Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2020 அதிபர் தேர்தல் முடிவுகள்

அதிபர் தேர்தலுக்கு ஒரே நாள் மட்டுமேயுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஊகிக்கப்படுகிறது. பொதுவாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தேர்தல் நாளன்றே, நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும். விதிவிலக்காக, 2000ஆம்ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பல வழக்குகள், வாக்கு மறு எண்ணிக்கை என்று இழுபறியானது. அதற்குமுக்கிய காரணம் அப்போதைய வேட்பாளர்களான ஜார்ஜ் புஷ் மற்றும் அல் கோர் இருவருக்குமிடையே நிலவிய மிகக்குறுகலான வாக்கு வித்தியாசங்கள். வாக்கு எண்ணிக்கைப்படி அல் கோர் வெற்றி பெற்றிருந்தாலும், பிரதிநிதிகளின் வாக்குஇழுபறியை உண்டாக்கியது. அதிபர் பதவியை அடைய 270க்கும் அதிகமான பிரதிநிதிகளின் வாக்கு தேவைப்படும்நிலையில், ஃப்ளாரிடா மாகாணத்தின் பிரதிநிதிகள் வாக்களிப்பதற்கு முன்னர் அல் கோர் 266, ஜார்ஜ் புஷ் 246 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்றிருந்தனர். 300க்கும் சற்றே கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் ஜார்ஜ் புஷ்முன்னணியிலிருந்தார். பல சுற்றுகள் நடந்த வாக்கு மறு எண்ணிக்கை மாறுபட்ட முடிவுகளைத் தந்தன. ‘ஆப்செண்டி பாலட்’ (absentee ballot) எனப்படும் அஞ்சல் வழி வாக்குகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் ஃப்ளாரிடாவின் 25 பிரதிநிதிகள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தனர். இறுதியில் அவர்கள் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வாக்களிக்க அவர் 271 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று அதிபரானார்.

கொரோனா பெருந்தொற்றால் இம்முறை அஞ்சல் வாக்குகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பலமாநிலங்கள் ஏற்கனவே வாக்குச் சாவடிகளை இயக்கி வருகின்றன. ஏறக்குறைய 24 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்ற நிலையில் 15.3 கோடி மக்கள் மட்டுமே வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர். இதுவரை வாக்களிக்கப் பதிவு செய்யாதவர்கள், தேர்தல் தினமான நவம்பர் மூன்றாம் நாளுக்கு முன்னர் பதிவு செய்து வாக்களிக்கலாம். இதுவரையில் 7 கோடிக்கும் அதிகமானோர் நேரடியாகவோ, அஞ்சல் மூலமோ வாக்களித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் இந்தத்தேர்தலில் சுமார் 15 கோடி மக்கள் வாக்களிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விகிதாச்சார அடிப்படையில் கடந்த100 ஆண்டுகளில் கண்டிராத எண்ணிக்கையாக அமையக்கூடும் இது.

பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அஞ்சல்மூலம் வாக்களிப்பதிலுள்ள சிறு தயக்கமே இதற்குக் காரணமென்றும், தங்களது வாக்கு சரியாகச் சென்றடைந்துஎண்ணப்பட வேண்டுமென வாக்காளர்கள் முனைகிறார்கள் என்றும் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எப்படியென்றாலும் ஜனநாயக நாட்டில் தங்களது வாக்கின் வலிமையை நிலை நிறுத்த மக்கள் கொரோனா தொற்றுக்குறித்த இன்னல்களைப் பொருட்படுத்தாது வாக்களித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

நேரடியாக வாக்குச் செலுத்த வரமுடியாத நிலையிருந்தால் மட்டுமே அஞ்சல் வழி வாக்குரிமை அளிக்கப்படும் என்று ஒருசில மாநிலங்கள் உறுதியாக இருக்க, பல மாநிலங்கள் இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. அஞ்சல் வழிவாக்குக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, வாக்குச் சீட்டைத் தபாலில் அனுப்பி வருகின்றன இம்மாநிலங்கள். கலிஃபோர்னியா போன்ற மிகச் சில மாநிலங்கள் இது போன்ற விண்ணப்பங்கள் ஏதுமின்றி பதிவு செய்த வாக்காளர் அனைவருக்குமே வாக்குச் சீட்டைத் தபாலில் அனுப்பி விட்டன. இந்த வாக்காளர்கள், நேரடியாகச் சென்றோ, அஞ்சல்மூலமாகவோ தங்களது வாக்கைச் செலுத்த முடியும்.

இப்படிப் பல்வேறு முறைகளில் வாக்காளர்கள் வாக்களித்து வந்தாலும், வாக்கு எண்ணிக்கைகளில் சில சிக்கல்கள் தோன்றக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அஞ்சல் வாக்குகள் நவம்பர் மூன்றாம் தேதிக்குள் அஞ்சல் நிலையங்களில் சேர்க்கப்பட்டு, முத்திரையிடப்பட வேண்டும். இந்த வாக்குகள் தேர்தல் ஆணையத்தைச் சென்றடைய ஓரிரு வாரங்கள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க அஞ்சல் சேவை நிறுவனம் (United States Postal Service) இந்தச்சவாலை எதிர்ப்பார்த்து விரைவுச் சேவைகளைத் தயார்ப்படுத்தி வந்தாலும், தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதமேற்படுமென்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். மேலும் இவ்வகை அஞ்சல் வாக்குகள் தேர்தல் அலுவலகத்தைச் சென்றடைய வேண்டிய கடைசி நாள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. உதாரணத்துக்குகனெக்டிகட், டெலாவர் போன்ற மாநிலங்கள் தேர்தல் தினத்தன்று ஏழு மணிக்குப் பின்னர் வந்து சேரும் வாக்குகள்செல்லாது என அறிவித்துள்ளன. இதற்கு மாறாக கலிஃபோர்னியா மாநிலம் தேர்தல் நாளன்று அஞ்சலகத்தில் சேர்க்கப்பட்டுஅதன் பின்னர் 17 நாட்களுக்குள், அதாவது நவம்பர் 20க்குள், தேர்தல் ஆணையத்துக்கு வந்து சேரும் வாக்குகள்செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது. இப்படி வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு காலக்கெடு விதிகளைக்கொண்டுள்ளதால் முடிவுகள் தாமதமாவதுடன் கூடவே பெரும் குளறுபடிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதுவரையில், குடியரசுக் கட்சி சார்பாக பதிவு செய்திருந்தவர்களை விட இரு மடங்கு ஜனநாயகக் கட்சியினர் வாக்களித்துள்ளனர். இவர்கள் யாருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக இருப்பினும், தாங்கள் சார்ந்தகட்சிக்கே வாக்களித்திருப்பார்கள் என்பது  பொதுவான கணிப்பு.

2016ஆம் ஆண்டு தேர்தலில் விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிச்சிகன் மாநிலங்களை மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றினார் திருவாளர் டிரம்ப். ஆனால் இம்முறை இம்மாநிலங்கள் இரண்டு கட்சிகளுக்கிடையே  ஊசலாடி வந்தாலும் வல்லுனர்களின் கணிப்புபடி இவை முன்னாள் துணை அதிபரான ஜோ பைடனுக்கு சாதகமாக அமையக்கூடுமெனத் தெரிகிறது . 

நெப்ராஸ்கா, அலாஸ்கா, மிசௌரி போன்ற வழமையான  குடியரசுக் கட்சி சார்புள்ள மாநிலங்களில்  மிகக் கடுமையானபோட்டி நிலவினாலும், தற்போது வரை  அதிபர் டிரம்பின் கரம் மேலோங்கியுள்ளது . 

இதற்கிடையே, ‘ரெட் ஸ்டேட்’ (Red State) (குடியரசுக் கட்சியினரின் கோட்டை) என்று அறியப்படும்  டெக்சாஸ்மாநிலத்தைக்  கைப்பற்ற திருவாளர் ஜோ பைடன் பெருமுயற்சி எடுத்து வருகிறார். இந்திய வாக்காளர்கள் அதிகமுடைய இம்மாநில வாக்குகளைக் குறி வைத்து அதிபர் டிரம்ப ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கவர்ந்திருந்தாலும், கமலா ஹாரிஸை முன்னிறுத்தியதன் மூலம் சிறிய சலனத்தை உண்டாக்கியுள்ளது ஜனநாயகக் கட்சி. இருப்பினும், இதுவரையிலான  கருத்துக் கணிப்பின்படி குடியரசுக் கட்சி குறுகிய  விகிதத்தில் முன்னணியில் உள்ளது.   இதனைமாற்றிட திருவாளர் பைடனின் குழு ஏகப்பட்ட பணம் செலவழித்து விளம்பர உத்திகளை மேற்கொண்டு வருகிறது.

ஒஹையோ, ஃப்ளாரிடா, ஜார்ஜியா, வட கரோலினா மாநிலங்களில் வெற்றி பெறுபவருக்கு அதிபராகும் வாய்ப்புகள்அதிகமுள்ளது. இருப்பினும் மேலே சொல்லப்பட்ட விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிச்சிகன், நெப்ராஸ்கா, அலாஸ்கா, மிசௌரி, டெக்சாஸ்  மாநிலங்கள் சேர்ந்து  தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்குமென எதிர்பார்க்கலாம். 

இரண்டு கட்சிகளுக்கிடையே இப்படிக் கடுமையான போட்டி நிலவினாலும், தேர்தல் முடிவுகளை, குறிப்பாக அடுத்தஅதிபரை தெரிந்து கொள்வது தாமதமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது அஞ்சல் வாக்குகளைப் பொறுத்தவரையில், வாக்காளர்  குறித்த தகவல் முன்னரே சரிபார்க்கப்பட்டு தயார் நிலையிலிருந்தாலும் இவை தேர்தல் தினமான நவம்பர் 3 ஆம்நாள் தான் எண்ணப்படும் . தேர்தல் நாளைய எண்ணிக்கைப்படி  அறுதிப் பெரும்பான்மை அல்லது மிகப் பெரிய வாக்குவித்தியாசம் இல்லாத பட்சத்தில் அஞ்சல் வாக்குகள் வந்து சேரும் இறுதி தினம் வரை முடிவுகள் இழுபறியாகக் கூடும் . இதனால் அடுத்த அதிபர் யாரென்றறிய சில நாட்களாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்வரும் காரணங்களால் முடிவுகளில்  தாமதமேற்படலாம் –

அஞ்சல் வாக்குக்கான காலக்கெடு:

ஏற்கனவே சொன்னது போல அஞ்சல் வாக்கு வந்து சேரவேண்டிய காலக்கெடு மாநிலத்துக்கு மாநிலம்வேறுபடுகிறது. இம்மாநிலங்களில் தேர்தல் தின எண்ணிக்கையின் படி ஒருவர் அறுதிப் பெரும்பான்மை பெறாதபட்சத்தில் கடைசி வாக்கு எண்ணப்படும் வரை காத்திருக்க நேரலாம். 

அஞ்சல் வாக்குச் சீட்டுப் பரிசீலனை:

வாக்குச் சீட்டுகளைப் பிரித்து எண்ணாவிட்டாலும், வாக்குச் சீட்டின் உண்மைத் தன்மையை சில மாநிலங்கள் உடனுக்குடன் உறுதிபடுத்தி வருகின்றன. ஆனால் சில மாநிலங்கள் இவற்றை தேர்தல் தினம் வரை தள்ளிவைத்துள்ளனர். இதன் படி நவம்பர் மூன்றாம் நாள் இந்த அஞ்சல் வாக்குகள் பிரிக்கப்பட்டு, உண்மைத்தன்மை அறியப்பட்ட பின்னர், எண்ணிக்கைக்கு அனுப்பப்படும். இவற்றை ஊழியர்கள் கையாண்டு பரிசீலிக்கவேண்டுமாதலால் பெருத்த தாமதம் எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று வாக்கு: 

ஏற்கனவே அஞ்சல் மூலம் வாக்களித்துவிட்டு, தங்கள் வாக்கை மாற்ற விரும்புவோர் குறிப்பிட்ட சிலகாரணங்களுக்காக அனுமதிக்கப்படுவர். இது எண்ணிக்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

முடிவுகள் தாமதமடைவது ஒரு புறமிருந்தாலும், குளறுபடிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகலாம் என்று அஞ்சப்படுகிறது. 

வாக்குப்பெட்டிகள் சேதம்:

ஓரிரண்டு நகரங்களில் அமெரிக்க அஞ்சல் சேவை நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை எரிக்கும் முயற்சிகள் அரங்கேறியுள்ளன.

வாக்குச்சீட்டில் முறைகேடு:

பென்சில்வேனியத் தேர்தல் பணியகம் ஒன்றில் ஒன்பது வாக்குசீட்டுகள், குப்பைத் தொட்டியில் கிடந்ததாக ஒருகுற்றச்சாட்டு எழுந்தது. இராணுவத்தினர் அனுப்பி வைத்த அஞ்சல் வாக்குகளைப் பரிசீலனை செய்யநியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர் ஒருவர் இதனைச் செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த ஒன்பதுவாக்குகளில் ஏழு வாக்குகள் திருவாளர் டிரம்புக்கானவை. இது ஜனநாயக முறைப்படியான தேர்தல் நெறிகளை மீறும்செயல்; தேர்தல் முடிவுகளை அர்த்தமற்றதாக்கிவிடும் செயல். 

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அதிபர் டிரம்ப் அஞ்சல் வாக்குகள் மூலம் பல வகையான பித்தலாட்ட, மோசடிகள் நடப்பதாகவும் அவற்றை ஏற்பதில் தனக்குப் பெரும் தயக்கமிருப்பதாகவும் சொல்லி வருகிறார். மேலும் தேர்தல் முடிவுகள் நவம்பர் மூன்றாம் நாள் நள்ளிரவுக்குள் கணிக்கப்படாவிட்டால், எதிர்க்கட்சிகள் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது; அத்தகைய முடிவை ஏற்கப்போவதில்லை என்றும் அச்சுறுத்தி வருகிறார்.

மேலும் அஞ்சல் மூலம் வாக்களித்துவிட்டு நேரடியாக வந்தும் வாக்களிக்க முயற்சிகளை மேற்கொள்ள எதிர்கட்சியினர் முனைவர். அதனால் குடியரசுக் கட்சியின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் (Poll watchers) மிகக் கவனமாக இருக்கவேண்டுமென்றும், சந்தேகப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றும் அதிபர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் தங்களுக்குச் சாதகமாகத் தோன்றுவதால் திருவாளர் ஜோ பைடன், இதைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக அமைய நேர்ந்தால் இவரும் சந்தேக ஆயுதத்தைக் கையிலெடுக்கக் கூடும். 

முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமையவில்லையெனில் இருவருமே தேர்தலின் நியாயத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவர். அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில், இதற்கு முன்னர் ஐந்து முறை நிகழ்ந்ததைப் போல, மக்கள்வெற்றியாளர், தேர்தல் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டால் தேர்தல் களம் ரணகளமாகும்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், புதிய அதிபர் பதவியேற்கும் வரையிலும், அதற்குப் பின்னரும் இந்தச் சர்ச்சைகள் தொடரப்போவது உறுதி. 

அமெரிக்க அரசியலமைப்பின் தொன்மையான கட்டமைப்பு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் விதிகள் ஏற்கனவேசிக்கல்கள் நிறைந்தது. கொரோனா தொற்றுக் காரணமாக உருவாகியுள்ள இந்தச் சூழலில் நடைபெறும் 2020 ஆம் ஆண்டுதேர்தல் வரலாற்றில் இடம் பெறப்போவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அது நல்ல விதமான, நூதனத் தேர்தல்அமைதியாக நடந்து முடிந்ததற்கான வரலாற்றுப் பதிவாக இருக்குமென்று நம்புவோமாக.

  • ரவிக்குமார்

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad