Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சந்தியாகாலம்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments

🌿

 அதிகாலைத் தூக்கத்தை அனுபவித்தபடி படுத்திருந்த அகரனைத் தொலைபேசி அடித்து விழிக்கச்செய்தது.  “கொழும்பிலிருந்து ஃபோன்கோல்என்றதும்   மருண்டு கலவரப்பட்டான்.  அநேகமாக  அதிகாலைகளில் நல்லசெய்திகள் வருவதில்லை. யாராவது பணம் தேவையென்று குடைவார்கள்அல்லது குண்டுவீச்சில் எவருடையதாவது வீடு உடைந்துபோனதாயிருக்கும், அல்லது எவருடையதும் இழப்பாகவிருக்கும். அவன் பதட்டத்துடன் ரிசீவரைப் பிடித்திருக்கவும் மறுமுனையில் இருந்த சித்தார்த்தன்  ” அடேய்………. நம்ம சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம்என்றான்.

அப்படியா சந்தோஷம் . . . . ! ” 

என்னடா  கூலாய் பெர்லினில் இருந்துகொண்டு சந்தோஷமென்கிறாய் கடாறமுதல் அக்கரையிலிருந்து……  அந்த கோமதித் தாடகையல்லே வந்து மென்னியைப் பிடிச்சு    நெரிக்கப்போறாள்? ” 

சித்தார்த்தன் அதட்டியதுந்தான் சுப்பையா அப்பாவின் வைகுந்த யாத்திரைமுடியவும்,  கோமதி   எழுப்பப்போகும்  பிரளயம்  அவன்  முன்  விசுபரூபங்கொண்டது.

எப்போதோ அவர்கள் இருவருமாகப் புதைத்தபின் மறந்தும் விடப்பட்ட கண்ணிவெடி அசந்தர்ப்பமாய் இப்போது வெடிப்பேன் என்று பயங்காட்டுதேஏதாவது பேசி அவனைச் சமாதானப்படுத்தவேண்டிக் கேட்டான்

இது உறுதியான செய்திதானே? ” 

உறுதியான செய்திதான்……….. ஊரிலிருந்து நடராசு வாத்தியார் ஏதோ பென்ஷன் அலுவலாய் இங்கே வந்தவர், அவர் தான் செய்தி கொண்டு வந்ததுகோமதி புத்தூருக்கும் ஆளனுப்பி அறிவிச்சவவாம் . . . .  கிழவன்  கொஞ்சக்காலம் என்றாலும் வாழ்ந்த மண்ணல்லே? “

 “ஆள்   ஏலாமல், படுக்கையாய்க்பாடாய்க்  கிடந்தவராமோ… ? “

சச்சாய் . . .   அப்படியொண்டுமில்லை . . .  செத்த அன்றுகூட தோட்டத்தில மகளுக்கு மிளகாய்ப்பழம் ஆய்ஞ்சு குடுத்தவராம் . ……… பிறகு தோட்டத்தால வந்து வழமைபோலக் குளிச்சுச் சாப்பிட்டுட்டுப் படுத்தவர்தான் . . . .  விடிய எழும்பேல்லயாம் . . . .”

மனுஷன்   ஓடியாடிக்கொண்டிருக்கும்போதே  போய்விட்டார் என்பதில்  இருவரும் திருப்தியடைந்தனர்.

நீ தயங்காமல் நடந்த எல்லாத்தையும் விளக்கி கோமதிக்கொரு கடிதம் எழுதி நடராசா வாத்தியாரிட்டைக் கொடுத்துவிடு. கோமதி உண்மையறிந்தபின் உயிர் பிழைத்தாலும் இந்தக்கிளாலிக் கடல் தாண்டிக் கொழும்புக்கு வந்துன்னை   என்ன பண்ணப் போறா? “

“உனக்கென்ன சொல்லிப்போட்டு அங்கையிருப்பாய், உதைபடுறது நானல்லோ…….?”

அப்பிடியொரு வில்லங்கமென்டால் உன்னை ஜெர்மனிக்கு  எடுப்பிக்க மாட்டனே?” 

நடராசா வாத்தியார் கொண்டுபோகும் கடிதத்தைப் பார்த்து சுப்பையாக் கிழவனைப் பராமரிக்க வேண்டி வந்த அவலத்தை நினைத்து எப்படிச் கோமதி ரௌத்திரத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பா . . .  ஏமாற்றம், அவமானம்  தாங்காமல் துடிப்பா, தங்களிருவரையும் எப்படியெல்லாம் வாரித்தூற்றித்திட்டுவா என்பதை எண்ணிப் பார்க்க நடந்த முன்நிகழ்வெல்லாம் ஒரு குழப்பமான  கொடுங்கனவைப் போலிருந்தது  அவனுக்கு.

இங்கே சிலாகிக்கப்படும் சுப்பையா அப்பாவானவர், ஆத்ம நண்பர்களான அகரனுக்கோ சித்தார்த்தனுக்கோ உறவுக்காரரல்ல. தீவகத்தில் பிறந்து, அவர்கள்  ஊரில்  சிலகாலம் வாழநேர்ந்த ஒரு நாடோடிக்கிழவர். நலிந்த தோற்றமும், அன்பாக  எல்லோரிடமும் பழகி வாழ்ந்த அக்கிழவரை  ஒரு அனாதை என்றே ஊரில் பலரும் நினைத்திருந்தனர். அகரனுடைய சித்தப்பாவும், மிகுந்த பரோபகாரியும் சந்தானத்தார்தான் சுப்பையா அப்பாவை ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது எங்கிருந்தோ அழைத்துவந்து உறவினரைப் போலத்  தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து ஆதரித்தார். கிழவரும் இனிமேல்  தன் சந்தியாகாலம் அவர்களுடன்தான் என்றிருந்தார்.

சந்தானத்தார்  மனைவிக்கு   உரலில் மாவிடித்துக் கொடுப்பது, தோட்டத்துக் கிணத்திலிருந்து  நல்லதண்ணீர் மொண்டுவருவது, வீட்டுக் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் கூட்டிச் செல்வது, கடைகண்ணி, சந்தைக்குப் போவது, மாடு கன்றுகளுக்குத் தீவனம் தேடுவதென்று எல்லாவற்றிலும்  பாரதியின் கண்ணனாக – ஒத்தாசையாகவே  இருந்தார் சுப்பையா அப்பா.

அந்தக் காலத்து நாடக நடிகரான சுப்பையா அப்பா, ஒரு கதைப் பொக்கிஷம். இரவானதும் எல்லாக் குழந்தைகளையும் கூட்டிவைத்துக் கதை கதையாய்ச் சொல்லுவார். அகரனும் சித்தார்த்தனும் கூட ஊரில் இருந்தபோது அவரிடம் நிறையவே கதைகள் கேட்டிருக்கிறார்கள்

சுப்பையா அப்பாவுக்குத் தெரிந்திருந்த கதைகள் எண்ணிலடங்காது. எத்தனை முறைதான்  சொன்னாலும்  கதாபாத்திரங்களின் பெயர்கள், குணாதிசயங்கள்சம்பவங்களை அப்படியே திரும்பவும் விபரிப்பார். அவருடைய கதை சொல்லுங்கலையும் ஞாபகசக்தியும் அலாதியானவை. மதன காமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதைகள், ஜவனபுரி இளவரசியும்கோசலைநாட்டு இளவரசர்களும், தவிட்டுச் செட்டியும் மாணிக்கச் செட்டியும், உலோபிச் செட்டியும் ஊதாரி மகனும் . . . .  இப்படிப் பல நூறுஇன்றைய கணக்கில் ஒரு 50 MBytes ஆவது தேறும்! இவற்றையெல்லாம் கேட்டு அச்சேற்றாது விட்டது உண்மையில் எமக்குப் பேரிழப்பே

 அவர் காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் கொஞ்சம்   நிகண்டு, நன்னூல், தொல்காப்பியம் கூடப் படித்ததுண்டாம்! குழந்தைகள் எல்லாமே கதை கேட்டுத் தூங்கியபின்னால், ஒரு சாக்கை விரித்து அதில் சம்மணமிட்டமர்ந்து தனக்குத் தூக்கம் வரும்வரையில் அந்தக் காலத்து கோவலன் கண்ணகி, மாதவி மணிமேகலை, வள்ளிதிருமணம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம், இந்திரஜித்து கூத்துப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு    சுருட்டும் சுத்துவார்.  

சனிக்கிழமைகளில் முழுக்கென்றால் சந்தானத்தார்  அவருக்கு ஐந்துரூபாய்கள் கொடுப்பார். பொழுது சாய்ந்து மைம்மலாக அதையோ அல்லது அவர் சுருட்டும் சுருட்டுக்களை விற்றவழியில் சேர்ந்திருக்கும் சக்கரங்களையோ எடுத்துக்கொண்டு, ஓசைப்படாது புத்தூர்ச்சந்திக்குப்போய்  அரையோ காலோ சாராயம் வாங்கிவந்து தாழ்வாரத்தில் விறகுக்கட்டுகளிடையே அமர்ந்து கீறிவிட்டு   முகத்தில் புன்னகைதவழச்  சூரியப்பிரகாசமாயிருப்பார்

ஒருபுளுகம்வந்துவிட்டால் அயலில் அவரை வரவேற்கும் வீடுகளுக்கு ஒரு   ‘விசிட்அடிப்பார்.   . அவர் அதிகம்விசிட்பண்ணுவதெல்லாம் அகரன் வீட்டுக்குத்தான். அவரைக் கண்டுவிட்டால் போதும் அகரனின் சகோதரிகள்அப்பா ஒரு கதை சொல்லுங்கோ . . .  சொல்லுங்கோ . . .  ” என்று அவரைப் பிடித்துக் கொள்ளுவார்கள்

அவரும்பிகுஏதும் பண்ணமாட்டார். நிறையச் சீவலோடு வெற்றிலையைச் சேர்த்து செழிக்கப் போட்டுக் கொண்டு ஒரு உபன்யாசியைப் போலச் சம்மணமிட்டுத் தரையிலமர்ந்து கொண்டு தொடங்கிவிடுவார். ஏற்றியசுப்பாவுக்குத் தக்க வீதத்தில் கதைகளின் வர்ணிப்பும் விஸ்தாரமும் இடையிடையே  பாட்டுக்களோடும்  இயைந்து  அமையும்

சந்தானமானவர்  பிறன் வாடத்தான் தவிக்கும் தயாளன்யாழ் தனியார் மருத்துவமனையொன்றில் கணக்காளராய் வேலை பார்த்தவர். 1970 களின் நடுப்பகுதியில் பணிஓய்வின்போது, கிடைத்த சேமிப்பு நிதியம் அதுவரை உருவாகியிருந்த கடன்களில் அடைபட, ஓய்வூதியம் இல்லாத குடும்பம் தள்ளாடத் தொடங்கியது. வறுமையை அதற்குமேல் எதிர்கொள்ளமுடியாததாலோ அடுத்த ஆண்டில் அவரும் நித்தியத்தில் கலந்துவிட்டார்

சந்தானத்தாரின் பிரிவின்போதுநான் மீண்டும் அனாதையாக்கப்பட்டு விட்டேன்என்று சுப்பையா அப்பா கலங்கினார்

சந்தானத்தார் பிரிவின் பின் ஆண்துணையில்லாத வீட்டில் கிழவரும் ஒரு மூலையிலாவது இருப்பது அவர்களுக்கும் ஆறுதல்தான். ஆனால் பொருளாதாரத்தால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தானும் சுமையாக எதுக்கு?  வேறெங்காவது போய்விட வேணும் என்றும் நினைத்தார். எங்கேயென்பதுதான் அவருக்கும் தெரியாமலிருந்தது.

சந்நிதி கோவிலுக்குப் போகிறேன் என்று போவார். பின் நாலைந்து நாட்கள்செல்ல  வயிறு ஒட்டிகண்கள் பஞ்சடைந்து  திரும்பி வருவார். நடைப்பிணமாய் அலைந்து கொண்டிருந்த சுப்பையா அப்பாவை அகரனுக்குக் காணச் சகிக்கவில்லைசித்தார்த்தனுடன் சேர்ந்து ஒருநாள் கைதடி முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாமென்று அழைத்துச் சென்றான்.

அங்கே அவர்கள் போட்ட முதல் கேள்வியேகிழவருக்குக்கூப்பன் இருக்கா? “

சுப்பையா அப்பா அவர் வன்னியில் இருந்த காலத்தில்  ஒருநாள் தான் ஒரு மில்க்வையிட் பையுக்குள் பங்கீட்டு அரிசியைவாங்கி அதற்குள் கூப்பனையும் வைத்துக்கொண்டு வருகையில்  மாடொன்று இழுத்து இரண்டையும் தின்ற கதையை விஸ்தாரமாகச் சொல்லப் புறப்பட, அங்கிருந்த அதிகாரி:  “உந்த விவரணங்கள் எங்களுக்குத் தேவையில்லைக்காணும்,   இப்போது உம்மிடம் கூப்பன் இருக்கா இல்லையா என்றதைமட்டும் சொல்லும்   “என்றார் அதட்டலான குரலில்.

இல்லை

 “வெறி  சொறி . . .  வெறி  சொறி , கான்ட்  ஹெல்ப்….. கூப்பன் இருக்கிறவர்களுக்கே  டி.ஆர்.ஓவின் சிபார்சு வேணும். இங்கை பாருங்கோ நூறுக்கு மேல குவிஞ்சிருக்கிற விண்ணப்பங்களைஎங்களால ஒன்றுமே செய்யேலாது………. மன்னிக்க வேணும் ” 

எழுந்து கொள்ளவும் அவர்கள் வெளியேற வேண்டிய கதவைக் கண்களால்  காட்டினார் அதிகாரி.

சுப்பையா அப்பா நம்பியிருந்த  கடைசிப்புகலிடமும் கனவாயிற்று. வீடு வந்து சேர்ந்த பின்னால்தான் சொன்னார். “கூப்பன் இருந்தாலுந்தான் டி.ஆர். நான் அனாதையென்று சிபார்சு பண்ணுவாரோ தெரியாது.” 

ஏனோ…………..?இருவரும் ஒரே சமயத்தில் கேட்டனர்.

நான் அனாதையாக்கப்பட்டவனே தவிர அனாதையில்லையே? “

இது புதிசாயிருக்கு   கொஞ்சம் விளக்கமாய்த்தான்  சொல்லுறது

தொடர்ந்தும் மௌனத்தை நிலவவிட்டார்  சுப்பையா அப்பா, தன் கதையைச் சொல்லப் போகிறார் என்ற ஆவலில் அகரனின் அம்மா, சகோதரிகள், சித்தியுட்பட நிறையப்பேர் கூடிவிட்டனர்.

எனக்கும் ஒரு மகள் இருக்கிறாளாக்கும்.” சற்று நிறுத்திவிட்டுச் சொன்னார், ” என்ரை பிறந்த மண்ணில

அந்தத்  திருவூர்தான் யாதோ? ” யாரோ கேட்டார்கள்.

ஊர்காவற்றுறை………  நாரந்தனை.”

”  நாரந்தனை பற்றி ஒருநாளும்  நீங்கள் மூச்சு விடேல்லயே எங்களோட

அட, அந்த ஊரைப்பற்றிஅங்கே  என்ர உறவுகள் பற்றி யாரோட என்னத்தைப் பேசுவன்? “

அகரன்னின் அம்மா கேட்டார், “சரி  உங்க ஊரும்அங்கையிருக்கிற  மிச்சச்சொச்ச உறவுகளும் கிடக்கட்டும்உங்க மகள்காரியிட்ட நீங்கள் போகலாந்தானேஅவளுக்கு  உங்களை வைச்சுப் பார்க்கிறதில என்ன பிரச்சனை…….  அந்த விபரத்தைச்  சொல்லுறது

மகள் வயிற்றுப்பேரனும் ஒருத்தன் நீர்கொழும்பில பெரிய போஸ்ட் மாஸ்டராய்  இருக்கிறான், முன்னால போய் நின்றாலும் என்னை யாரென்றுந் தெரியவராது.”

இந்த உறவுகள் அறுந்த கதை பெரிசு….  அவளுக்கும் தாயைப் போலத்தான்  பிடிவாதமும் உடம்பு நிறைஞ்ச கெருவமும்……  காலத்தில நானும் சில பிழையளை விட்டிட்டன்……   இதுகள் எல்லாம் சேர்ந்து என்னை நடுத்தெருவில கொண்ணந்து விட்டிட்டுது

மகள்காரிக்கு என்ன பெயர்? “

கோமதி  “

அந்தக் காலத்திலேயே மொடேனாய்   வைச்சிட்டியள்

மக நட்ஷத்திரக்காரி இப்பவும்  அவள் மகாலக்ஷ்மியாய்த்தான் இருக்கிறாள் . . .  அந்த அயலட்டை காணியள்நகையள் எல்லாம் ஈடு  பிடிக்கிறது அவள்தான். ” 

அந்தப் பெரிய பணக்காரிக்கு  சொந்தத் தகப்பனைப் பேணக் கசக்குதாக்கும்? “

அவளும் பிறந்து இரண்டு வயசு நடக்க தாய்க்காரி காயாசுவாதத்திலபோட்டாள்‘  சிறியதாய்தான் அவளை வளர்த்து எடுத்தது. பிறகு நானும் வன்னிக்குப் போய் கொஞ்சக் காலம் நெல்லு வியாபாரம் அதுஇதென்று செய்துகொண்டிருந்தன்பின்னம் மரக்காலை ஒன்றை மன்னாரில போட்டு ஒரு தாரத்தையும் சேர்த்தனா, அப்பாபிள்ளை என்ற உறவு விரிஞ்சு போச்சு. கோமதியைப் படிப்பித்ததென்றாலென்ன, கல்யாணம் செய்து வைத்ததென்றாலென்ன  சிறியதாய் குடும்பம்தான். ” 

உங்கட பிந்திய  இணைவி கோமதியும் கூட்டிவாங்கோ, எல்லாருமாய்ச் சேர்ந்திருப்பம் என்று உங்களைக் கேட்கேல்லையோ? “

கொஞ்சம் வளரட்டும் பள்ளிக்கூடம் போற வயது வரட்டும் என்று நான்தான் சாக்குகள் சொன்னனான். சிறியதாய்க்காரியும் வன்னிக்குப் பிள்ளையை விடவேமாட்டன். அங்க ஆன பள்ளிகளுமில்லை, அவள் எங்களோடயே வளரட்டும், படிக்கட்டும், நாங்கள் விரும்பித்தான் அவளை வைச்சிருக்கிறம் என்டிட்டா. எனக்கும் அந்தக்காலத்திலை சாதகம் எழுதிவைக்கேல்ல . . . .  என்ரை கிரகங்களுக்குத்தான் தார தோஷமாக்கும். மற்றத் தாரமும் நோய் கண்டு நாலைஞ்சு வருஷத்துக்குள்ளே கண்ணை மூடியிட்டா . . . . கோமதியும் கிடுகிடென்று வளர்ந்தாள், குடும்பத்தில பிறகொரு நல்லகாரியமெண்டால் கோமதியின்ர கலியாணந்தான். மாப்பிள்ளையையும் எனக்கு முதல்லயே தெரியும். கவுண்மேந்தில கட்டடங்கள் கொண்டிராக்ட்டுக்கள் எடுத்துச் செய்து கொண்டிருந்த மனுஷன் நல்ல குணசாலி.   இந்தக் கரடியைச் செய்ய ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம். நகையள் உட்படத் தாய்க்காரியின்ர  அவ்வளவு சீதனமும் கொடுத்தன். கலியாணத்துக்குப் பிறகு நடந்ததுதான் சின்ன முசுப்பாத்தி…… முசுப்பாத்தியில்லை. அவள் என்னைத் தூக்கி எத்தின சம்பவம். ” 

அது 58 இனக்கலவரங்களை அடுத்த ஆண்டு, அறுபதாயுமிருக்கலாம் வன்னியிலே இருக்கிறன். புது வருஷம் வரவும் கட்டிக்ககொடுத்த மகளைப் போய்ப் பார்க்க வேணுமென்று ஒரு ஆசை பிறந்துது. அங்கே நெல்லுக்கட்ட வந்த ஒரு லொறியில பத்து மூட்டை நெல்லையும் ஏற்றிக் கொண்டு வெளிக்கிட்டன். எனக்கும் நல்லாய் மடியில புழங்கின நேரம் அது. வரும் போதே யாழ்ப்பாணத்தில வெள்ளைப் போத்தலும் எடுத்துஏத்தியாச்சு . . . .   அதால நேராய் சின்னக்கடை மீன் சந்தைக்கு லொறியை விடச் சொல்லிப் பத்துரூபாய்க்கு  இரண்டுமுழ நீளத்தில வன்சூரன் மீன் ஒன்றும் வாங்கிக்கொண்டு மகள் வீட்டைபோய்  இறங்கினன். மருமோன்காரன் வீட்டில இல்லை. வெளியில எங்கேயோ போயிருந்தார்.   என்னையும் பற்றிக் கொண்டு நின்ற சனியனோ, நாக்கில  நிண்ட ராகுவோஇல்லை உள்ளே போன திராவகந்தான் மூளையை மயக்கிச்சிதோ………..  ஒரு வார்த்தையை விட்டிட்டன்…… “

அப்பிடி என்னத்தைக் கேட்டியள்? ” அகரனின் தாய் கேட்டார்

மீனை அவள் கையிலை கொடுத்து, அவள் உள்ள கொண்டுபோக  எடுத்தொரு அடிவைக்கேல்ல   கேட்டன் . . .  உன்ர புருஷனும் இப்பிடிப்பெரிய மீன் வேண்டியந்து தாறவரோ? ” எண்டிட்டன்.

அப்ப அவர் வேண்டித்தராட்டா…… நீ என்ன மசிருக்கு அப்படிப் பெரிய மீன் வேண்டித்தரத்தக்க  மாப்பிள்ளையாய்ப்பார்த்து எனக்குக் கட்டித்தரேல்ல…………….. எண்டவள் மீனை உமலோட  தூக்கிச் சுழட்டிவிட்டாள்போய்ப் படலேக்கை விழுந்துது.”

உந்தச் சீலம்பாயத்து மீன்தான்   ஒரு வாழ்க்கையெண்டு இஞ்சை மனிசர் இருக்கேல்ல……  அப்பிடி அற்பமாய் நினைக்கிற அப்பனுந்தேவையில்லைஎண்டவள் தலைவாசல் கதவை அடிச்சுச் சாத்திப்போட்டு உள்ள போட்டாள்அன்றைக்கு மிதிச்ச முத்தந்தான் . . .  இப்போ முப்பது வருஷமாச்சு……பேரனும் கலியாணம் கட்டிட்டானாம்பழைய நினைவுகளை மனதில் மீட்டி மீண்டும் மௌனித்தார். பின்னர் குரல் கம்மி வேறு யாரோ பேசுவது போலிருந்தது

மருமோன் அங்க நிண்டிருந்தாரெண்டால் அப்பிடி ஒரு நீசவார்த்தை எனக்கும் வந்திருக்காது. கௌவுரமாய் இருந்திருப்பன்………….. ஏதோ கஷ்டகாலம்,   நானாய் முன்னின்று  தனக்குக் கலியாணம் பண்ணி வைக்கவில்லையென்றொரு வெப்பியாரம்  அவளுக்கு உள்ளூர இருந்திருக்கவேணும். . . .  போதாததுக்குச் சித்தப்பன் தேடிக் கட்டிவைச்ச மாப்பிள்ளையையும்  ‘பகிடிபண்ணிறனென்டுதான் அவளுக்குப் பொறுக்காமல் போச்சுதுஅவள் பக்க ஞயாயத்தையும் நாம யோசிக்கத்தானே வேணும். இங்கை அவள் புருஷன் பெரிய மீன் வேண்டிவாறேல்லையென்றால், அதனால  எனக்குக் கவலையோ இல்லை சந்தோஷமோ என்றொரு கேள்வியுமிருக்கல்லே………….. இதையெல்லாம் யோசிக்க  வெறி  விடுதே? “

 சுப்பையா அப்பாவின் தர்க்க நியாயங்கள் கேட்பவர்களுக்கு ஆச்சர்யம் தந்தன.

இதெல்லாம் நடந்து ஒரு பத்து வருஷம் கழித்து பெற்றோல் செட்டு ஏரம்புவும், சமாதானநீதவான் தம்பிநடராசாவும் சேர்ந்து வயசான காலத்தில இனிமேலும் தனியாய் வன்னிக் காடு கரம்பையென்று திரியப்போறியோ, போயும் போயும் யாரவள் நீ பெத்த மகள்தானே. எங்களோட வா ஒற்றுமையாக்கி விடுறமென்று விடாப்பிடியாய் நின்று என்னை அவளிட்ட கூட்டிப்போனவை,   நானும் மிச்சமிருந்த சூடுசுரணை, வெட்கம், மானம், கவுரவத்தையெல்லாம் கழுவி விட்டிட்டு  இரண்டு பெரிய மனுஷர் கேட்கினமேயயன்று அவர்கள் பின்னாலை போன்னான்தான். “

மோள்க்காரி  வரவேற்றாளா? “

அவள் என்ர முகத்தைப் பார்க்கக்கூட மறுத்திட்டாள். போதாததுக்குவேண்டாமென்று விட்டதுகள்  பிறகேனிஞ்ச திரியுதுகள்என்று முத்தத்தில படுத்திருந்த  நாய்க்குத் தண்ணியை  ஊத்திக் கலைக்கிறாள்.” 

சம்பவங்களின் ரணங்கள் இன்னும் வலிப்பது அவர் முகபாவங்களில் தெரிந்தது.

வயசும் ஆகஆக காட்டுக் குளிரும் கருங்கல்லுத் தண்ணியும் வன்னி வாழ்க்கையும் தோதுப்படேல்ல . . .   வந்திட்டன். தம்பிநடராசரை ஒருநாள் எங்கேயோ கண்டபோது கேட்டாளாம், ‘கையாய் காலாய் ஓடேயில உழைச்சதுகளையெல்லாம் வன்னிக்கூத்தியளோட கரைச்சுப்போட்டு இப்ப சதுரம் ஓயேய்க்க  வந்தவரோ உறவுதேடிஎன்று . . .  அதிலும் நியாயம் இருக்குத்தானே. நானும்  பரதேசியாய்ப்போய்  நின்றால் யார்தான் ஏற்பினம்? “

உங்களின் பிற்காலத்தை நினைத்தென்றாலும் ஏதும் தேடி வைத்திருக்கலாந்தானே? “

தேடேல்ல . . .  தப்புத்தான் . . .  சும்மா நாடோடியாய்த் திரிஞ்சு காலத்தை விட்டிட்டன்…..  இந்தத் தவறைத் திருத்திறதென்டால் இனியொரு அவதாரம் எடுத்தால்த்தான்! ” 

இடுக்கண் சூழ்ந்தும் சிரிக்கிறார். எவ்வளவு வாஸ்தவமான வார்த்தைகள்!

கோடிக்குப் போய்விட்டு வந்த சித்தார்த்தன் கேட்டான்: ஒரு பேச்சுக்கு உங்களிட்டைஒரு ஐம்பதோ அறுபதோ இருக்கென்று வைப்பம் . . . .  அப்ப மோள் சேர்த்துக் கொள்ளுவாவோ அப்பாவை? ” 

பணவாஞ்சையிருக்கிறதைப் பார்த்தால்………மீண்டும்  சிரித்தார்.

அன்று  அகரன்  அறையில் அவனும்  சித்தார்த்தனும்  சுப்பையா அப்பாவின் பிற்காலம் பற்றித் தீவிரமாக யோசித்துவிவாதித்தார்கள்.

சித்தார்த்தன் கேட்டான்:  “தார்மீக  நியாயங்களின்படி . . .  அறத்தின்படி பார்த்தால் இன்னும் சுப்பையா அப்பாவை பராமரிக்க வேண்டிய கடமை யாருக்கு இருக்கு? “

 “அவர் மகள் கோமதிக்குத்தான்

ஏன்? “

அவரின் தனிப்பட்ட குணங்களையோ, போக்குவாக்குகளையோகடந்த காலங்களில் அவர்  நடந்து கொண்டதையோ கணக்கில எடுக்காட்டிலும்……  கிழவர் அவளைப் பெத்ததந்தை,   அப்பாவைப் பராமரிக்கும்  பிதுரார்ஜிதக்கடமை  முதலில அவளுக்குத்தான் . . . .  “

அதெல்லாம்  எனக்குத் தெரியாது, ஆனால்  அப்படியொரு கடமை அவளுக்கு இருக்கென்று அந்த அகமதியக்காரிக்கு எப்படி உணர்த்திறது? ” 

இதற்கு அவளது பலவீனமான பகுதிகளைத்தான் தட்டிப் பார்க்கோணும் .”

எவை  அவளது பலவீனங்கள்? “

அதுதானே சுப்பையா அப்பாவே சொன்னாரே . . . .  பணவாஞ்சை . . . “

ஆள் மூஞ்சியே தெரியாமல் இதெல்லாம் எப்பிடிச் சாத்தியம்? “

சரியானவியூகம் அமைத்தால் எல்லாம் சாத்தியமாக்கலாம். அவர் சொன்ன கதையை வைத்தே நாமொரு நாடகம் போடவேண்டியிருக்கும். எங்கள் இரண்டுபேருக்கும் இரண்டு சின்னச்சின்னறோல்ஸ்தான்……  உனக்கு அவர் சொன்ன  ‘மற்றப் பொக்கிஷங்கள்கதை ஞாபகமிருக்கா?  “

இருக்கு……..  ஆனால் பிறகு முதுகுக்கு மட்டைகட்ட வேண்டிவரேய்க்க  முழுமுதுகையும்  அகலமாய் நீதான் காட்டிறாய்………  “

பதறாத பன்னாடை……….. அப்பிடியொன்றும் சீரியஸாகாது.”

இரவு முழுவதும் அந்த அரங்காற்றுகையின் ஒவ்வொரு காட்சியையும் எப்படி நகர்த்துவதெனத்  திட்டம்  தீட்டினர்.

விடிந்ததும் சுப்பையா அப்பாவிடம் தமது திட்டத்தைப் பூராவும் காதோடு விளக்கினர்அவர் முதலில் மறுத்தார்

‘ நன்மை கிடைக்கப்பெறின் பொய்மையும் வாய்மையுடைத்து’ என்று இவ்விளையாட்டை எம் ஐயன் வள்ளுவனே அனுமதித்ததையும் அதிலுள்ள அறத்தையும் நியாயத்தையும் அவருக்கே அழுத்திப்போதிக்கவும்  அரைமனதோடு  சம்மதித்தார்.  

🌿

காலைச்சிற்றுண்டியை முடித்துக்கொண்டு   அகரனும் சித்தார்த்தனும் மிதியுந்தில் நாரந்தனைக்குப்போய் சுப்பையா அப்பா சொன்ன குறிப்புக்களின்படி கோமதியின் வீட்டின் அமைவையும் ஆட்புலத்தையும் நோட்டம் பார்த்துவிட்டு வந்தனர். 

அவர்களுடன் கல்லூரியில் சேர்ந்துபடித்த ஆனந்தமுருகன் எனும் வரைகலை நிபுணனை அணுகி அவன் கைவண்ணத்தைப்  பயன்படுத்திச் சில (Fixed deposit Certificates) நிரந்தரபணவைப்புப்பத்திரங்களைத் தயாரித்து அதன் நகல்களையும்  எடுத்துக்கொண்டனர். 

ஒருவாரங்கழித்து வெள்ளை நீளக்கைச்சேர்ட்டும், கறுத்த டிரௌசரும் அணிந்து வங்கி ஊழியர்கள்போன்றதொரு தோரணையில் ஒருவாடகைவண்டியை அமர்த்திக்கொண்டு மீண்டும் நாரந்தனை விஜயம் செய்தனர். 

முன்விறாந்தையில், கண்ணாடியணிந்த கோமதியின் புருஷன் கன்வேஸ் கட்டிலில் கால்நீட்டிப் படுத்தபடி  பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்,  வாசலில் காரிலிருந்து இறங்கும் இவர்களைக் கண்டதும்  அவராகவே எழும்பிவந்தார்

வணக்கம். மிஸ்டர்.  சுப்ரமணியம் வீடுதானே இது?

சரிதான் உள்ளே வாங்கோ………”

வாசலில் புருஷன் யாருடனோ கதைக்கும் சத்தங்கேட்டு வீட்டுக்குள் தொலைக்காட்சி பார்த்தபடி பயற்றங்காய் ஒடித்துக்கொண்டிருந்த அசப்பில் சி.கே.சரஸ்வதி மாதிரியிருந்த  கோமதி முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வெளிப்பட்டார். தம்பதிக்கு  ‘எதுக்கு  வந்திருக்கிறார்கள் ஏதும் இன்ஸூரன்ஸ் கோஷ்டியோ, இயக்கமோ, கலெக்ஷனோ…….’ என்று உள்ளூர லேசாகக் கலவரமாயிருந்தது.

கோமதியைப்பார்த்த அகரன்  ” ‘ஏரம்பு சுப்பையா’ உங்களது தந்தையார்தானே…….?” என்று இயல்பாய்க் கேட்டான்.

புருஷன் ” ஓம்…………ஓம் ஏன் ஏதாகிலும் துக்கசெய்தியா” என்று கேட்டுப் புருவங்களை உயர்த்தவும், கண்கள் வெளித்தள்ள வாயடைத்து நின்றார்  கோமதி.

உத்தியோகத்தரின் தோரணையோடு இரண்டு கைகளையுமாட்டி மறுத்து ” Oh……….non  non no… be Optimistic Sir……. எல்லாம் சந்தோஷ சமாச்சாரந்தான், அவசரத்தில பதறாதீங்க” என்று இருவரும் முகங்களை மலர்த்திச் சொல்லவும், ஆசுவாசத்தோடு அதன் பின்னரே இருவரையும்  அமரச்சொல்லி உபசரித்தனர்.

🌿

நாங்கள் சுன்னாகம் நாஷனல் சேவிங்க்ஸ் பாங் கிளையிலிருந்து வருகிறோம், மிஸ்டர். ஏரம்பு சுப்பையா எங்களுடைய நீண்டகாலக் கஸ்டமர். சுருட்டுச்சுற்றியதால கிடைச்ச சின்னவருமானம் என்றாலும் ஒழுங்காய் அதை சிறுகச்சிறுக எங்கட வங்கியில நீண்டகாலமாய் சேமித்துவாறார். “

சித்தார்த்தன் தொடர்ந்தான்:  ” இப்போது அவருடைய சேமிப்பை ஒருங்குவித்து  நிரந்தரசேமிப்பில்வைத்து தனக்குப்பிறகு அதன் பின்னுரிமை மிஸிஸ். கோமதி சுப்பிரமணியம் என்று உங்களுடைய பெயரைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். மிஸ்டர். ஏரம்பு சுப்பையா எங்களுடைய எழுபது வயதைக்கடந்த ஒரு வயசான கஸ்டமர் என்பதால அதை உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது வங்கியின் நடைமுறையும் கடமையும்.”

“நாங்கள் வந்ததின் நோக்கம் அதுதான்” என்றபடி பிறீஃப்கேஸைத் திறந்தவன், சும்மா சம்பிரதாயத்துக்குத்தான் எங்கே உங்கட அடையாள அட்டையைக்கொண்டுவாங்கோ ” என்று வாங்கி அதிலுள்ள பெயரைச் சரிபார்ப்பவன்போலப் பார்த்துவிட்டு மென் ஊதாநிறத்திலிருந்த 60,000 ரூபாய்க்கான நிரந்தர பணவைப்புப்பத்திரம்  ஒன்றை அவருக்குக் காட்டிவிட்டுத் தன்னுடன் வைத்துக்கொண்டு,  அதன் நகலொன்றைச் கோமதியிடம் கொடுத்து அவர் அதைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்பத்தையும் வேறொரு பத்திரத்தில் பெற்றுக்கொண்டான். ஒரேயடியாய் குளிர்ந்துபோன கோமதி மகிழ்ந்து கொடுத்த பால்க்கோப்பியைக் குடித்துவிட்டு  இருவரும் நிதானமாகப் புறப்பட்டனர்.

பத்துநாட்கள்கூடக் கடந்திருக்காது புத்தூருக்கு காரொன்றில் வந்திறங்கிய ஸ்ரீமதி. கோமதி சுப்பிரமணியம் சுப்பையா அப்பாவைக் கையோடு நாரந்தனைக்கு அழைத்துப்போனார்.

🌿

கோமதி சித்தார்த்தனின் கடிதம் கண்டு குதித்தாலும் பின் குளிர்ந்து சாந்தமாகிவிட வேணும். ‘

அகரன் கிழக்கே திரும்பிச் செல்வச் சந்நிதி முருகனை பெர்லினில்   இருந்தபடி முதன்முறையாக  யாசித்தான்

  • பொன்னையா கருணாகரமூர்த்தி

 

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad