Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவின் முறையின்மையால் வந்த முறிவு – Systematic Breakdown


பொதுநலம் பொதுவாகப் பார்க்காத பாரிய அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி இன்று அலசுவோம். இந்த நூற்றாண்டின் முதல் மூன்று முதலாளித்துவ சிந்தனை பொருளாதார வீழ்ச்சிகளின் அடிப்படைகளில் ஒன்று தான், பொதுநலம் விட்டு இலாப தாரிகள் சிறு நலம் பார்த்து ஏமாந்தமை எனலாம்.

  • Dotcom Crash – 2000-2001
  • Mortgage Backed Security Crash – 2008-2019
  • Corona Crash -2020-2021

நாம் மேலே உள்ள யாவற்றிற்கும் பிரத்தியோகமான பெயர்களைத் தருகிறோம், காரணம் எமது அடிப்படை பொருளாதாரக் கையாளல்கள், மற்றும் அவற்றினால் உருவாக்கப்பட்ட பாதிப்புக்களை உரிமை கொண்டாட மறுக்கிறோம். இது தொழிநுட்பக் கோளாறு, வீட்டுக் கடன் கோளாறு, இன்று கொரோணா தொற்றுநோய்க் கோளாறு என்றென்று முடிந்த சகலதையும் சாட்டுகிறார்கள். 

இதை விடுத்து நாம் அடிப்படை உண்மைகளை எதிர் கொள்வது எமது எதிர்காலத்தை மேலும் வலுவாக்கலாம். நாம் எமது பொருளாதாரம் ஏன் தொடர்ந்து இப்பேர்பட்ட காரணிகளுக்கு உள்ளாகிப் பாரதூரமான பாதிப்புக்கைளை அடைகின்றது என்ற கேள்விக்குப் பதில் கண்டு கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பம் காரணமாக கம்பனிகள் பிரபலம் அடைந்து அவர்கள் மதிப்பு உயர்ந்தமை 1990 களில் மாத்திரம் நடைபெறவில்லை. அமெரிக்க மண்ணில் தொழிநுட்ப உயர்வுக்கு பல உதாரணங்கள் உள்ளன. தொலைத்தொடர்பு சாதனங்கள் உருவாக்குதல், புகையிரதம் வந்த போதும், மின்சாரம் வந்த போதும், அணு உலைகள் வந்த போதும் நடந்த விடயங்கள் என நீளும். பொருளைதார விளைவுகள், பொருளாதார  பாதிப்புக்கள் என்பன முன்னரும் பல தடவை ஏற்பட்டுள்ளன. கேள்வி; இவற்றில் இருந்து திடமான பொருளாதாரச் சூழலை உருவாக்க நாம் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை?

இன்னுமொரு மிகவும் தெரிந்த ஆனால் பல்லாண்டுகளாக பொருட்படுத்திக் கொள்ளாத ஒன்று. வீடு, மனை, கட்டடங்கள் வாங்கி விற்றல். உண்மையில் இந்த ஏற்றத் தாழ்வுகள் பல தடவை குறுங்கால  நயம் தேடுபவர்கள் மற்றும் வங்கிள் ஆகியவற்றின் உந்துதல்களால் இவை நடைபெறுகின்றன. 

வாங்கிய கடனைத் திருப்பக் கட்ட வசதி இல்லாத மக்களுக்கு முதலில் குறுகிய வட்டியில் பெருந் தொகையைக் கடனாகக் கொடுத்து, அதன் பின்னர் மேலும் கடன் ஏற்றி அவர்களை வெளியே தள்ளுதல் பலமுறை நடந்துள்ளது. அதன் பின்னர் அதே வங்கிகள் யார்-யார் தமது கடன்களைக் கட்ட முடியாது தவிக்கிறார்களோ அவர்களை வைத்து ஒரு சூதாட்டம் என்றெல்லாம் தொடர்ந்தும் … தகாத வகையில் செய்துள்ளனர்.  

உதாரணமாக: புளோரிடா மாநிலம் இதற்கு கடந்த நூறு ஆண்டுகளில் பல ஆதாரங்களைக் கொண்டுள்ளது. உண்மையில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களும் வீடு இழந்த பொதுமக்களும் அமெரிக்க நாட்டின் வருமான வரி கட்டுபவர்கள் மாத்திரமே. இவ்வாறு விவரம் தெரிந்து கொள்ளையடிக்கும் வங்கியாளர், பொருளாதாரத்தை வீழ்த்தியமைக்கு ஜெயில் கம்பி கண்ட வரலாறே கிடையாது.

இதே போன்று வைரஸ் கிருமியால் அபாயம் வரும் என்பது அமெரிக்காவிற்குத் தெரியாத ஒன்றல்ல. நமக்கு SARS,MERS,EBOLA அவற்றின் பாரிய விளைவுகள் நன்கு தெரிந்தவையே. இவை யாவும் கொடிய உயிர்க்கொல்லி வைரஸ். நூறு வருடங்களின் முன்னர் அமெரிக்காவின் கான்சஸ் மாநில இராணுவபிரிவிலிருந்து ஸ்பானிய காய்ச்சல் (Spanish flu) எனும் வைரஸ் காரணமாக 1919 களில் ஏறத்தாழ 700,000 மக்கள் உயிர் இழந்தனர். இதே நிலைமையே இன்றும் ஒரு கொரோணா வைரஸ் COVID-19 மூலம் காண்கிறோம். 

இந்த தொற்று நோய்கள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் நாம் அடுத்த சந்தர்ப்பத்திற்கு ஏன் தயாராகவே இல்லை. இது எமது சமூக, அரசியல் இயக்கத்தின் முறையின்மை முறிவ தவிர வேறு ஒன்றுமே இல்லை. இதன் அடிப்படைக் காரணம் இலாபத்திற்ரு முதலிடம் தரும் சிந்தனைகளே.

இன்று N-95 முகமூடிகள், பரிசோதிப்புப் பொட்டலங்கள் (Test Kits), செயற்கை சுவாச உதவி கருவி (Artificial ventilaters) , தொற்றுநோய் தவிர்ப்பு உபகரணங்கள் பொதுமக்கள் தேவைக்குப் போதியளவு சேகரிப்பில் இல்லாத காரணம் – இவற்றைச் சேமித்து வைப்பதில் இலாபம் இல்லை. பொதுமக்கள் சுகாதார நலத்தை இலாபம் தேடும் தனியார் கையில் பல தடவை அமெரிக்கா குத்தகைக்கு விட்டதன் பாதிப்பு தான் இது. பொது நல வைத்திய, சுகாதார ஊழியர்கள் பல வருடங்களாக இதனை அறிந்தமை, தம்மால் இயன்றளவு கேட்டுத் தோற்றமை ஆகியவற்றின் விளைவே இன்று தலை விரித்தாடுகின்றது.

இதை பல அரசியல்வாதிகள், தனியார் தாபனங்கள் என்றும் பொறுப்பில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் தொற்றுநோய் இல்லாத காலத்தில் இது அரசியலோ –  காசு பண இலாபமோ அற்றது. எனவே அதை யாவரும் புறக்கணிப்பர்.

அமெரிக்க அரசாங்கம் தனியார் வர்த்தகம், தனிப்பட்ட இலாபம், அதற்கு எவ்வாறு தாம் பொதுமக்களிடம் இருந்து வருமான வரி பெறுவது, பொதுமக்கள் சார்பில் எதிர்கால கணக்கிலிருந்து இருந்து கடன் எடுத்து, காசு அச்சடித்து உதவுவதில் மும்முரமாகுகிறதே ஒழிய, இவற்றிற்கு வழிவகை செய்யும் பொது மக்கள் சுகாதாரத்தைப் பார்த்துக் கொள்ளவேயில்லை. இதனால் வந்த வீழ்ச்சியே நாம் இன்று எதிர் நோக்கும் பாரிய சமூக சுகாதார பொருளாதார வீழ்ச்சியாகும்.

எமது அரசியல்வாதிகளின் தொடர் கவலையீனம் காரணமாக சில பில்லியன்கள் செலவில் சேகரித்து வைத்திருக்கப் படக்கூடிய மருத்துவ உபகரங்கள், போதிய வைத்திய கட்டில்கள் என்பவற்றுக்கு பதிலாக  குறுகிய கால தனியார் வர்த்தக இலாபம் காரணமாக பல ரில்லியன் டொலர்கள் ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களில் அழிந்தவாறே உள்ளன. இதன் முடிவு இன்னும் பற்பல மாதங்களுக்குத் தொடரும்.

மக்கள் பொதுநலம்,அபிலாசைகளை, கருத்தில் கொள்ளாத தனியார் வர்த்தகம், இலாப நோக்குச் செயற்பாடு, அதையே தனது அடிப்படை பொருளாதாரவியலாகச் சிந்திக்கும் அமெரிக்க அரசு பாரதூரமான தோல்வியைக் கவ்வியுள்ளது எனலாம்.

– ஊரவன்-

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad