கிறது.

எல்லா பக்த கவிகளும் இறைவனைத் தாய், தந்தை, காதலன், காதலி என வெவ்வேறு வடிவங்களில் பாடினாலும், கபீர் கணவன்-மனைவி உறவான தாம்பத்திய உறவைச் சிறந்த உறவாக நினைக்கிறார். ஆகவேதான் ஜீவன்-பரமனின் உறவைக் கணவன்-மனைவி உறவோடு ஒப்பிடுகிறார். கணவன் மனைவி உறவு சாதாரணமானது. ஆனால் இறைவனிடம் கொண்ட உறவோ அசாதாரணமானது.

கபீர் தன் ஆன்மாவைத் தலைவியாகவும், உருவமற்ற, எங்கும் நிறைந்த அந்த பரமனைத் தலைவனாகவும் கருதி அந்தத் தலைவி, தலைவனுடன் சேரும் வரை படும் உடல் ரீதியான, மன ரீதியான துயரத்தை, பிரிவாற்றாமையை கபீர் மிக அருமையாக வர்ணித்துள்ளார்.

கபீர்  பிரிவாற்றாமையை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார்.

முதல் நிலையில் தலைவனைப்(இறைவனை ) பிரிந்த தலைவி (ஆன்மா) அவன் நினைவிலேயே வாழ்கிறாள். அவனது நினைவலைகள் அவளை வாட்டுகின்றது.

இரண்டாவது நிலையில், அவளது கால்கள் அவளறியாமலே வாசலை நோக்கிச் செல்கின்றன. அவன் வரும் திசையை நோக்கி கண்கள் தேடுகின்றன. வழிமேல் விழிவைத்து அவனுக்காகக் காத்திருக்கிறாள். அவனைக் காணாமல் கண் கலங்குகிறாள். அவன் வரும் வழி நோக்கிக் கண்கள் பூத்துவிட்டன. தலைவன்(பரமாத்மா) பெயரை உச்சரித்து உச்சரித்து அவளது(ஆன்மா) நா வறண்டு போனது. ஒளிமயமான பரமாத்மாவினைக் காணத் துடிக்கும் ஆத்மாவின் தவிப்பு அடங்காது. தன் தலைவனின் அலெளகீக அழகைக் கண்டு அவள் வியப்படைகிறாள். அந்த உணர்வு வெல்லத்தை உண்ட ஊமையின் உணர்வுக்குச் சமமானது.

கபீரின் ஆத்மா இவ்வாறு கூறுகிறது.

“சுகியா சப் சன்சார் ஹை க்காவை அரு சோ வை 

துகியா தாஸ் கபீர் ஹை ஜாகை அரு ரோவை”

இதன் பொருள், அனைவரும் உண்டு, உறங்கி சந்தோஷமாகக் காணப்படுகின்றனர். நானோ உன்னைக் (பரமாத்மாவை) காண அழுது தவிக்கிறேன்.

பிரிவற்றாமையால் வாடும் தலைவியின் துயரம் அளவிடற்கரியது. அதை உணர முடியுமே தவிர கூற இயலாது. அந்த நிலையில் அவள் படும் வேதனை கொஞ்ச நஞ்சம் இல்லை. ஆத்மா(தலைவி) பரமாத்மாவை(தலைவனை) நினைத்து நெஞ்சுருகி அவனுடன் சேரத் துடிக்கின்றாள். இவ்விரு நிலைகளையும் கடந்தபின் மூன்றாவது நிலை என்னவென்றால், தீராத் துயரத்தில் தலைவனின் நினைவில் வாடும் அவள் அவனை நினைத்து நினைத்து தன்னுள்ளேயே அவனைக் காண்கிறாள். இதுவே ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று சேரும் நிலையாகும். கபீர் இதனை இவ்வாறு கூறுகிறார்.

“லாலீ மேரே லால் கீ ஜித் தேக்கன் தித் லால் 

லாலீ தேக்கனு மை கயீ, மை பீ ஹோ கயீ லால்”

இந்நிலையில் தலைவி தலைவனை அனைத்திலும் காண்கிறாள். தலைவனை நினைத்து நினைத்து அவளே அவனாகி விடுகிறாள். கபீர் பிரிவாற்றாமை, தலைவியின் துடிப்பு, காதலை உணர்த்தல் ஆகியவற்றை நோக்கும் போது அவை அனைத்தும் இவ்வுலக உறவுகளைக் குறித்தாலும், அவை அனைத்தும் மானசீகமான ஆத்மா, பரமாத்மா உறவினையே விளக்குகிறது. அதில் ஆசா, பாசங்களுக்கும், சரசத்திற்கும் இடமில்லை. அவை அனைத்தும் அலெளகீகமானது. இதனை மறைபொருள் உணர்தல்(இரகசிய வாதம்) ஆங்கிலத்தில் mysticism என்கின்றனர்..

பெரிய பெரிய நூற்களைக் கற்றவர்கள், சாத்திரம் கற்றவர்கள் தம்மைப் புலவர் என்று கூறித் திரிவோரைக் கண்டு நகைக்கிறார் கபீர். மாதம் மற்றும் சடங்குகள் என்று பெயரில் மக்களின் மனதைக் துன்புறுத்தும் மனித நேயமற்ற ஞானிகளைக் கண்டு இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் கபீர்.

இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை எதிர்த்தது போலவே இஸ்லாம் மதத்தின் மூட நம்பிக்கைகளையும் தைரியமாகச் சுட்டிக் காட்டியவர் கபீர். அவர் கூறுகிறார் காலையிலும் மாலையிலும் கத்திக் கத்திக் குதாவை(ஆண்டவனை) அழைக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார். அவரைச் செவிடனாகவா எண்ணுகிறீர்? ஆன்மாவில் அப்பேரொளியைக் காணலாமே என்கிறார்.

“காங்கர் பான்தர் ஜோரிகை மஸ்ஜீத் லுயீ சுனாய் 

தாசெடி முல்லா பாங்க் தே, க்யா பஹிரா ஹுவா குதாய்”

கபீரின் காலத்தில் இந்து மதத்தினரும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் வெறுப்புடனும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டுமிருந்தனர். ஆகவே இரு மதங்களிலும் உள்ள மூட பழக்க வழக்கங்களை ஒழித்த கபீர், ‘நான் ராமனையோ அல்லாவையோ வணங்கவில்லை, என் வழி நிர்குண உபாசனை.(உருவமற்ற வழிபாடு) அதன்படி எல்லா இறைவனும் ஒருவனே. இதில் ஜாதிமத வேறுபாடு ஏதுமில்லை என்கிறார்.

மனதில் தீய எண்ணங்களுடன் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது தேவையற்றது. ஆதலால் தான் இவர் மனத்தூய்மையுடன் கூடிய பக்திக்குச் சிறப்பிடம் தந்து கோயில் மற்றும் தீர்த்த யாத்திரை செல்வதை மறுத்தார்.

“பூஜா நா கரூம் ந நமாஸ் குஜாரூ

ஏக் நிராகார் ஹிரதை நமஸ்கார்”

இறைவனின் உருவ வழிபாட்டை எதிர்த்த இவர், ஆண்டவனின் நாமத்தை அடிக்கடி சொல்லும்படி கேட்டுக்கொள்கிறார். கபீரின் மதம் இயற்கையான அன்புடன் கூடிய மனித நேயமுள்ள மதம். எல்லா மனிதர்களின் நலனை விரும்புவது தான் அந்த மதத்தின் கொள்கை. இவற்றின் மூலம் அவர் நீதிநெறிகளை எடுத்துரைக்கின்றார். அவரின் கொள்கைகளில் சில கட்டளைகளாகவும், கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கருவியாகவும் அமைந்துள்ளன. வாய்மையின் வலிமை, ஒற்றுமையைக் கடைபிடித்தல், அனைவரையும் சமமாகக் காணுதல், ஒழுக்கம், தயை, ஈகை, இரக்கம், மன்னிக்கும் குணம், தைரியம், ஆனந்தம், பிறருக்கு உதவுதல், கொல்லாமை ஆகியவையே மனிதன் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் என வலியுறுத்தும் இவர் புலால் உண்ணுதல், மது அருந்துதல், காமம், சினம், பேராசை, கர்வம், கபடம் போன்றவற்றை அவசியம் விட்டு விட வேண்டும் என்று தம் பாக்களில் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இந்து-இஸ்லாம் மதங்களின் பொது கொள்கையான ‘ப்ரபத்தி’ அதாவது ‘சரணாகதி’யை கபீர் ஏற்றுக்கொண்டார்.தன் பாக்களில் இவர் எல்லாம் வல்ல இறைவனின் முன் நாம் அனைவரும் தலைகுனிந்து சரணடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கபீரின் அர்ச்சனை மற்றும் வணங்கும் முறை அனைத்தும் மானசீகமானது. அவர், எண்ணங்கள் தூய்மையானால் மனம் தூய்மையடையும் என்கிறார்.

“பாவ பக்தி ஸும் ஹரி ந ஆராதா

ஜனம் மரன் கீ, மிடீ ந சாதா”

அவர் அர்ச்சனை, ஆரத்தி, கோயில் மற்றும் தீர்த்த யாத்திரை செல்வது மற்றும் ஆசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது போன்றவற்றை மறுக்கிறார். ஆண்டவனுக்கு ஏதாவது காணிக்கை செலுத்த விரும்பினால், உண்மை, தூய்மை மற்றும் ஒழுக்கத்தைக் காணிக்கையாகச் செலுத்துங்கள் என்கிறார்.

இந்த உலகில் உள்ள எந்த உறவுகளும் மரணத்திற்குப் பின் வருவதில்லை. ஆனால் ஆண்டவனின் உறவு அப்படி இல்லை எனக் கூறும் கபீர்,”மயானம் வரை வரும் உறவுகள் அந்த மனிதனின் நலமறிவதில்லை. அதற்குப் பின் வரும் உறவுதான் நிலைத்திருக்கிறது” அன்பாக, ஆதரவாக ஆண்டவன் நம்மைத் தம்முடன் சேர்த்துக் கொள்கிறார். எப்படிப் பசு தன் கன்றைக் கண்டதும் அன்புடன் தடவிக் கொடுத்து, தன் பக்கம் இழுத்துக் கொள்கிறதோ அதே போல் ஆண்டவன் ஒருவனே நம் அனைவரின் சொந்தம் என திடமாகக் கூறுகிறார்.

கபீரின் கொள்கைகளின் அடிப்படை, மனித நேயத்தைச் சமுதாயத்தில் நிலை நாட்டுதல். அதற்குத் தேவை வாய்மை. பொய்யைத் தவிர்த்தவன், தவமியற்றிய முனிவருக்குச் சமமாவான் என்கிறார். கபீரின் காலகட்டத்தில் ஜாதி, இனம் மதத்தினை அடிப்படையாகக் கொண்ட மக்கள், ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தம் மதமே உயர்ந்தது என இந்துக்களும், தம் மதமே சிறந்ததென இஸ்லாமியர்களும் போரிட்டு, மக்களிடையே சமுதாயத்தின் நிம்மதியைக் குலைத்தனர். ஆகையால் கபீர் தனக்கென ஒரு வழி வகுத்துக்கொண்டு அதில் முகமதியர்களின் மனித சம உரிமையையும், பாரத நாட்டிற்கு ஆதி சங்கரர் அருளிச்செய்த அத்வைத வாதத்தையும் சேர்த்து அந்தக் கலவையைச் சமுதாயத்திற்கு அர்ப்பணித்த அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கப் பாடுபட்டவர். தன் எளிமையான பாக்களின் மூலம்  இந்து-இஸ்லாம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்.

பக்தி என்ற பெயரில் செய்யப்படும் செயல்களும், ஜபதபங்களும் பொய்யானவையே. எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனை மறந்து, அவனைத் தேடி கோயில்களுக்குச் சென்று பொய்யாகத் தியானம் செய்வதில் பயனில்லை. 

“பாஹன் பூஜை ஹரி மிலை தோ மை பூஜும் பஹார்,

தாதே யா சக்கி பலீ, பீஸ்காய சன்சார்”

உருவ வழிபாட்டை எதிர்க்கும் கபீர், கல்லை இறைவனாக வழிபடுவதாக இருந்தால், அதைவிட பெரிய பாறைகள் நிறைந்த மலையை இறைவனாக வழிபடலாம் என்கிறார். கற்சிலைகளை வழிபடுவதை விடுத்து, தானியங்களை அரைக்கும் திரிகையை வழிபடலாம். ஏனெனில் அது இவ்வுலகில் உணவு செய்ய உதவுகிறது என்கிறார்.

இந்து-இஸ்லாமிய மதத்தில் ‘சடங்குகள்’ என்ற பெயரில் நடக்கும் அநியாயங்களைச் சிறிதும் கவலையின்றி எதிர்த்த, மிகப் பெரும் சீர்திருத்தவாதியான புரட்சிக்கவியாவார் கபீர். “இந்துக்கள் ஏகாதசி விரதம் என்ற பெயரில் பாலையும், பழத்தையும் உண்டு மனக்கட்டுப்பாடின்றி விரதமிருப்பர். இஸ்லாமியரோ பட்டினி(ரோஜா)யைக் கடைபிடிப்பர். ‘அல்லா’என்று கூவி அழைத்து விட்டு மாலையில் கோழிகளைக் கொன்று உண்பர். இங்ஙனம் செய்தல் இவ்விருவருக்கும் எவ்வாறு வீடுபேறு கிட்டும்?

“ராஹ் தோனோ ஹம் தீடா ஹிந்து துரக் ஹடா நஹீஂ 

மானை ஸ்வாத் ஸசன்கோ  மீடா ஹிந்து கர்தே ஏகாதஸி

சாதை, தூத் ஸிங்கரா ஸேதீ 

அன்ன கோ த்யாகை, மன் நஹீ ஹடகைம்

ரோஜா துருக் நமாஸ் குஜாரை, பிஸ்மல் பாங்க் 

சாங்க் முர்கா மாரை புகாரை ஹிந்து துருக் ஏக் ராஹ்ஹை”

கபீர் வாய்மையை நேசித்தவர். வாய்மையைப் பின்பற்றுவது தவம் போன்றது என்று கூறுகிறார். பொய் மற்றும் பொய் பேசுவோரை வெறுத்தார். வாய்மை தூசி படிந்த வைரம் போன்றது. சமயம் வந்தால் அது ஒளி தரும். சத்தியத்தைவிடச் சிறந்த தவம், பொய்யை விட சிறந்த பாவம் ஏதுமில்லை என இவர் உரைக்கின்றார். கபீரின் மதம் மனித நேய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயற்கை அன்புடன் கூடிய பக்தியுடன் விளங்குவது. அதில் கபடத்திற்கோ, போலி வேடங்களுக்கோ இடமில்லை. 

இவ்வாறு எல்லாம் வல்ல இறைவனை, எங்கும் நிறைந்தவனின் புகழைப் பாடுவதே அதன் கொள்கை. மனத்தூய்மை, வாய்மைக்கு அதில் முதலிடம் தரப்பட்டுள்ளது. கபீர் தம் பாக்களை கீர்த்தனை போல் பாடி மகிழ்ந்தார். மனதில் ஈடுபாட்டுடன் அந்த இறைவனைத் தொழுவதையும், அவன் குடிகொண்டுள்ள எல்லா ஜீவராசிகளையும் அன்போடு பராமரிப்பதையும் அவர் தம் கடமையாகக் கருதினார்.

 

முனைவர் : லட்சுமி ஐயர்
இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம்
இராஜஸ்தான்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad