\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவின் புதிய தலைமை

Filed in தலையங்கம் by on February 1, 2021 0 Comments

பல மாதங்களுக்குப் பிறகு, பல வழக்குகள், கலவரங்களுக்குப் பிறகு 2020 அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிக வாக்கு எண்ணிக்கை (81,283,485) பெற்றவர் ஜோ பைடன்; அதிபர் பதவியேற்கும் மிக அதிக வயதுடைய நபர்  ஜோ பைடன் – பதவியேற்ற தினத்தன்று அவரின் வயது 78 ஆண்டுகள் 61 நாட்கள்; 30 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) பின்னர் 8 ஆண்டுகள் துணை அதிபராகவும் பதவி வகித்த ஜோ பைடன் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக அதிக அனுபவம் வாய்ந்த அதிபர். அவருக்குத் துணையாகப் பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ், துணை அதிபராகும் முதல் பெண்மணி, முதல் கறுப்பினத்தவர், அமெரிக்க அரசியலில் மிகப்பெரும் பதவிபெறும் முதல் தெற்காசியர் என்று பல பெருமைகளுக்குரியவர். கோவிட் விட்பெருந்தொற்றுக்கு நடுவே நடைபெற்ற இந்தத் தேர்தலில் 159.7 மில்லியன் மக்கள் நேரடியாகவோ, தபால் மூலமோ வாக்களித்துள்ளனர். கடந்த நூறாண்டுகளில் காணப்படாத வாக்கு சதவிகிதம் இது. 

இவ்வகையில் 2020 அதிபர் தேர்தல்,அமெரிக்க அரசியல் வரலாற்றில் பல புதிய பெருமைமிகு சாதனைகளைப் பதிந்துள்ளது.  அதே நேரம் மிகுந்த பதட்டத்துடன் நடந்த பதவியேற்பு விழா; 25,000 தேசிய காவலர்களின் பாதுகாப்புடன் நடைபெற்ற பொது விழா; சுற்றுப்புறத் தெருக்கள், கட்டடங்கள் மூடப்பட்டு, மிகப் பெரிய பதட்டத்துக்கிடையே நடைபெற்ற அரசாங்க விழா;பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல்,வெறுமையை மறைக்கத் தெருவெங்கும் அமெரிக்கக் கொடியை நட்டு வைத்து நடந்த விழா; விடைபெறும் அதிபர் பங்கு கொள்ள மறுத்த பதவியேற்பு விழா என்று அமெரிக்க அரசியலில் பலப்பல கரும் புள்ளிகளைப் பதித்த பதவியேற்பு விழா என்ற அவலமும் பதிவாகி, நாட்டுக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டது.

பதவியேற்பு 

குளிர் மிகுந்தஜனவரி 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சற்று  முன்பு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ஜோ பைடனுக்கு, 46ஆவது அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கமலா ஹாரிஸுக்கு உச்சமன்ற நீதிபதிகளில் ஒருவரான சோன்யா சோட்டாமெயர் 49ஆவது துணை அதிபராகப் பிரமாணம் செய்தார். பதவிப் பிரமாணம் எங்கு, எப்படி நடக்குமென்ற  ஏகப்பட்ட குழப்பங்களுக்கிடையில் ஜனவரி 6ஆம் நாள்  ட்ரம்ப்பின் ஆதரவாளர்களான வலதுசாரித் தீவிரவாதிகள் எந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் செய்தார்களோ, அதே கேப்பிடல் ஹில் கட்டடத்தில், பாரம்பரியமான மேற்கு வளாகத்தில் இவர்கள் இருவரும் பதவியேற்றுக் கொண்டது தீவிரவாதத்துக்குத் தரப்பட்ட பதிலடியாகும்.  

மக்களாட்சி என்ற அடிப்படைத் தத்துவத்தைச் சூறையாடி சீர் குலைக்க முனைந்த கலவரக்காரர்கள் உமிழ்ந்து சென்ற வெறுப்பை,  விதைக்க முயன்ற இனவாதப்  பிளவை ஜோ பைடன் தனது நிதானமான அனுபவப் பூர்வ பேச்சால் களைந்தெறிய முயன்றார். “ஒரு ஜனநாயகத்தில் மிகவும் அரிதான விஷயம்: ஒற்றுமை. ஒற்றுமை இன்றி அமைதி இல்லை. கசப்பும் சீற்றமும்தான் இருக்கும். நாடு இருக்காது, அலங்கோலத்தின் ஆட்சிதான் இருக்கும்” என்றவர், கறுப்பினத்தவர்க்கான விடுதலைப் பிரகடனத்தில் ஆபிரஹாம் லிங்கன் கையெழுத்திடும்போது கூறிய “என் முழு ஆன்மாவும் இதில் இருக்கிறது” எனும் வாக்கியத்தை நினைவு கூர்ந்தது, மக்களாட்சி மீது நம்பிக்கையுடையவர்களுக்குச் சற்று ஆறுதலளித்தது.  சுமார் 21 நிமிடங்கள் பேசிய பைடன், அதிபர் டிரம்பைப் பற்றி ஒரிடத்தில் கூட குறிப்பிடவில்லை.

வெளியேறிய முன்னாள் அதிபர் 

புதிய அதிபர் பொறுப்பேற்கும் விழாக்களில், விடைபெறும் அதிபர் கலந்துகொண்டு கண்ணியத்துடன் பதவிப் பரிமாற்றம் செய்துவிட்டு விடைபெறுவது வழக்கம். ஒரு பதவிக்காலம் மட்டுமே அதிபராகயிருந்தவர்கள் கூட தங்களது தோல்வியைப் புறந்தள்ளி வைத்துவிட்டு, புதிய அதிபரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து விடைபெறுவார்கள். புதிய அதிபர்,முந்தைய அதிபரை மரியாதையுடன் வழியனுப்புவார். 

ஆனால் டானல்ட் டிரம்ப் தான் தேர்தலில் வெற்றியடைந்ததாகக் கற்பனை செய்து கொண்டு, அதை நம்ப வைக்கப் பொய்ச் சாட்சிகளை உருவாக்கி, வழக்குகள் தொடுத்து அனைத்தும் தோற்றுவிட்ட பின்னர் கலவரக்காரர்களைத் தூண்டிவிட்டு வன்முறைக்கு வழிவகுத்தார். பதவியேற்பு விழா தொடங்கும் முன்னர்,வாஷிங்டன் டி.சி.யை விட்டு, ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில்  அவர் வெளியேறியது தனது ‘அதிபர்’ என்பதைக் கடைசி நொடிவரை அனுபவிக்கத் துடித்த அவரது வறட்டு கெளரவம் என்று சிலர் கருதினாலும்,ஜனவரி ஆறாம் நாள் கலவரத்துக்குத் தான் காரணமாக அமைந்த குற்ற உணர்வு, அவரை வெட்கமடையச் செய்திருக்கலாம். துணை அதிபரான மைக் பென்ஸ் மூலம் தனது பொறுப்புகளை புதிய அதிபரிடம் ஒப்படைத்த டிரம்ப், தனது குழந்தைத்தனமான அகந்தையை வரலாற்றில் பதித்துவிட்டுச் சென்றார். புதிய அதிபர் பதவியேற்ற சில நாட்களில், டிரம்ப் புதியதொரு சாதனையைத் தனது பட்டியலில் சேர்த்துக் கொண்டார். ஆம்,இரண்டு முறை குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே அதிபர் என்ற பெருமை தான் அது. 

கடந்த நான்காண்டுகளாக விசுவாசத்துடன் டிரம்பின் அடாவடித்தனங்களைப் பொறுத்துக்கொண்டு பணியாற்றி வந்த மைக் பென்ஸ், ஜனவரி 6ஆம் தேதி கலவரத்தின் போது டிரம்பின் ஆதரவாளர்கள் சிலர் தன்னைத் தூக்கிலிடத் துடித்ததை எண்ணி, அவமானம் கலந்த இறுகிய முகத்துடன் மேடையில் அமர்ந்திருந்தது பார்க்கவே பாவமாகயிருந்தது. தனது தர்மசங்கடமான நிலையை முற்றிலும் அறிந்திருந்த மைக் பென்ஸ்,அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்ற புதிய அதிபரையும், துணை அதிபரையும் வாழ்த்தி விடைபெற்றுச் சென்றது அவரது பண்பட்ட தலைமைக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது.

 பதிய அதிபரின் பொறுப்புகள்

 ஜோ பைடனுக்கு,டிரம்ப் விட்டுச் சென்ற சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏற்கனவே பெருந்தொற்று நோயால் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர்; பல லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் இருப்பதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; பொது முடக்கம் காரணமாகப் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்து விட்டனர்;  பொருளாதாரம் மற்றொரு பெருமந்தத்தை நோக்கி நகர்கிறது. உலகச் சுகாதார நிறுவனம், ஐ.நா.வின் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் போன்ற உலக அமைப்புகளைப் பகைத்துக் கொண்டு, அமெரிக்காவைத் தனிமைப் படுத்தி, டிரம்ப் ஏற்படுத்திய குளறுபடிகளைச் சரி செய்து நட்புணர்வைப் பேணுவது – இவையெல்லாம் ஜோ பைடன் எதிர்பார்த்து, சந்திக்கத் தயாராகயிருந்த சவால்கள்.  ஆனால் டிரம்ப், கடைசி வாரங்களில் அமெரிக்காவை இரண்டாகப் பிளந்து, உள்நாட்டுத் தீவிரவாத அமைப்புகளைத் தூண்டி இனவெறியைப் பரப்பிச் செல்வார் என்பதை பைடன் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். தான் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியிலும், இன்னபிற அரசுத் துறைகளிலும் விஷ விதைகளை விதைத்துச் சென்றுள்ளார் டிரம்ப். ஜோ பைடனால் இந்த விஷச் செடிகளை தனது பதவிக் காலத்துக்குள் நிச்சயமாக அகற்ற முடியாது. எனினும்,இச்செடிகள் மென்மேலும் வளர்ந்து பரவாமல் தடுக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு பைடனுக்குள்ளது. 

 புதிய தலைமையின் கீழ் ஒரு சில வாரங்களிலோ, மாதங்களிலோ அமெரிக்காவில் பொற்காலம் தழைக்கப் போவதில்லை. ஆனால் உண்மையுடன், நாட்டு நலனுக்காக முனையும், கண்ணியம் மிகுந்த, இனத் துவேஷம் பாராட்டாத, அடிமட்ட அமெரிக்கர்களின் கஷ்டங்களை உணரும் ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது பலருக்கும் ஆறுதல் தரக்கூடிய  விஷயம். தனது நாற்பதாண்டு கால அரசியல் அனுபவத்தில் இரு கட்சியினரையும் அரவணைத்து, நாட்டு மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களைக் கொண்டுவரும் பக்குவம் பைடனுக்குள்ளது என்று நம்பலாம். அதையெல்லாவற்றையும் விட, தனி மனித எதேச்சாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்ற பெருமை ஜோ பைடனையும் , கமலா ஹாரிஸையும் சேரும். 

 தனது முதல் உரையின் முடிவில் பைடன் அவர்கள் சொன்னது “அமெரிக்காவை ஒன்றாக்குவது; நம் மக்களை ஒன்றிணைப்பது; தேசத்தை ஒன்றிணைப்பது; கோபம், வெறுப்பு,தீவிரவாதம், இனப்பாகுபாடு போன்றவற்றை அகற்றுவது; வேலையின்மை, ஏழ்மையை ஒழிப்பது – இந்த நோக்கங்களில் தான் என் ஆன்மா இருக்கிறது. இதில் என்னுடன் இணையுமாறு ஒவ்வொரு அமெரிக்கரையும் கேட்டுக் கொள்கிறேன்”. இவை ஜோ பைடனின் தனிப்பட்ட நோக்கம் மட்டுமல்ல. ஒவ்வொரு அமெரிக்கரின் பொதுவான நோக்கமாக இருக்கவேண்டும்.

 – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad