\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தேசம் தெரிந்து கொள்ள விழைகிறது

“பதினெட்டாம்நூற்றாண்டில் வேண்டுமானால் பத்திரிகை மக்களாட்சியின் நான்காம் எஸ்டேட்டாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மற்ற மூன்றையும் விழுங்கிவிட்டது. இன்று பத்திரிக்கை ஜனநாயகத்தை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது.” –பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞரான ஆஸ்கார் ஒயில்ட் ஊடகத்துறையைப் பற்றிச் சொன்னது இது. 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் உரிமைகளைக் கண்காணித்துக் காக்கும் காவல் நாயாக (Watch dog)இருக்க வேண்டிய ஊடகத்துறை நிறுவனங்களில் சில, ஆள்பவர்களின் மடியில் அமரும் செல்ல நாயாக (Godi Media) மாறி மக்களையும், விளம்பர நிறுவனங்களையும் ஏமாற்றி வந்தது அம்பலமாகியுள்ளது. 

இந்தியத் தகவல் ஒளிபரப்புத் துறை (Ministry of Information and Broadcasting) மற்றும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory authority of India – TRAI) ஆகியவற்றின் சார்பாக இயங்கிவரும் அமைப்பு பார்க் (BARC) எனப்படும் ஒளிபரப்புப் பார்வையாளர்கள் ஆராய்ச்சிக் குழு (Broadcast Audience Research Council). இந்தக் குழுவின் செயல் நிறுவனமான ஹன்சா விஷன் பிரைவேட் லிமிடட்  டிஆர்பி ரேட்டிங்கில் தவறுகள் நடப்பதாக ‘டிராய்’ அமைப்புக்குப் புகார் ஒன்றை அளித்தது. இந்தப் புகார் இந்திய ஊடகத்துறையில் ஊடுருவியுள்ள தில்லுமுல்லுகளையும், ஊழலையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

‘பிஸினஸ் நியூஸ்’ – R-Business News – TRP

தொலைகாட்சி சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை அளவிடுவது தான் இந்த டி.ஆர்.பி எனப்படும் தொலைகாட்சி மதிப்பீட்டுப் புள்ளி (Television Rating points). ஒவ்வொரு சேனலும் பார்க்கப்படும் நேரம், பார்க்கப்படும் நிகழ்ச்சிகளைப் பொறுத்து இந்தப் புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகள் தான் அந்தந்த சேனலுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் விளம்பர வருவாயைப் பெருக்கித் தருகின்றன. 

தொலைகாட்சி நிறுவனங்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக செய்திச் சேவையளிக்கும் சேனல்களுக்கு வருமானம் ஈட்டித் தருவது விளம்பரங்கள் தான். கேளிக்கை நிகழ்ச்சி, திரைப்படங்கள் வழங்கும் சேனல்கள் அளவுக்கு செய்தி சேனல்களுக்குப் பார்வையாளர்கள் இருப்பதில்லை. எந்தக் கட்டணமுமின்றி வழங்கப்படும்  செய்தி சேனல்கள் ஒவ்வொரு பார்வையாளரைப் பெறவும், அவரைத் தக்க வைத்துக் கொள்ளவும் 70 சதவீதத்துக்கு மேல் செலவு செய்கின்றன. செய்தி சேகரிப்பதற்கு வெறும் 3-5 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.  இதனால் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுவதில் செய்தி ஊடகங்கள் பிரயத்தனப்படுகின்றன. விளம்பரதாரர்கள் அதிகமாகப் பார்க்கப்படும் சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தங்கள் விளம்பரங்களை ஒளிபரப்ப அதிகக் கட்டணத்தைத் தருவது இயல்பு. தங்கள் சேனலுக்கு அதிகம் பொருளீட்டவும், மக்களிடையே போலியான பிம்பத்தை உருவாக்கவும் டி.ஆர்.பி. தரவுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டிருந்த ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சி, பாக்ஸ் சினிமா மற்றும் ஃபக்த் மராத்தி ஆகிய தொலைகாட்சி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

‘தி நேஷன் வாண்ட்ஸ் டு நோ’ – The Nation wants to know

இந்தியத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராகயிருந்தால் நீங்கள் கண்டிப்பாக இந்தத் தொடரைக் கேட்டிருப்பீர்கள். ரிபப்ளிக் தொலைகாட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், இன்று அந்நிறுவனத்தின்பெரும் பங்குதாரருமான அர்னாப் கோஸ்வாமியின் மிகப் பிரபலமான சொற்றொடர் அது. அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்துக் கத்தி வேறு எவரையும் பேசவிடாமல் தன் கருத்துகளை அவர்கள் மீது திணிக்கும் சாதுர்யம் மிக்கவரான அர்னாப், தில்லு முல்லுகளிலும் தான் சளைத்தவனல்ல என்பதை நிருபிக்கும் வகையில் செய்த ஊழல் ஊடகத்துறையின் நேர்மையைச் சிதைத்துள்ளது.

டி.ஆர். புள்ளிகளைக் கணக்கிட பார்க் அமைப்பு நாடு முழுதும் 40,000 ‘பாரோமீட்டர்’ எனப்படும் அளவீட்டுச் சாதனங்களை நிறுவியுள்ளது. 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கட்தொகை கொண்ட நகரங்களில் எந்த நோக்கமும் தொடர்புமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் இந்தக் கருவி பொருத்தப்பட்டு அவர்கள் தொலைகாட்சி பார்க்கும் வழக்கத்தினையும், தினுசையும் அளவிடுவது தான் பார்க் அமைப்பின் நோக்கம். இந்தக் கருவி அமைக்கப்பட்டிருப்பது அந்த வீட்டு உரிமையாளர் உட்பட எவருக்கும் தெரிவிக்கப்படாமல் காக்கப்படுவதன் மூலம் டி.ஆர். புள்ளிகளை அளவிட்டு அறிக்கைகளாக வெளியிட்டு வந்தது பார்க் நிறுவனம். இந்தக் கருவிகளைப் பொருத்திட பார்க் அமைப்பின் ஒப்பந்ததாரராகச் செயலாற்றியது ஹன்ஸா விஷன் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவன ஊழியர்கள் சிலரும், பார்க் அமைப்பின் அப்போதைய தலைவரான பார்த்தோ தாஸ் குப்தாவும் மேலே சொல்லப்பட்ட தொலைகாட்சி நிறுவனங்களுடன் பேரம் பேசி இந்த அளவீட்டுப் புள்ளிகளைப் பொய்யாகச் சித்தரித்து வந்துள்ளன. முக்கியமாக ரிபப்ளிக் டி.வி., மும்பையில் இந்தக் கருவி  பொருத்தப்பட்ட வீடுகளின் முகவரியைப் பெற்று அந்தக் குடும்பத்தினருக்கு உயர்ரகப் புதிய தொலைகாட்சிப் பெட்டிகளை வாங்கிக் கொடுத்து அதில் அவர்கள் தேவையான நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளுமாறும், பாரோமீட்டர் பொருத்தப்பட்ட தொலைகாட்சியில், சேனலை மாற்றாமல் தொடர்ந்து ரிபப்ளிக் டி.வி. நிகழ்ச்சி மட்டுமே ஓட்டுமாறும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.400 முதல் ரூ.600 வரை வழங்கி வந்துள்ளது. இதன் விளைவாக காலங்காலமாக ஊடகத் துறையிலிருந்த பெரிய நிறுவனங்களை விட, 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரிபப்ளிக் டி.வி. மிக அதிக அளவில் மதிப்பீட்டுப் புள்ளிகளோடு முதலிடத்தைப் பெற்றது. 2019 ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் நடந்த சமயத்தில் ரிபப்ளிக் டி.வியின் மதிப்பீட்டுப் புள்ளிகள் வானத்தைத் தொட்டது. இதன் பிறகு ‘பேரோமீட்டர்’ குறித்த சந்தேகங்கள் அரசல் புரசலாக வெளிவர பார்க் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் பார்த்தோ தாஸ் குப்தா. முதலில் ‘பேரோமீட்டர்’  மற்றும் ‘செட்டாப் பாக்ஸ்’ எனப்படும் ஒளிபரப்புச் சேவை வழங்கும் பெட்டிகளில் ‘லேண்டிங் பேஜில்’ ரிபப்ளிக் டி.வி. வருமாறு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் பின்பு,  ரிபப்ளிக் டி.வி., ஒன்றுக்கு மேற்பட்ட அலை வரிசைகளில் வருவதும்,  சேனல் மாற்றினாலும் மீண்டும் மீண்டும் ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிகள் தெரியுமாறு அமைக்கப்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2020 இல், மற்ற தொலைகாட்சி நிறுவனங்கள் பார்க் அமைப்பை அணுக, பார்க் நிறுவனமே மும்பை போலிஸில் புகார் ஒன்றை அளித்தது. 

அதன் பின்னர் நடந்த விசாரணையில் ரிபப்ளிக் டி.வி.யின் தில்லுமுல்லுகள் வெளிவரத் துவங்கின. முற்றிலும் ஆங்கிலமே தெரியாத வீடுகளில் கூட ரிபப்ளிக் டி.வி.யின் ஆங்கில நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டு உரிமையாளர்களை விசாரித்ததில் அவர்களுக்குத் தொலைகாட்சிப் பெட்டிகளையும், பணத்தையும் கொடுத்தவர்கள் பிடிபட்டார்கள். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பார்க்கின் முந்தைய தலைவர் பார்த்தோ தாஸ் குப்தா கைது செய்யப்பட்டார். ரிபப்ளிக் டி,வி, பாக்ஸ் சினிமா, பக்த் மராத்தி நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். 

2018 ஆம் ஆண்டு அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரித்து வந்த போலிஸ் அவர்களது தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமியும் ஒரு காரணம் என்ற அடிப்படையில் அவரைக் கைது செய்ய முனைந்தது. 2017 இல் ரிபப்ளிக் டி.வி.யின் அரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது உட்கட்ட வடிவமைப்பு செய்து கொடுத்தவர் அன்வய் நாயக். இவர் அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக், நிதேஷ் சர்தா ஆகியோர் தனக்குத் தர வேண்டிய 5.4 கோடி ரூபாயைத்  தராமல் இழுத்தடித்து வந்ததால் பண நெருக்கடிக்கு உள்ளானதாகவும் அதனால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். இந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்னாப் கைது செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் மத்திய அரசைச் சேர்ந்த, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் அர்னாபின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து, மும்பை போலிஸுக்கு  எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ‘பத்திரிக்கையாளர் சுதந்திரம்’ என்ற பிரம்மாண்ட போர்வையின் கீழ் அவரை ரூ.50,000 பிணையில் விடுவித்தது.

‘பேட்ரியட்’ – Patriot

அடிப்படையில் அர்னாப் ஒரு வலதுசாரிக் கொள்கையாளர். ஆளும் மத்திய அரசுக்குச் சாதகமாக கொடி பிடிப்பவர். பிரதமர் நரேந்திர மோடியின் அதி தீவிர ஆதரவாளர். மத்திய அரசைக் கேள்வி கேட்பவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்றும், பாகிஸ்தானுக்கு விரட்டப்பட வேண்டியவர்கள் என்றும் பறைசாற்றுபவர். பிளவுவாத கருத்துகளை, குறிப்பாக இஸ்லாமியர் மீதான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அடுக்குபவர். ஏப்ரல் 2020ஆம் ஆண்டு, மஹாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில்  இரண்டு இந்து சாதுக்கள் கொல்லப்பட்டதில் முக்கியக் குற்றவாளிகள் இஸ்லாமியர் என்று சத்தியம் செய்யாத குறையாக, பொய்யான ஆதாரங்களை அடுக்கி வந்தார். உண்மையில் அவர்கள் இருவரையும் அவர்களது ஓட்டுனரையும் ‘குழந்தைத் திருடர்கள்’ என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துத் துன்புறுத்திக் கொன்றவர்கள் அந்த ஊரிலிருந்த இந்துக்கள் என்று போலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. விசாரணை நடந்து வந்த இரண்டு மாதங்களும் ரிபப்ளிக் டி.வி.யில் இஸ்லாமிய, கிறிஸ்துவ இனத்தினர் மீது தினமொரு பொய்ப் புகாராக சுமத்தி வந்தார் அர்னாப்.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், சுஷாந்த் சிங் ராஜ்புத் எனும் இந்தி நடிகர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இது தற்கொலையல்ல, இந்தித் திரைப்பட உலகம் குறிப்பாக ‘கான்’ நடிகர்கள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததை மீறி சுஷாந்த் வளர்ந்து வந்ததால் அவரை இந்தித் திரைப்பட உலகினர் கொலை செய்துவிட்டனர் என்ற ‘தனது பார்வையை’ மிகவும் ஆணித்தரமாகச் சொல்லி வந்தார் அர்னாப். ஆளும் மத்திய பா.ஜ.க. கட்சியினரின் வேண்டுகோளை மீறி சிவசேனா, காங்கிரஸ் உட்பட இதர கட்சிகளுடன் சேர்ந்து மஹாராஷ்டிராவில் அரசமைத்ததன் காரணமாக அந்த அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார் அர்னாப் என்று கூறப்பட்டது. இறுதியில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டாலும் அர்னாப் தொடர்ந்து மஹாராஷ்டிர போலிஸ் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தி வந்தார். 

2017ம்ஆண்டு ஏப்ரல் வரையில் ‘பென்னட் கோல்மேனின்’ ‘டைம்ஸ் நவ்’ தொலைகாட்சியில் பணியாற்றி வந்த அர்னாப், அதை விட்டு விலகிய போது, அந்நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்களைத் திருடிவிட்டார் என்று டைம்ஸ் நவ் மும்பை போலிஸில் புகார் அளித்தது. 2017 ஆம் ஆண்டு மே 6ஆம் நாள் ஒளிபரப்பைத் துவங்கிய ரிபப்ளிக் டி,வியில் வெளியான முதல் நிகழ்ச்சி ‘டைம்ஸ் நவ்’ செய்தியாளர் திரட்டிய லல்லு பிரசாத் யாதவின் தொலைபேசி உரையாடல் தான். இது குறித்து ‘டைம்ஸ் நவ்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்டது. 

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது ராஜ்தீப் சர்தேசாய், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியைப் பேட்டியெடுத்துவிட்டு வெளியே வந்தபோது அங்கிருந்த கும்பலால் தாக்கப்பட்டதை2014 இல் அவர் எழுதி வெளிவந்த ‘இந்தியாவை மாற்றிய தேர்தல்’ என்ற புத்தகத்தில் ஒவ்வொரு ‘ஃபிரேமாக’ விவரித்துள்ளார்.ராஜ்தீப், ஒளிப்பதிவாளர் ரூபன், நட்டு உட்பட சிலர் தாக்கப்பட்ட காரில் இருந்ததாகவும், கலவரக்காரர்கள் இவர்கள் இந்துக்களா என்று கேட்டு மிரட்டியதாகவும், அவர்களின் கார் டிரைவர் தனது ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்த அடையாளத்தைக் காட்டிய பின்பு அவர்களை அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ராஜ்தீப். ஆனால் 2017 ஆம் ஆண்டு, ஒரு நிகழ்ச்சியில் பேசிய அர்னாப் ராஜ்தீப்பின் சம்பவத்தை அங்குலம் அங்குலமாக, தனக்கே உரிய கதை சொல்லும் தந்திரத்தோடு தான் அந்தச் சம்பவத்தில் இருந்ததாகவும் அந்த மிரட்டல் தனக்கு நேர்ந்ததாகவும் பெருமை தேடினார். இந்த நிகழ்ச்சி யூ டியுபில் வெளிவர ராஜ்தீப், நட்டு, ரூபன் ஆகியோர் டிவிட்டரில் சம்பவம் நடந்த நாளன்று அர்னாப் குஜராத்திலேயே இல்லையெனவும், அவர்கள் அனைவரும் அப்போது பணியாற்றி வந்த என்.டி.டி.விக்காக அர்னாப் டெல்லியில் கவரேஜ் செய்து கொண்டிருந்ததாகவும் ஆதாரத்துடன் போட்டு உடைத்தவுடன், அர்னாபின் காணொளி யூ டியுபிலிருந்து நீக்கப்பட்டது.

‘தி ஹிட்டன் ஸ்டோரி’ – The Hidden Story

இப்படி தனது ‘பேச்சு’த் திறனால் பொய்யை உண்மையாக்கி, தீவிர தேசப் பற்றாளனாக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் தான் அர்னாப் கோஸ்வாமி. அதுவரையில் சாதாரண முறைகேடாக மட்டுமே பார்க்கப்பட்ட டி.ஆர்.பி. ஊழல் வழக்கு, பார்த்தோ தாஸ் குப்தாவைத் தொடர்ந்து விசாரித்ததில் அவர்களுக்கிடையே நடந்த பணப் பரிவர்த்தனை, தகவல் பரிமாற்றம் எனப் பல பூதாகார விஷயங்கள் வெளிவந்தன. 

ஜனவரி மாதம் 11ஆம் நாள் மும்பை போலிஸார் தாக்கல் செய்த 3600 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில் தாஸ்குப்தா மும்பை காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில்,  தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு சுமார் $12,000 பணமும், அது தவிர டி.ஆர்.பி தகவல்களை மாற்றியமைப்பதற்காக 40 லட்ச ரூபாயும் அர்னாப் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் இருவரும் ‘டைம்ஸ் நவ்’ சேனலில் வேலை பார்த்ததிலிருந்து அர்னாபைத் தெரியுமென்றும், 2017 இல் அர்னாப் ‘ரிபப்ளிக் டி.வி’ தொடங்கிய சமயத்தில் தான் பார்க் நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக இருந்ததால், தன்னிடம் ரிபப்ளிக் டி..வி. நல்ல மதிப்பீட்டுப் புள்ளிகள் பெற உதவுமாறு கேட்டார் என்றும் தாஸ்குப்தா கூறியிருந்தார். இந்த வாக்குமூலத்தில் அர்னாப் எங்கெங்கு வைத்து எந்தெந்த தேதியில் எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார் தாஸ்குப்தா.

இதனைத் தொடர்ந்து தாஸ்குப்தா மற்றும் அர்னாபின் வழக்கறிஞர்கள் இது அவரை மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம் என்று வாதாடினர். அதற்குப் பின்னர் அர்னாப் மற்றும் பார்த்தோ தாஸ்குப்தா இருவருக்குமிடையில் நடந்த ‘வாட்ஸ் அப்’ உரையாடல்களை ஆதாரமாகச் சேர்த்தது மும்பை போலிஸ்.600 க்கும் மேற்பட்ட பக்கங்களில் டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்பட்டஇந்த உரையாடலில் இந்தியாவின் ராணுவத் தலைமை கூட அறியாத, தேசப் பாதுகாப்பு, அரசியல் திட்டங்கள் குறித்த  தகவல்களை அர்னாப் முன்கூட்டியே அறிந்திருந்ததும் அதை தாஸ்குப்தாவுடன் சர்வ சாதாரணமாகப் பகிர்ந்து கொண்டதும் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது உரையாடலிலிருந்த சில பகுதிகளின் சாராம்சம்.

  1. 2019பிப்ரவரி 14 ஆம் நாள் இந்திய எல்லையில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற 78 வாகனங்கள் மீது இந்திய நேரப்படி 15:15 மணியளவில் நடந்த தாக்குதல் குறித்து, 16:19 க்கு இருவரும் உரையாடியுள்ளனர். அதில் அர்னாப் தங்களது தொலைகாட்சியினர் சம்பவம் நடக்கும் 20 நிமிடங்களுக்கு முன்னரே, அங்கிருந்த ஒரே தொலைக்காட்சி என்று பெருமையுடன் சொல்கிறார். இந்தச் சம்பவத்தை வைத்து பெரும் மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற உத்தேசிப்பதாகச் சொல்கிறார். இதில் தாங்கள் வெறித்தனமாக வென்றிருப்பதாகவும் சொல்கிறார்.
  1. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தானின் பால்கோட்டிலிருந்த ஜெய்ஷ்-இ-முகமது எனும் பயங்கரவாதிகளின் முகாம் மீது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள் அதிகாலை தாக்குதல் நடத்தியது. இது குறித்து அர்னாப் 23ஆம் நாளே, அதாவது இந்தத் தாக்குதல் நடத்தப்படும் 3 நாட்களுக்கு முன்பே தாஸ்குப்தாவுடன் உரையாடியுள்ளார். ‘இந்த முறை ஒரு பெரிய சம்பவம் நடக்கவுள்ளது; வழக்கத்தை விடப் பெரிய தாக்குதல். அதே நேரத்தில் காஷ்மீரிலும் ஒரு விஷயம் பெரிதாக நடக்கும். அரசு பாகிஸ்தானைத் தாக்கவுள்ளது. மக்கள் கொல்லப்படுவார்கள்’ என்று விவரித்துள்ளார் அர்னாப்.

  2. ரிபப்ளிக் டி.வி. தொடங்கிய புதிதில் பரபரப்புக்காக சசி தரூரின் மனைவி அவராலேயே கொல்லப்பட்டார் என்ற பொய்ச் செய்தியைப் பரப்பினார் அர்னாப். அவர் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார் சசி தரூர், அந்த வழக்கில் சசி தரூரின் வக்கில் மனு சிங்வி வென்று விடுவார். அதனால் நீதிபதியை வாங்கிவிடு என்று அறிவுறுத்துகிறார் தாஸ்குப்தா. ஒரே வாரத்தில் அர்னாப் அந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.

  3. டிஷ் டிவிக்குப் கட்டணம் செலுத்தாமல் ரிபப்ளிக் டி.வியை ஒளிபரப்பு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச்செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஜயவர்த்தன சிங் ரத்தோர் ஒதுக்கிவைத்து விடுவார் என்கிறார் அர்னாப். ரிபப்ளிக் டி.வி, மற்றும் ஜீ டி.வி சேனல்கள் இப்படிக் கட்டணம் செலுத்தாமல் ஒளிபரப்பு செய்த வகையில் அரசுக்கு 52 கோடி இழப்பு ஏற்பட்டதாக நியூஸ் லாண்டரி தகவல் வெளியிட்டது.

 ‘ஆக்ஸஸ்’ – Access

 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்த போது அருண் ஜேட்லி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமைச்சர் பதவிக்கு வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அழுத்தம் கொடுத்து வெளியே அனுப்பியதாக அர்னாப் இந்த உரையாடலில் பேசி இருக்கிறார். அதே சமயம் தனது தோழியான ஸ்மிரிதி இரானி அந்தப் பதவிக்கு வர இருப்பதாகவும் அர்னாப் பேசியுள்ளார். மேலும் டிராய் அமைப்பு பார்த்தோ தாஸ்குப்தா மீது வழக்குப் பதிவு செய்யவிருந்த நிலையில் தன்னை அதிலிருந்து காப்பாற்றுமாறு தாஸ்குப்தா கேட்கிறார். அவருக்கு ‘AS’ அதைப் பார்த்துக் கொள்வார் என்கிறார் அர்னாப். ‘AS’ என்பது அமித் ஷாவைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்கிறார்கள். அதே போல் பிரதமர் நரேந்திர மோடியைத்தான் ‘NM’ என்று குறிப்பிட்டு இருவரும் பேசியுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது, பிரதமரின் அலுவலகத்துடனும், நேரிடையாக பிரதமருடன் தனக்கிருக்கும் நெருக்கத்தையும் அர்னாப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மோடி அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் படங்களுடன் எடுத்துக் காட்டிய அர்னாப், முக்கியமான அரசாங்க முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுமளவுக்குப் பிரதமரின் அலுவலகத்தோடு (PMO) தானிருப்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். 

 தான் குஜராத்தியில் எழுதிய கவிதைகளை ‘NM‘ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருமாறு தொந்தரவு செய்வதாக ‘செல்ல’ கோபத்துடன் குறிப்பிடும் கோஸ்வாமி ‘AS’ இன் ‘அவுட் ஆஃப் மூட்’ தருணங்களையும் தாஸ்குப்தாவுடனான அரட்டையில் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் வரும் பொழுது எதிர்க் கட்சிகள் எழுப்பும் கேள்விகளையும் கோஷங்களையும் தவிர்க்க, சமூக ஊடகங்களில் எப்படி அவர்களை ‘ட்ரோல்’ செய்வது என்பது குறித்த ‘ராஜ தந்திரங்களும்’ இவர்களது சம்பாஷணைகளில் இடம் பெற்றுள்ளன. 

 பார்த்தோ தாஸ் குப்தா அவரது ‘அணில் போன்ற சேவைக்கு’ பிரதிபலனாக எதிர்பார்த்தது பிரதம மந்திரியின் அலுவலகத்தில் ‘மீடியா அட்வைசர்’ அல்லது அதற்குச் சமமான வேலை.

 அதற்கு முன்னர் பார்க் அமைப்பு அவரை நெருக்கிய சமயத்தில், ‘AS’ ஸிடம் சொல்லி டிராய் மூலமாக ‘பார்கின்’ குரல்வளை ஒலியைக் குறைக்க வேண்ட, கோஸ்வாமி ‘என்னால் முடியும்’ என்று ‘பாசிடிவ்’ மனதுடன் நம்பிக்கையளித்துள்ளார். 

 ‘கிளிட்ஸ்’ – Glitz

 ரிபப்ளிக் டி.வி. தொடங்கப்பட்டதன் நோக்கமே, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்குத் துணை நிற்கும் வகையில் எதிர்க்கட்சிகளையும் பேசவிடாமல், அல்லது அவர்கள் பேசுவது மக்களுக்குக் கேட்காத வகையில் உரக்கக் கத்தி, போலி செய்திகள் மற்றும் பிரச்சாரங்களைப் பரப்புவதற்காகத்தான் என்பது  நன்கு அறியப்பட்டதாகும்.  இந்தியாவில் கொரோனா நோயைப் பரப்பவே ‘தப்ளிக் ஜமா அத்’ கூட்டப்பட்டது என்று அர்னாப் ‘எச்சரித்ததை’ கேட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் “ஆசிட் (LSD) இல் மிதக்கும் ஃபாக்ஸ் நியூஸ்” என்று ரிபப்ளிக் டி.வி.யைப் பற்றிச் சொல்லியிருந்தார். மற்ற செய்தி நிறுவனங்களுக்கு ரிபப்ளிக் டி.வி. மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பெரும்பாலான பத்திரிக்கைகள் தற்போது வாய் மூடி, ‘நடுநிலை’ வகிக்கின்றனர் என்பது தான் அதிசயம். அவர் பத்திரிகையாளரே இல்லை, மத்திய அரசின் இடைத்தரகர், பிரச்சார பீரங்கி, அடியாள் என்று அர்னாபை வசைபாடிய பெரும் ஊடக நிறுவனங்கள் இன்று அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன. பால்கோட் தாக்குதல் குறித்து பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உட்பட 5 பேருக்குத்தான் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறிய நிலையில் இத்தகவலை அர்னாப்புக்கு கசிய விட்டது யார், ஏன், எப்படி என்ற கேள்வியை ஒருவரும் கேட்கவில்லை. 

 அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நாடறியும். அந்தச் சொற்றொடர் இன்று ஊடகத் துறைக்கும் பொருந்திப் போகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. இந்தியாவில் பெரும் காட்சி மற்றும் செய்தி  ஊடகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையான கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இருபது  வெவ்வேறு துறைகளில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  நேர்மையான, நடுநிலையான செய்தியை மக்களுக்குச் சேர்க்க வேண்டிய அவசியமும் பொறுப்பும் இருப்பதில்லை. அப்படி நேர்மையாக நடந்து ஆளும் அரசைப் பகைத்துக் கொள்ளுமளவுக்கு அவர்கள் முட்டாள்களுமில்லை. தங்களது மற்ற துறை வியாபாரங்களுக்கு அரசின் சலுகை பெற, அரசின் ஊது குழலாக, அரசின் சார்பில் மற்றவரிடம் விலை பேசும் நல்ல தரகர்களாகச் செயல்படுவது தான் இவர்களது குறிக்கோள்,

 ‘ரீவைண்ட்’ – R-EWIND

 கடந்த நவம்பர் 16ஆம் நாள் தேசியப் பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டபோது, “கோவிட் தொற்று நோயால் உலகம் திண்டாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தொற்று நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம் ஊடகங்கள் தொடர்ந்து மிகச் சிறப்பான சேவையைச் செய்து வருகின்றன” என்று பாராட்டியிருந்தார் இந்தியப் பிரதமர்.  அதே நாளன்று உள்துறை அமைச்சர் “நமது மாபெரும் தேசத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த நமது ஊடகச் சகோதரத்துவம் அயராது உழைத்து வருகிறது. மோடி அரசு பத்திரிகைச் சுதந்திரத்திற்கு உறுதியளித்து, அதைத் தூண்டுவோரைக் கடுமையாக எதிர்க்கிறது. கோவிட் தொற்று சமயத்தில் மீடியாவின் குறிப்பிடத்தக்க பங்கை நான் பாராட்டுகிறேன் என்று சொல்லியிருந்தார். 

 உண்மையில் 2020ஆண்டு மட்டும் இந்தியாவில் 62 பத்திரிகை, ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கோவிட் பொது முடக்கத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளானதைக் குறித்து எழுத முனைந்தவர்கள் ஐம்பதுக்கும் மேல். “அவநம்பிக்கை, எதிர்மறை மற்றும் வதந்தியின் பரவலைச் சமாளிப்பது முக்கியமானது” என்று பிரதமர் குறிப்பிட்டிருந்ததன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 

 செப்டம்பர் 14 2020 அன்று உத்தரப் பிரதேச, ஹத்ராஸ் மாவட்டத்தில் 20 வயதுப் பெண் ஒருவர் நான்கு கொடிய காமுகர்களால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு இறந்தார். இவர்கள் மீது அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்க, புகார் கொடுத்தவர்களையே தண்டித்த போலிஸ் அந்தப் பெண்ணின் சடலத்தை பெற்றோர்களிடம் தராமல் எரித்துவிட்டது. குற்றவாளிகளின் சமூகத்தினர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டிச் சித்ரவதை செய்த அவலமும் நடந்தேறியது. இது குறித்து விசாரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன், ஹத்ராசுக்குச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார். ஹத்ராஸில் அமைதியைக் குலைக்க முயன்றதாக உத்தரப் பிரதேசக் காவல்துறை இவரைக் கைது செய்தது. இன்று வரையில் அவருக்குப் பிணை வழங்க மறுத்து, சிறையில் வைத்துள்ளது உபி அரசு. இதையும் எந்த பெரிய ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

 ‘ராப்’ – R-WRAP                   

 இந்தியப் பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் பல விலை பேசப்பட்டு ‘கோதி மீடியா’க்களாக மாறி வருகின்றன என்கிறது நியுஸ் லாண்டரி என்கிற நிறுவனம். இதற்கு மறுத்த அல்லது சரியான விலை கிடைக்காத ஊடகங்கள் நசுக்கப்பட்டு முடக்கப்பட்டு விடுகின்றன. ‘மும்பை மிர்ரர்’, ‘ஹஃபிங்டன் போஸ்ட் இண்டியா’ போன்ற பத்திரிகைகள் இதற்கு உதாரணம். புதிது புதிதாக கிளப்பப்படும் புரளிகளில் ஆர்வம் காட்டும் பத்திரிகைகள் பழைய சம்பவங்களின் நிலைகளை மறந்து, மறைத்து விடுகின்றனர். சமூக ஊடகத்தில் இயங்கி வரும் சின்ன செய்தி நிறுவனங்கள் / அமெச்சூர் செய்தியாளர்கள் சிலர் மட்டுமே அரசின் தலையீடுகளுக்கு அஞ்சாமல் செயல்படுகிறார்கள். பகிரங்கமாக, அதே சமூக ஊடகத்தில், தங்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் நபரின்  பெயர், முகவரி, மதம் கேட்டு மிரட்டும் தாதாக்களும் இயங்கி வருகின்றனர். இப்படிச் சிறு குழுக்களாக இயங்கும் சமூக ஊடகத்தினரின் செய்திகளில் நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குள்ளானது தான். இந்தக் கட்டுரையின் உபதலைப்புகள் ஒவ்வொன்றும் ரிபப்ளிக் டி,வியில் வெளியாகும் நிகழ்ச்சிகளின் தலைப்புகள். தலைப்பில் மட்டுமே வசீகரத்தையும், தேசப்பற்றையும் காட்டும் ஊடகம் மட்டுமே வலுவூன்றி தூண்களாவது ஜனநாயகத்துக்கு அரோக்கியமானதல்ல. 

 ஊடகங்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் பல அத்தியாவசிய விழுமியங்களை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதும், தலைமை மற்றும் கொள்கை குறித்த சிந்தனை முடிவுகளை எடுக்கத் தேவையான தகவல்களை குடிமக்களுக்கு வழங்குவதும் ஊடகத்தின் கடமையாகும்.  உண்மையான ஜனநாயகத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைச் சரி பார்க்கும் கண்காணிப்புக் குழுக்களாக ஊடகங்கள் செயல்படுவது அவசியம். சமீபத்தில் வெளியான 180 நாடுகள் கொண்ட பத்திரிகைட் சுதந்திரத் தரப் பட்டியலில் இந்தியா 142வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.  இந்தியாவின் தகவல் மற்றும் ஓளிபரப்புத் துறை அமைச்சரான திரு. பிரகாஷ் ஜவடேகர் “இந்தியாவில் ஊடகங்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. இந்தியாவில் ‘பத்திரிகைச் சுதந்திரம்’ பற்றிய மோசமான படத்தைச் சித்தரிக்கும் இந்த ஆய்வுகளின் உண்மைத் தன்மையை வெளியிடுவோம்” என்று கூறியிருந்தார். இந்தியப் பத்திரிகை சுதந்திரத்துக்கு அர்னாப் கோஸ்வாமியின் ஊழலையும், அதற்கு வழங்கப்படும் பாராமுக ‘நேர்மையையும்’ அவர் இதற்கு உதாரணமாகச் சொல்லாமல் இருந்தால் ஷேமம்! 

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad