Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள்.

எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் அல்ல, அவர்களுடனான எங்களின் நேரம். என்பதைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது அண்மைய நாட்கள்.

நேரத்தைப் பார்க்கிறேன் எங்கள் வீட்டுச் சுவர்க்கடிகாரம் காலை எட்டு மணியைக் காட்டியது. இரண்டு வாரங்களுக்குப் பாடசாலை விடுமுறை என்பதால் காலை ஒன்பது மணிக்கு மேல் ஆகியும் கண்ணைக் கசக்கியபடி ஒவ்வொரு மூலையில் குந்திக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டுச் சிட்டுக்கள் இரண்டும் இன்று குருவிகளுக்கு முன்னரேயே எழுந்து விட்டதுதான் அதிசயத்திலும் அதிசயம். 

இன்று மாலையில் “வர்ணத்தில் கிறிஸ்துமஸ்” (Christmas in Color) பார்க்கத் திட்டமிட்டிருந்ததே இதற்குக் காரணம். நவம்பர் 27 முதல் ஜனவரி 3ஆம் திகதி வரை இந்த வர்ண விளக்கு அலங்கார விழா, மினசோட்டா மாநிலத்தின் சாக்கோபி நகரில் மிகவும் புகழ் பெற்ற ‘வேலி ஃபேர்’ (Valleyfair) நீச்சல் தடாக வளாகத்தில் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம் ஏழு மணி தாண்டி ஒன்பது மணி வரையும் சூரியனின் உக்கிரம் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. இப்போது ஏழு மணிக்கே காரிருள் எங்கும் நிறைந்திருந்தது. அடித்து ஓய்ந்த பனிப் புயலில் சிக்கி வீட்டில் உள்ள மரங்கள் எல்லாம் வெள்ளைப் பூக்கள் சூடி வரும் புத்தாண்டை வரவேற்கக் காத்திருந்தன. 

பனி நிறைந்த வீதிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மத்தியிலும் ஆளரவம் குறைந்து மிகவும் அமைதியாக இருந்தது. வீட்டில் இருந்து சரியாக இருபது நிமிடக் கார்ப் பயணத்தில்  சாக்கோபி நகரைச் சென்றடைந்த போதுதான் புரிந்தது ஊரே அங்கு திரண்டிருப்பது. 

நாங்கள் மொத்தமாக 30 நிமிடங்களுக்கு மேல் அங்கிருந்தோம். எங்கள் டிக்கெட் நேரம் மாலை 8:30 – 9:00 மணி வரை இருந்தது, ஆனால் நாங்கள் மாலை 8:10 மணியளவில் வந்து சேர்ந்தோம். 

ஏற்கனவே மூன்று வரிசையில் கார்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒரு வரிசையாக மாற்றப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகப் பரிசோதகர்களால்  உள்ளே அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தன. எனவே எங்களுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. 

பரிசோதகரிடம் “பார்கோட்”டை ஸ்கேன் செய்தபின், ஊர்ந்து செல்லும் வரிசையில் என் காரையும் மெதுவாக உள் நுழைத்தேன். 

நுழைவாயிலில் கார்கள் உள்ளே ஓட்டிச் செல்லவென்று அலங்கார விளக்குகளால் ஆன ஒரு பெரிய “சுவர்” இருந்தது. பார்ப்பதற்கு அழகான கோட்டைச் சுவர்போல இருந்தாலும் அது உண்மையான சுவர் அல்ல வர்ண விளக்குகளால் ஆன அலங்காரம் என்பதை வர்ண விளக்குகள் உணர்த்திக் கொண்டிருந்தன.

சுமார் ஒரு மைல் தூரம் கொண்ட வளைவுகள், நெளிவுகள், வட்டங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஈர்ப்பில் ‘கிளாசிக்’ விடுமுறைப் பாடல்களுடன் ஒத்திசைக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான வர்ண எல்.ஈ.டி விளக்குகள் சூழ்ந்திருந்தன.

உண்மையான சுற்று வட்ட நேரம்  20 நிமிட கார் இயங்கும் தூரத்துக்கு அமைவாகச் செய்யப் பட்டிருந்தது. இது வானொலியில் (87.9 எஃப்.எம்) கேட்கக்கூடிய இசையின் நேரத்திற்கு ஒரு ஒளி காட்சி என்பதற்கு அமைவாக இயங்கிக் கொண்டிருந்தது. நீண்ட நாட்களாக வெளியில் செல்லாமல் அடைபட்டிருந்த எங்கள் எல்லோருக்கும் இசையுடன் கூடிய கண்கவர் காட்சி நம் அனைவருக்கும் விடுமுறை மனப்பான்மையை ஏற்படுத்தியது.

வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக ஆனால் மிகவும் மெதுவாக நகர்ந்ததன. அதனால் நாம் அனைத்தையும் உண்மையில் மிகவும் நிதானமாகப் படம் எடுக்கவோ இரசிக்கவோ முடிந்தது. 

போகும் பாதைகள் எங்கும் ஒளிரும் பொருள்கள் கண்களையும் மனதையும் மகிழ்வித்தபடி இருந்தன. 

பார்க்கும் இடமெங்கும் லைட்-அப் கதாபாத்திரங்கள் நிறைந்திருந்தன. அவை இசையுடன் கூடவே தாமும் வாயசைத்துப் பாடின. (ஒவ்வொரு பாத்திரமும் நன்றாக, அவர்கள் பாடுவது போல் இருந்தன).

மிகவும் உயரமான கிறிஸ்துமஸ் மரம் துலுத் நகரில் உள்ள ‘பென்ட்லிவில்’ இல் இருந்ததைப் போன்று மிகவும் அழகான வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பார்வையாளர்கள் தங்கள் – தங்கள் கார்களில் தங்கியிருக்கவும், இசையுடன் கூடிய முழு அனுபவத்திற்காக அவர்களின் ரேடியோக்களை ஒத்திசைக்கவும் முடியும் என்பதால், ஒளிக்காட்சி விடுமுறை மனப்பான்மையைப் பெறுவதற்கான பாதுகாப்பான வழியாக இந்தக் ‘கொரோனா’ பெருந் தொற்றுக் காலத்தில் மிகச் சிறந்த கண்கவர் பொழுதுபோக்காக இதை நாம் உணரலாம். 

-தியா-

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad