\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை

அமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை

அமெரிக்காவின் வெளிநாட்டு விவகாரம் உள் நாட்டு சனநாயக மறுமலர்ச்சியைப் பொறுத்தே அமையும் என்று சொல்லியிருக்கிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபர் ஜோ பைடன்..

சென்ற சனவரி 6ம் திகதி வாஷிங்டன் டிசி யில் நடைபெற்ற விடயம் அமெரிக்கப் பொதுமக்களும், உலகும் இதுவரை காணாத, அதீத கற்பனையில் உருவாக்கப்பட்ட சினிமாப் படம் போன்று, அறநெறிக்கு மாறான, குரோதம் மிகுந்த வெறியாட்டம் போன்று காணப்பட்டது.  அமெரிக்க சனநாயத்தின் தேவாலயம் போன்றது  ‘கேப்பிட்டல்’ எனப்படும் அமெரிக்க மத்திய அரசின் தலைமைச் செயலகம். காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை அவர்களது காரியாலயங்களை உள்ளடக்கிய இக்கட்டிடம் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு, சிதைக்கப்பட்டது. 

இதைத் தலைமை தாங்கி ஏற்பாடு செய்யதவர், வேறுயாருமே இல்லை. அமெரிக்காவின் 45வது அதிபரும், அவர் சார்ந்திருக்கும் பழமைவாதக் கட்சியின் தீவிரவாதப் போக்குள்ள உறுப்பினர்களும் தான். இந்தக் குரோதம் மிகுந்த அவலம், கடந்த 4 வருடங்களாக, இந்நாட்டில் அரங்கேறி வந்த அராஜக அரசியலை அவதானித்து வரும், விவரம் தெரிந்த பலருக்கு அதிர்ச்சித் தரவில்லை .

சனவரி மாதம் 20ம் திகதி, 2021இல் ஜோ பைடன் அவர்கள் அடுத்த அமெரிக்க அதிபராகவும், . கமலா ஹாரிஸ் அவர்கள் துணை அதிபராகவும் பொறுப்பேற்க உள்ளனர். அன்றைய தினம் பைடன் அவர்கள் ‘அமெரிக்க மீண்டு விட்டது’ (America is back) என்று குரல் கொடுத்தாலும் கொடுக்கலாம். 

ஆனால் 46 ஆவது அதிபராகப்போகும் பைடன் எதிர்நோக்கவுள்ளவை இலகுவான காரியங்கள் அல்ல. குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கைகளைப் பொறுத்தளவில் இரண்டாம் உலக போருக்குப் பின்னர், உலக தலைமையை ஏற்ற அமெரிக்கா, மீண்டும் அந்த நிலைக்கு வர எத்தனை வருடங்களாகும் என்பதும், எத்தனை உலக நாடுகள் அதற்குத் துணை நிற்கும் என்பது பெரும் கேள்விக்குறியே.

ஐரோப்பிய நேட்டோ (NATO) சம்மேளனம் மற்றும் ஆசிய நாடுகள் பலவும் இத்தனை ஆண்டுகளாக உலகில் நாட்டாண்மை செய்து வந்த அமெரிக்கா, மீண்டும் உலக நாடுகளின் ஆதரவை எதிர்பார்க்கும் நிலைக்கு  வந்தள்ளதை நினைத்து சற்று இளைப்பாறலாம். சர்வதேச தலைமை அமெரிக்காவின் உரிமை அல்ல, எனவே மீண்டும் சர்வதேச சனநாயக மறுமலர்ச்சி மாநாட்டை பைடன் அவர்கள் நடத்த விரும்புகிறார். ஆயினும் உள்நாட்டில் சனவரி 6ம் திகதி நடைபெற்ற சம்பவம், காங்கிரஸில் நடைபெற்ற சம்பவங்கள், உலகரங்கில் எம் நாட்டின் நன்மதிப்பை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது.

9/11 தீவிர வாதத்தின் பின்னர் அமெரிக்காவை ஆதரிக்கும் உலகநாடுகள் பலவும் பரிவு செய்திகளை அனுப்பின. நேட்டோ சம்மேளனம் முதன் முறையாக அதன் கூட்டுப் பாதுகாப்பு பிரகடனத்தை அமுலுக்குக் கொண்டு வந்து அமெரிக்காவைப் பாதுகாக்க முன்வந்தது. ஆனாலும் இச்சம்பவங்கள் உலகையே திகைப்புடன் மலைக்க வைத்தது. முக்கியமாக ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ‘அமெரிக்க நாட்டின், சனநாயகக் கொள்கைக்கு எதிரானவர்கள் வாஷிங்டன் டீசியிலிருந்து வரும் புகைப்படங்களைப் பார்த்து குதூகலம் அடைவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலை நாட்டு சனாநாயகம் இது போன்றதொரு அரசியல் அராஜக் கொடூரங்களை அண்மைக்காலத்தில் பார்த்ததே இல்லை எனலாம்.

இச்சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பைடன் அவர்கள் ‘நாம் பண்பு, மரியாதை, பொறுமை உடைய மக்கள், அது தான் நாம், அதுவே எமது வரலாறு’ என்றார். நாடு நிச்சயம் இப்பேர்ப்பட்ட தலைமைப் பண்புகளுடைய தலைவரை வரவேற்றாலும், அமெரிக்கர்கள் சிலர் பண்பு, மரியாதை, பொறுமையைத் தொடர்ந்து பேணாதவர்கள் என்பதும் நாம் அறிந்த விடயம். வரலாற்று ரீதியில் எடுத்துப் பார்த்தால் 1814இல் பிரித்தானியப் படைகள் அமெரிக்கத் தலைமைக் கட்டடத்தை வலுகட்டாயமாகப் புகுந்து சிதைத்தனர். அந்நியர் அவலம் கொடுத்தனர், ஆயினும் உள்நாட்டுத் தீவிரவாதிகள் அமெரிக்கத் தலைமையகத்தைச் சிதைத்தது இதுவே முதற் தரம். அதுவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் தோற்றதை ஒப்புக் கொள்ளாமல், 50 மாநிலங்களில் நடைபெற்ற பல சுற்று வாக்கு மறு எண்ணிக்கைகளுக்குப் பின்னரும், உயர் நீதிமன்றம் உட்பட 60 நீதிமன்ற சட்டத்தோல்விகளின் பின்னரு அமெரிக்க சனநாயத்திற்கே சேறு அள்ளிப் பூசுவது போன்று சூழ்ச்சியில் ஈடுபட்டார். அமெரிக்க காங்கிரைஸை சூறையாடிய  காடையரை அனுப்பி வைத்ததே அதிபர் டிரம்பும், சனநாயகத்திற்கு எதிரான அவரது சகபாடிகளுமேயாகும்.

ஆயினும் அமெரிக்கக் காங்கிரஸ் சுமார் 8 மணித்தியாலத் தடங்கலின் உள்நாட்டுத் தீவிரவாதிகள் கட்டடத்தை விட்டு வெளியேற்றப் பட்ட பின்னர் தொடர்ந்து கூடி அடுத்த நாள் காலை,  ஜோ பைடன் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிபடுத்தி அறிவித்தனர். நாட்டின் அரசியலமைப்பின் மீது படிந்த இந்த இரத்தக் கறை இலகுவாக அகன்று விடாது என்றார் ஜனனாயக கட்சி செனெட்டர் சக் ஷூமர். 

ஜார்ஜியா மாநில மக்கள் வாக்குகள் தங்களுக்குச் சாதகமாக வரவில்லை என்பதால், வெறுப்படைந்த இனத்துவேஷக் குழுவான ‘கூ க்ளக்ஸ் க்ளான்’ அங்கத்துவன் ஒருவன், அந்த மாநில தலைமைக்கட்டிடத்தில் மாநில செயலாளர் பிராட் ராஃபன்ஸ்பேகரைக் கொல்லத் தேடினான். இதைப் போலவே டிசம்பர் 2020இல் ‘பிரவுட் பாய்ஸ்’ எனும் இன்னுமொரு இனத்துவேஷக் குழு வாஷிங்டன் டீசி தலை நகரை முற்றுகையிட்டு சேதங்களை உருவாக்கினர். மேலும் உளவுத் துறையின் ஆய்வு ஒன்று, டிரம்ப் வெல்லாததால்  மிச்சிக்கன் ஆளுநர் கிரெச்சன் விட்மரைக்  கடத்த திட்டமிட்டதாகத் தெரிவிக்கிறது.

தமிழில், ‘ஒரு பொய்யைக் காக்க ஒன்பது பொய் சொல்லவேண்டும் ஆனால் உண்மைக்கு உதவ வேறு ஒன்றும் தேவையில்லை ‘ என்பார்கள். ஆனால் அமெரிக்கா நாட்டில் இத்தகைய இனவெறிக் குழுவினருக்குப் பொய்யே பலம் என்றாகி விட்டது. உண்மையை விட உணர்ச்சிவசப் படவைக்கும்  இவர்களது சூழ்ச்சிக் கலகங்கள் பல மில்லியன் மக்களைக் குழப்பிவிடுகிறது. 

மேலும் அமெரிக்காவில் சூழ்ச்சிகளைச் செய்தியாக வெளியிடும் ஃபாக்ஸ் , நியூஸ் மாக்ஸ் போன்ற தாபனங்கள், கியூ-ஆனன் எனும் இனவெறிக் குழு போன்றவை பல பொய், வதந்திகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து அமெரிக்கரை சனநாயகமற்ற பாதையில் அழைத்துச் சென்றுள்ளன. இவர்களால் ஈர்க்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்கர் கொடூர, சமூக விரோத கொள்கைகளை நம்பி தீவிரவாதச் செயல்களில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒரு சாரார் ‘தேசியம் பற்றிய சிந்தனை என்றும் ‘தேசப்பற்று’ என்றும் பிரச்சாரம் செய்கின்றர். ஆனால் தேசியம் யாருக்கு என்று எடுத்துப் பார்த்தால் அது அமெரிக்க வெள்ளையருக்கே என்று தெளிவுபடுகிறது. இந்த சமூக விரோதிகள் இம்முறை தோற்றிருக்கலாம், ஆனால் இவர்கள் அடுத்த முறை அமெரிக்க சனநாயகத்தையே ஆட்டிப்பார்க்கலாம்.

எனவே அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் சர்வதேத சனநாயக மறுமலர்ச்சிக்கு முன்னர் உள்நாட்டில்  சனநாயக மறுமலர்ச்சிக்கு வழிவகுப்பது அவசியம். எமது அரச தாபனங்கள், மக்கள் பிரதிநிதிகள், மாநில ஆளுநர்கள், மேயர்கள், காவல், பாதுகாப்புப் படைகள் போன்ற யாவரும் அமெரிக்க சனநாயகத்தைப் பேணப் பிரமாணம் எடுப்பது எமது நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம். அமெரிக்காவின் உள்நாட்டு நடவடிக்கைகள் வைராக்காயமுள்ளதாகப் பேணுதல் வெளிநாட்டு  கொள்கைகளை வகுப்பதை விட அத்தியாவசியம். 

  • ஊர்குருவி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad