Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அம்மா வருவாயா? – நூல் விமர்சனம்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசித்து வரும் ராஜி ராமச்சந்திரன், பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “அம்மா வருவாயா” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பயண அனுபவம், செய்தி கட்டுரை, வாழ்க்கை அனுபவங்கள் என வெவ்வேறு வகையான 12 கட்டுரைகள், நூறு பக்களுக்குக் குறைவான இப்புத்தகத்தில் நிறைந்திருக்கிறது. கட்டுரையின் அளவும், அமைப்பும் தலைப்பையொட்டி வேறுபடுகின்றன. அதனால் இப்புத்தகத்தை ஒரே அமர்வில் வாசித்தாகிவிட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

பயணங்கள் மீதான ஆர்வம் காரணமாக, காசுமெல் தீவுக்கு நூலாசிரியர் குடும்பத்துடன் சென்று வந்த பயண அனுபவக் கட்டுரை நம்மைக் கவர்ந்தது. இந்தக் காசுமெல் தீவுக்குப் பயணம் புரியும் திட்டமோ, அல்லது ஏதோ ஒரு தீவுக்குச் சொகுசு கப்பலில் செல்லும் திட்டமோ இருந்தால் இந்தக் கட்டுரை வாசிப்பை உங்கள் செக் லிஸ்டில் சேர்த்துவிடுங்கள். கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் பயனளிக்கும். ஆசிரியர் குடும்பத்துடன் சென்ற பயணம் என்றாலும், இந்தக் கட்டுரை மூலம் அதன் வாசகர்களுக்கும் அந்த அனுபவம் கிட்டிவிடுகிறது. அந்தளவுக்கு இந்தக் கட்டுரையில் மிகவும் விரிவாக, மனதின் போக்கை அழகான விவரணையுடன் எழுதியிருக்கிறார்.

இரவு நேர விபத்தை அடுத்து கிடைத்த உதவி, வீட்டில் தனியாக இருக்கும்போது திறந்த கராஜ் கதவு ஆகிய சம்பவங்களை எழுத்தாக்கியது, அவருடைய சுவாரஸ்யமான எழுத்தாளுமையின் சான்றுகள் எனக் கூறலாம். அந்த இரவுகளின் போது, அவர் அடைந்த மனவோட்டங்களை எல்லாம் காலத்திற்கு மறக்காதபடி எழுத்தில் வடித்திருக்கிறார்.

ஆசிரியர் அவருடைய அம்மா குறித்து எழுதிய ‘அம்மாவிற்கு ஓர் அன்பு மடல்’ மற்றும் அப்பா பற்றி எழுதிய ‘அப்பா ஒரு சகாப்தம்’ ஆகிய கட்டுரைகள், ஓர் அன்பு மகளாக, நெகிழ்வடைய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. கூடவே, அக்கட்டுரையில் நம்மை முந்தையத் தலைமுறையின் வாழ்வியலைச் சில சாளரங்கள் வழியே சிறிது காட்டுகிறார்.

ஹாஸ்பிஸ் பற்றிய கட்டுரை, அந்த வசதி குறித்த அறிமுகத்தையும், ஆசிரியரின் அனுபவத்தையும் சொல்கிறது. அது குறித்து மேலும் தகவல் அறிந்துக்கொள்ள உதவும். 

போலவே, ‘குறள் கீதம் பரவட்டும்’ கட்டுரை மூலம் பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கிய திரு. பஞ்சு அருணாசலத்தின் புதல்வியான திருமதி. கீதா அருணாச்சலம் குறித்த பல தகவல்களை அறிந்துக்கொள்ள முடிகிறது. டல்லாஸ் நகரில் வசிக்கும் கீதா அவர்கள், 2014 இல் 1330 திருக்குறள்களையும் மூன்று மணி நேரத்தில் கூறி சாதனை படைத்தவர் என்பது சுவாரசியமான  தகவல்.

இதுதவிர, அட்லாண்டாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் அட்லாண்டா தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருப்பதால், அறிவியல் சம்பந்தமாக எழுதிய ‘மாயக்கண்ணாடி’ என்ற கட்டுரையும் இதில் உள்ளது. அது மட்டுமில்லாமல், ஒரு தமிழ் ஆசிரியராக அவர் இக்கட்டுரைகளின் ஊடே, இடையீட்டு ரொட்டி (Sandwich), கவ்வி (Clip), ஓடுபொறி (Treadmill) என நமக்குப் பல சுவையான தமிழ் வார்த்தைகளைப் பயில்விக்கிறார்.

இக்கட்டுரைகளின் இடையே அது குறித்த சில புகைப்படங்களை இணைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு, காசுமெல் பயணக்கட்டுரையில் சில புகைப்படங்கள் காணக் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது, ஆசிரியர் மேலும் நிறையப் பயணக்கட்டுரைகள், செய்தி கட்டுரைகள், சொந்த கதைகள் என எழுதி, அவற்றை அந்தந்த வகைமையில் வெவ்வேறு புத்தகங்களாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. கூடிய விரைவில், நம் ஆவலைப் பூர்த்திச் செய்வார் என்று நம்புவோம். ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்.

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad