\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இதயத்தில் முள் தோட்டம் – பாகம் 2

Filed in கதை, வார வெளியீடு by on February 1, 2021 0 Comments

கவிதா இறந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது. தமிழக அரசியல் பிரச்சனைகள்,  ஸ்டெர்லைட் வகை போராட்டங்கள் என்று அவர்களுக்கு வேறு தீனி கிடைத்து விட்டதால், பத்திரிகை  மற்றும் ஊடகங்களும்  அவளை மறந்துவிட்டது என்றே சொல்லலாம்.   மக்களும் பிக் பாஸ் மற்றும் அன்றாட பிரச்சினைகளில் பிஸியாக இருப்பதால் கவிதாவைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் ராஜீவுக்கு வாரத்தில் ஒரு முறையாவது சண்முகத்திடமிருந்து  ஃபோன் கால்  வருகிறது. அவர் அவளை மறந்ததாகத்  தெரியவில்லை.

திருவான்மியூரில் உள்ள போர்ஷே குடியிருப்பில் தனது பைக்கை ராஜேந்திரன் நிறுத்தினார். அந்தப்  பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுமார் ஐம்பது தனி வீடுகள் இருந்தன. அவர் ஒற்றை மாடி உள்ள  ஒரு  வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்.  அன்று  ஞாயிற்றுக்கிழமை.  கோழி பிரியாணியின் வாசனை அவர் மூக்கை துளைத்தது.   ராஜீவ் கதவைத் திறந்தார்.

“சாரி ராஜேந்திரன், சண்டே அதுவுமா உங்களை வர சொன்னதற்கு! உள்ளே வாங்க “

“நாட் எ ப்ராப்ளம் அட் ஆல்!!  என்ன ஸ்பெஷல் சார்? சிக்கன் பிரியாணி வாசனை தெருவில அடிக்குது.”

ராஜீவ் பலமாகச் சிரித்துக்கொண்டே “அது என் பக்கத்து வீட்டிலிருந்து வர  வாசனை!   என் வீட்டின் ஒரு பக்கம் பக்கா நான்வெஜ் குடும்பம் , அந்தப் பக்கம் ஒரு ப்ராமின் பேமிலி. வத்தக் குழம்புக்கும், கறிக்குழம்புக்கும் நடுவுலதான் நான் வாழறேன்!”.  கிட்டத்தட்ட மதிய உணவு நேரம். இதைக் கேட்டதும்   ராஜேந்திரன் முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது.    ராஜீவ் புத்திசாலி.

“டோண்ட் ஒரி ராஜேந்திரன் .  நான் மாணிக்கத்தை தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி வாங்க அனுப்பியிருக்கேன்.  அவனை விட்டா  பக்கத்து வீட்டுக்கு உள்ளேயே பிரியாணி சாப்பிட போயிருப்பான். ஹி வில் பீ ஹியர் எனி மொமெண்ட்.” 

“நோ சார், இ வாஸ் ஜஸ்ட் ஜோக்கிங்”

“மனைவியும் குழந்தைகளும் ஃபீனிக்ஸ் மாலுக்குப் போயிருக்காங்க. எனக்கும் பசிக்குது!  எனது அலுவலக அறைக்கு போலாம் வாங்க” என்று சொல்லியவாறே தனது அலுவலக அறைக்கு ராஜேந்திரனை அழைத்துச் சென்றார்.

நன்கு விசாலமான அறை. பார்க்கவே பிரமிக்க வைத்தது!   ஒரு மூலையில் ஏர் கண்டிஷனர் குளுமையான காற்றை வீசிக் கொண்டிருந்தது.  சுவர்களில் வெண் முட்டை நிற பெயிண்ட்  பூசப்பட்டிருந்தது. சுவரின் ஒரு  பக்கம் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட எட்டு  அடுக்குகளுடன் புத்தக அலமாரி.    ஆச்சரியப்படும் விதமாக, அவற்றுள் பெரும்பாலானவை இலக்கிய வகைப்  புத்தகங்கள். மறுப்பக்கம்  கண்ணாடி அலமாரி. அதில் அவர் பெற்ற விருதுகள் மற்றும் பதக்கங்கள் இருந்தன. சுவற்றில் ஆங்காங்கே அவர் முன்னாள் முதல்வர்கள்  மற்றும் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்பட ஃபிரேம்கள்.  அறையின் மையத்தில் சுழல் நாற்காலியுடன் ஒரு  அலுவலக மேசை.  அதன் மறுபக்கத்தில் சில நாற்காலிகள். மேசைக்கு நேர் எதிரில் ஒனிடா 55 இன்ச் டிவி சுவரில் மாட்டப்பட்டிருந்தது.  சுழல் நாற்காலியின் பின்னால் அலுமினியச் சட்டத்துடன் ஒரு ஒயிட்போர்டு  வெள்ளைத்  துணியால் மூடப்பட்டிருந்தது.

“உக்காருங்க. நான் கேஸ் ஃபைல்ஸை  படிச்சேன். வெல் டன் ராஜேந்திரன்! பிரேதப்  பரிசோதனை, பிங்கர் பிரிண்ட் , டி.என்.ஏ அறிக்கை.. எதிலுமே  நமக்கு உதவும்படி ஒன்னும் இல்லை “

“ஐ அக்ரீ! இட்  இஸ் ஏ சிம்பிள் ரிப்போர்ட். பிரேதப்  பரிசோதனை அறிக்கை  கழுத்தை நெரித்ததால்   மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததா சொல்லுது. அவன் ஒரு கயிறைப்    பயன்படுத்தியதாகவும்  சொல்லுது. குற்றம் நடந்த இடத்தில்  புதிய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கண்டு பிடிச்சுருக்காங்க!   நோ மேட்ச் இன் கிரைம் டேட்டாபேஸ் ” 

“இன்டெரெஸ்ட்டிங்” என்று சொல்லிக்கொண்டே ஒயிட்போர்டின்  வெள்ளைத்துணியை அகற்றினார்.  

அந்த ஒயிட் போர்டில் கையால் வரைந்த  படங்கள்.  பிரதான நடு வட்டமாய் நீல வட்டம். அதில் கவிதாவின் படம் இருந்தது. பல பச்சை வட்டங்கள் பிரதான வட்டத்தைச் சுற்றி வரையப்பட்டு இருந்தது. அனைத்து பச்சை வட்டங்களும் நீல வட்டத்துடன் கோடுகளால் இணைக்கப்பட்டிருந்தன.  பச்சை வட்டங்கள் ஸ்டிக்கி நோட்டுகளால் மூடப்பட்டிருந்தன.

“ராஜேந்திரன், நமது முதல் சந்தேக நபர் சண்முகம். அவரைப் பற்றி பேசலாம்.”

“சார், அவர் கவிதாவுடன் ரொம்ப சந்தோஷமாகத்தான் வாழ்ந்திருக்காருனுதான் நான் கண்டுபிடிச்சேன். சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, அவர்கள் குழந்தைகளைத் தவிர்த்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அவரது கடைசி மூன்று திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்ஸ் கிடையாது.  அதில் அவர் நிறைய பணத்தை இழந்துட்டார். ஆனால் அது குடும்பத்தில் எந்த பிரச்சனையும்  உருவாக்கவில்லை. அது அவருடைய சொந்தப்  பணம். ” என்றார்   ராஜேந்திரன்.

“ராஜேந்திரன், அவர் உண்மையில் ரொம்ப சோகமாகத்தான் இருக்கார். துக்கம் காரணமாக, அவரால் பல முறை பேச முடியவில்லை. அதில் ஒரு உண்மை தன்மையைப் பாக்க முடிஞ்சுது. அவளை விட அவரிடம் அதிகச் சொத்துக்கள் இருக்கு.  பணம் தொடர்பான பிரச்சினை கட்டாயம் கிடையாது. அவர் அரசியல்வாதியின் பினாமியும்  அல்ல. அவர் ஒரு உறவினர் மட்டுமே. சண்முகமோ இல்ல அரசியல்வாதியோ இந்த குற்றத்தைச்  செய்ய வலுவான காரணம் ஏதும் இல்லை.” என்று சொல்லிக்கொண்டே   ராஜீவ் ஒரு பச்சை வட்டத்திலிருந்து ஸ்டிக்கி நோட்டை அகற்றினார். அதில் சண்முகம் மற்றும் அரசியல்வாதியின் பெயர் இருந்தது. அவர் அந்த வட்டத்தில் ஒரு எக்ஸ் குறி வைத்தார்.

அழைப்பு மணியின் ஓசைக்  கேட்டது. “மாணிக்கம் இஸ் ஹியர்!” என்றார்   ராஜீவ். மாணிக்கம் உள்ளே வந்தான்.

“உங்கள் பக்கத்து வீட்டு மக்களைத் தவிர, ஞாயிற்றுக்கிழமைல யாரும் சமைக்கிறதில்லைன்னு நினைக்கிறேன். என்ன கும்பல் சார்! ” என்று வெறுப்பூட்டும் குரலில் சொன்னான்   மாணிக்கம்.  ஒயிட்போர்டைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தான். 

“ஒன்னும் சொல்லாதே! வெளியில போய் உட்கார்ந்து, உன் லஞ்சை முடிச்சுக்கோ. டோன்ட் பாதர் அஸ்!”   என்று சொல்லிக்கொண்டே அவனிடமிருந்து கோக் பாட்டிலையும்  லஞ்ச் பாக்ஸ்களையும்  வாங்கிக் கொண்டு அவனை வெளியே அனுப்பினார்.

“ஹி இஸ் ஏ ஸ்வீட் ட்ரபிள்!  வாங்க சாப்பிடலாம்.” அவர்கள் சாப்பிட்டுக்கொண்டே அடுத்த சந்தேக நபரைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

“கோடம்பாக்கம் பற்றிப்  பேசலாம். கவிதா வேறு யாருடனும் தப்பான உறவோ இல்ல கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ இருந்த மாதிரி தெரியலை.  யாருடனும் தொடர்பில் இல்லை. கடந்த சில வருடங்களா, அவர் எந்த டிவி ஷோவிலும் விருது நிகழ்ச்சிகளிலும் வந்ததில்லை. அவங்க ஆக்ட்டிவ்வா  நடிச்சப்போ சில முன்னணி நடிகர்களுடன் தொடர்பு இருந்ததா சில  வதந்தி இருந்தது.அது அவர்களின் திருமணத்திற்கு முன்னாடி . ஷி சீம்ஸ் டு பீ ஏ கிளீன் சிலேட் ஆப்டர் மேரேஜ்! அவளுக்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர், ஆனால்  கவிதாவின் வயசுக்கு  அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ” என்று சொல்லிக்கொண்டே   ராஜீவ் மற்றோரு பச்சை வட்டத்திலிருந்து ஸ்டிக்கி நோட்டை அகற்றினார். அதில் “கோடம்பாக்கம்” என்று  எழுதி இருந்தது. அவர் அந்த வட்டத்தில் ஒரு எக்ஸ் குறி வைத்தார்.

“ஐ அக்ரீ வித் யூ. கடந்த ஒரு வருட செல்ஃபோன் கால்களை  செக் பண்ணோம் சார்! நத்திங் இன்டெரெஸ்ட்டிங். ” என்று சொல்லிக்கொண்டே சிக்கன் பீஸை  கடித்து ருசித்து சாப்பிட்டார்.  சீரகச் சம்பா ரைஸ் சிக்கன் பிரியாணியின் வாசனை  அந்த அறை முழுவதும் நிரம்பி இருந்தது. 

“சார், இந்தப் பிரியாணியைப் பல முறை வீட்டில் செய்யறேன்னு  என் ஒயிஃப் யூடூயுபை பார்த்து ட்ரை   பண்ணா!  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி வருது.  ரொம்பக் கொடுமை பண்றா சார்!  குழந்தைகள் டைப்  ஏ , டைப்  பீ  பிரியாணின்னு கிண்டல் பண்றாங்க! நான் போய் கை கழுவிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்    ராஜேந்திரன்.

“நீ உன் ஒயிஃப் பண்ற கொடுமைய சொல்லிட்ட, என்னால சொல்ல முடியலே!” என மனத்திற்குள் நினைத்துக் கொண்டே அவரும் ராஜேந்திரனைப் பின் தொடர்ந்தார்.

அவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும்  கேஸைப் பற்றிப் பேசத் தொடங்கினர். 

“ராஜேந்திரன், சண்முகத்தின் முதல் மனைவியும் மகனும் மும்பையில் வசிக்கிறாங்க. அவர்களைப் பற்றி விசாரிக்க எனது மும்பை சிபிஐ நண்பரிடம் உதவி  கேட்டேன்.  ஷி வாஸ் பார்ன் வித் சில்வர் ஸ்பூன்.   வாலிப வயது கட்டாய கல்யாணம். குழந்தைப் பிறந்து காலேஜ் போறவரை  ஒன்னாதான் இருந்து இருக்காங்க. அவளுக்கு  அவர் தயாரிப்பாளராக தொடர விருப்பம் இல்லை. இரண்டு பேரும் ஒப்புக்கொண்டுதான்   விவாகரத்து கிடைச்சிருக்கு.  அவங்களும் யாரோ ஒருவரை மறுமணம் பண்ணிக்கிட்டாங்க. . இவரது மகன் மும்பையில் ஒரு முன்னணி தொழிலதிபர். ஹீ இஸ் மேக்கிங் டன் ஆஃப் மணீ!  பையனுக்கும், அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லை. பணமோ இல்ல வெறுப்போ காரணமாய்த் தெரியலை. தே ஆர் லிவிங் எ வெரி ஹாப்பி லைப் வித் அவுட் ஹிம்!” 

“ஓகே சார், அவளுடைய சொந்தங்கள்?” எனக் கேட்டார் ராஜேந்திரன். பின் பக்கத்திலிருந்து ஒரு குரல்.

“சார், நான் சொல்றேன். அதப் பத்தி  விசாரிக்கச் சொல்லி   சார் எங்கிட்ட கேட்டார்.” என்று  துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தான்   மாணிக்கம்.

“ராஜேந்திரன், இவனுக்குத்தான் இந்த சினிமசாலா , கிசுகிசு, யார் யாரோட இருக்காங்க இதெல்லாம் தண்ணிப்பட்ட பாடு. அதான் அவன்கிட்ட கொடுத்தேன். வெளியிலே இருந்து நாம பேசறதை ஒட்டு கேட்டுட்டு இருக்கான். சரி, சொல்லு ” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்   ராஜீவ்.

“கவிதாவோட  உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இருந்தது இல்லை.  அவங்க அம்மா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். அவங்க அவர்களுடன் அந்த வீட்டுலதான் இருந்தாங்க. போன வருஷம் செத்து போய்ட்டாங்க. அப்பா ஒரு ஒப்பனைக்  கலைஞர்.  மொடா  குடிகாரன்! போய்சேர்ந்து பல வருஷம் ஆச்சு!”

“சரிடா! இந்த கேஸ் ஃபைலை கிளோஸ் பண்ண பிறகு உனக்கு இன்கிரிமெண்டு இருக்கு! நீ இங்கேயிருந்து கிளம்பு” என்று சொல்லிக்கொண்டே   ராஜீவ் மற்றோரு பச்சை வட்டத்திலிருந்து ஸ்டிக்கி நோட்டை அகற்றினார். அதில் “பேமிலி” என்று  எழுதி இருந்தது. அவர் அந்த வட்டத்தில் ஒரு எக்ஸ் குறி வைத்தார்.

“ஆமா நீங்க முடிச்ச மாதிரிதான், இந்த வயசுல எக்ஸ் போட கத்துகிட்டு இருக்காரு!!!” என்று மனதில் நினைத்தப்படி   மாணிக்கம் நகர்ந்தான்.

“லெட்ஸ் டாக் அபௌட் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்! நெய்பர்ஸ், மெய்ட்ஸ் அண்ட் வாட்ச்மென்”

“சார்,  மெய்ட்ஸ் அண்ட் வாட்ச்மென், பல ஆண்டுகளாக அங்கு வேலை செய்யராங்க.  கிளீன் ரெகார்ட்ஸ்!  ரொம்ப நெருக்கமாகத்தான் பழகி இருக்காங்க. அவள் அவர்களை நல்ல விதமாகத்தான் நடத்தியிருக்காங்க. டிபிக்கல் ரிச் நெய்பர்ஹூட் . நெய்பர்ஸ் ரொம்ப ரேராதான் சந்திச்சுப் பேசியிருக்காங்க . எல்லோரும்    சொந்த வாழ்க்கையில  பிஸியாக இருக்கிறாங்க. அவங்க நெய்பர்ஸோட சண்டை எதுவும் போட்ட மாதிரி தெரியலை. இட் இஸ் எ கிரைம் ஃபிரீ ஏரியா சார்!”

ராஜீவ் மற்றோரு பச்சை வட்டத்திலிருந்து ஸ்டிக்கி நோட்டை அகற்றினார். அதில் “நெய்பர்ஸ் அண்ட் மெய்ட்ஸ் ” என்று  எழுதி இருந்தது. அவர் அந்த வட்டத்தில் ஒரு எக்ஸ் குறி வைத்தார்.  கடைசி பச்சை வட்டத்திலிருந்து கடைசி ஸ்டிக்கி நோட்டைஅகற்றினார். அங்கே ஒரு கேள்விக்குறி இருந்தது.

“நம்ம அறிவுக்கு எட்டாத காரணம் எதோ இருக்கு.  பணமோ , திருட்டோ, பாலியல் கொடுமையோ, நம்பிக்கை துரோகமோ , குடும்பம் இல்ல தெருப் பிரச்சினையோ இல்லை. சம்திங் ஃபிஷ்ஷி!  வி ஹேவ் டு திங்க் அவுட்சைடு த பாக்ஸ். இந்த வழக்கின் தற்போதைய நிலையை செவ்வாயன்று எஸ்.பி. ப்ரெசெண்ட் பண்ணச்  சொல்லியிருக்காரு.  லெட்ஸ் ஒர்க் ஆன் இட்.”  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் பவர்பாயிண்ட் வேலையை முடித்தனர்.

“சார்,  கட்டன் சாயா! ” என்று சொல்லிக்கொண்டே டிரைவர் மாணிக்கம் உள்ளே வந்தான். ஒரு சிறிய தட்டில் மூன்று டீக்கடை கிளாஸ்கள். அதில் மூக்கால் அளவிற்கு கருப்புத்  தேநீர். ஒரு சில புதினா இலைகள் மேலே மிதந்து கொண்டிருந்தது.  தென்னிந்தியாவைப்  பூர்விகமாகக்  கொண்ட ‘கட்டன் சாயா’, மசாலா மற்றும் எலுமிச்சைக்  கலந்த  கருப்புத்  தேநீர். அதில் உள்ள மசாலாவும் , தேயிலை இலைகளும்  செரிமானத்திற்கு உதவுவதால், கனமான உணவுக்குப் பிறகு இதைக் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு.

“ராஜேந்திரன், என் மனைவி மீனா, இவனோட கட்டன் சாயாவோட பெரிய ரசிகை!  அதனாலே இவனுக்கு  மட்டும் கிச்சன் உள்ளே போக அனுமதி இருக்கு!” 

ராஜேந்திரன் கட்டன் சாயாவைக் குடித்துக்கொண்டே “வாவ், சூப்பர் மாணிக்கம், கலக்கிட்ட போ!  என்றார்.  

“இன்னும் ஒரு மணி நேரத்தில பசிக்குதுன்னு  சொல்வீங்க பாருங்க!” 

ராஜேந்திரன் சிரித்துக்கொண்டே “ஓகே சார், லேட் ஆகுது. ஷால் ஐ லீவ்”

“சார் நானும் கிளம்பறேன்” என்றான் மாணிக்கம்.

“ஓகே, நாளை காலையில் உங்களை ஆபீஸ்ல  பார்க்கிறேன். எஸ்.பி. பவர்பாயிண்ட் மற்றும்  இன்வெஸ்டிகஷன் ரிப்போர்ட் பார்த்து ஓரளவு  மகிழ்ச்சியடைவாருன்னு நினைக்கிறேன். வி நீட் ஏ பிளான் டு ஃபைண்ட் அவுட் தி சஸ்பெக்ட்”

ராஜேந்திரனும்    மாணிக்கமும் கிளம்பிய பிறகு    ராஜீவ் கதவை மூடினார். ஆனால் அவரது மனக்கதவு மூடவில்லை.  மனதில் பல சிந்தனைகள் மற்றும் கேள்விகள்.”யார் அவன்? நோக்கம் என்ன, எனக்கே தண்ணி காட்டறான். அவனைச்  சீக்கிரம் கம்பி எண்ண வைக்கிறேன் ” 

செல்ஃபோனில் மணியைப் பார்த்தார். நான்கு மணி!  மனைவியும் பசங்களும் வீட்டிற்கு வரவேண்டிய நேரம். தன் மனைவியின் செல்ஃபோனுக்கு கால் பண்ணினார்.

“வி ஆர் அல்மோஸ்ட் ஹோம் ” என்று சொன்னாள் மீனா.  அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு, சோபாவில் சற்று கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுக்க முயற்சித்தார்.

(தொடரும் )

மருங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad