\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இரண்டாம் அலையோடு ஓயட்டும்

இந்தியாவில் தலைவிரித்தாடிய கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே குறைந்துள்ளதை, அண்மைக்காலப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மே மாதம் எட்டாம் நாள் 414,188 என்றிருந்த தொற்று பாதிக்கபட்டவர் எண்ணிக்கை படிப்படியாகச் சரியத் துவங்கி, ஜூன் முதல் தேதி 127,510 என்று பதிவாகியிருப்பது சிறிதளவு ஆறுதல் அளிக்கிறது. தடுப்பூசி போடும் வேகமும் சற்றே அதிகரித்திருப்பதைக் காணமுடிகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைவதால், தொற்று பரவுதலும் குறையும் வாய்ப்பு அதிகமிருக்கும் என நம்பலாம். தற்போது தொற்றின் சீற்றம் குறைந்தாலும், முதல் அலையின் போதிருந்த மெத்தனப் போக்கினால் நாடும், மக்களும் எவ்வளவு துன்பத்திற்குள்ளாக நேர்ந்தது என்பதை மறந்துவிட முடியாது. நாளுக்கு நாள் வெவ்வேறு வகையில் உருமாறும் கொரோனா கிருமியை எதிர்கொள்ள வலுவான மருத்துவ கட்டமைப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிக அவசியம். இரண்டாம் அலை உச்சமடைவதற்குக் காரணமாகயிருந்தவை என்னென்ன என்று அலசி ஆராய்ந்து அதிலிருந்து பாடம் கற்க முயல்வது விவேகமான நடவடிக்கையாகயிருக்கும். 

தரவுகள் 

செப்டம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் அப்போதைய அதிபர் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், தரவுகள் எண்ணை, தங்கத்தைப் போல மிக மதிப்புள்ள பொருளாக (‘Data is the new Oil ; the new Gold’) மாறி வருவதைக்  கூறினார். அவர் கூறியது முற்றிலும் உண்மை. குறிப்பாக புள்ளியியல், ஆய்வியல் வல்லுனர்களை வழி நடத்திச் செல்வதே தரவுகள் தான். 

ஆனால் இந்திய நாட்டில் கோவிட் பாதிப்பு, மருத்துவம் குறித்த துல்லியமான தரவுகள் இல்லாததாலும், கிடைக்கும் சில தகவல்கள் திருத்தப்பட்டதாக இருப்பதாலும் அவை ஆய்வுகளுக்குப் பெரிதளவில் உதவவில்லை என்கிறார் வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல். இந்திய அரசின் கொரோனா தடுப்பு மற்றும் ஆய்வுக் குழுவின் (INSACOG) தலைவராகயிருந்த ஷாகித் கொரோனா பரிசோதனை குறித்த ஒழுங்கற்ற தகவல்கள் முரனான ஆய்வு முடிவுகளை அளித்ததாகவும், அரசாங்கம் ஆய்வுகளுக்குத் தேவையான ஒத்துழைப்பைத் தருவதில்லை எனவும், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படைத் தன்மையை ஏற்க அரசாங்கம் தயங்கியதாகவும் அமெரிக்காவின் ‘நியு யார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். 

ஷாகித் சொல்லியது போல, தினசரி அரசாங்கம் வெளியிடும் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் கவனித்து வரும் சாமான்யருக்குக் கூட இதிலுள்ள முரன்கள் புலப்படும். உதாரணத்துக்கு, முதல் அலை சமயத்தில் 2020 ஆம் ஆண்டு   ஜூன் மாதம் 16ஆம் நாள் இறப்பு எண்ணிக்கை 2003 (ஏழு நாள் சராசரி 508) என்று பதிவாகியிருந்தது. அதற்கு முந்தைய தினம், ஜூன் 15 ஆம் நாள் இறப்பு எண்ணிக்கை 380 எனவும், அடுத்த நாள், ஜூன் 17 ஆம் நாள் ̀̀̀̀̀334 எனவும் பதிவாகியிருந்தது. 16ஆம் தேதியன்று மட்டும் ஏன் இறப்பு எண்ணிக்கை சராசரியை விட ஆறு மடங்கு அதிகரித்து அடுத்த நாளே எப்படி சராசரியை விட குறைந்தது என்பது இன்றும் கேள்விக்குறியாகவேயுள்ளது.  


அரசியல்

இன்னொரு புறம் அரசியல் ஆதாயங்களுக்காகவும், உலக அரங்கில் ‘விஸ்வகுரு’ பிம்பத்துக்காகவும் மருத்துவ ஆய்வாளர்கள் விடுத்த கோவிட் திரிபின் இரண்டாம் அலை பற்றிய எச்சரிக்கைகள் காற்றில் விடப்பட்டன. ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான மாநாடுகள், பேரணிகள் மற்றும் உத்தரகாண்ட், ஹரித்துவாரில் நடத்தப்பட்ட கும்பமேளா நிகழ்வுகளில் சமூக விலகல், முகக் கவசம் போன்ற எந்தப் பாதுகாப்பு அம்சங்களும் கடைபிடிக்கப்படவில்லை. ‘என் வாழ்நாளில் பல பேரணிகளைப் பார்த்துள்ளேன், ஆனால் அரசியல் பிரச்சாரக் கூட்டமொன்றில் இதுபோன்றதொரு கூட்டத்தை நான் எப்போதும் பார்த்ததில்லை’ (ஏப்ரல் 17ஆம் தேதி  கொல்கத்தா, அசான்சோல்) என்று நாட்டின் பிரதமர் பேசியது அவரது கடமைகளை, பொறுப்புகளை மறந்த செயலாகப் பார்க்கப்படுகிறது. 

தொற்று அச்சம் காரணமாக கும்பமேளாவை நடத்துவதில் தயக்கம் காட்டிய உத்தரகாண்ட் முதலமைச்சரைப் பதவி விலகச் செய்து, போதிய விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்பாடில்லாமல் லட்சக்கணக்கில் பக்தர்களை ஒன்று கூட வைத்தது தொற்று பரவலுக்கு இன்னொரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை. ஏப்ரல் மாதம் முழுதும் நடைபெற்ற இந்த நிகழ்வில் 91 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். ‘ஷாஹி ஸ்நான்’ எனும் புனித நீராடல் நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கில் பங்கேற்ற பக்தர்கள் எந்த சுகாதார அம்சங்களையும் பின்பற்றாமல் குவிந்ததால் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். 

இப்படி அரசுகள் காட்டிய தளர்வை, பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொண்டு, நாடு நிஜமாகவே கொரோனாவை வென்று இயல்பான நிலைக்குத் திரும்பி விட்டதாக நினக்கத் துவங்கினார்கள். சமூக விலகல், முகக் கவசம், சுகாதார நடைமுறைகளில் சமரசம் செய்துகொண்டு விட்டார்கள்.

 

தவறான திட்டமிடல்


இந்தியாவில் ஜனவரி 16ஆம் நாள் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜூன் மாத முதல் வாரக் கணக்கின்படி 22 கோடி மக்கள் முதல் டோஸ் ஊசியையும், 4.5 கோடி மக்கள் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளனர். அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும் தடுப்பூசிப் பற்றாக்குறை காரணமாக மொத்த மக்கட்தொகையில் 3.2% மட்டுமே முழுதுமாகத் தடுப்பூசி போட்டுள்ளனர். ஏறக்குறைய 150 நாடுகளுக்கு, 6 கோடி தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ததாகப் பெருமைபட்ட அரசு, தன் சொந்த மக்களுக்கு  ‘மந்தை நோய்த் தடுப்பாற்றல்’ வளர்ந்துவிட்டதாகத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இன்று அரசின் தெளிவற்ற, திட்டமிடாத போக்கினால் இந்தியர்கள் மட்டுமின்றி, இந்தியா உதவி செய்வதாக அறிவித்திருந்த இன்ன பிற நாடுகளும் சிக்கலில் தவிக்கின்றனர். 

தடுப்பூசி பற்றாக்குறைக்கு நடுவே மருத்துவமனைகள் சுனாமி போலப் பெருகிய நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் ஸ்தம்பித்தன. மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் மற்றும் இட வசதியின்மை, ஆம்புலன்ஸ் வசதியின்மை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, சிகிச்சைக்கான ஊக்கமருந்து பற்றாக்குறை போன்றன் பல காரணங்களால் நோயாளிகள் உயிரிழக்கும் பரிதாப நிலை இருந்துவந்தது. சரியான தருணத்தில் ஆக்ஸிஜன் இன்றி, சிகிச்சை கிடைக்காமல் எண்ணற்றோர் உயிரிழந்தனர். இந்த இக்கட்டான நேரத்தில் தடுப்பூசிகளை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று மாநிலங்கள் மீது பொறுப்பைத் தள்ளிவிட்டு விட்டது மத்திய அரசு. உள்நாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் இதற்காகவே காத்திருந்தது போல மத்திய, மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வெவ்வேறு விலையை விதிக்கத் துவங்கினார்கள். இதற்கு முன்னர், தாங்கள் உற்பத்தி செய்த தடுப்பூசிகளைப் பாதுகாக்க இடமில்லாமல் மற்ற நாடுகளுக்கு விற்று வந்தன இந்த தனியார் நிறுவனங்கள். எதிர்க்கட்சிகள், இந்த ஏற்றுமதியை நிறுத்த சொன்ன போது, வெளியுறவு துறை அமைச்சர் மருத்துவத்துறை ‘ஒப்பந்த விதிகள்’ பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள் என்று அவர்களைக் கிண்டல்  செய்ததும், அதற்கடுத்த நாளே தடுப்பூசி ஏற்றுமதிகளை மத்திய அரசு ரத்து செய்து நிறுத்திய முரன்பட்ட கூத்துகளும் நடந்தேறின.  இந்த ஏற்றுமதி வருவாய் இழப்பை ஈடு செய்யவும்,  உள்நாட்டு தேவைகளுக்கான உற்பத்தியை வேகப்படுத்தவும் வெவ்வேறு விலைப்பட்டியலை அறிவித்தன இந்நிறுவனங்கள்.   

மேலும் இந்த நிறுவனங்கள் உள்நாட்டின் தடுப்பூசி தேவைகளை நிறைவேற்ற முடியாமல் கைவிரித்து விட, மாநில அரசுகள் வெளிநாட்டு நிறுவனங்களை அணுகத் தொடங்கிவிட்டன. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்ஃபோர்டு செனேகா, ஸ்புட்னிக் போன்ற நிறுவனங்களோ இந்திய மாநில அரசாங்ககளுடன் நேரடி வர்த்தகத்தை வைத்துகொள்ளத் தயங்கி வருகின்றன. இப்படி ஏகப்பட்ட குழப்பங்களால் மக்கள் அவதியுற்றது தான் மிச்சம். 

வெளிப்படைத்தன்மை

அறிகுறியற்ற தொற்றுகள், பரிசோதனை வசதியற்ற நிலை போன்ற காரணங்களால் தொற்றுகள் துல்லியமாகப் பதிவாவதில்லை. அதே போல், இதய நோய், இரத்த அழுத்தம் உட்பட இன்ன பிற நோயிருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு நிகழும் இறப்புகள் தவறவிடப்படுகின்றன. மேலும், மருத்துவமனைகளுக்கு வெளியே நிகழும் இறப்புகள், முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. பல மாநிலங்களில் உயிரிழப்போரின் சடலங்களை முறையாக தகனம் செய்ய இடமில்லாமல் குவியலாகப் பிணங்களை எரிக்கும் அவலங்கள் நடந்தேறின. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை நதியின் கரைகளில் புதைக்கப்படும், எரிக்கப்படும், நதிகளில் வீசப்படும் காட்சிகளைக் காணொளிகளில் காணமுடிந்தது. அடையாளம் தெரியாமல் வெவ்வேறு இடங்களில் கரையொதுங்கிய சடலங்களைக் குவித்து எரித்து வந்தது துயரத்தின் உச்சம். 

பொதுவாக கொரோனா தாக்கத்தின் அளவைக் கணக்கிட, அமெரிக்கா குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த இறப்புகளை, அதே மாநிலத்தில் கடந்த ஆண்டுகளில் அதே காலகட்டத்தில் நிகழ்ந்த இறப்புகளோடு ஒப்பிட்டது. 2020 ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய சராசரியை விட 22% கூடுதல் இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும் அவற்றில் 72% இறப்புகள் கொரோனாவால் நிகழ்ந்தவை என்பதையும் கண்டறிந்தது. இந்தியாவில் இதுபோன்ற தரவுகளைச் சேகரிக்கவில்லை. உதாரணத்துக்கு, குஜராத் மாநிலத்தில் மார்ச் மாதம் முதல் பத்து நாட்களில் 4128 கொரோனா தொற்றால் மரணித்தனர் என்று அரசாங்கம் பதிவு செய்துள்ளது; அதே பத்து நாட்களில் 1,23,873 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் முந்தைய ஆண்டுகளில் கொரோனா தொடர்பில்லாத இறப்பு எண்ணிக்கை சராசரியாக பத்து நாட்களில் சற்றேறக்குறைய 51,000 என்ற அளவில் இருந்துள்ளன. இம்மாநிலத்தில் பத்திரிக்கைகளில் தினசரி வெளியாகும் இரங்கல் செய்திகளை விட மிகக் குறைவான இறப்பு எண்ணிக்கையை அரசு பதிவிட்டு வந்தது என இம்மாநிலத்தின் முன்னணி பத்திரிக்கையான ‘சந்தேஷ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

நேர்மறை எண்ணத்தை வளர்க்க வேண்டுமென நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைகள் மறைக்கப்பட்டன. ஒரு சிலர் இந்தியாவில் விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட கொரோனாவால் குறைவாகவே இறக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தைக் காட்டி சப்பைக்கட்டு கட்டினர். ஒருவேளை தங்களது கட்சித் தலைவர் எவரேனும் கொரோனா தொற்றால் இறக்க நேர்ந்தால் இவர்கள் இதே ‘முதிர்ச்சி’யுடன் பேசுவார்களா என்பது தெரியாது. மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்தபின் நடந்த வன்முறையில் 19 பேர் இறந்தபோது, மேற்சொன்ன புள்ளிவிவரங்களை மறந்துவிட்டார்கள் இவர்கள். 

மாநில அரசுகள் சில, மருத்துவப் பற்றாக்குறை, இறப்பு எண்ணிக்கை குறித்த செய்திகளை சமூக ஊடகத்தில் வெளியிடுவோரைக் கைது செய்து வந்தன.  பல அரசியல் தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள் கூட தங்கள் உறவுகளின் சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் இடமில்லை எனவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லையெனவும் கதறிப் புலம்பி, அடக்கப்பட்டு ஓய்ந்தனர். 

தொற்று, இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டிப் பொய்யான பிம்பத்தை உருவாக்குவது எதிர்கால பேரிடர் காலங்களுக்குத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகளை, உபகரணங்களைத் திட்டமிடுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். பயனுள்ள தரவுகள் இல்லாமல் துல்லியமான கணிப்புகளைச் செய்வது கடினம். மக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் பெருந்தொற்றின் உண்மையான நிலையை அறிந்துகொள்வதற்கு முழு உரிமை உண்டு. அரசியல் ஆதாயங்களுக்காக அதிகாரத் துணை கொண்டு உண்மைகளை வெளியிடாமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும். 

அண்மைக் காலங்களில் அதிகக் கவனம் பெற்று வரும் திருக்குறளில் இந்தக் குறளும் உள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். 

 

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad