Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

முற்பகல் செய்யின்….

Filed in கதை, வார வெளியீடு by on April 14, 2020 0 Comments

“நாராயண….. நாராயண….” சப்ளாக் கட்டையை இடது கையில் அசைத்துக் கொண்டு, இடது தோளிலிருந்து குறுக்குவாட்டாகத் தொங்கிக் கொண்டிருந்த தம்பூராவை வலது கையால் இசைத்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார் நாரதர். நாரதர் என்றவுடன் ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். வேதங்கள் நான்கினையும், உபநிஷத்துகள் நூற்றுப் பதினெட்டையும், வியாகரணங்கள் பலவற்றையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இன்னும் பல நீதி நூற்களையும் கற்றறிந்த தேஜஸ்வியான நாரதர், சிவாஜியின் தேஜஸுக்குச் சற்றும் ஈடு கொடுப்பவராகக் காணப்படவில்லை. 

“வணக்கம் நாரதா.. நலமாக உள்ளாயா?” அன்புடன் வினவினார் தம்பதி சமேதராய் அமர்ந்திருந்த விஷ்ணு. அவரும் ‘திருமால் பெருமை’யில் விஷ்ணுவாக வந்த சிவாஜியின் பர்ஸனாலிட்டிக்கு ஈடு கொடுப்பவராகத் தெரியவில்லை. “என் நலத்திற்கு என்ன குறை பிரபு? தங்கள் கடாட்சம் என் பக்கமிருக்கும்வரை குறை ஒன்றுமில்லை…..” என்றிழுத்த நாரதனைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே, “அது சரி.. நீ இழுக்கும் இழுவையைப் பார்த்தால் ஏதோ சேதி கொண்டு வந்திருப்பதைப் போல் தெரிகிறதே?” என்றார்.

“அப்படிப் பெரிதாக எதுவுமில்லை பிரபு, வரும் வழியில் கைலாயத்தைக் கடந்து வந்தேன். சென்ற எனக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்குக் கூட நேரமில்லாமல் மிகவும் வேலையாக இருந்தார் பரமேஸ்வரன். எனக்கெதுவும் புரியவில்லை, தங்களுக்கு…..?” என்றவனைப் பார்த்து, “புரிகிறது, புரிகிறது நாரதா… உன் கலகத்தின் தொடக்கம் நன்றாகவே புரிகிறது. நானும் கேள்விப்பட்டேன் எமலோகத்திற்குத் திடீரெனப் பல உயிர்கள் வந்த வண்ணமுள்ளனவாம்.. என்ன விவரமென்று தெரியவில்லை..” என்றார். “பிரபு, தங்களுக்குத் தெரியாததா?” என்ற நாரதனை இடைமறித்து, “நாமிருவரும் சென்று அந்த ஈஸ்வரனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறிக்கொண்டே புறப்பட்டார். 

ணக்கம், கைலையம்பதியே… நலமா?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணு உள்ளே நுழைய, நாரதரும் அருகிலேயே நடந்து வந்தார். வணக்கத்திற்குப் பதில் சொல்லாமல், முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, “ஹலோ.. ஸிக்ஸ் ஃபீட் டிஸ்டன்ஸ் மெய்ண்ட்டெய்ன் பண்ணணும்னு தெரியாதா?” என்று கோபமாக வினவினார் சிவபெருமான். இவரும் பார்ப்பதற்கு ‘திருவிளையாடல்’ படத்தில் சிவனாகத் தோன்றிய சிவாஜியின் தெய்வீகத் தோற்றத்திற்குச் சற்றும் ஈடு கொடுப்பவராகத் தெரியவில்லை. “என்ன, என்ன பேசுகிறீர்கள் ஈஸ்வரனே?” என்று விஷ்ணு அதிர்ச்சியைக் காட்ட, தன்னிலை உணர்ந்தவராய் சிவன், “மன்னிக்கவும் திருமாலே, மண்ணுலகத்தோடு கடந்த சில தினங்களில் ஒன்றிவிட்டதால் அவர்களின் மொழி என்னையும் தொற்றிக் கொண்டது. நலமாக உள்ளீரா?” என்றார்.

“நான் நலமாக உள்ளேன்… ஆனால் உங்கள் லோகத்திலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கக் கூடியனவாக உள்ளன. அதைப் பற்றி விசாரிக்கவே வந்தேன்” என்றார் பெருமாள். “எனக்கும் தான் ஐயனே.. மண்ணுலகிலிருந்து என் லோகத்திற்கு நிறைய மக்கள் வருவதைத்தானே கேட்கிறீர்கள்?” என்ற சிவனைப் பார்த்து, ஆம் என்பதுபோல் தலையசைத்தார் விஷ்ணு. “நாங்கள் எந்த உயிரை எடுத்து வருவதாக இருந்தாலும் நாமனைவரும் முன்னமேயே போட்ட கணக்குப்படி, சித்ர குப்தனின் புத்தகத்தை ரெஃபர் செய்து விட்டுத்தான் எடுத்து வருவோம். அதனால், சித்ர குப்தனும், அவனது பாஸ் எமதர்மனும் இதற்குப் பதிலளிப்பர்” என்று தனது செய்ன் ஆஃப் கமாண்ட் வழியாக டெலிகேட் செய்து விட்டு, அவரது அவையில் அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்தார் சிவன். வேறென்ன, எமதர்மனுக்கும் ‘எமனுக்கு எமன்’ சிவாஜியின் கம்பீரத்திற்குச் சற்றும் ஈடுகொடுக்கும் தோற்றமில்லை.

“என்ன நடக்கிறதென்றே புரியவில்லை, பிரபோ… எங்களின் புத்தகத்திலும் கணக்கிலும் இல்லாத ஆயிரணக்கணக்கான உயிர்கள் எமலோகத்திற்கு வந்த வண்ணமுள்ளன. எங்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை” என்ற எமனை, காக்கும் கடவுளும் அழிக்கும் கடவுளும் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தனர். 

“என்ன சொல்கிறாய் எமதேவா? இது உன் பொறுப்பல்லவா? யூ ஆர் அக்கவுண்டபிள், இஸ்ண்ட் இட்?” என்ற சிவனை மீண்டும் அதிர்ச்சியாய் நோக்கினார் விஷ்ணு. “மன்னியுங்கள், மஹாவிஷ்ணு, நான் ஏற்கனவே சொன்னது போல….. ” என இழுக்க, “பிரபு, ஈஸன் இடையிடையே பேசும் மொழி ஆங்கிலம். தாமும் அதைக் கற்றுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறேன்” என்றார் நாரதர். அவரைச் சற்றுக் கோபத்துடன் பார்த்துவிட்டு, சிவனையும், எமனையும் நோக்கினார் மஹாவிஷ்ணு.

எமன் சிவனைப் பார்த்து, “மன்னியுங்கள் மஹாபிரபு. என் பொறுப்பில் நான் தோற்றுவிட்டதை உணர்ந்தே உள்ளேன். தங்களைப் பார்த்து எனது ராஜினாமாக் கடிதத்தை ஒப்படைப்பதாகத் திட்டமிருந்தேன். யெஸ், ஐ வுட் லைக் டு டெண்டர் மை ரெஸிக்னேஷன் டேக்கிங்க் ரெஸ்பான்ஸிபிலிட்டி டு த சிட்டுவேஷன்” என்று முடித்தான். “கம்மான்… எமன்… இஸ் தட் கோயிங்க் டு ஹெல்ப் த சிட்டுவேஷன்?” என்ற சிவனை இடைமறித்து, விஷ்ணு, “நீங்கள் எனக்குப் புரிந்த பாஷையில் பேசப் போகிறீர்களா, இல்லையா?” என்று பொரிந்தார். “மன்னிக்கவும் மஹாபிரபு. இன்றைய நிலையின் காரணமென்ன என்று புரிந்து அதனைச் சரி செய்வது எப்படி என்று ஆராய வேண்டுமென்று சொல்ல நினைத்தேன்” என்றார் சிவன். “ஆம்” என்று விஷ்ணுவும் தலையாட்ட, எமனும், சித்ரகுப்தனும் அவனது கேபினெட் அஃபிஷியல்ஸ்ஸும் தங்களது புத்தகங்களை எடுத்து மேசையில் பரப்பி விளக்குவதற்குத் தயாராயினர்.

“கொரோனா என்ற ஆட்கொல்லி நுண்கிருமி உலகெங்கும் பரவி, பலரையும் தாக்கி அழித்துக் கொண்டிருக்கிறது பிரபு” என்றார் சித்ரகுப்தனின் ஆட்களில் ஒருவர். “முக்காலத்தையும் உணர்ந்து, எதிர்காலத்தைத் துல்லியமாய்க் கணித்து, எவருக்கு எப்போது எவ்விதம் இறப்பு வரமேண்டுமென்று நாம் எழுதி வைத்த புத்தகத்தில் இந்தக் கொரோனா குறிப்பு உள்ளதா?” என்று க்ராஸ் எக்ஸாமின் செய்தான் சித்ர குப்தன். பெரிய எக்ஸெக்யூட்டிவ்ஸ் முன்னர் பொறுப்பாக வேலை செய்வதுபோலக் காட்டிக் கொள்கிறான் என்று நினைத்த நாரதர், உடனடியாகப் புகுந்து, “சித்ர குப்தா, பல வாரங்களாகக் கொரோனாச் சாவு நிகழ்வதாகக் கேள்விப்பட்டேன். இந்தக் கேள்வியை இதுவரை நீ உனது அதிகாரிகளிடம் கேட்டறியவில்லையா?” என்றார். “பிரபு, அது, வந்து…. ஐ ஹேவ் பீன் பிஸி ஹெல்பிங்க் தி அண்டர்ஸ்டாஃப்ட் டீம்” என்று அவருக்குப் புரியாத மொழியில் பதில்கூற, நிலைமையைச் சமாளிக்க எண்ணிய எமன், சித்ரகுப்தனின் அஸிஸ்டெண்ட்டை நோக்கி, ‘கொரோனா கிருமி பரவியதெவ்வாறு?” என்றான்.

“சீனாக்காரர்களின் சதித் திட்டம் என்று உலகம் முழுவதும் பேசிக் கொள்கிறார்கள், பிரபு” என அவர் பதிலுரைக்க   , “அப்படியா?” என்றான் எமன். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாததுபோல் சிவன் எமனைப் பார்த்து, “இது எப்படிப் பரவியது என்பதற்கும், எப்படித் தடுப்பது என்பதற்கும் உடனடியான ஆலோசனை தேவை” என்று பொதுப்படையாகச் சொன்னான். இதுபோன்ற பொதுப்படையான கருத்துக்கள் கண் துடைப்பு, திட்டமிடும் செய்கையன்று என்று நன்கு புரிந்த சி.ஈ.ஓ’வான விஷ்ணு, உடனடியாக நிலைமையைத் தன் கட்டுக்குள் கொணரத் தொடங்கினார்.

“அழித்தல் தொழிலைப் புரியும் உங்களது குழுவிற்கே தெரியாமல் அழிவுகள் தொடங்கியிருக்கின்றன என்றால், வேறு ஏதோ ஒரு பெரிய காரணமிருக்க வேண்டுமென்று தோன்றவில்லையா?” என்ற விஷ்ணுவை நாரதன் நமுட்டுச் சிரிப்புடன் நோக்கினார். தான் தொடங்கிய கலகத்தின் பயன் தற்போது கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு. அவர் அப்படிச் சிரித்துக் கொண்டிருக்கையில், படைத்தல் தொழிலின் தலைவரான பிரம்மா அங்கே தோன்றினார். ‘உருவங்கள் மாறலாம்’ திரைப்படத்தில் தோன்றும் சிவாஜி கணேசனின் தெய்வீகத் தன்மைக்குச் சற்றும் ஈடுகொடுக்கும் தோற்றத்தில் பிரம்மா இல்லையென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பிரம்மாவிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க, அவரும் அனைவரையும் கைகூப்பி வணங்கிவிட்டு, அமரும்படிச் சைகை செய்தார். அவரும் அமர்ந்துகொண்டே, ‘நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டேதான் வந்தேன். நான் மஹாவிஷ்ணுவுடன் இந்த விஷயத்தில் ஒத்துப் போகிறேன். உங்களால் இந்தக் கொடுமையின் காரணத்தை உணர முடியவில்லையா?” என்றார். அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, “நான் உங்களுக்குப்  பூலோகத்தில் நடந்த ஒரு சில காட்சிகளைக் காட்டுகிறேன், நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.” என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கு எந்த நாட்டின் நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்க, “வேறெந்த நாடு, இந்தியாதான்” என்றார் விஷ்ணு. “இன் தட் ஸ்பெஸிஃபிக்கல்லி டமில் நாட்” என்ற எமனை முறைத்துப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார் பிரம்மா. அவர் தனது கையை அங்கிருந்த திறந்த வெளியில் ஒரு சதுரம் போல் வடிவமைத்துக் காட்ட, அங்கு ஒரு சினிமாத் திரைபோல ஒன்று தோன்றியது. அந்தத் திரையில் சினிமாப் படம் போல நிகழ்ச்சிகள் தோன்றத் தொடங்கின.

முதலில் ஒரு பேராசிரியர் ஒலிப் பெருக்கியைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தார். “இந்தப் பார்ப்பனர்களால் மட்டுமே சாதிக் கொடுமை நாட்டில் தலைவிரித்தாடுகிறது. வந்தேறிகளான பார்ப்பனர்களையெல்லாம் முழுவதுமாக அழித்துவிட்டால் நாட்டில் சாதிப் பாகுபாடு என்பது அறவே ஒழிந்துவிடும். சாதிக் கொடுமையினால் எவ்வளவு அவலங்கள், எத்தனை கொடுமைகள் நினைக்க, நினைக்க நெஞ்சம் பதறுகிறது” என்று பொரிந்து தள்ளினார். பேச்சை முடித்து மேடையைவிட்டு வெளியே நடந்து வந்தவரை அவரது காரியதரிசி இடைமறித்து, “அண்ணே, நம்ம ஆச்சி கல்யாணப் பத்திரிக்கை ப்ரூஃப் வந்திருக்குண்ணே…” என்று சொல்லிக் கொண்டே பேராசிரியரின் மகள் திருமண அழைப்பிதழின் பிரதியைக் கையில் கொடுத்தார். வாங்கிப் பிரித்துப் பார்த்த பேராசிரியருக்கு முதலில் கண்ணில் பட்டது அவரது பெயரே. கடுங்கோபம் கொண்டு, அழைப்பிதழைக் காரியதரிசியின் முகத்தில் விட்டெறிந்து விட்டு, “என்னடா, என்ன நினைச்சிட்டு இருக்கீக.. எம்பேரை வெறுமன போட்டா எப்டி… பேருக்குப் பின்னால செட்டியார்னு போட்டாதானே நம்ம பணக்கார சாதிக்காரய்ங்ககிட்ட ஒரு மதிப்பு, பெரும?” எனக் கேட்க, காரியதரிசிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

கைலாயத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியிலிருந்து மீளச் சில நிமிடங்கள் பிடித்தன. “என்ன இது, நூற்றுக்கணக்கான மக்களுக்கு முன்னர், மேடையில் சாதிப் பிரிவினை கூடாது என்று பேசிய, படித்த மனிதர், இவரே தன் பெயருக்குப் பின்னர் சாதி போடப்படவில்லையென்று கோபப்படுகிறாரே? இவர் பேசியதைப் பார்த்தால் மிகவும் கொள்கைப் பிடிப்புள்ளவர் என்று தோன்றியதே?” என்ற விஷ்ணுவிடம், “இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி” என்று சொல்லி பிரம்மா மறுபடி தன் கையை வான் நோக்கி உயர்த்திக் காட்ட, திரையில் இன்னொரு காட்சி துவங்கியது.

“இதுபோன்ற இஸ்லாமியத் திருமணங்கள் எவ்வளவு பகுத்தறிவுடன் நடக்கின்றன. ஹிந்துத் திருமணங்களைப் பாருங்கள். நெருப்பு மூட்டி, புகை ஏற்படுத்தி மணமக்களை அழவைத்து, முழுவதும் மூட நம்பிக்கை. ஐயர் சமஸ்கிருதத்தில் ஏதோ சொல்ல, ஒருவருக்கும் ஒன்றும் புரியாது” என்று பேசிக் கொண்டே சென்றார் தலைவர் ஒருவர். அங்கு குழுமியிருந்த இஸ்லாமியத் தோழர்கள் இவரது பேச்சிற்கு முகம் சுழித்த வண்ணமிருக்க, திருமணத்தை ஆசிர்வதிக்க வந்த மௌல்வி குர்-ஆனிலிருந்து மூன்று வசனங்களை உருது மொழியில் ஓதினார். இவை ஸல் அவர்கள் தானே ஓதியது என்றும், இவை 3:102, 4:1 மற்றும் 33:7071 என்றும் அவர் கூற, சுற்றியிருந்த தமிழர்கள் அனைவருக்கும் உருது மொழி புரியாவிட்டாலும் வணங்கி மரியாதை செலுத்தினர். சற்று முன்னர் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் இருப்பதைக் கடுமையாகச் சாடிய தமிழ்ப்புலி, பகுத்தறி வேந்தன் இவற்றைக் கைதட்டி ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

கைலையில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மறுபடியும் அதிர்ச்சியில் அமர, இந்த முறை நாரதர் பேசினார். “என்ன இது, அனைத்து மதங்களையும் ஒன்றாய்ப் பாவித்து, மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டிய தலைவர் ஒருவர் இப்படி இரட்டை வேடம் போடுகிறாரே? எதற்கு?” என்றவுடன் “மைனாரிட்டி வோட்… வோட் பேங்க் பாலிட்டிக்ஸ்” என்று ஆங்கிலத்தில் பதிலளித்து, சிவனைப் பார்த்துச் சிரித்தார் பிரம்மா. இவருக்கும் ஆங்கிலம் தெரியுமா என்று சிவனும் அதிர்ச்சியுற்றான்.

“மேலும் பாருங்கள்” என்று அடுத்த காட்சியை ஓட்ட, அதில் ஒரு ஆன்மிகவாதி தனது ஆஸ்ரமத்தில் அமர்ந்திருக்கும் காட்சி தென்பட்டது. நீளமான வெண்ணிற தாடி, தலையில் முண்டாசு, தூய்மையான கருமை நிற விலையுயர்ந்த ஆடை அணிகள் எனப் பார்ப்பதற்குப் பிரகாசமாகத் தோன்றிய அவர், அழகான ஆங்கிலத்தில் தன்னைச் சுற்றியிருந்த சீடர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். பலவிதமாக, இந்த உலகம் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கிக் கொண்டிருந்தார். தத்துவார்த்தங்களைப் புட்டுப் புட்டு வைத்துக் கொண்டிருந்தார். ஆங்கிலம் என்பதால், எமனும், சித்ர குப்தனும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல, அதன் சாராம்சம் இது: “இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது, அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் ஆன்மா என்பது ஒன்றே. சிங்கம், புலி, கரடி, யானையிலிருந்து தொடங்கி, புழு, பூச்சி வரை அனைத்துமே ஒரே ஆன்மாவினாலானது. இவை அனைத்தையும் அன்புடன் பேண வேண்டும், ஒன்றி வாழ வேண்டுமென்பது நமது கடமை”. இதனைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுற்று, நல்ல தத்துவ விளக்கங்கள் என்று புகழ்ந்து கொண்டிருக்கையில், சித்ர குப்தன் சிவனை நோக்கி, தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்தான். “மன்னிக்க வேண்டும் மஹாபிரபு. தங்களின் உருவச் சிலையைப் பிரம்மாண்டமாக அமைப்பதற்காக, பல நூறு யானைகள் வந்து செல்லும் ஒரு காட்டையே தரை மட்டமாக்கியிருக்கிறார் இந்தப் பெரியவர்” என்று சொல்லி முடிக்க, அனைவரும் மீண்டும் அதிர்ச்சியடைந்தவராயினர்.

விஷ்ணு சற்றுப் பொறுமையிழந்தவராக, “சுவாமி, நீர் காட்டிய காட்சிகள் போதும். இதில் வரும் அனைவரும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவராகவும், சொல்லொன்றும் செயலொன்றுமாக வாழ்பவராகவும் உள்ளனர். இதைக் காட்டுவதன் மூலம் தாங்கள் எங்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? இவற்றிற்கும் இந்த நுண்கிருமிக்கும் என்ன தொடர்பு என்று விரைவில் விளக்குங்களேன்” எனக் கேட்டார். விஷ்ணுவின் மன நிலையை நன்கு புரிந்து கொண்ட பிரம்மா, தான் மேலும் காட்டுவதாக இருந்த மணல் கொள்ளை, பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை, திருட்டு எனப் பஞ்சமா பாதகங்களையும் கொண்ட காட்சிகளைக் காட்டுவதில்லை எனத் தீர்மானம் செய்தார்.

“அழகான உலகம் ஒன்று படைக்கப்பட்டது. கோடிக் கணக்கான உயிரினங்கள் அந்த உலகில் தோன்றினர். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த பரிபூணமான ஆனந்தமூட்டும் பல விஷயங்கள் உருவாக்கப்பட்டன. கோடிக் கணக்கான இன்பங்கள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவரும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவேண்டிய அனைத்தும் தரப்பட்டன. அவரவர்களுக்கு வேண்டியவை தரப்பட்டும், அடுத்தவர்களின் பொருட்களிலேயே பெரும்பாலானோர் ஆசை வைக்கத் தொடங்கினர். இந்த ஆசை சிறிது சிறிதாக வளர்ந்து, எந்த விதக் கொடுமைகளையும் புரிவதற்குத் தயக்கமில்லாமல் செய்துவிட்டது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் செய்யப்பட்ட கொடுஞ்செயலின் விளைவாக, அதன் பிரதிபலன் இந்த நுண்கிருமிமூலம் வந்திருப்பதாக நாம் உணர்கிறோம்.” என்றார் பிரம்மா. அவர் கூறுவதில் ஏற்றுக் கொள்ளும்படியான விஷயமிருப்பதாக அனைவரும் நினைக்க, அவரையே பார்த்துக் கொண்டு, அவர் மேலும் என்ன சொல்வார் என்பதைக் கேட்பதற்காகத் தயாராக இருந்தனர்.

“நன்றாக யோசித்துப் பாருங்கள்; கடந்த சில தினங்களில் குற்றங்கள் பெருமளவு குறைந்திருப்பது தெரியவில்லை?” எனக் கேட்க, சித்ர குப்தன் தன் பெரிய புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, “கொலையினாலோ, பாலியல் கொடுமைகளாலோ இங்கே வந்து சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது இறைவா” என்றான். “ம்ம்ம்.. உலகம் முழுவதும் வீட்டிற்குள்ளே அடைந்து கிடப்பதால் பல நன்மைகள்” என்ற பிரம்மாவைப் பார்த்து விஷ்ணு, “இது விபரீதமான நினைப்பு அல்லவா? குற்றங்கள் குறைய அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென்பது முறையான எண்ணமா?” என்றார். “இல்லைதான், ஆனால் இந்த சில தினங்களில் நடந்த பல மாற்றங்களை மனிதர்கள் குறிப்பெடுத்துக் கொள்வர் என்பதே எதிர்பார்ப்பு. அந்தக் குறிப்பிலிருந்து பல விஷயங்களைத் திருத்திக் கொள்வர் என்பதும் எதிர்பார்ப்பே. அங்ஙனம் திருத்திக் கொண்டால் இதுபோன்ற பேரழிவிலிருந்து மனித இனம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பதே இதன் நீதி போதனை” என்று முடித்தார் பிரம்மா.

தான் தொடங்கிய இந்தச் சந்திப்பு, மக்களுக்கு நல்ல அறிவுரையைத் தந்த மகிழ்ச்சியில், நாரதர் புறப்படலானார் தனது வழக்கமான மந்திரத்தை ஜபித்துக் கொண்டே…

“நாராயண……. நாராயண……”

  • வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad