\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பாலு ஒரு நிலா

Filed in கதை, வார வெளியீடு by on September 28, 2020 0 Comments

ன்னா…. என்ன பண்ணிண்ட்ருக்கேள்? டி.வி.மாட்டுக்கு ஓடிண்டு இருக்கு” புடவையின் முந்தானையால் நெற்றியில் மெலிதாய்த் தோன்றியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, கணவனைக் கேட்டுக் கொண்டு, அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்‌ஷ்மி. 

ஏண்டி… ஏன்… என்ன கேக்குற?“… ஒன்றும் புரியாதவனாய்த் தலையை உயர்த்தி, சற்றே சாய்த்து, ரீடிங்க் க்ளாஸ் மேல் கண்களை ஓட்டி, மனைவியைப் பார்த்தபடி கேட்டான் கணேஷ் ..டி.வி.யில் அன்றைய தினத் தலைப்புச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்க, அவனோ சோஃபாவில் அமர்ந்து லேப் டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தான். தலையை உயர்த்திப் பார்த்தவுடன், மனைவியின் கண்களில் உருண்டோடிய சிறு துளிகளைக் கவனிக்கத் தவறவில்லை. உடனே ஏனென்று கேட்கவில்லை; ஏனென்பதைப் புரிந்து கொண்டவன் … 

“ஏன்னா… இந்தத் தெய்வத்துக்கு கொஞ்சங்கூட கருணையில்லயா? இல்ல, தெய்வமே இருக்கா இல்லயான்னு நேக்கு சந்தேகமா இருக்கு” தொடங்கிய அழுகை குரலில் தோய்ந்தபடி கணவனின் ஆதரவு வார்த்தைக்கு ஏங்கியவளாய்ப் பேசினாள்.

“அவர் முகமே மனசுல இருக்குன்னா…  அவர நம்ம நேர்ல மீட் பண்னமே.. அது அப்டியே கண்ணுக்குள்ளயே நிக்றது… எவ்வளவு ஹ்யூமிலிட்டி இவ்வளவு அச்சீவ் பண்னதுக்கப்புறமும்…” சொல்லிக் கொண்டே இடது கையை எடுத்து, சற்றே ஒழுகும் மூக்கை புடவை முந்தானையால் லாவகமாய்த் துடைத்துக் கொண்டாள்.

“ஆமாண்டி… ஹி இஸ் ட்ரூலி என் இன்ஸ்பிரேஷன் டு மெனி” தொலைக்காட்சிச் செய்தியில் மீண்டும் மீண்டும் காட்டப்படும் அவரது கடைசிக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல், அவரது பாடல்களை ஒளிபரப்புவார்களா என்று சேனல் மாற்றிக் கொண்டிருந்தான்.

“உங்களுக்கு நினவு இருக்கா… நாம லவ் பண்றச்ச… நேக்குத் தமிழ் அவ்வளவா வராது… சினிமாப் பாட்டச் சொல்லியே கத்துத் தந்தேளே… கிட்டத்தட்ட எல்லாப் பாட்டுமே அவரோடதுதானே.. …” லக்‌ஷ்மி கேட்க

ந்தக் கோடைக்கானல் பயணம் ஞாபகம் வந்தது. இருவர் வீட்டிற்கும் தெரியாமல் வெளியூரில் சந்தித்தது. கோடைக்கானலில் காலேஜ் டூர் என்று அவனும், நண்பிகளுடன் ஹொகனேக்கல் செல்கிறேன் என்று அவளும் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தனர். அவனது வீட்டில் பிரச்சனையேதும் இருக்கவில்லை. அவளது வீட்டில் எந்த நண்பிகள், எங்கெங்கெல்லாம் போகிறீர்கள் என்று பல விபரங்கள் கேட்கப்பட்டன. உடன் அவளது உயிர்த்தோழி கலா வந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்று முடிவானதும், கலாவும் சேர்ந்து கொண்டாள். கலாவிற்கு இவர்களின் காதல் தெரியுமென்பதால் பிரச்சனையேதும் இருக்கவில்லை. கலாவின் வீட்டில், உடனொரு ஆண் துணை வேண்டுமென்று வலியுறுத்தப்பட, கலாவின் கசின் பிரசாத் உடன் வர முடிவாயிற்று. பிரசாத்திற்கு இப்பொழுது முழு விபரமும் தெரியப் படுத்த வேண்டிய நிலை. கலா மிகச் சரியான முடிவு எடுப்பவள், கான்ஃபிடண்ட் கர்ள்… கணேஷைத் தன் உடன்பிறவா அண்ணனென மதிப்பவள். அவள் முழு விபரங்களையும் பிரசாத்திடம் கூறி, இது வேறு எவருக்கேனும் தெரிந்ததெனில் பிரசாத்தின் நிலை மிக மோசமானதாகிவிடும் என்று மிரட்டி வைத்தாள்.

ந்த நினைவுகள் லக்‌ஷ்மியின் மனதிலோட… தன் இயல்பான, கிட்டத்தட்ட நாராசமான குரலில், கணேஷ் பாடத் தொடங்கியிருந்தான்….  

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும் 

முகில் எடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும் …..

அவன் பாடி முடிக்கையில், “எவ்வளவு ப்யூட்டிஃபுல் எக்ஸ்பிரஷன்ஸ்… ஒன்லி அவராலதான் முடியும் … கேக்க கேக்க அழுகையா வரதுன்னா….” அந்தக் கொடைக்கானல் மிடில் க்ளாஸ் ரெஸார்ட்டில், தங்களது ரூமிற்கு வெளியில், வராந்தாவின் குட்டைக் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து, தான் கொண்டு வந்திருந்த டிரான்ஸிஸ்ட்டரில் இதே பாட்டைக் கேட்ட நினைவு உடனடியாக இருவருக்கும் ஃப்ளாஷ் ஆனது.. 

து ஒரு டிஸம்பர் மாதம்.. நல்ல குளிர்… அந்தக் கால ட்ரெடிஷனில் முழுக்கைச் சட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த கணேஷுக்குப் பரவாயில்லை.. பாவாடை தாவணி அணிந்து, ஸ்வெட்டர் அணிந்திருந்தாலும் குளிர் பொறுக்க முடியாமல் ஆடிக் கொண்டிருந்தாள் லக்‌ஷ்மி. 

“எஷ்ட்ச்சன்னா ஹாட்த்தார”, தமிழ் மொழி அறிந்திராத லக்‌ஷ்மி, தன் தாய்மொழியில் பேசினாள். “ஹவ்து… கீதே இன்னு சன்னா…” தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், வீட்டில் பேசும் மொழி கன்னடம் என்பதால்,அவளுக்குப் பதிலளிக்க முடிந்தது அவனால். வைரமுத்துவையோ, இளையராஜாவையோ அறிந்திராத லக்‌ஷ்மிக்கு பாலு நல்ல அறிமுகம். அதுசரி, பாலுவைத் தெரியாத இந்தியர் இருக்க இயலுமா, பதினாறு மொழிகளுக்கு மேல் பிரபலமானவராயிற்றே…

சேலை மூடும் இளஞ்சோலை 

மாலை சூடும் மலர் மாலை

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே

இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்

கைகள் இடைதனில் நெளிகையில் 

இடைவெளி குறைகையில்

எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்

இந்த வரிகளைப் பாலு டிரான்ஸிஸ்ட்டரில் வருடிக் கொடுக்க, இதனை மொழி தெரியாத காதலிக்கு விளக்கத் தொடங்கினான் கணேஷ். விளக்குபவன் விண்ணில் பறக்க, விளங்கிக் கொண்டவள் வெட்கித் தலைகுனிந்து விரல்களை மூடிக் கொள்ள, இருபது நிலவுகளும் மறைக்கப்பட்டு சற்றே இருள் தோன்றத் தொடங்கியது. வானத்தின் மந்தகாசமும், வெளிநிலைக் குளிரும், அதில் மெலிதாய் உடல் நடுங்கிய அழகுப் பதுமையான காதலியும் கணேஷைக் கிறங்கடித்தனர். பாலுவைச் சற்று அப்பக்கமாகத் திருப்பி, அதாவது டிரான்ஸிஸ்ட்டரைத் திருப்பி வைத்துவிட்டு, எதிர்பாராத நிலையில் அணைத்து அவளது கன்னத்தில் தன் இதழ்களைப் பொருத்தினான் கணேஷ். அந்தக் குளிர்ந்த கன்னங்களின் ஸ்பரிஸத்தை உணர்ந்த உதடுகளின் ஈரம் காய்வதற்கு முன்னர், அதன் சுகத்தை மனது முழுமையாய் உணர்வதற்கு முன்னர், அவனைச் சற்றே தள்ளி, “பளாஆஆஆஆர்” என அறைந்தாள் லக்‌ஷ்மி. “எவ்வளவு சொன்னேன்…. எங்க போனாலும் டிஸ்ட்டன்ஸ் மெய்ண்ட்டெய்ன் பண்ணணும், இதெல்லாம் கல்யாணத்துக்கப்புறம் தான்னு” என்று எரிந்து விழுந்தாள்.

காமன் கோவில் சிறைவாசம் 

காலை எழுந்தால் பரிகாசம்

தழுவிடும் பொழுதிலே 

இடம் மாறும் இதயமே 

வியர்வையின் மழையிலே 

பயிராகும் பருவமே

ஆடும் இலைகளில் வழிகிற 

நிலவொளி இரு விழி

மழையில் நனைந்து 

மகிழும் வானம்பாடி

பாலு டிரான்ஸிஸ்ட்டரில் தொடர்ந்து காமத்தையும் தெய்வீகமாய்க் காட்டி,கொஞ்சிக் கொண்டிருக்க,அறை விழுந்த சப்தம் கேட்டு, இவர்களின் ப்ரைவசியை மதித்து சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த கலாவும், பிரசாத்தும் ஓடி வர,கோபம் குறையாமல் உடனடியாக தங்களின் தங்கும் அறைக்குள் சென்று,படாரெனக் கோபமாய்க் கதவைச் சாத்திக் கொண்டு உட்தாட்பாளிட்டாள்.

ப்யூட்டிஃபுல் லிரிக்ஸ்டி… அவர் அதை உணர்ந்து பாடியிருக்கார்… என்ன கவிதைனு பாரேன்…” பொதுவாகக் கேட்கும் பாடலனைத்திலும் கவிதையை மட்டுமே கவனித்து,ரசிக்கிற தன்மைகொண்ட கணேஷ்..

என்ன நியூவான்ஸஸ்னா… இத்தனைக்கும் அவர் முறையா கர்நாடக சங்கீதம்கூட கத்துக்கல“… சிறு வயதிலிருந்து பல வருடங்கள் முறையாகச் சங்கீதம் பயின்ற லக்ஷ்மி.

சங்கீதம் பெரிதாகத் தெரியாவிட்டாலும், சந்தம் பிறழாமல் கவி எழுதும் ஆர்வமுடைய கணேஷிற்கு அவளின் எண்ண ஓட்டம் நன்றாக விளங்கியது

எதுவும் பேசாமல், ஆடம்பரமாக இன்று நினைக்கப்படும் அன்றைய சாதாரணமான டிஸ்க் ப்ளேயரை ஆன் செய்து, கிராமஃபோன் தட்டைச் சுழலவிட்டு, அந்த நீடிலை எடுத்து மேலே வைத்தான்…. வைப்பதற்காகவே காத்திருந்தது போல அந்தக் கருவி ஓம்கார நாதானு சந்தான மௌகானமே“…. என்று ஆரம்பித்தது.

இருவருக்கும் மிகவும் பிடித்த ஆல்பம். கணேஷிற்கு தெலுங்கு தெரியாது,கர்நாடக இசையில் புரிதல் இல்லை. லக்‌ஷ்மிக்கு இரண்டும் அத்துபடி. சிறு சிறு அசைவுகளையும்,அந்தச் சுரங்களின் ஆழத்தையும்,தெலுங்குக் கவிதையின் அர்த்தத்தையும் மணிக்கணக்காகப் பேசுமளவுக்கு ஞானமுடையவள். பலமுறை அவனிடம் பகிர்ந்து கொண்டவள். அவனும் பல தமிழ்க் கவிதைகளை, பாடல்களை சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பான் அவளிடம். பெரும்பாலானவை அவரின் குரலால் அவர்கள் இதயம் தொட்டவை. 

சோஃபாவில் அமர்ந்திருந்த கணவன் அருகில் வந்தமர்ந்து, அவனது இடது மார்பில் தன் வலது கன்னம் புதைத்து விசும்பி, விசும்பி அழத் தொடங்கினாள்…. ஏதோ அவளின் தந்தையே மரணமடைந்தது போன்ற ஒரு உணர்வு.

“என்னடி… சின்னக் கொழந்தயாட்டமா… மனுஷான்னா போய்த்தான் ஆகணும் … அதுவும் எழுபத்து நாலு வயசு…” கணேஷ்.

கணவன் சொல்லக் கேட்டவுடன்,அவன் மேல் பொதிந்திருந்த கன்னத்தைச் சட்டென எடுத்து, சற்றே விலகி அவன் முகம் பார்த்தாள்… “என்னது இது… உங்க மனசு என்ன கல்லா… செத்தவாள நெனச்சு வேதனையா இல்லயா?“பொறிந்து தள்ளினாள்… இது அந்த ஷணத்தில் வந்த கோப உணர்வு மட்டுமே, தன் கணவனின் இளகலை முழுமையாய் உணர்ந்தவள். தனியாக நின்று ஒரு படையையே வேட்டையாடும் வல்லமை படைத்த வேங்கையின் மனோதிடம் உள்ள அவன் கண்களில் நீர் சொரிய நிற்கும் ஒரே இடம் அவளின் மடி மட்டுமே.

“இருக்குடி… இருக்கு…. ஆண்டாண்டு காலம் அழுது புறண்டாலும் மாண்டார் மீள்வரோ?“தத்துவமாய்ப் பேசி,அவளின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான்…

“அதுக்காக…” என்று அவள் தொடர ஷங்கர கழநிகளமூ… ஶ்ரீஹரி பதகமலமோ…..கிராமஃபோனில்,ஶ்ரீஹரியின் பாத கமலங்களைச் சென்றடைந்த அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்…. 

“இருந்தாலும் ரொம்பக் கல்லு மனசு… நான் செத்தாலாவது அழுவேளா, இல்ல அப்பவும் ஏதாவது தத்துவந்தானா?” தன் துக்கத்தைக் கோபமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்

அவளை நன்றாகப் புரிந்து கொண்ட அவன், அவளது கேள்வியில் கோபமுறாமல் பரிதாபம் கொண்டான் … மெதுவாக அருகே வந்து, தலைமுடி நடுவே கை வைத்து, முடியைக் கோதிவிட அவளும் சிலிர்த்துக் கொண்டு, உடனடியாய் நகர்ந்தாள்

“நோக்குத் தெரியாதாடி? எங்கப்பா ஐ.சி.யூ’ல இருக்கச்ச… வெண்டிலேட்டர் ரிமூவ் பண்ண டிசிஷன் எடுத்தவண்டி நான்… மரணம் சாஸ்வதம்… நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கார்… கடைசி ஒரு மாசமும் கஷ்டப்படாமப் போயிருக்கலாம் ..” ப்ராக்டிக்கலாக, ஃபிலசாஃபிக்கலாகப் பேசும் கணவனைப் பெருமையாகப் பார்த்தாலும், சாதாரண மனிதன் போல் அழாமல் இருக்கிறானே என்ற துயர் அவளிடம் இருக்கத்தான் செய்தது.

“எத்தனை நாள்?என்னக்காவது ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?” என்றவனிடம்,

“நேக்கு அதெல்லாம் தெரியாது… ஒண்ணு மட்டும் நிச்சயம்… மத்தவாள விடுங்கோ நானும் நீங்களும் ஒருத்தர் போய் இன்னொருத்தர் இருக்கப் படாது… படவே படாது… யாரு முதல்ல போனாலும் இன்னொருத்தரும் உடனேயே போயிடணும்… நான் பகவான்கிட்ட வேண்டிக்கிறதெல்லாம் அது ஒண்ணுதான்…”

உணர்ச்சி வசத்தின் உச்சத்தில் இருந்தவள் பிளம்பாய்ப் பிரித்தெறிந்த வசனம்… இதற்கு சீரியஸாகப் பதில் சொல்லக் கூடாதென்று முடிவெடுத்துவிட்டு, “ஹேஹேஹே.. ஸ்பீக் ஃபார் யுவர்ஸெல்ஃப்.. ஹவ் டு யூ நோ ஐ டோண்ட் ஹேவ் அ கர்ள் இன் மைண்ட்… அண்ட் ஐ டோண்ட் வாண்ட் டு எக்ஸ்டெண்ட் மை லைஃப் வித் ஹெர்?”என்று ஜோக்கடித்தான் கணேஷ் … 

கொன்னுடுவேன் ஜாக்கிரதை” என்று எதார்த்தமாய் மிரட்டிவிட்டு,“ஐ மீன் இட்…” என்றாள் லக்‌ஷ்மி. “சரிடி, சரிடி…” எனச் சமாதானமாய் பதில் சொல்லி,கிராமஃபோன் பிளேட்டை மாற்ற எழுந்து சென்றான்.

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி…. அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே …. 

 

என்று பாலுவின் குரல் தழுவத் தொடங்கியது… “ஞாபகம் இருக்கோன்னோ… இந்தப் படந்தானே.. பூர்ணம் விஸ்வநாதனும் சௌகார் ஜானகி கேரக்ட்டரும்…. சரிதானே? கே.பி.யும் என்ன மாதிரியே நினச்சிருக்கார் பாருங்கோளேன்…” என்றிழுத்த லக்‌ஷ்மியை… “உனக்கு தமிழ் மூவி பத்தி ரொம்பச் சொல்லித் தந்துட்டேன்.. எல்லாம் ஏன் தப்பு… க்ளீஷேஸ் … மெலோட்ராமாஸ்….”

“இருங்கோ… எது ட்ராமா? எது க்ளீஷே? உணர்வுப் பூர்வமா, தானா வந்தா எதுவுமே மெலோட்ராமா இல்ல… இத ட்ராமானா, இந்தக் கவிதைய என்ன சொல்வேள்?”

கானம் பாடிடும் சிறு குயில் நீயோ

காற்றில் கலந்து கரைந்ததும் சரியோ?

மேடையில் மயக்கிய மேதையும் நீயோ

பாடையில் போய்விழும் பாவந்தான் ஏனோ?

பாடியே மாந்தரின் பாரந்தீர்த்த நீயோ

வாடியே வீழ்ந்திட வானகம் போனாயோ?
 

தேவர்கள் பூரித்த தேனிசை நீயோ

வானவர் மகிழ பூவலகு நீத்தாயோ?

ஆயிரம் பாவலரை அழகாக்கியவன் நீயோ

பாயிரம் பலதையும் பல்சுவையாக்கி பண்டிதனானாயோ?

மானுடர் வாழ்க்கையில் மறக்கொணாத் துயர்களையும்

ஊனுடல் விடுத்து உன்குரலால் துரத்தினையோ? …

“இன்னும் போயிண்டே இருக்கே… எல்லாத்தையும் படிக்கட்டா?” இரவு முழுக்க பாலுவின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஈரடிப் பாவாய் கிட்டத்தட்ட இருபது பக்கங்களுக்கு மேல் கிறுக்கி,முழு இரவும் தூங்காமல் அழுது அழுது,கண்ணீர் வற்றிப் போய் இப்பொழுது எதற்கும் அழாதது போல் வீராப்புப் பேசும் கணவனின் கவிதைகளிலிருந்து ஒரு சிறு பகுதியைப் படித்துக் காட்டி அவனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் லக்‌ஷ்மி.

தற்போது,தனது இடது கன்னத்தை லக்‌ஷ்மியின் வலது மார்பின்மீது சரித்து,ஆதரவுக்காக அன்னையைத் தழுவும் சிறு சிசுவாகச் சரிந்தான் கணேஷ்.

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்

சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்

நான் உறங்கும் நாள் வேண்டும்

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்

என் கண்ணில் நீர் வேண்டும்

சுகமாக அழ வேண்டும் …….

 

வாழ்வின் எல்லா நிலைகளிலும் கூடவே வந்த பாலு,தன் இறுதிப் பயணத்தின் வலியைப் போக்கவும் இரு ரசிகர்களின் கூடவே வந்து கொண்டிருந்தார்,அந்த இசைத்தட்டிலிருந்து …. 

 

 வெ. மதுசூதனன்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad