Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நாவிதம்

ண்டி… அதான் லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமா கொறய ஆரம்பிச்சு, ஒண்ணொண்ணா தொறக்க ஆரம்பிச்சுட்டாளே… போய்ட்டு வரேனேடி…. ” சொன்ன கணேஷை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் லக்‌ஷ்மி.

“என்ன நெனச்சுண்டு இருக்கேள்? ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா?” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா? நேக்கு வந்தாப் பரவாயில்லயா?” என்றான். “என்ன,அசடாட்டமா பேத்திண்டு, யாருக்கும் வரப்படாதுதான்.. அதுக்குத்தான் எங்கயும் போக வேண்டாம்னு சொல்றது…” என்றாள்.

“சரிடி,ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு… நன்னா வளந்து தொங்குறது.. வீடியோ கால்ல பாக்க சகிக்கல.. போய் வெட்டிண்டு வந்துடறேண்டி.. மாஸ்க் எல்லாம் போட்டுண்டு… ” சொல்லி முடிப்பதற்குள், கையை உயர்த்தி,முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு ஆர்டர் போடுவதைத் தொடர்ந்தாள் லக்‌ஷ்மி.

“என்ன நெனச்சுண்டு இருக்கேள் மனசுல? இப்ப என்ன ஐயாவுக்கு பதினாறு வயசுன்னு நெனப்போ? எவ பாக்கப் போறா வீடியோல?” என்று பொறிந்து தள்ளினாள். இவளின் கோபத்திற்குக் காரணம் தான் வெளியில் போக வேண்டுமென்று நினைப்பதற்கா, இல்லை ஆஃபிஸில் யாரேனும் நம்மைப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகத்தாலா? புரியாமல் மருகினான் கணேஷ். இதற்கு மேலும் என்ன சொல்வது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவளே மேலும் தொடர்ந்தாள்.

“ஏன்னா.. நான் தான் சொன்னேனே, அமேசான்ல ஆர்டர் பண்ணி ஒரு க்ளிப்பர் வாங்கி வச்சிருக்கேன்னா.. ஆத்துலயே பண்ணிக்கலாம்… நீங்களே பண்ணிக்கலாம், இல்லைனா சொல்லுங்க நான் வேணா பண்ணி விடறேன்..” படபடவென்று பேசி முடித்தாள்.

“அதெல்லாம் சரியா வராதுடி… காமா சோமான்னு ஆயிடப் போறது.. அப்புறம் வீடியோ கால்ல தலை காட்ட முடியாது” சொல்லிவிட்டு அவசரமாக நாக்கைக் கடித்துக் கொண்டான். வீடியோ கால் பற்றிச் சொல்லி அவளின் கோபத்தை இன்னும் அதிகரித்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. “ரொம்பத்தான்…” என்றபடியே உதடுகளைப் பிதுக்கி,ஒரு வெட்டு வெட்டிவிட்டு அடுக்களைக்குச் சென்றாள் லக்‌ஷ்மி.

“டீ..இவளே… நாளைக்கு ஞாயித்துக் கெழம… காத்தால மாஸ்க்,க்ளவுஸ் எல்லாம் போட்டுண்டு போய் வெட்டிண்டு வந்துடறேண்டீ, ப்ளீஸ்” என்றவனை, நெற்றிக்கண் கொண்டு எரித்த லக்‌ஷ்மி,”நத்திங்க் டூயிங்க்… நானே வெட்டி விடறேன்… சொல்லுங்கோ.. எத்தன பொம்மனாட்டிகள் பண்ணுவான்னு நெனச்சுண்டு இருக்கேள்?… தவிர,அதுலயும் ஒரு ரொமான்ஸ் இருக்கே, புரியலயா?” என்று சொல்லிவிட்டு,உருண்டையான தனது க்ளாமரஸ் கண்கள் இரண்டையும் சற்று ஒரே பக்கமாய் நகர்த்தி,உதட்டின் ஓரமாய் நாக்கை வைத்துச் சற்றுக் கிறங்கலாய்ப் பார்க்க,சர்வ லோகமும்அவன் கண்களிலிருந்து மறைந்தன… இதற்கப்புறமும் வேண்டாமென்று சொல்லுமளவுக்கு அவன் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனல்ல…

ஞாயித்துக் கெழம… காலங்காத்தால….

“ஏன்னா, நீங்கதான் எலக்ட்ரிக் ஷேவர் யூஸ் பண்றேளே, அது மாதிரித்தானே இதுவும்…” அமேசானிலிருந்து வந்த பார்சலை ஓப்பன் செய்து கொண்டே கேட்டாள் லக்‌ஷ்மி. “ஷேவ் மூஞ்சில பண்ணிக்கிறது, பின்னால மண்டைல எல்லாம் எப்டிப் பண்றதாம்?” வீட்டிலேயே செய்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்படுத்திய வெறுப்பில் பதில் வந்தது. “உங்க ஃப்ரெண்ட் சூர்யா சொல்வாரே, அவர் பல வருஷமாவே செல்ஃப் ஹேர்கட் தானாமே?” தெரியாததுபோலக் கேட்டு,அதுதான் உறுதியான உண்மை என்று பேசும் அவளின் ஸ்டைல் அறிந்தவன்தான் அவனும். “ஆமாண்டி,அவனுக்கு இருக்குறதே ரெண்டு முடி,பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன?” என்று அலட்சியமாய்ப் பதில் சொன்னான். “ஆமாம்,இவர் மட்டுந்தான் பெரிய மன்மதன்.. அவரென்ன பத்து வருஷமா முடியில்லாம இருக்காரா, ஏதோ இப்பத்தான்.. வயசாயிடுத்தோல்யோ… உங்களவிட எட்டு வருஷம் பெரியவர்….” சொல்லிக் கொண்டே பாக்கெட்டைப் பிரித்தாள். அதிலிருக்கும் ஒவ்வொரு பார்ட்ஸ்ஸாய் எடுத்துப் பார்க்க,அவளுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. கிட்டத்தட்ட அவன் உபயோகிக்கும் எலக்ட்ரிக் ஷேவரைப் போலவே இருப்பதால், மேனுவல் படிக்காமலேயே அவையெல்லாம் என்ன என்பது அவனுக்குப் புரிந்தது. ஒன்றும் பேசாமல் வாட்ஸப் மெஸேஜ்களைத் தொடர்ந்து மேய்ந்து கொண்டிருந்தான் கணேஷ்.

“ஏன்னா, 12 எம்.எம்னாக்கா எவ்வளவு இஞ்ச்?”… என்றவளிடம் வேண்டா வெறுப்பாக,”ஏண்டி… ரெண்டரை செண்டிமீட்டர் ஒரு இஞ்ச்” என மூன்றாம் வகுப்பு மெட்ரிக் கன்வெர்ஷன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான். “இல்லன்னா, இதுல 12 எம்.எம்னு போட்டிருக்கேனு கேட்டேன்… 12, 9, 6 3 எல்லாம் இருக்குன்னா.. எதை யூஸ் பண்ணணும்?” என்றாள். “முன்னப் பின்ன செத்திருந்தாதானேடி சுடுகாடு தெரியும்” என்று சமயத்திற்குப் பொருத்தமான பழமொழியை அள்ளி வீசிவிட்டு,”நேக்குத் தெரிஞ்சு இதுல போட்டுருக்குற மெஷர்மெண்டுக்கு முடியை வச்சு,மீதமுள்ளதை வெட்டும்னு நெனக்கிறேன்” என்றான். “பாத்தா அப்டித் தெரியலேயே..” என்றவளிடம்,”சரி விடு, டெஸ்ட் பண்ணிப் பாத்துடலாம் ஒரு சின்ன ஏரியாவுல” என்று சொல்லி,சையிண்டிஸ்ட்டின் கொதிக்கும் தண்ணீருக்குள் குதிக்கத் தானாகவே தயாராகும் தவளையாக மாறினான் கணேஷ். 

“பால்கனில உக்காத்தி வச்சிப் பண்ணிடலாமா?” என்ற அவள் சொல்வதைக் கேட்டவுடன்,சிறு வயதில், சந்தைத் திடலில்,அரசமர அடியில் அமர்ந்து விளத்தன் அண்ணனிடம் வெட்டிக் கொண்ட நினைவு வந்தது. “ஏண்டி, பக்கத்து ஃப்ளாட்ல இருந்து அந்த ஹிந்திக்காரி பாத்தாலும் பாப்பாடி” சொல்லிய மறுகணம் நாக்கைக் கடித்துக் கொண்டான். மீண்டும் ஒரு முறை முறைத்துவிட்டு, “ஆனாலும்,ஐயருக்கு நெனப்புதான் பொழப்பக் கெடுக்குறது… எப்பப்பாத்தாலும் அவ பாப்பா, இவ பாப்பா நெனப்புத்தான்… நன்னா விஜாரிச்சுப் பாத்தேள்னா ஒரு பொட்ட நாய்கூடத் திரும்பிப் பாத்துருக்காது…” வெறுப்பைக் கிண்டலாய்க் காட்டி முடித்தாள்.

“சரிடி… சரிடி… யார் பாத்தாலும் பாக்காட்டியும்,பால்கனி எல்லாம் வேண்டாம். பாத்ரூம்லயே முடிச்சுடலாம்” என்றால். “மயிரையெல்லாம் க்ளீன் பண்றது எப்டி?” என்றாள். அவள் ஒரு க்ளீனிங்க் ஃப்ரீக் என்பதை நன்கு உணர்ந்திருந்த அவன் அதற்காக ஒரு ப்ளான் வைத்திருந்தான். “நியூஸ் பேப்பர் கீழ விரிச்சுடலாண்டி… நான் அதுமேல உக்காந்துக்குறேன்.. முடிஞ்சப்புறம் அப்டியே நியூஸ் பேப்பர ஹேரோட மடிச்சு ட்ராஷ்ல போட்டுடலாம்..” என்றவனிடம் “பரவாயில்லையே.. நீங்களும் கொஞ்சம் யோஜிக்கிறேளே.” என்றாள். “என்ன சொல்றது,ஏதோ சலூன்ல வேலை செய்ற அளவுக்காவது புத்தி இருக்கே” என்றான்.

“சரி,சார்ஜ் பண்ணிட்டேளா? பத்து மணி நேரம் சார்ஜ் பண்ணணும்னு மேனுவல்ல போட்டிருக்கானே?” என்றாள். “ம்ம்…. அதெல்லாம் நேத்து ராத்திரியே சார்ஜுக்குப் போட்டுட்டேன்” இவளிடமிருந்து தப்பிக்க வழியில்லையென ராத்திரி படுக்கைக்குப் போவதற்கு முன்னரே சார்ஜ் போட்டுவிட்டிருந்தான். 

“சரி,வாங்கோ, இப்டி வந்து ஒக்காருங்கோ” தரையில் இரண்டு மூன்று இங்கிளீஷ் நியூஸ் பேப்பர்களை விரித்துப் போட்டுக் கொண்டே கூப்பிட்டாள். “ஏய்… என்னடி பண்றே… அது இன்னையத்த நியூஸ் பேப்பர்டி…. இன்னும் படிக்கக்கூட இல்ல” என்றான். “நான் அதெல்லாம் பாக்கல.. இங்க கிடந்தது,நீங்கதான் எடுத்துண்டு வந்தேள்னு” என்றவளை இடைமறித்து,”இப்பதான் டோர் திறந்து எடுத்துண்டு வந்தேன்,நீ எதோ  கேட்டுண்டு இருந்தியேன்னு அப்டியே வெச்சுட்டு…. சரி, சரி .. இரு,நாம் போய் பழைய பேப்பரை எடுத்துண்டு வரேன்” என்று ஹாலுக்குச் சென்றான்.

“சரி… டி ஷர்ட்டக் கழட்டுங்கோ.. அப்புறம் முடியாயுடப் போறது…” லக்‌ஷ்மி. “உடம்புல முடியாகக் கூடாதே…” என்ற கணேஷிடம்,”ஆமாம்.. அந்தப் பழைய டவலைக் கழுத்துல சுத்திக்கிங்கோ…” எடுத்துக் கழுத்தில் சுத்திக் கொண்டபொழுது,அந்த விளத்தன் அண்ணன் கடை பழுப்பு நிற வெள்ளைத் துண்டும்,அதிலிருந்து வந்த நெடியும் மனக்கண் முன் தத்ரூபமாக வந்து நடனமாடின.

“அந்த 12 எம்.எம். போட்டு லைட்டா ரைட்டுப் பக்கமும்,3 எம்.எம். போட்டு லெஃப்ட் பக்கமும் சின்னதாக் கட் பண்ணு… லெங்க்த் கம்ப்பேர் பண்ணலாம்” என்றான் முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு என்ற முடிவுக்கு வந்திருந்த கணேஷ். “குட் ஐடியா” சொல்லிவிட்டு,முழுவதுமாய் டவல் போர்த்திக் கொள்வதற்குள் க்ளிப்பரை வைத்து விட்டாள்… “ஏஏஏஏஎய்… இருடி…. இப்பப்பாரு… முதுகெல்லாம் ஒரே ஹேர்..” அவன் கூவ,அவள் “சாரி, சாரி, சாரின்னா…” என்று நிஜமாகவே ஃபீல் செய்தாள்.

12 எம்.எம். குறைவா முடியை எடுக்கும்னு ஒரு பெரிய கண்டுபிடிப்பை நடத்தி முடித்த பின்,சேஃப் சைடில் இருக்க வேண்டுமென்ற ப்ளானுடன் அதே க்ளிப்பரில் போவதென்று முடிவெடுத்தனர் இருவரும். “அந்த கோம்ப் தலையை டச் பண்ற மாதிரி வச்சுக்கோ லக்‌ஷ்..” என்றவனிடம், “இல்லன்னா.. கொஞ்சம் பயமா இருக்கு,ஸ்கின்ல பட்டுடுமோன்னு…” என்றாள். “இல்லடி,படாது.. அதுதான் கைடன்ஸ்.. அது ஸ்கின்ல டச்சானாதான், லெங்க்த் ஒரே மாதிரி இருக்கும்” என்றான். “இவ்ளோ பேசுற நீங்களே பண்ணிண்டிருக்கலாமே…” என்று சொல்லிவிட்டு,கோம்ப் ஸ்கின்னைத் தொடுமாறு வைத்து இழுப்பதற்கு அவள் உடன்படவில்லை. 

“பின்னால பக்கம் முடிஞ்சுடுத்துன்னா… பாக்கறேளா?” செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துக் காட்ட,அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாழ்ந்து உயர்ந்து காணப்பட்டாலும், முதல் முதலாக முயல்வதற்கு ‘நாட் பேட்’ என்று தோன்றியது. “டாப்ல பண்றது எப்டின்னா?” என்றாள். “ம்ம்ம்… நேக்கு மட்டும் ரொம்பத் தெரியுமா… கடைல எப்பவுமே டாப்ல க்ளிப்பர் யூஸ் பண்ண மாட்டா… ஸிஸர்ஸ்தான்….” என்றான். “அவா யூஸ் பண்ண மாட்டாளா, இல்ல நீங்க பண்ண விடமாட்டேளா?” மீண்டும் சந்தேகம் தொனிக்கும் கேள்வி. “ஏண்டி, என்ன சொல்ல வரே?”… “ம்ம்ம்… நீங்க இருந்தாலும் கொஞ்சம் ஜொள்ளுப் பார்ட்டி… வெள்ளக்காரி.. பொம்மனாட்டி.. பக்கத்துல வந்து, கட் பண்ணட்டுமேன்னு…” என்றவளை இடைமறித்து,”சீ… கர்மம் கர்மம் யாரைப்பாத்து… ஏகபத்னி விரதண்டி நான்…” ஏதோ வீராப்பாய் பதில் கூறினாலும்,உள்மனதில் இவளுக்கு எப்படி எல்லா விஷயங்களையும் சரியாக யூகிக்க முடிகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“சரி, சரி… பின்னால மாதிரியே டாப்லயும் இழுக்குறேன்…. சரியா வரலன்னா கோவிச்சுக்காதீங்கோ” என்று சொல்லி,அவன் பதிலுக்குக் காத்திராமல் இழுக்கத் தொடங்கினாள். இரண்டு நிமிடங்களில் முடிந்துவிட,தலை கிட்டத்தட்ட ‘சப்பிவிட்டுப் போட்ட மாங்கொட்டை’ போலக் காணப்பட்டது.

“சொன்னேண்டி… கேட்டியா.. இந்தத் தலையோட இன்னும் ஒரு வாரத்துக்கு வீடியோ கான்ஃபரன்ஸ்ல கலந்துக்க முடியாது..” கத்தத் தொடங்கியிருந்தான். “அதெல்லாம் ஒண்ணுமில்லை….டீஸண்ட்டாதான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே, “பின்னால என்ன பண்ணட்டும்,எப்டி எட்ஜ் ஷேப் பண்றது? சைட் பர்ன்ஸ் என்ன பண்ணலாம்?” ஒரு ப்ரொஃபஷனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் போலக் கேள்வி கேட்கத் தொடங்கினாள்.

இனிமேல் ஒன்று செய்ய முடியாது என்று புரிந்து,இதனை ‘நியூ நார்மல்’என்று ஏற்றுக் கொண்ட கணேஷ் “பேக்ல அந்தக் கோம்ப் ரிமூவ் பண்ணிட்டு” ஷேவரின் அனுபவத்தில் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்தான். அவளும் ஏதோ ஒரு வழியாக ஒரு லைன் எடுத்துப் பின்புறத்தை முடிக்க,பின்னர் தட்டுத் தடுமாறி காதிற்கு மேல் ஒரு ஹால்ஃப் சர்க்கிள் எடுத்து நீளமான முடியைத் திருத்த,ஹேர் கட்டிங்க் படலம் இனிதே முடிந்தது.

“சூப்பர்டி… ஆனாலும் நீ ரொம்பத் திறமைசாலிதான்… சூப்பரா வெட்டியிருக்கடி…” கண்ணாடி முன்னர் நின்று கொண்டு,இப்படி அப்படித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவளை அப்ரிஷியேட் செய்து கொண்டிருந்த கணேஷ்,”சரி….. அப்டியே நன்னா ஒரு பாத் குடுத்திட்டீன்னா” என்று ரொமான்ஸ் காட்டத் தொடங்கினான்.

“ஓஹோ…. சாருக்கு மூடு ஸ்டார்ட் ஆயிடுத்து போல…. நேக்கு நெறையா வேலை இருக்கு… கீழ விழுந்திருக்குற முடியெல்லாம் க்ளீன் பண்ணி,நன்னா ஷாம்பூப் போட்டுக் குளிச்சுட்டு, வெளியில வாங்கோ” சொல்லிக் கொண்டே பதிலுக்கும் காத்திராமல் பாத்ரூம் கதவை மூடிக் கொண்டு வெளியேறினாள் லக்‌ஷ்மி. 

  வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad