அபியும்..அம்மாவும்..
நாய் வளர்க்க வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் அபிக்குத் தோன்றி விட்டது.
” அம்மா..நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா..” என்றாள்
சமையலறையில் வந்து கொஞ்சிக் கொண்டு.
‘அதான் உன்னை வளர்க்கிறோமே..போதாதா..” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் சொல்லவில்லை..
” நாயெல்லாம் ரொம்பக் கஷ்டம் அபி..நம்மால் முடியாதும்மா.. ”
“ஏன் முடியாது..என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் வீட்டுலேயும் வளர்க்கிறா ? ஸ்கூல்ல அவங்கவங்க அவங்கவங்க நாயைப்பத்திச் சொல்லும்போது எனக்கு எத்தனை ஆசையா இருக்கு தெரியுமா..”
” நீ ஸ்கூலுக்கு படிக்கப் போறியா.. இல்லை நாயைப்பத்தி பேசப்போறியா..?”
” பாரு..! விஷயத்தை திசை திருப்பாதே ! “‘என்றாள் கோபமாய். ” எனக்கு நாய் வேணும்.. அதுகூட நான் கொஞ்சணும். விளையாடணும். செல்ஃபி எடுத்துக்கணும். என் ஃப்ரீண்ட்ஸ் கிட்டேயெல்லாம் காண்பிக்கணும்..!”
பாவமாகத்தான் இருந்தது.
குழந்தைகளுக்கே உரிய ஆசை.
ஆனால் எப்படி சாத்தியம் ?
காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்தால் தான், வீட்டுக் காரியங்களையெல்லாம் முடித்துக் கொண்டு பஸ்சோடு ஓட்டப்பந்தயம் நடத்திச் சரியான நேரத்திற்கு ஆபீஸ் போக முடிகிறது. இதில் நாய் ஒன்றையும் கவனித்து விட்டுப் போவதென்றால்..
” பாரு அபி… எனக்கும் நாய் பிடிக்கும் தானே..? ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லைடா கண்ணு….இப்பவே அம்மா ஆபீசுக்கு எப்படி ஓடறேன்னு உனக்குத் தெரியும்..”
“என் ஃப்ரெண்ட்ஸ் அம்மாங்களும் தான் ஆபீஸ் போறாங்க.…”
” அவங்க வீட்டு நிலைமை என்னன்னு நமக்குத் தெரியாதும்மா. ஆனால் நம்ம வீட்டில் கஷ்டம். தினம் அதைக் குளிப்பாட்டணும்…பால் புகட்டணும்…டாய்லெட் கூட்டிப் போகணும்.. ஒரு குழந்தையைப் போலவே பார்த்துக்கணும்..”
” டாய்லெட் நான் கூட்டிட்டுப் போவேன்..!” என்றாள்.
” எப்போ !”
” ஸ்கூல் விட்டு வந்தப்பறம்..”
” அது வாக்கிங் ! டாய்லெட்னா விடிகாலம்பற எழுந்து கூட்டிட்டுப் போகணும்…நீ. எழுந்திருப்பியோ..? ”
ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். ஸ்கூலில் பர்ஸ்ட் பெல் அடிக்கிறபோது தான் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே. பிறகு அவசரமாகக் குளித்து ,
புத்தக மூட்டையைத் தூக்கித்தோளில் போட்டுக்கொண்டு.. சமயங்களில் காஃபி கூட குடிக்கக்கூட நேரமிருக்காது. இந்த அழகில்..
“டாக் வாக்கர்ஸ் இருக்காம்மா.. பணம் குடுத்தா அவங்க காலையில் வந்து நாயை மார்னிங் வாக் கூட்டிக்கிட்டுப் போவாங்க ” என்றாள்.
இந்த ‘நாய் நடையாளர்கள்’ குறித்து அலுவலகத் தோழி அருணா சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.
குறிப்பிட்ட நேரத்துக்கு அரைமணி.. முக்கால் மணி நேரம் கழித்துத்தான் வருவார்கள். அதற்குள் நாய்கள் மூச்சா போகாமல் இருக்கணும். கையோடு இன்னும் நான்கைந்து நாய்களைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். அவற்றில் ஏதாவது ஒன்றுக்கு உடம்பு சரியில்லையென்றால் கூட, இவர்கள் நாய்களுக்கும்
அது இலவசம்.
கொஞ்ச தூரம் நாய்களோடு நடந்து, ஏதாவது புதரருகில் உட்கார்ந்து பீடி குடிப்பார்கள். அதற்குள் நாய்கள் அவரைச் சுற்றியே ஒன் .. டூ பாத்ரூம்களை முடித்திருக்கும். அவ்வளவு தான்..வேலை முடிந்தது என்று மறுபடி அவற்றை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து விட்டு விடுவார்கள். நாயின் உடம்பு பூரா அவர்கள் குடித்த பீடி நாற்றம் அடிக்கும். நம்மால் கையில் தூக்கிக் கொஞ்சக்கூட முடியாது. இதுக்கு மாதாமாதம் லம்ப்பாக ஒரு தொகை செலவு பண்ண வேண்டியிருக்கும்.
” நமக்கு சரிப்படாது அபி. சாரிம்மா ” என்றாள்.
” ச்சே…ஒரே பொண்ணுன்னு பேரே தானே தவிர.. ஒரு நாய் வளர்க்கக் கூட சுதந்திரம் இல்லை இந்த வீட்டில்!” என்று முணகினாள்.
சிரிப்புத்தான் வந்தது. இதைச் சொல்லியே எத்தனை சாதித்துக் கொண்டு விட்டாள் !
அவள் சிரிப்பது கண்டு அபி சட்டென்று தன் செல்ஃபோனனத் திறந்து செய்து அதில் சேவ் செய்து வைத்திருந்த நாய் படங்களையெல்லாம் வரிசையாகக் காண்பிக்க ஆரம்பித்தாள்.
“இதோ பாரும்மா…இது ஜெர்மன் ஷெப்பர்ட்..இது புல்டாக்,. இது கோல்டன் ரெட்ரீவர், இது பொமரேனியன்..இதூ பக்.”
“இரு..இரு..நாம் எத்தனை நாய் வாங்கப்போறோம்..?”
“ஒண்ணு தான்”
“அப்போ எதுக்கு இத்தனை காண்பிக்கிறே?”
“ச்சும்மா..எத்தனை வெரைட்டீஸ் இருக்குன்னு நீ தெரிஞ்சுக்கலாம்ல? இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இருக்கு பாரு.. ரொம்ப புத்திசாலி..சொன்ன பேச்சு கேக்கும்..
நிறைய தைரியம்” என்றாள்.
“அதாவது சொன்ன பேச்சுக் கேட்குதே..”
முறைத்தாள். ” ரெட்ரீவர் ரொம்ப நம்பிக்கையானது. சாஃப்ட். ஆனா சமயத்தில் கோபம் ஜாஸ்தி..”
” உன்னை மாதிரி !” .
“சிரிக்காத.. அப்புறம் எனக்குக் கோபம் வரும்!” என்றாள்.
” ஐயோ இந்த பொமரேனியன் இருக்கே ..அத்தனை
அழகு ! முகத்தில் கண்ணு மூக்கு வாய் மட்டும் தான் தெரியும். மீதி இடமெல்லாம் புசுபுசுன்னு அத்தனை முடி! என் ஃப்ரெண்ட், அதை ப்யூட்டி பார்லர் அழைச்சுனு போய் முடியையெல்லாம அழகா ட்ரிம் பண்ணிக் கொண்டு வந்திருக்கா. வெயில் காலத்துல அதுக்கு ஈசியா இருக்குமாம். விலை கூட ஜாஸ்தி இல்லைன்னு சொன்னா. ஸ்கூல் விட்டுப் போனதுமே தினம் அது கூடத்தான் விளையாட்டாம்..! . ரொம்ப ஃப்ரெண்ட்லின்னு சொல்லுவா .!”
” … ”
“அப்புறம் ‘ பக்’னு ஒரு நாய்மா. பாக்கறதுக்கே வேடிக்கையா இருக்கும்…முன் பக்கம் வாய் தடித்துக் குவிஞ்சு கறுப்பா இருக்கும் . இரு காண்பிக்கிறேன் ” என்று செல்போன் திறந்தாள்.
“அது இருக்கட்டும். இதெல்லாம் எங்க கிடைக்கும்?”
“அப்படி வா வழிக்கு !” என்று உற்சாகமானாள்.
“ப்ளூ க்ராஸ் தெரியும்ல உனக்கு. ஒவ்வொரு மாசமும் அங்க விதவிதமாய் நாய்களை எக்சிபிட் பண்ணுவாங்க. நாய் கண்காட்சினு வெச்சுக்கயேன். நாம் போய் நமக்குப் பிடிச்சதை எடுத்துனு வந்துடலாம்!”
“சும்மாவா ?”
“ஹை..ஆசை..! .எல்லாம் பணமாக்கும் . நீ கிரெடிட் கார்ட் மட்டும் எடுத்துக்க போதும்!” என்றாள்.
” ஏய்..நான் நாயே வேண்டாம்கிறேன்..”
” அம்மா..ப்ளீஸ்மா..இந்த ஒரு வாட்டி மட்டும். ப்ளீஸ்..ப்ளீஸ்..”
” பாரு..எனக்கு ஆபீஸ் போயிட்டு வரவே நேரம் சரியா இருக்கு. என்னால் இந்த ப்ளூ கிராசுக்கெல்லாம் அலைய முடியாது.
” சரி. நீ அலைய வேண்டாம். என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஒரு நம்பர் கொடுத்திருக்கா. இது ப்ளூ கிராஸ் கிடையாது. ஆனால் இவங்களும் நாய் விற்கிறவங்க தான். நமக்கு பிடிச்ச வெரைட்டி சொன்னா, அவங்க வீட்டிலேயே நாயைக் கொண்டு வந்து நமக்குக் காண்பிப்பாங்க..!”
” உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியுது !” என்றாள் ஆச்சரியமாய்.
” வேர் தேரீஸ வில், தேரீஸ வே..!” என்று சிரித்தாள்.
( மனமிருந்தால் மார்க்கமுண்டாம்)
” அதெல்லாம் இருக்கட்டும்.. யாரு வளர்க்கிறது….அதைச் சொல்லு முதல்ல.”
” டோன்ட் ஒர்ரி. நம்ம சர்வெண்ட் முனீம்மா கிட்ட கேட்டேன். டாய்லெட் அழைச்சுனு போய் குளிப்பாட்டறதை அவ பாத்துக்கறாளாம்..! என்ன.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் குடுக்க வேண்டியிருக்கும்.. அவ்ள தான் !”
” ! ”
” காலைல ஒரு அரை லிட்டர் பால் காய்ச்சி, ஆற வெச்சு, பௌல்ல ஊத்தி வெச்சுட்டுப் போயிடுமா.. சக்கரை சேர்க்கக்கூடாது. பாலும் கொஞ்சம் நீர்க்க இருக்கணும். ரெண்டு மாசக் குட்டியாம். விக்கிறவர் சொன்னார் !”
‘” ! ”
” மத்யானம் லஞ்ச்சுக்கு வரச்சே அப்பா பாத்துக்கறேன்னு சொல்லிட்டாரு ! (அங்கேயும் ‘ஒரே பொண்ணு’ அஸ்திரம்)
நீ ட்யுட்டி முடிஞ்சு மூணறைக்கு வந்துருவ இல்ல…
முடிஞ்சா இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வரப்பாரு.! அஞ்சு மணிக்கு நான் ஸ்கூல் விட்டுவந்துடுவேன்.. அப்புறம் அது என் பொறுப்பு..! ”
எத்தனை ப்ளான் !
“படிப்பு என்னாறது ?” என்றாள்.
“அதை மடிலயே வெச்சுட்டுப் படிப்பேனாக்கும் !”
ஆக கொஞ்சுவதற்கு மட்டும் அவள் !
***
ஒரு சுபயோக சுப நாளில் அந்த நாய் அவர்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்தது.
செல்போனில் சில நாய்களின் போட்டோக்களை அவர்கள் அனுப்பி வைக்க, அதில் இரண்டை அபி செலக்ட் செய்து
கொடுக்க, நாய் பயிற்சியாளர் அந்த இரண்டு நாய்களையும் இரண்டு கைகளில் ஏந்திக் கொண்டு வந்து அவர்கள் வீட்டு நடுக்கூடத்தில் சரேலென்று இறக்கி விட்டார்.
ஒன்று திகைத்துத் தடுமாறி அப்படியே நின்றது (ஆண் நாயாம்!)
மற்றொன்று எவ்விதத் தயக்கமுமில்லாமல் சட்டென்று சமையலறை வரை வீட்டை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்தது. ( பெண்ணாம்!).
அபிக்கு பெண் நாய்க்குட்டியை மிகவும் பிடித்து விட்டது. கையை நீட்டிய மாத்திரத்தில் எகிறி அவள் மேல் பாய்ந்து கொண்டது. சமையலறைக்கு இவள் புடவை பின்னாலேயே வந்தது. அப்படியிப்படித் திரும்புகிற போதெல்லாம் நாயை மிதித்து விடப் போகிறோமோ என்று பார்த்து ஜாக்கிரதையாக அடியெடுத்து வைக்க வேண்டி இருந்தது.
நாயே பிடிக்காத கணவரையும் கூட எவ்விதமோ வசியப்படுத்தி விட்டது.
அவர் பாத்ரூம் போனால் இதுவும் கூடவே போய்,
அவர் திரும்பி வருகிற வரை வாசலில் காத்திருந்தது. கையைச் சொடுக்கினால் சட்டென்று அவர் காலடியில் போய் உட்கார்ந்து கொண்டது. இந்த வீட்டில் தான் சொல்வதைக் கேட்க ஒரு ஜந்துவாவது இருக்கிறதே என்று அவர் சந்தோஷப்பட்டு விட்டிருக்க வேண்டும்.
பேங்கிலிருந்து கொண்டு வந்த வாசம் மாறாத புத்தம்புது நோட்டுக்கள் கைமாறியதில் அசுக்குட்டி அவர்களுக்குச் சொந்தமானது.
***
ஒரு ஐந்தறிவு ஜீவனால் வீட்டுக்கு இத்தனை அழகையும் கலகலப்பையும் கொண்டு வர முடியுமா? முடிந்தது.
அசு நிஜத்தில் பயங்கர சுறுசுறுப்பு. துறுதுறுப்பு. மொத்த வீடு பூரா சுழன்று கொண்டே இருந்தது. ஃபோன் மணி அடித்தால் ஓடிப்போய் ஃபோன் அருகே நின்றது. சோஃபாவில் உரிமையாக ஏறி இறங்கியது. மோடாவில் உடம்பைக் குறுக்கியபடி உட்கார்ந்து டிவி பார்த்தது. மூச்சா வருகிற போது காம்பவுண்ட் கேட் அருகில் போய் காலைத் தூக்கியது.
அதற்கு அசு என்ற பெயரை அபி தான் சூட்டினாள்.
அவள் அபியாம். அது அசுவாம். பெயர்ப் பொருத்தம் !
அதோடு விதவிதமாய் செல்ஃபி எடுத்துக் கொண்டு ஸ்கூலில் கொண்டு போய்க் காண்பித்தாள். ஜென்ம சாபல்யம்..!
அதிகம் பேசாத சிரிக்காத கணவர் கூட, அசு வந்த பிறகு கொஞ்சம் உற்சாகமாக இருப்பதைப் போல் பட்டது.
***
இரண்டு மாதக்குட்டி என்பதால் தினம் குளிப்பாட்டக்கூடாது என்று விற்பனையாளர் சொல்லியிருந்தார். வேண்டுமானால் ஈரத்துணியில்
ஒற்றி, வெயிலில் காய வைக்கலாம் !
மூன்றாம் மாதம் அசுக்குட்டிக்கு ஒரு இன்ஜெக்க்ஷன்
போட வேண்டியிருந்தது.
முதல்முதலாக ஏரியாவில் வெட்னரி டாக்டர் எங்கிருக்கிறார் என்று தேடினார்கள்..
அவர் அசுக்குட்டியை டேபிளில் படுக்க வைத்து, ஒற்றைக்கையால் அப்படியிப்படிப் புரட்டி, அது ஏமாந்த சமயம் பார்த்து அதன் பின்புறத்தில் சரேலென்று ஒரு ஊசியைச் செருகி விட்டார். ஃபீஸ் 600 ரூபாய். கிடக்கட்டும்.. ஆனால் இரண்டு மாதக் குழந்தைக்கு ஊசி போடுவார்களோ ? அசுக்கு ஜுரம் கிரம் வந்து விடுமோ என்று பயந்தபோது நல்லபடியாக அப்படி எதுவும் இல்லை.
கூடத்தில் ஒரு பெட்ஷீட்டை நான்காக மடித்து
ஜன்னலோரமாக அதை படுக்க விட்டார்கள்..
தன்னை அப்படித் தனித்து விட்டது அசுவுக்குப் பிடிக்கவில்லை போல. ராத்திரியெல்லாம் கத்திக் கொண்டே இருந்தது. எல்லாரின் தூக்கமும் கெட்டது மிச்சம். மாடிப்போர்ஷன்காரர்கள், காலையில் இவர்களைக் கூப்பிட்டு கம்பளைண்ட் செய்தார்கள் என்பது வேறு விஷயம்.
நாய் பயிற்சியாளரிடம் சொன்னபோது “சின்னக் குழந்தைமா அது..மனுஷங்க நடுவில் இருக்கணும்னு ஆசைப்படும். கொஞ்ச நாளைக்கு உங்க பெட் ரூமிலேயே படுக்க வெச்சுக்குங்க!” என்றார்.
அசு விடியற்காலையில் எல்லாருக்கும் முன்னாலேயே எழுந்து விடும். உடன் மூச்சா போக வேண்டும் அதற்கு..
தாமதமானால் படுக்கையை நனைத்து விடும்.
வேலைக்காரி இந்த பெட்ஷீட்டை எல்லாம் தன்னால் துவைக்க முடியாது என்று சொல்லி விட்டாள்.
வேறு வழி? பக்கெட்டில் நீர் நிரப்பி, சர்ஃப் எக்ஸெல் சேர்த்துக்கலக்கி, பெட்ஷீட்டை அதில் ஊற வைத்து, குமுக்கி, டெட்டால் சேர்த்து அலசி பிழிந்து, காயப்போட்டதில் குழந்தை பெற்ற இளம் தாயைப்போல் மிகக் களைப்பாக உணர்ந்தாள்.
அசுவிடம் இன்னொரு முன்னேற்றமும் தெரிந்தது. இதுவரை பெட்ரூமில் படுத்திருந்தது, இப்போது அவர்களோடு சேர்ந்து கட்டிலில் படுக்க வேண்டும் என்றது. கணவருக்கு ஒரு பிரச்னையுமில்லை. அவர் சிங்கிள் பெட்டில் இன்னொரு ரூமில் போய் படுத்துக்கொண்டு விட்டார். அபியும் அம்மாவும் தான்
பாவம் ..
விளக்கை அணைத்ததுமே,. கட்டிலருகில் வந்து நின்று ‘பெட்’டைப் பிறாண்ட ஆரம்பித்தது. அபி எவ்வளவோ மிரட்டியும் கேட்கவேயில்லை. தூக்கம் கெடுவது பொறுக்க மாட்டாமல், அபி அதை ஒரு கையால் இழுத்துக் கட்டிலில் தன் பக்கத்தில் போட்டுக் கொண்டாள். அம்மா கொஞ்சம் நகர்ந்து கொண்டாள்.
ஆனால் நடுத்தூக்கத்தில் அசு அவளை நெருக்கிப் படுத்துக்கொண்டு அவள் மீது கொர்கொர்ரென்று மூச்சு விட்டதில் அம்மா பயந்தே போனாள். அவள் கணவர் கூட இத்தனை க்ளோசாக அவளோடு படுத்திருப்பாரோ என்னவோ..
பிறகு அசு கட்டிலிலும், அசுவின் இடத்தில் அம்மா கீழே தரையிலும் படுத்துக் கொண்டார்கள்.
இன்னொரு பிரச்சினை.. வெளியே போனால் அபசகுனமாக அழும். காரில் வேண்டுமானால் ஏற்றிக் கொள்ளலாம். ஆனால் சினிமாத் தியேட்டரில், கோவிலில், கல்யாண வீடுகளிலெல்லாம் அனுமதிப்பார்களா என்ன..
எங்கு போனாலும் மனம் நிம்மதியற்றுத் தவித்தது. அதைத் தனியே விட்டு விட்டு வந்து விட்ட குற்ற உணர்வு உறுத்தியது. மூன்று மாதக் கைக்குழந்தையை வீட்டில் விட்டு விட்டு நாம் வெளியே போவோமா என்ன ? நாய் என்றால் மட்டும் ஏன் இத்தனை அலட்சியம்?
குடும்பத்தோடு சேர்ந்து வெளியே போவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. யாராவது ஒருவர் அசுவைப் பார்த்துக் கொள்ள வீட்டில் இருக்க வேண்டி இருந்தது.
ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தால், வீடு பூரா ஒரு வாடை வியாபத்திருப்பதை சில நாட்களிலேயே உணர முடிந்தது. அசுவின் வாடை தான். கணவர் மூக்கைச் சுளித்தார். எப்போது வெடிக்கப் போகிறாரோ என்று மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.
“குளிப்பாட்டினா வாடை அடிக்காது ” என்றாள் வேலைக்காரி.
“மூணு மாசத்துக்கு குளிப்பாட்டக்கூடாது என்று சொல்லிருக்காங்க முனீம்மா..”
“அவுங்க சொல்லுவாங்க..நான் எங்க வீட்டு நாயை ஒரு மாசத்துலேயே குளிப்பாட்டினேன்..ஒண்ணும் ஆவல”
“கொஞ்சம் லேசா வென்னி வெச்சு குளிப்பாட்டிடலாம்மா” என்றாள் அபியும்.
பியர்ஸ் சோப் போட்டு, கொஞ்சமாக வென்னீர் விட்டு குளிப்பாட்டியதில் வாடை அடங்கியது. ஆனால் ராத்திரி அசுவுக்கு குளிர் வந்து விட்டது.
அதன் உடல் அப்படித் தூக்கித் தூக்கிப்போட்டதைப் பார்த்து எல்லோருமே பயந்து விட்டார்கள். வீட்டில் இருந்த எல்லா பெட்ஷீட்களையும் மேலே போர்த்தியும் ..!
இந்த வாயற்ற ஜீவனை நாம் படுத்துகிறோமோ ?
வெட் டாக்டர் ஊசி போட்டு வாயில் ட்ரிப்ஸ் சொட்டினார்.
ஆனாலும் அசு பலவீனமாகத்தான் இருந்தது.
ஆபீசுக்கு ரெண்டு நாள் லீவ் போட்டு விட்டு அம்மா அசுவைப் பார்த்துக் கொண்டாள்.
உடம்பு சரியாகத் தேறாத நிலையில் அசுவுக்கு வாக் போக முடியவில்லை. தூசியும் பொல்யூஷனும் ஒத்துக் கொள்ளவில்லை. ஒன் பாத்ரூம், டூ பாத்ரும் எல்லாம் வீட்டிலேயே நடந்தது. பால் குடித்தால் கக்கியது. அவற்றையெல்லாம் சுத்தப்படுத்திய கையோடு சமைப்பது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. ரெண்டு நாள் சாப்பாடு வேண்டாம் என்று ஓட்டலுக்குப் போய் விட்டார்.
இரவுகளில் கண் விழித்து அசுவைப் பார்த்துக் கொண்டதில் காலைப் பொழுதுகள் களைப்பாக விடிந்தது. அபி கொட்டாவி விட்டுக்கொண்டே ஸ்கூல் போக அம்மா தூக்கக்கலக்கத்தோடு ஆபீஸ் போனாள்.
***
அசு நன்கு தேறிய நிலையில் , அபி ஒருநாள் தயங்கியபடி சமையலறை வாசலில் வந்து நின்றாள்.
” என்ன அபி ? ” என்றாள் அம்மா.
“வந்தும்மா .. அசுவை நாம் வித்துடலாம்மா ” என்றாள்.
என்ன !
“ஆமாம்மா.. பாவம்…உனக்கு ஏற்கனவே ரொம்ப வேலை. இதுல அசுவையும் பார்த்துக்க நேர்ந்ததில் பாரு,. இந்த ரெண்டு மாசத்துல நீ எப்படி ஆயிட்ட!”
“எனக்கு ஒண்ணும் இல்லடா “என்றாள்.
“நீ சொல்லுவம்மா..! ஆனால் எனக்கு உன் கஷ்டம் புரியுது. அசுவுக்காக ராத்திரில நடுநடுவே எழுந்துக்கறே. சரியான தூக்கம் இல்லை… சாப்பிட நேரம் இல்லை. அலையக்குலைய ஆபீஸ் ஓடற.. அங்கே போயும் வேலை..”
” …”
“அசுவுக்காக நீ கீழே படுத்துக்கறே. நீ அசுவோட டாய்லெட் க்ளீன் பண்ணப்போ எனக்கு மனசு ரொம்பக் கஷ்டமாப் போயிட்டதும்மா. இந்த ரெண்டு மாசத்துல நீ ரொம்ப இளைச்சுப் போயிட்டம்மா. எனக்கு உன்னைப் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கும்மா. எனக்கு அழுகையாக வரதும்மா. ப்ளீஸ்மா.. நாம அசுவை திரும்பக் கொடுத்துடலாம்மா.”
மகளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
” நீ ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினதுடா..” என்றாள்.
“இருக்கட்டும். பின்னாடி பார்த்துக்கலாம்.
இந்த ரெண்டு மாசத்தில் என் ஆசையும் கொஞ்சம் தீர்ந்துடுச்சு. அசுவும் பாவம் குழந்தை. அதுக்கும் எப்பவும் யாராவது கூட இருக்கணும்னு இருக்கு. நாம அதைத் தனியா விட்டுட்டு வெளிய போனா கத்திக் கூப்பாடு போடுது. மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கும்மா. யாராவது வீட்டோடு இருந்து பார்த்துக்கறவங்க வீட்டில் அது வளரட்டும். எதற்கு நாமளும் கஷ்டப்பட்டுக்கிட்டு..அதையும் கஷ்டப்படுத்தி..”
எப்பேர்ப்பட்ட மனம் !
“உன்னால் அசு இல்லாமல் இருக்க முடியுமா அபி ?”
” இருப்பேன்..அசுவை விட எனக்கு எங்க அம்மா முக்கியம்!”
என்று சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
” நல்ல காலம்…கொஞ்சநாள் தான் அசு நம்மகூட பழகிருக்கு. இன்னும் ரொம்ப அட்டாச்மெண்ட் வரதுக்குள், சீக்கிரம் அதை வித்துடறது நம்ம எல்லாருக்கும் நல்லதும்மா ! ”
மகளைக் கூர்ந்து பார்த்தாள். சீரியசாகத்தான் சொல்கிறாள் என்று பட்டது.
“யார் கிட்டே விக்க முடியும் அபி ?”
“விக்க வேண்டாம்மா. வாங்கின இடத்திலேயே திருப்பிக் கொடுத்துடலாம். நம் பிரச்சினை சொல்லி திரும்ப எடுத்துக்க முடியுமான்னு அவங்களைக் கேட்டேன்.. ஓகே சொல்லிட்டாங்க. ஆனால் நாம் குடுத்த பணம் திருப்பிக் கேட்க முடியாதும்மா.. ஸாரி..” என்றாள்.
“சீச்சீ.. இத்தனை நாளாக அசு நமக்குக் கொடுத்த சந்தோஷத்துக்கு அந்தப் பணம் ஒண்ணுமேயில்ல”! என்றேன்.
மகள் என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
அவள் கண்களில் நீர் துளிர்த்திருந்தது.
என் கண்களிலும் தான்.
***
- Bhanumathy kannan