\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…

வெள்ளைத் தொப்பியணிந்து வியர்வையால் ஆடையெல்லாம் நிறம்மாறி அதிகரித்த வெயிலில் துவிச்சக்கரவண்டியை தனது சக்திக்கும்மீறி செலுத்தினான் ராசன்.

என்ன இது சைக்கிள் இண்டைக்கு ஓடுதில்ல பதினொரு மணிக்குள்ள மில்வோட்டுக்குப் போகலெண்ணா பாலும் திரண்டுறும்” 

என நினைத்துக்கொண்டு சைக்கிளின் வேகத்தை அதிகரித்தான். ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கெல்லாம் பெருமாவெளிக்கு வந்து குமரகுருவின் தேநீர்க் கடையில் தேநீரும் வடையும் உண்ணுவது ராசனின் வழக்கமான செயலாகும்

ஆனால் அன்றைய தினம் உடலின் களைப்பு உற்சாகத்தைக் குறைக்க நேரத்திற்கு அவ்விடம் செல்ல முடியவில்லை. பதினொரு மணியளவில் அவ்விடம் வந்தான் குமரகுரு; 

என்ன ராசன் இண்டைக்கு நேரம் பொயித்து போல”

அதுகளக் கதையாத, இறங்க நேரம் இல்ல தண்ணீ கொஞ்சம்தா

 தண்ணீரைக் குடித்துவிட்டு குமரகுருவின் கண்களில் இருந்து மின்னலாய் மறைந்தான்.

உச்சி வெயில் மண்டையைப் புளக்கிற நேரத்தில மில்வோட்டுக்கு வந்திருக்கிறான். இண்டைக்கு பாலுக்கு வெண்ணெயும் கிடையாதுபோல” 

என பெருமூச்சு விட்டபடியே சைக்கிளின் ஸ்ராண்டை நிறுத்தி சைக்கிளுக்கு ஆறுதல் அளித்தான்

அண்ணன் இண்டைக்கு லேற்றாகித்தாரு

ஓம் சேர் பாலும்கூட, சைக்கிளும் இண்டைக்கு ஓடமாட்டன் எண்டுத்து அதுக்கும் கொஞ்சம் மருந்து மாத்திர குடுக்கனும்

என கிண்டலாகப் பேசினான்

கெரியலில இருக்கிற வூளியை இறக்க கெல்ப் பண்ணுங்க தம்பி

 என முதலாளி கூறினான். அந்த இளைஞன் ராசனுக்கு கொள்கலன்களை இறக்க உதவி செய்தான். ராசன் கொண்டு வந்த பாலும் அறவிடப்பட்டு கிணறுபோன்ற பால் அடங்கிய பெரிய பாத்திரத்தினுள் ஊற்றப்பட்டது. தண்ணீர் கலக்காத சுத்தமான பால்  என்பதால் வழமைபோல இன்றும் வெண்ணெய் இடப்பட்டு;

இந்தாங்க அண்ணன் உங்கட கணக்கு” 

என்றான் முதலாளி. அதைப் பெற்றுக் கொண்டதும் நினைத்ததைப்போன்று அமையவில்லையென்பதால்  மகிழ்ச்சியோடு வீடு நோக்கிப் புறப்பட்டான் ராசன்.

மணல் ஒழுங்கையில் சைக்கிளை உருட்டிக்கொண்டு வரும்போது யோகேசும் எதிரே வந்தாள்

இந்த வெயிலில எங்கபோய் வாறா?” 

மீன் பொரிக்கிறதுக்கு தேங்காண்ண இல்ல வாங்கித்து வாறன்

அதுகளெயெல்லாம் நேரத்தோட வாங்கி வைப்பம் எண்டு எண்ணுறல்ல ஒவ்வொரு சாமானுக்கும் போறான்

என்ன இண்டைக்கு நேரம் பொயித்து”  

தண்ணி கொஞ்சம் தா குடிப்பம், இந்த வெயிலுக்கும் உடம்பு ஏலாம இருக்கு

கலனெயெல்லாம் கழுவித்து குளிச்சித்து வாங்க சோறு போட்டு வைக்கிறன்” 

சோத்தப்போடு வாறன் உடம்பெல்லாம் படபடவெண்டு நடுக்குது” 

வியர்வையின் உடம்பிற்கு கிணற்றுநீர் மிகிவும் இதமாக இருந்தது

இப்பதான் உயிரே வந்த மாதி இருக்கி, எங்க புள்ளயையும், தம்பியையும் காணல்ல” 

கலா கொம்பியூட்டர் கோசிக்கு, கரன் வகுப்புக்குப் பொயித்தான். இனி ரெண்டுபோரும் வாற நேரம்தான்

ரெண்டுபேரும் வரட்டும் எல்லாரும் சேந்து சாப்பிடுவம்” 

சொல்லி முடித்தவுடனே இருவரும் வந்தார்கள்.

அனைவருமாக உணவை உண்டுவிட்டு; 

மகன் அந்த பால் கணக்குக் கொப்பியை எடுத்துவா

கரன் கொப்பியோடு வந்தான். கலாவும் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்

கமலன் 15 லீற்றர், சீனிப்போடி 10 லீற்றர், கந்தன் 10 லீற்றர், வள்ளி 5 லீற்றர் பதிஞ்சித்தயா மகன்

ஓமப்பாஅப்பா நாளைக்கு ரியூசன் காசி குடுக்கணும்… அப்பா

 “நாளைக்கு திகதி 30 பால் செக்க மாத்தி வந்ததும் கட்டடிரலாம்” 

“ஏன் மகள் ஓயல் முடிவு எப்ப வரும்என கலாவிடம் விசாரித்தான்

வாற மாதம் வந்துரும் அப்பா” 

உரையாடியபடியே சாப்பிட்ட களைப்பு உறக்கத்தில் ஆழ்த்த கண்களை மூடினான் ராசன்

மறுநாள் வழமைபோல பாலை பால் சேகரிப்பு நிலையத்தில் வழங்கிவிட்டு காசோலையுடன் வந்தான். யோகேசிடம் காசோலையை வழங்கி தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி வருமாறு கூறினார்

கரன் வெளிக்கிடு வாழைச்சேனைக்குப் போய் செக்கையும் வேங்கில மாத்தித்து சாமான்கள் வாங்கித்து வருவம்” 

என்றாள் கோகேஸ். வெளியில் பஸ்சில் செல்வதென்றால் கரனுக்கு ஒரே இன்பம். கூடையையும் தூக்கிக்கொண்டு வீதிக்குச் சென்று விட்டான். யோகேஸ் கரனை அழைத்துக்கொண்டு வாழைச்சேனைக்குப் புறப்பட்டாள். ராசனும் கோடரியை எடுத்துக்கொண்டு விறகுகளைப் பிளந்தான்

தேத்தண்ணி ஒண்டு போடு மகள்… நல்லா இஞ்சி போட்டு…” 

கலாவும் கேத்தலைக் கழுவி தேநீர் வைத்தாள். ராசன் தேநீரைக் குடித்துவிட்டு மீண்டும் வேலையில் ஈடுபட்டான். கலாவும் வீட்டு வேலைகளில் ஈடுபட்டான். நேரமும் கடந்தது

அப்பா இன்னும் அம்மாவங்களக் காணல்ல” 

செக்கலாகப்போகுது இன்னும் என்ன செய்துகள் அந்த சேட்டத் தாடா மகள்… நான் போய் பஸ்ராண்டில பாத்துத்து வாறன்” 

இடை நடுவில் ராசன் இருவரையும் கண்டு சைக்கிளில் அழைத்து வந்தான்.

நேரம் செல்ல நானும் அப்பாவும் பயந்தித்தம் அம்மா” 

எல்லா இடமும் சரியான சனங்கள் எண்டால் என்ன செய்ர

பட்டிக்காரனுக்கெல்லாம் குடுக்க 50,000 ஆயிரம் வேணும்” 

ஓம் இந்தாங்க சித்திரைக்கு உடுப்பெல்லாம் சேர்த்து பத்தாயிரத்துக்கு மேல பொயித்து” 

வீட்டுச் செலவப் பாக்கத்தானே வேணும், நான் நாளைக்கு வயலுக்க போனால் ரெண்டு கிழமைக்குப் புறகுதான் வருவன் வெள்ளாமக் காவல் பால வெள்ளாமச் சேன மில்வோட்டில ஊத்திப்போட்டு அப்பிடியே வயலுக்குள்ள திரும்பிருவன். கவனம் நீங்க காசும் பாத்து செலவழிச்சித்து இருங்க

ராசன்.. ராசன்..” 

ஆரோ கடப்பில கூப்பிடுறாங்க ஆர் எண்டு பாரு மகன்” 

அப்பா… அது வெள்ளையன் மாமா…” 

எனக் கூச்சலிட்டான் கரன்

அப்பா நிக்கிராரா? மகன்”  

ஓம் மாமா வாங்க

என்ன சில்லறக் கட ஒண்டு வச்சியிருக்கிறயள் போல” 

செக் மாத்தி வந்தா அப்பிடித்தான்மகன் இதெல்லாம் எடுத்துவை

என்ன வயல் பாடெல்லாம் எப்பிடிப் போகுது” 

நாளைக்கிப் போனா காவலுக்கு நிண்டுத்து வெட்டக்கிட்டவாத்தான் வரனும்” 

புறகு உண்ட பாடெல்லாம் எப்பிடி” 

நம்மட மகன் மனோ கட்டாரில இருந்து நேற்றுத்தான் வந்தவன் சொக்கிலேற் கொஞ்சம் குடுத்துத்து போகலாமெண்டு வந்தனான்

இந்தாங்க மாமா தேத்தண்ணி” 

தேநீர் கோப்பையை நீட்டினாள் கலா

இப்பதான் மகள் குடிச்சித்து வந்தனான்” 

பரவால்ல குடி அண்ணன்” 

என யோகேஸ் கூறினாள்.

புள்ள என்ன செய்ராள்” 

ஓயல் எழுதித்து முடிவு வரல்ல, பாத்தித்து இருக்கிறாள் அண்ணன்” 

இப்ப என்ன புள்ளயளுக்கு படிப்புக்கூட அந்த நேரத்தப் போலயா?” 

என்னமோ மச்சான் எண்ட சக்திக்கு ஏலுமானவரை படிப்பிக்கிறன்…  என்னாலயும் ஏலாது ரெண்டு, மூண்டு வருசத்திக்குப்புறகு பாலுக்கு ஓடுறத நிப்பாட்டித்து வயலுக்குள்ள நிலையான குடில் ஒண்டப்போட்டுத்து சேனையும் செய்வம் எண்டு பாக்கிறன்” 

உங்கட தோட்டத்துக் காணியை ஏன் வித்தனிங்கவிக்காம இருந்திருந்தா இப்ப நல்ல தென்னம் புள்ளயளும், மரக்கறித் தோட்டமும் செய்ஞ்சிருக்கலாம்” 

அதுக்கு என்ன மச்சான் செய்ர… இராணுவப் பிரச்சினைக்குள்ள நான் கொஞ்ச அடியா அந்த வளவுக்குள்ள வேண்டியிருக்கிறன்… இராணுவப் பிரச்சினையால இப்ப நான் இருக்கிற இடம் நாலாவது இடம்ராசனுக்கு அங்கயும் இங்கயும் குந்துறான் வேல எண்டு சொல்லி சொந்தக்காரன் சீனியனே சிரிக்கிறான்அவனுக்கு தெரியுமா நான் பட்ட கஸ்டம்  இதுதான் கடைசி இடம் எண்டு நினச்சிக்கிறன் பாப்பம்

இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது வீதியில் மோட்டார் சைக்கிளின் ஒலி கேட்டது

கதைச்சித்து இருந்ததில் நேரம் போனதே தெரியல்ல தம்பிதான் கோண் அடிக்கிறான், நான் வாறன்” 

மரத்தில் சாற்றி வைத்திருந்த சைக்கிளை திருப்பினான் வெள்ளையன். அதற்கிடையில் படலை திறந்தது வெள்ளையனின் மகன் மனோ வந்தான்ராசனும், யோகேசும் அவனிடம் நலம் விசாரித்தனர்

எங்க அக்காவயும் தம்பியயும் காணல்ல” 

சத்தம் கேட்டதும் கரன் வேகமாய் வந்தான்

எப்ப அத்தான் வந்தனீ, எனக்கு என்ன வாங்கி வந்தனீ” 

என மனோவை தொடுத்த வினாக்களுக்கு பதிலளிக்க விடாதபடி கதைக்கத் தொடங்கினான் கரன்

பெட்டி போட்டிருக்கிறன், வந்ததும் சைக்கிள் ஒண்டு கிடைக்கும் உனக்கு” 

ரீயூசனுக்கு சைக்கிளில போவன்” 

கலாவும் வீட்டை விட்டு வெளியே வந்தாள். கலாவைப் பார்த்து மனோ புன்னகை செய்தான். அவளும் அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல புன்னகை செய்தாள்

0/L றிசல்ஸ் வாறமாதம் வருது போல” 

எதுவும் பேசாமல் தலையசைத்தாள். மனோ அனைவரிடமும் இருந்து விடைபெற்றுச் சென்றான்.

மறுநாள் ராசனும் வயலுக்குப் புறப்பட்டான். மனோ அடிக்கடி கரனை வெளியில் அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தான். சில நாட்களின் பின்பு யோகேசிக்கு மனோ கரனைப் பார்க்க வருவதாகத் தெரியவில்லை கலாவைச் சந்திப்பதற்கு வந்தது தெரிய வந்தது. அன்றிலிருந்து மனோவை வீட்டிற்கு வரவேண்டாம் எனக் கூறினாள்

கலா கொம்பியூட்டர் கிளாஸிலிருந்து வரும்வேளையில் கலாவை கிண்டல் செய்வதாக கலா யோகேசிடம் கூறினாள். மனோவோடு மோதலில் ஈடுபட்டவள் பின்னர் அவனைக் காதலிக்கத் தொடங்கினாள்

மனோவின் குடும்பத்தினர் மனோவிற்கு முழு ஒத்துளைப்பையும் வழங்கினர். யோகேசிடம் இது பற்றிப் பேச வந்தான் வெள்ளையன்

இஞ்ச பாருங்க அண்ணன் அவருக்கு இது தெரிஞ்சா என்ன வெட்டிப்போட்டுருவாரு, சின்ன வயதில அவளுக்கு கலியாணத்தக் கட்டிவச்சி என்ன செய்ர, அவரு அவள படிக்க வைக்கனும் எண்டுத்து இருக்கிறாரு” 

நீ என்ன ரெண்டு பேரும் விரும்பக்குள்ள மனோ கலாவ கட்டித்தராட்டி தூக்குப் போட்டுருவன் எண்டுறான், நான் நாளைக்கு வயலுக்குள்ள போய் ராசனப்பாத்து இதப்பத்திக் கதைக்கிறன்

என்ன வெள்ளையன் வயலுக்கு வாறான், ஊரில என்னவும் பிரச்சினையோ?” 

ராசன் ஊருக்கு வாறல்ல போல” 

கட்டி வந்த அரிசி சாமானும் முடியுது, முடியெல்லாம் வளந்தித்து நாளைக்கு வெளிக்கிடுவம் எண்டுதான்” 

நான் உனக்கிட்ட ஒண்டு கேக்கத்தான் வந்தனான், நம்மட மகனும் உன்ர புள்ளயும் விரும்புதுகளாம் அதுதான் என்ன மாதிரிச் செய்வம் எண்டு கேக்க வந்தனான்” 

என்ன மச்சான் உண்ட கத ஓயல் முடிவும் அவளுக்கு வரல்ல, படிக்கிற புள்ளைக்கு நாம இப்பிடிச் செய்துவச்சா அதிர எதிர்காலம் என்னாகிற” 

அதுகள் ரெண்டும் ஓடுறத்துக்கிடயில நாம கலியாணத்த செஞ்சி வச்சா நல்லம்” 

நான் அப்பிடி ஓடுற அளவுக்கு புள்ள வளக்கல்ல” 

எனக்கூறி சினம்கொண்ட சிங்கம்போல வீடு நோக்கித் திரும்பினான். வீட்டிற்கு வந்ததும் கலாவை அழைத்து புத்திமதி கூறினான். அவள் அதைக் கேட்பதாக இல்லை

மூத்த புள்ள, முதற் கண்ட புள்ள எண்டு எங்க போனாலும் இதுகளுட எண்ணமாவே இருந்தன், அதுக்கு கணவனாரு தேவப்பட்டுத்து” 

அழுது புலம்பினான் ராசன்.

சித்திரை மாதம் என்பதைக்கூட கவனிக்காமல் திருமண ஏற்பாடுகள்  நடந்தேறின. இரண்டு பொம்மைகள்போல யோகேசும், ராசனும் திருமணத்தில் ஈடுபட்டனர். திருமணமும் முடிந்தது. புதுத் தம்பதிகளுக்கு வீட்டைக் கொடுத்துவிட்டு அருகில் ஒரு குடிசையில் ராசனும், யோகேசும், கரனும் இருந்தனர்

திருமணம் முடித்து பத்து நாட்கள் கழிந்தன. கலா கண்களைக் கசக்கிக்கொண்டு ராசனின் குடிசைக்கு வந்தாள்

பத்து நாளும் பக்கத்தில இருந்தும் இல்லாத உணர்வு, இப்ப கண்களக் கசக்கித்து வந்ததும் பாசம் ராசனின் கண்களை மறைத்தது 

என்ன மகள் நடந்தது” 

அப்பா நீங்க இங்க இருக்க வேணாமாம் நீங்க இருந்தா அவரு இங்க வரமாட்டாராம் எண்டு பொயித்தாரு” 

அப்படியா அவருக்கிட்டச் சொல்லு மகள் நாங்க நாளைக்குப் போறம் எண்டு” 

எங்கப்பா போவயள்” 

அத நான் பாப்பன்

யோகேசிக்கு கண்கள் இரண்டும் குளமாக மாறியது

இப்பிடி திடீரெண்டு சொல்லித்தயள் நாம இப்ப எங்க போற” 

இப்பிடி நடக்கும் எண்டு எனக்கு நல்லாத் தெரியும் அதுதான் நம்மட சுதாட வளவக் கேட்டு வச்சிருக்கிறன், அவன் மூண்டு லெட்சம் தந்துத்து எடுங்க அத்தான் எண்டவன்” 

அதுக்கு காசிக்கு எங்க போற”  

நான் சொல்லுவன், நீ யோசிப்பா” 

நீங்க சொல்லி நான் எப்பண்டான தட்டிக்களிச்சிக்கிரனா” 

“உன்ர தாலிய விப்பம்” 

அதுதானே எனக்கு இந்த யோசன வராமப்பொயித்தே” 

மறுநாள் தாலி அடகுக் கடையில் நிரந்தரமாகச் சென்றது. புதிய காணி வாங்கப்பட்டு இரவோடு இரவாக பொருட்களை யெல்லாம் ஏற்றிக்கொண்டு அங்கு வந்து சேந்தனர். வந்த தருணத்திலே குடிசை போடத்தொடங்கினான் ராசன்

நான் கட்டுற கடைசிக் குடிசையும் கடைசி இடமும் இதாத்தான் மகனே இருக்கனும் நீயும் எங்களத் துரத்தி விடமாட்டாதானே?” 

அவனுடைய கேள்வி கரனுக்கு அழுகையை ஏற்படுத்தியது. மூவரும் அழுது புலம்பினர்.

 

சிவராசா ஓசாநிதி

தற்காலிக உதவி விரிவுரையாளர்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

 

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad