Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை

Filed in கதை, வார வெளியீடு by on July 12, 2021 0 Comments

‘கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை’, இது என்னப்பா பேர் புதுசா இருக்கேன்னு தோணுதுல்ல? எனக்கும் அந்த டவுட் வந்தது. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நகரில் ஜவுளிக்கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. சிறிய கடைகள் முதல் பிரமாண்டமான பல அடுக்கு மாளிகைகளை உள்ளடக்கிய ஜவுளிக்கடைகள் இந்த நகரில் நிரம்பி வழியும். அதிலும் சென்னை தியாகராயநகரில் அமைந்திருக்கும் ரங்கநாதன் தெரு இதற்கு மிகப் பிரசித்தம். ரங்கநாதன் தெருவுக்குப் போட்டிப் போடுவது என்று சொன்னால் புரசைவாக்கம் தான். வேறு எங்கிலும் மக்கள் கூட்டத்தை இந்தளவுக்குப் பார்க்க முடியாது. டெல்லியில் உள்ள கரோல்பாக் ‘மண்டே மார்க்கெட்’ கூட கண்டிப்பாக தோத்துதான் போகும், ரங்கநாதன் தெரு ஜன நெருக்கத்தைக் கண்டு. மெயின் ரோடிலிருந்து ரங்கநாதன் தெருவுக்குள் நுழையவேண்டும் என்றால் கிடைக்கும் அரை அடி இடைவெளியை “பக்”கென்று பிடித்துக்கொண்டு நுழைந்து, நெளிந்து, நிமிர்ந்து, குனிந்து – இப்படி தெரிந்த மற்றும் தெரியாத யோகா பயிற்சிகளைச் செய்து படிப்படியாக “முன்னேறி” செல்லவேண்டும். டாக்டர் பட்டம் போன்ற “அட்வான்ஸ்டு” பட்டங்கள் பெறுவதற்கு கூட இந்தளவு முயற்சி தேவைப்படாது. 

 

இது ஒரு பக்கம் இருக்க, தெருவுக்குள் நுழைந்து  உள்ளே போனால் கோவில் தேரோட்டம் போல அங்கும் கூட்டம். துணி வாங்குறோமோ இல்லையோ, கூட்டம் பார்க்கிறதுக்குனு பல பேர் வருவாங்க போல தெரியுது. அவர்களைக் கண்காணிக்கிறதே அந்தத் தெருவில் உள்ள கடை நிர்வாகிகளுக்கு  ஒரு சவால் தான். தினமும் இந்தக் காட்சிகளைச் சலிக்காமல் சென்னை ரங்கநாதன் தெருவில் பார்த்துகிட்டே இருக்கலாம். ஜவுளிக்கடை வியாபாரிகளுக்குத் தீபாவளி தினத்தையொட்டி  விக்கிற வியாபாரம்  தான் அவர்களுடைய அந்த வருட மொத்த  வியாபாரத்தில்  எண்பது சதவீதமாக இருக்கும். மற்ற நாட்களில் – குறிப்பாக – மழை காலங்களில் கடைகள் அழுது வடியும். அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அக்கடா என்று ஒரு மூலையில் நின்று கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருப்பார்கள். அவர்களை கேட்டால் – “கூட்டம் தான் எங்களுக்குப் பிடிக்கிறது” என்று சொல்லுவார்கள். (முதலாளிகள் அருகில் இல்லாத போது வேறு மாதிரி சொல்வார்களோ என்னவோ).

இன்னும் ஒரு சிலர் பொழுது போகாமல் அலமாரிகளில் இருந்து துணிகளை எடுத்து மேசைகளின் மேல் விரிப்பதும், பின்னர் மடித்து வைப்பதுமாக ஏதாவது  செய்துக் கொண்டு இருப்பார்கள். “வேலை மறந்து போகக்கூடாது அல்லவா!”. சரி முக்கிய விசயத்திற்கு வருவோம். 

கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை”

இந்தப்  பேருடைய ஒரு கடையை இப்பொழுது தான் திறந்திருக்கிறார்கள். அதாவது நமது சென்னை தியாகராய நகர் ராமநாதன் தெரு சந்துக்குள்ளே. நமது சென்னை நகரின் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து பொடி  நடையாக நடந்து வந்தால் ஷிவா விஷ்ணு கோவில் தாண்டி, ரங்கநாதன் தெருவும் தாண்டி சத்யா பஜாரும் தாண்டி, ராமநாதன் தெருவில் “சரக்”கென்று நுழைந்தால் கண்களுக்கு முன் பிரகாசித்துக்கொண்டிருக்கும்  இந்த விளம்பர பலகை. ஆறு மாடி கட்டிடம். துணி விற்பனை மட்டும் தான். வேறு விற்பனை இல்லை – அதே மாதிரி கடைக்கு வேறு கிளைகளும் இல்லை. 

 

நமக்கு எப்போதுமே இந்த ஜவுளிக்கடை விவகாரம் கொஞ்சம் கூட ஒத்து வராது. ஏதாவது  காரணம் சொல்லி தப்பித்து விடுவேன். வீட்டிலுள்ளவர்களும் அதை தான் விரும்புவார்கள். கடைக்குச் சென்று விட்டு மூஞ்சைத் தொங்க போட்டுக்கொண்டு நாம் ஒரு மூலையில் நின்று கொண்டோ அல்லது ஒரு உடைஞ்ச நாற்காலியில் உட்கார்ந்து கொண்டோ இருப்பதைப் பார்க்கும்போது “நம்ம வீட்டு” பெண்கள் தங்களுடைய துணிகள்  தேர்வு செய்வதற்கு ஒதுக்கியிருக்கும் பத்து மணி நேரத்திற்குள்ளும் நமக்காக சிறிது கவலைப்படுவார்கள். 

“நாம்”  அவர்கள் கவலைப்படுவதை விரும்புவதேயில்லை. 

காலை எட்டரை  மணி. அன்றைய பத்திரிகை கையில் என் கையில் விரித்து வைத்த  நிலையில் இருந்தது. திடீரென்று வீட்டிலே கூப்பிட்டாங்க – “வாங்க போயிட்டு வரலாம்”. கடை பெயரைச் சொன்னார்கள்; தெரு பெயரை சொன்னார்கள்; அந்தக் கடையின் சிறப்பம்சத்தைச் சொல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னார்கள். அந்த “சிறப்பம்சம்” என்ற வார்த்தை நெஞ்சை  சிறிது நேரம் சுரண்டிக்கொண்டு  இருந்தது. 

“இல்லேம்மா; எனக்குச் சுத்தமா பொறுமை இல்லை. என்னாலே மணிக்கணக்கா நின்னுகிட்டோ அல்லது ஒரு சேரில் உட்கார்ந்துகிட்டோ இருக்க முடியாது. மூட்டு வலி உயிரை வாங்கிடும். நான் வேணுங்குற பணத்தைக் கொடுத்திடுறேன். நீங்க வாங்குறதை வாங்கிட்டு  ராத்திரி பத்து மணிக்குள்ளே வீட்டுக்கு வந்து சேர்ந்துடுங்க.”

அப்பொழுது காலை ஒன்பது மணி. அப்ப கிளம்பினா கூட 13 மணி நேரம் அவுங்களுக்கு டைம் இருந்தது. 13 மணி நேரம் என்பது துணிகள் தேர்வுக்குப் போதுமான நேரம் (அவர்களைப் பொறுத்தவரையில்)  என்று எடுத்துக்கொள்ள முடியாது. இருந்தாலும் அவர்களும் நேரத்தின் தன்மையறிந்து தங்களுடைய இலக்கை முடித்துவிடுவதாக சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டார்கள். 

திடீரென்று சின்னதா எனக்குள் ஒரு உறுத்தல். “அது என்ன “கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை”?;  பார்த்துட்டுதான் வருவோமே.”

மனசு பட படன்னு அடிக்க ஆரம்பிச்சுது. கொஞ்சம் விட்டால் ரொம்ப பெருசா அடிக்க ஆரம்பிச்சிடுமோ என்று ஒரு பயம் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது. 

“சரிம்மா நானும் வரேன்.”

“டேய் பசங்களா, டாடியும் வராரு.” – மனைவியின் குரல் பக்கத்து வீட்டு பரிமளாவிற்கும் எதிர்த்த வீட்டு எழிலரசிக்கும் மெய்யாலும் கேட்டு இருந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. 

ஒரு வழியாக காலம் தாழ்த்தாது ஓலா பிடிச்சு கடை முன்பு வந்து சேர்ந்தோம்.

—:::   :::—

 

கடை வாசலில் குடும்ப சகிதம் நாங்கள் எட்டிப்பார்க்கவும், கல்யாண வீட்டு வரவேற்பு அறை நுழைவு வாயிலில்  கிடைக்கும் பிரமாதமான வரவேற்பு அங்கு கிடைக்கத்தொடங்கியது. பெண்களையும், குழந்தைகளையும் வரவேற்க ஒரே நிறத்தில் உள்ள சேலைகளை அணிந்த மங்கையர் குழாம் நின்று கொண்டிருந்தது. ஒருவர் ரோஜாப்பூ கொடுத்தார்; இன்னொருவர் கற்கண்டு தட்டை எடுத்து நீட்டினார்; மூன்றாமவர் குங்குமத்தை எடுத்து பெண்கள் நெற்றிகளில்  திலகமிட்டார். நாலாவது பெண் பன்னீர் தெளித்தார். ஒரு பத்மஸ்ரீ பட்டம் வாங்குவதற்கு வருகின்ற மிக மிக முக்கியமான  நபர்களுக்குக் கொடுக்கப்படும் வரவேற்பு அளவுக்கு இருந்தது அவர்கள் தந்த வரவேற்பு. 

சட்டென்று “தெரியாத்தனமாக கல்யாண வீட்டிற்கு வந்து விட்டோமோ” என்று ஒரு பொறி மின்னல் மாதிரி ஒரு சில நொடிகள் மனதிற்குள் நுழைந்து வெளியேறியது.   

இது ஒரு புறம் இருக்க, அழகாக வேஷ்டி அணிந்த நான்கு இளைஞர்கள் ஆண்களை வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர். பெண்களை போன்று வரவேற்பு கொடுக்க அவர்கள் தயாரில்லை என்பது அவர்கள் முகக்குறி மூலம்  நன்றாகவே தெரிந்தது. அவர்கள் அனைவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்  –  ஜவுளி வியாபாரம் 99 சதவீதம் பெண்கள் மனது வைப்பதால் தான் நடந்து கொண்டிருக்கிறது என்று. இருந்தாலும் குடும்ப பெண்கள் கூட வருகின்ற குடும்ப ஆண்களையும் ஓரளவுக்குத் திருப்தி படுத்தவேண்டும் என்ற ஒரு “மேம்பட்ட விழிப்புணர்வு” சமீபக் காலங்களில் கடை நிர்வாகிகளுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த இடத்தில தான் “சிறப்பம்சம்” தலை தூக்க ஆரம்பித்தது. நாம் வழக்கமாக எதிர்பார்த்த வரவேற்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது வரவேற்பு.  

“சார், டிரஸ் எடுக்கணும் அப்படின்னா அவுங்க கூட போங்க. இல்லேன்னா இப்படி எங்க கூட வாங்க.” ஒரு சினிமா படத்தில் நடிகர் சூரி சொல்லுவார் – “குடும்பமாக வாங்க – சந்தோசமாப் போங்க”ன்னு. அப்படி இருந்தது அவர்களுடைய கோரஸ் வாய்ஸ். (ஒரு தேர்ந்த இசைக்கலைஞரை வைத்து பயிற்சி கொடுத்திருப்பார்கள் போல.) 

நான் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன். ஏன் என்றால் எனக்கு எப்போதுமே “உண்மை” தான் பிடிக்கும். வம்பை விலை கொடுத்து நான் வாங்க விரும்பவில்லை. மனைவியிடம் கை காட்டிவிட்டு விலகிக்கொண்டேன். 

எனக்காகவே, எனக்காகவே ஒரு சிப்பந்தி துணைக்கு வர நான் ஒரு “பிரதேசத்தில்”  நுழைந்தேன். 

அது ஒரு பெரிய ஹால்.  சும்மா சொல்லக்கூடாது. நுழைந்தவுடன் கண்களில் பட்டவை – கிட்டத்தட்ட 25  மேசைகள் வரிசையாக போடப்பட்டு அவற்றை சுற்றி நிறைய நிறைய நாற்காலிகள் வைக்கப்பட்டு இருந்தன.   மேசைகளின் மேல்  நிறைய நிறைய புத்தகங்கள் மற்றும் அன்றைய தின பத்திரிகைகள் கிடந்தன. எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர் வெங்கடேசனின் “வீரநாயகன் வேள்பாரி” புத்தகமும் என்னைப் பார்த்து கண் சிமிட்டிக்கொண்டு இருந்தது.  கிட்டத்தட்ட அந்தக் காலை நேரத்தில் கூட  முப்பது  பேர் சுற்றி வர அமர்ந்து புத்தகம் மற்றும் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்தார்கள்.  “ஒரு வேளை முந்தின நாள் இரவே கூட அவர்கள் வந்திருந்தாலும் வந்து இருக்கலாம்”. கிட்டத்தட்ட ஒரு நூலகத்தை போல இருந்தது. அண்ணா அறிவாலயம் என்ற மாபெரும் நூலகத்துக்குப் போட்டி போடும் அளவில் இருந்ததாக என்னுடைய ஒரு உணர்வு சொன்னது. ஒரே  நேரத்தில் 100 பேர் வசதியாக அமரலாம். 

“சார், இது எமெர்ஜெண்சி ஓய்விடம். சீக்கிரம் வேலை முடிந்து செல்லவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு  என்றே உருவாக்கப்பட்டது. அதிக நேரம் தங்க விரும்புபவர்கள் உள்ளே செல்லலாம். வாங்க, நான் அடுத்த செக்சன்களையும் காட்டுகிறேன்.”

கடை சிப்பந்தி கொடைக்கானல் டூரிஸ்ட் கைடு மாதிரி விளக்கிக்கொண்டு வந்தார்.

அதே ஹாலில் சிறிது தூரம் தள்ளி நடந்து போகவும்,  சோபாக்கள் வரிசையாகக் கிடந்தன. இருபது சோபாக்கள் இருக்கும். 60 நபர்கள் அமர முடியும். அதில் பத்து  நபர்கள்   காலை நீட்டி குஷாலாக சாய்ந்து கொண்டு மொபைல் போன்களை நோண்டிக்கொண்டிருந்தார்கள். 

எல்லோரும் ஆண் வர்க்கம் தான். (அதாவது ‘மேல் மெம்பர்ஸ்’). அடுத்ததாகப் போடப்பட்டிருந்த வித்தியாசமான சோஃபாக்களில் மூன்று நபர்கள்  காலை நீட்டி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம்   மற்றும் மலையாள மொழிகளில் அவர்களுடைய குறட்டை சத்தம் ‘பேக்கிரவுண்ட் வாய்ஸ்’ வைத்து பலவிதமான சுருதிகளுடன் வந்து கொண்டிருந்தன. ‘பேஸ் கிடார்’ வாசிக்கும் கலைஞர்கள் அங்கு  இரண்டு மணி நேரம் செலவழித்தால், அவர்களுக்குப் பலவிதமான “ஒலி” மாதிரிகள் கிடைத்திருந்திருக்கும். 

 

என்னைக் கூட்டிக்கொண்டு வந்த கடை சிப்பந்தி  என்னை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார். இருபது கட்டில்கள் கிடந்தன. அவற்றின் மேல்   படுக்கைகள் கிடந்தன. மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. நான்கு நபர்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்; எதைப் பற்றியும் கவலை இல்லாமல் மல்லாந்து கிடந்தார்கள். இவர்கள் எதற்கும் கவலைப்படாதவர்களாகவும், நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற “தலையாய” சிந்தனை உள்ளவர்களாக இருப்பதால் தலையணைகளின் மேல் தலைகளை  வைத்து தூங்கிக்கொண்டிருப்பதாகவும்  எனது மனதுக்கு தெரிந்தார்கள். 

ஒரு அறிஞர் சொன்னதாக கூட எனக்கு நினைவு. “ஒரு மனிதன் தூங்கும்போது தான் மற்றவர்களுக்குத் தொந்தரவு தராதவனாக இருக்கிறான்”  என்று.  

இப்பொழுது என்னுடைய முகத்தில் விநாடிக்கொரு முறை வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்த கேள்விக்குறிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கடை சிப்பந்தி சொல்ல ஆரம்பித்தார். 

“சார், எங்க முதலாளி சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். குடும்பத் தலைவர்கள் என்ற பதவிகளைச் சுமந்து கொண்டிருக்கும் ஆண் வர்க்கத்தினரின் சிரமங்களைப் புரிஞ்சிகிட்டு இந்த மாதிரி ஏற்பாடுகளைப் பண்ணியிருக்கிறார். இந்த மாதிரி ஏற்பாடுகள் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற நகரங்களில்  கூட கிடையாது. ஏன் என்றால் எவரும் இப்படிப்பட்ட வித்தியாசமான வாடிக்கையாளர் சேவை முறைகளைச் சிந்தித்துப் பார்த்தது கூட இல்லை. ஆசியாவிலே முதன் முறையாக இந்த ஆண் வாடிக்கையாளர் சேவை முறையை நாங்க தான் கொண்டு வந்திருக்கிறோம்.”

எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. அந்த முதலாளியை நினைத்து மனசு புல்லரித்தது. மீண்டும் புல்லரித்தது. மீண்டும் மீண்டும் புல்லரித்தது.  இப்பவே அவரை நேரில் பார்க்கவேண்டும் என மனசு துடியா கிடந்து துடிக்க ஆரம்பிச்சுது. குடும்பங்களில்  புறக்கணிக்கப்பட்ட ஒரு வர்க்கத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட அந்த முயற்சியைப்  பாராட்ட நான் கண்டிப்பாக வார்த்தைகளைத் தேடியாகவேண்டும் என்ற  நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

இரண்டாவது ஹாலில், சிறிது தூரம் தள்ளி, ஐந்து ‘மசாஜ்’ நாற்காலிகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றிற்குள் கால்களை நுழைத்துக்கொண்டு மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். தகவல்களும் மூளைக்கு சென்று கொண்டிருக்கும். கால்களில் தேங்கியிருக்கும் வலியும் குறைந்து கொண்டிருக்கும். 

 சிறிது தூரம் தள்ளி நான்கு மேசைகள் கிடந்தன. அவற்றை சுற்றி நாற்காலிகள் கிடந்தன. ஒரு மேசையில் வைக்கப்பட்டு இருந்த கேரம் போர்டை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த நான்கு நபர்கள் நிமிட இடைவெளிகளில் உற்சாக ஒலிகள் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். 

அடுத்து வைக்கப்பட்டு இருந்த இரண்டு மேசைகளில் செஸ் போர்டுகள் இருந்தன. ஒரு போர்டின் முன்பாக இருவர் அமர்ந்து அவர்கள் முன்பாக அமர்ந்து கொண்டிருந்த ராஜா, ராணி மற்றும் படை வீரர்களின் அணி வகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். இடி விழுந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாகக் காது கேட்காது  என்பது  தான் உண்மை. 

அடுத்த நான்கு மேசைகளில் சீட்டு கட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த நான்கு நபர்கள் கூச்சல் போட்டுக்கொண்டு தங்கள் கைகளிலிருந்த கார்டுகளை இங்கிட்டும் அங்கிட்டும் விசிறிக்கொண்டு இருந்தார்கள். 

என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு தேர்ந்த கிளப்பில் கூட இவ்வளவு விஷயங்களை நான் பார்த்ததேயில்லை. ‘VGP பீச் ரிசார்ட்டில்’ நான் நின்று கொண்டிருக்கிற மாதிரி ஒரு பிரமை வந்து போனது. இன்னும் இன்னும் இன்னும் பல விளையாட்டுக்கள் இருந்தன. 

துப்பாக்கியால் சுடக்கூடிய  பலூன் விளையாட்டுகள், இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுடும் போட்டிகள், இருபது அடி தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும் காலி டின்களை ரப்பர் பந்துகளால் தகர்க்கும் போட்டிகள் – இப்படியாக வித விதமான போட்டிகள்  அங்கு  இங்கு என்று எங்கும் பராபரமாய் நிறைந்திருந்தன. ஒரு நிமிடம் சென்னை சொக்கித்தானிக்கு வந்து விட்டோமோ என்றும் கூட தோன்றியது. ஆக, மனது வாழ்நாளில் இதுவரை பார்த்து, ரசித்து, விளையாடி, மகிழ்ந்து  மூளை பிரதேசத்தில்  செருகி வைத்திருந்த நினைவலைகளை எழும்ப வைத்தது.

“சார் நீங்க காசு கொடுக்கவேண்டாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம்,” கடை சிப்பந்தி சொன்னார். எனக்காக கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் செலவு செய்திருக்கிறார். எனக்கு மட்டும் அல்ல; அங்கு வந்திருந்த அணைத்து ஆண் வர்க்கத்தினருக்கும் அந்த கடை சிப்பந்திகள்  அப்படித்தான் செய்து கொண்டிருந்தார்கள். 

“உண்மையிலேயே அந்த கடை முதலாளி வித்தியாசமானவர் தான். கண்டிப்பாக அவருக்கு கடவுள் மனசு இருந்திருக்கவேண்டும்.” 

மூன்று அறைகள் முடிந்தன. நான்காவது அறை வந்தது. அது மிக முக்கியமான அறை என்பது பார்த்த மட்டிலே தெரிந்து விட்டது. ஒரு மினி ஹோட்டல் மாதிரி இருந்தது. மேசைகளில் சூடான வடை, பஜ்ஜி, போண்டா, ரொட்டி, பிஸ்கெட் போன்ற ஐட்டங்கள் இருந்தன. தேநீர் மற்றும் காபி தருவதற்காகச் சிப்பந்திகள் தயாராக இருந்தனர். 

“சார், என்ன வேணாலும் சாப்பிடலாம்; எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம். என்ன வேணாலும் விளையாடலாம்; படுத்து தூங்கலாம், படிக்கலாம். இங்குச் செலவழிக்கும் இந்த நாள் உங்கள் வாழ்நாளிலே ஒரு “சுதந்திர நாளாக” இருக்கும்.” 

அந்தச் சிப்பந்தி ஒரு தேர்ந்த “ஞானி” போல பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்த, அந்த “சிறப்பம்சம்” என்ற வார்த்தைக்கு விடை கிடைத்தது போன்று தோன்றியது. இப்படி சொல்லிவிட்டு என்னை கூட்டிக்கொண்டு வந்த சிப்பந்தி விடை பெற்றுக்கொண்டு சென்று விட்டார். 

இது ஒரு ரயில்வே நிலையத்தின் ‘வெயிட்டிங் ஹால்’ மாதிரி இருக்கிறதா – இல்லை ஏர்போர்ட் ‘வெயிட்டிங் ஹால்’  மாதிரி இருக்கிறதா என்று சிந்தனை செய்ய  தொடங்கியவன், அதை அப்படியே  பேப்பரை கசக்குவது  போல கசக்கி வீசி  விட்டு  முதல் அறைக்கு செல்ல ஆரம்பித்தேன். 

“என்ன, ஒரு மதுபானக்கடை ஒன்று தான் பாக்கி” – மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். 

—:::   :::—

அப்படியே விக்கிரமாதித்தன் கதை சாயலில் திரும்பி வந்து ஹாலில் முதல் கட்டத்தில் உள்ள நூலகத்திற்கு சென்றேன். சில புத்தகங்கள் வாசித்தேன். பத்திரிகைகள் படித்தேன். “வீரநாயகன் வேள்பாரி” புத்தகத்தை திறந்து நீலன் செய்த சாகசங்களைப் பத்து நிமிடங்கள் வாசித்தேன். பிறகு அடுத்தக் கட்டத்திற்குச் சென்று வசதியான சோபாவில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு மொபைல் ஃபோனை கொஞ்ச நேரம் நோண்டினேன். அப்படியே அடுத்த அறைக்கு சென்று ஒரு மணி நேரம் நன்றாக, நிம்மதியாகத்  தூங்கினேன். மதியம் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு, விளையாட்டு மைதானத்திற்குச் சென்று சில விளையாட்டுகளை விளையாடினேன். கேரம்போர்டு விளையாடினேன். சீட்டு ஆடினேன். புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” மாதிரி “ஒதுக்கப்பட்ட ஆண் வர்க்கத்தினர் சங்கம்” என்று ஒன்று  ஆரம்பிக்கலாமா என்று மனம் “ஒன்றுபட்ட” குடும்பத்தலைவர்கள் ஒரு சிலர் “ஒன்று கூடி” அரை மணி நேரம் விவாதித்தார்கள். நானும் கலந்து கொண்டேன். சில கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டேன். 

‘மசாஜ்’ நாற்காலிகளில் கால்களை அரை மணி நேரம் நுழைத்துக் கொண்டு இளைப்பாறினேன். பத்து பலூன்களை சுட்டேன்; துப்பாக்கியால் பத்து குண்டுகளை விரயமாக்கி விட்டு, ஒரு முறை கூட இலக்கை சுடமுடியாமல் அடுத்த விளையாட்டுக்குத் தாவினேன். காலி டின்களை சகட்டு மேனிக்கு ரப்பர் பந்துக்களால் விளாசினேன். இரண்டு பந்துகள் கிழிந்து தொங்கின. டின்கள் அப்படியே என்னை பார்த்துக்கொண்டிருந்தன. 

மாலை ஆறு மணி ஆனது. ஒரு வடை சாப்பிட்டேன்; ஒரு போண்டா சாப்பிட்டேன். ஒரு காபி சாப்பிட்டேன்.  சும்மா சொல்லக்கூடாது. கும்பகோணம் மாமி கடை அளவிற்கு அற்புதமான சுவையோடு இருந்தது போண்டாவும், வடையும். அடிக்கடி இங்கு வந்து போக வேண்டும் என்று மனது துடிக்க ஆரம்பித்தது. கூடவே ஒரு “எச்சரிக்கை”யும் வந்தது. இதற்கான விலை அடுத்த மாடியில் ஆயிரக்கணக்கில் மனைவிமார்களால் ஈடு கட்டபட்டப்படும் என்று.  இதற்கிடையில் போன் மணி அடித்தது.

யாரு? நம்ம மனைவி வகையறாக்கள் தான். 

“என்னங்க, ‘பர்ச்சேஸ்’ முடிந்தது. வாங்க கிளம்பலாம்.”

“என்னம்மா அவசரம்?,  இன்னும் இரண்டு மணி  நேரம் கூட இருந்துட்டு வாங்க.”

“இந்த ஆளுக்கு என்ன ஆச்சு?” – அவளுடைய மெண்டல் வாய்ஸ் கேட்டது.

அன்றிலிருந்து இரண்டாம்  நாள் – காலை நேரம் –  பத்து மணி. பத்திரிகை படித்து முடித்து விட்டு, சோபாவில் சாய்ந்து கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, தோள்களை முறுக்கிக்கொண்டு நான் கொட்டாவி விட ஆரம்பிக்கவும், மொபைலில் ஃபோன் மணி அடிக்கவும் சரியாகயிருந்தது. 

ஃபோன் மணியடித்தது. முன்பின் தெரியாத ஒரு எண். “சார், “கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை” பற்றிய உங்கள் விலாவாரியான பதிவை முக நூலில் படிச்சேன். பிறகு வாட்சப்பிலும் படிச்சேன். கொஞ்சம் நேரம் செலவழித்து, எனக்கு சரியான  லொகேஷன் சொல்ல முடியுமா?”

“எப்படி சொல்றது?” – (எல்லாம் கப்ஸாவாச்சே.)

  • கவுரி சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad