Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சூடு

Filed in கதை, வார வெளியீடு by on September 8, 2020 0 Comments

புகழினி கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். அடுத்து அவளுக்கு ஒரு நல்ல வரனைத்  தேடி கல்யாணத்தை முடித்து, தனது கடமையை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாய் இறங்கி இருந்தார் அவளது  தந்தை சாமிநாதன். 

தினமும் தரகர்கள் தன் பையில் சில ஜாதகக்  கட்டுகளைச் சுமந்து கொண்டு அவள் வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்தனர். மறுபக்கம் மகளுக்கு வாழ்க்கை துணையாக நல்ல குணம் படைத்த ஒருவன் அமைந்து விட வேண்டுமென்ற ஆதங்கத்தில் அவள் தாய் ராணி, கோவில், விரதம் என தீவிரமாய் இறங்கியிருந்தாள். ஆனால் இந்த எதிலும் பெரிதாய் தன் கவனத்தைச் செலுத்தாமல் தனக்கு ஒரு வேலை தேடுவதில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தி இருந்தாள் புகழினி.

ஒர் பருவப்  பெண்ணிற்குத்  திருமணத்தில் காணப்படவேண்டிய ஆர்வம் ஏதும் அவளிடம் தென்படவில்லை. அவளின் நடவடிக்கைகள் இவளுக்குத்  தான் வரன் தேடப்படுகிறதா என்ன, என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்திலே இருந்தது. தரகர்கள் தரும் ஜாதகங்களை எடுத்துக்கொண்டு சாமிநாதனும் ராணியும் ஜோசியம் பார்க்கச் செல்லும் போதெல்லாம் புகழினி மனதில் அவளை அறியாமலேயே ஓர் பயம் உருவெடுத்துக் கொள்ளும். ஆனாலும் அதை அவள் முகத்தில் வெளிப்படுத்திக் கொள்ளாமல் சமாளித்து விடுவாள். தாங்கள் எடுத்து சென்ற ஜாதகங்கள் ஏதும் தன் மகளின் ஜாதகத்துக்குப்  பொருத்தமாக அமையவில்லை என்று சாமிநாதனும்,ராணியும் சோர்ந்து வந்து அமரும் போது புகழினி மனதில் சிறு மகிழ்ச்சி துளிர்விடும். இப்படியே சில நாட்கள் நகர புகழினியின் முயற்சிக்கு பலனாய் அவள் படிப்புக்கேற்ற வேலை அமைந்துவிட அவள் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த வேலைக்காகச் சொந்த ஊரை விட்டு பட்டணத்திற்குச் சென்றாள்.

அவளின் சாந்தமான குணத்தினால் வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே அவளுக்கு அழகான ஓர் நட்பு வட்டமும் அமைந்திருந்தது‌.அவளின் நட்பு வட்டாரத்திலேயே ஆனந்தி தான் அவளுக்கு நெருங்கிய தோழியாகயிருந்தாள்.புகழினியும் ஆனந்தியும் ஒரே விடுதியில் தங்கியிருந்ததால், அலுவலுக நேரம் தாண்டியும் அவர்கள் இருவரும் சேர்ந்து நேரம் செலவிட்டது தான் அவர்களின் அந்த நெருக்கத்திற்குக்  காரணமாக இருந்தது.அவளுடைய வீட்டிலிருந்து  பல கிலோமீட்டர் தூரத்தில் புகழினி இருந்த பொழுதிலும் அவளுக்கு வரும் வரன்கள் பற்றிய தகவல் அவள் தாயிடம் இருந்து தொலைபேசி வழியாக தினமும் அவளை எட்டிக் கொண்டுதான் இருந்தது. அப்படி ஒவ்வொரு முறையும் செய்தி வரும்பொழுதெல்லாம் ‘எனக்கு எதோ வரன் வந்திருக்காம்’ என்று அவள் ஆனந்தியிடம் பகிர்ந்து கொள்வாள். அப்படி புகழினி பகிரும் சமயங்களில் அவள் முகத்தில் ஓர் மாற்றம் ஏற்படுவதையும் அதை அவள் சமாளித்து மறைப்பதையும் ஆனந்தி உணர்ந்தாள். பின்பு ஓரிரண்டு நாட்கள் கழித்து அந்த வரனின் ஜாதகமும் புகழினியின் ஜாதகமும் பொருந்தவில்லை என்ற செய்தி புகழினி காதுகளை எட்டிய பிறகு அவளின் முகத்தில் தென்படும் ஓர் உற்சாகத்தையும் ஆனந்தி தொடர்ந்து  கவனித்து வந்தாள்.

அவளின் இந்த நடவடிக்கையை பார்க்கும் பொழுது ஆனந்திக்கு சிறிது சந்தேகமாக இருந்தது. புகழினி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள். கல்யாணம், வரன் என்றாலே அவள் முகம் கலவரப்படும் காரணம் என்னவாக இருக்கும். அவள் யாரையும் விரும்புகிறாளோ.ஆனால் பெரும்பாலும் அவள் நம்மளோட தான் இருக்கிறாள். நமக்குத்  தெரிஞ்சு அவளுக்கு ஆண் நண்பர்கள் கூட இல்லை.அலுவலுகத்திலும் ஆண்களிடமிருந்து எப்பொழுதுமே அவள் சற்று தூரமாக தான் இருப்பாள்.ஆண்கள் என்றாலே விலகிப்  போகிற சுபாவம் உள்ளவள் அவள்.அப்படி இருக்கையில் காதலெல்லாம் சாத்தியமில்லை. இவ்வாறான கேள்விகள் ஆனந்தியின் எண்ண அலைகளில் ஓட ஆரம்பித்தன.

இப்படியே ஒரு வாரம் நகர்ந்திருந்த நிலையில் மறுபடியும் வழக்கம்போல் வேறு ஒரு வரனைப்  பற்றிய தகவல் ராணியிடமிருந்து புகழினிக்கு வந்திருந்தது. அன்றும் வழக்கம்போல் புகழினியின் முகத்தில் ஒரு கலவரம் இருப்பதைக்  கவனித்தாள் ஆனந்தி. பேசாமல் அவளிடமே நாசூக்காகப்  பேசி, காரணத்தைத்  தெரிந்து கொள்வதென முடிவெடுத்தாள்.

புகழினி துவைத்து காயவைத்த துணிகளை மடித்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.

ஆனந்தி தயங்கித்  தயங்கி மெல்ல ஆரம்பித்தாள்.

‘புகழி நான் ஒன்னு கேட்பேன். தப்பா நினைக்க கூடாது’

‘கேளுடி’

‘தப்பா நினைக்க கூடாது’

‘அதுலாம் ஒன்னும் நினைக்க மாட்டேன். நீ முதல்ல என்னனு சொல்லு’

‘இல்ல….எப்பவுமே உன் வீட்டுல இருந்து அலைன்ஸ் பத்தி பேசினா நீ ஏன் சோகமா ஆகிட்ற’

‘அப்படிலாம் இல்லையே’

‘சும்மா சமாளிக்காத. நான் கவனிச்சிக்கிறேன்‌, உன் வீட்டில் அலைன்ஸ் பத்தி பேசினா உன் முகம் கலவரமா மாறுறதையும் பாத்திருக்கேன். வந்த வரனோட ஜாதகம் பொருந்தலேனா உன் முகத்தில் வர நிம்மதியையும் பார்த்திருக்கேன்’

அமைதியாக இருந்தாள் புகழினி

‘சொல்ல கூடாதுனா விடுடி. நான் துணி துவைச்சிட்டு வரேன்” என்று அழுக்குத்  துணிகளைக்  கூடையில் அள்ளிக் வைக்கத் துவங்கினாள் ஆனந்தி.

தன் அம்மா ராணியின் கல்யாணத்தில் அவளின் அப்பா அரை கிராம் நகையைப்  பாக்கி வைத்திருந்த காரணத்திற்காக தன்னுடைய நாலாவது வயதில் நடந்த தனது மாமாவின் கல்யாணத்திற்குக்  கூட தன் அம்மா ராணியை அனுப்பி வைக்காமல் தன் அப்பா சாமிநாதன் நிகழ்த்திய கொடூரத்தில் ஆரம்பித்து,இன்று வரை பல பல காரணங்களுக்காகத்  தன் அம்மாவை ஏதாவது ஒரு வகையில் சொற்களாலும் அடி உதையாலும் அவ்வப்போது கொடுமை படுத்திக்கொண்டிருக்கும் சாமிநாதனின் கொடுஞ்செயல்களும், அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு வாழும் ராணியின் பரிதாப முகமும் புகழினியின் நினைவலைகளில் வர அவளை அறியாமல் அவள் கைகள் பதற ஆரம்பித்தது. அவள் முகம் வியர்வையால் குளிக்க ஆரம்பித்தது.

கூடையில் துணியை அள்ளி விட்டு நிமிர்ந்த ஆனந்தி புகழினியின் நிலை கண்டு அச்சம் அடைந்தாள்.

‘ என்னாச்சு புகழி, முதல்ல தண்ணிய குடி’ என்று புகழினியின் வாயில் சிறிது தண்ணீர் புகுத்தினாள்‌ ஆனந்தி. புகழினி அருகிலிருந்து அவள் தோள்களில் தடவி ஆசுவாச படுத்தி கொடுத்து விட்டு, ஏதும் புரியாதவளாய் குழப்பத்தில் அமர்ந்திருந்தாள் ஆனந்தி.

  • பத்மகுமாரி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad