Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பெருகும் பாலியல் கொடூரங்கள்

Filed in தலையங்கம் by on December 10, 2021 0 Comments

“என்றைய தினம் நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாகச் செல்ல முடிகின்றதோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும்”. பெண்கள், ஆண்கள் விரும்புவதைச் செய்யும் அடிமைத்தன எண்ணங்களை விடுத்து, ஆண்களுக்குச் சமமான கல்வி, சமூக அந்தஸ்துப் பெற வேண்டும் என விரும்பினார் காந்தி. தன்னைச் சந்திக்க வரும் தலைவர்களிடம் கூட அவரவர் மனைவியரை, அரசியலில் ஈடுபட அழைத்து வருமாறு வற்புறுத்தினார் அவர். பெண்கள் தங்களின் அடிமைச் சங்கிலிகளை அணிகலன்களாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது விரைவில் மாறவேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். நவம்பர் 25 – ‘பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிக்கும் நாள்’. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் தேசப் பிதா காந்தியடிகள் சொன்னதும், ஆண்டுதோறும் கடந்து போகும் நவம்பர் 25 ஆம் நாளும் எந்தவித விழிப்புணர்வையும், எழுச்சியையும் சமூகத்தில் உண்டாக்கவில்லை என்றே தோன்றுகிறது. 

இந்தியக் கலாச்சாரங்களில் ஒரு பெண் பிறந்தது முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு நிலையிலும் எதோவொரு குற்றத்திற்கு இலக்காகிறாள். அந்தந்த நிலைகளுக்குத் தகுந்தாற் போல அவள் மீது செலுத்தப்படும் குற்றங்களின் தன்மையும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு பிறக்கும் / பிறந்த குழந்தைகள் பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு நஞ்சைக் கொடுத்து கொன்று விடும் வழக்கம் இன்றும் முழுதாக ஒழிந்தபாடில்லை. பின்னர் அவள் பள்ளிக்குச் செல்லும் காலம் முதலே வேறுபட்ட பிரிவினைகள் தொடங்குகின்றன. ‘பெண்பிள்ளைகள் ஓரளவுக்குப் படித்தால் போதும்’ என்ற எண்ணம் நகரங்களைத் தாண்டிய சமூகங்களில் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. பெண் பதின்ம வயதை அடைந்ததும் அவள் மீதான காமப் பார்வைகள், செய்கைகள் விழுகின்றன. திருமண கட்டத்தில் வரதட்சணைக் கொடுமை, வேலைக்குச் சென்றால் ஊதிய வேறுபாடு, பாலியல் சீண்டல்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக இந்தியச் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரக் கொடுமைகளில் ஒன்றான  பாலியல் வன்புணர்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

2012 நிர்பயா பாலியல் கூட்டு வன்புணர்வு, 2017 உன்னாவ் சிறுமி கூட்டு வன்புணர்வு, 2018 கத்துவா சிறுமி கூட்டு வன்புணர்வு, 2019 ஹைதராபாத் கால்நடை மருத்துவர் வன்புணர்வு, 2020 ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு இவையெல்லாம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான பாலியல் குற்றங்களின் கொடூரமான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தினமும் சராசரியாக 87 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவானதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau-NCRB) தரவுகள். அதே ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உட்பட பதிவான வழக்குகள் 4,05,861. இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் NCRB சொல்கிறது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 28,046 (தினப்படி சராசரி 77) வன்புணர்வு வழக்குகள் பதிவானதாக சொல்லும் இந்நிறுவனம், 40 சதவிகிதத்துக்கும் குறைவான வன்புணர்வுச் சம்பவங்களே வழக்குகளாகப் பதிவு செய்யப்படுகின்றதாகவும் சொல்கிறது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதியப்படுவது அதிகரித்திருந்தாலும், பல வழக்குகளில் குற்றவாளிகள் அரசியல், மதம், பணம், சமூக அந்தஸ்து, அதிகார பலம் எனப் பல வழிகளில் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். மேலும் இவ்வகைச் சம்பவங்கள் குற்றவாளியை விட பாதிக்கப்பட்டவர்கள் பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக நினைப்பதால் அவர்கள் வழக்குத் தொடர முனைவதில்லை என்பதையும் இந்நிறுவனம் ஒத்துக் கொள்கிறது. நிர்பயா வன்புணர்வுச் சம்பவத்துக்குப் பிறகு சில சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டாலும், அவை பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே நிற்கின்றன. 

பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேகத்தில் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களும் பெருகும் அபாயம் இதயத்தைப் பிழிகிறது. இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, சித்ரவதை, ஆபாசப் படம் எடுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய அரசால் 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் ‘குழந்தைகள் பாலியல் கொடுமைத் தடுப்பு சட்டம்’ (Protection of Children Against Sexual Offences – POCSO). 2017இல், இந்தச் சட்டத்தின் கீழ், சராசரியாக ஆண்டுதோறும் 30,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதியப்படுவதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருந்தது. 

சமீபத்தில் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2019ஆம் ஆண்டு போக்சோ பிரிவின் கீழ் 46,006 வழக்குகள் பதிவாகியுள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. 2018 ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 4.5 சதவிகிதம் அதிகம். இந்த அறிக்கையின்படி, அதாவது, தினமும் சராசரியாக 109 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 2019 பாலியல் குற்றங்களில், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட 2655 குழந்தைகள் பலவந்த உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ராஜஸ்தான், மஹாராஷ்டிர மாநிலங்களில் அதிகப்படியான குற்றங்கள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலும் கடந்த சில ஆண்டுகளில் சிறார்கள் மீது, குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் மீது நடந்த பாலியல் வன்முறைகளின் பட்டியல் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. தனித்தனி செய்திகளாகப் பார்த்து, கடந்து போய்விடும் நமக்கு சமூகத்தில் புரையோடும் இக்குற்றத்தின் தாக்கம் விளங்குவதில்லை.

சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களும், பலாத்காரங்களும் வன்மம் நிறைந்தவை. தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தரப்படுகிறது என்பதைக் கூட அறியாத பிஞ்சுகள் இதற்கு பலியாகி விடுகின்றனர். கொல்கத்தாவில் ரானா எனும் நடன ஆசிரியர்,  இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்தது அந்தப் பிள்ளைக்கு ஏற்பட்டிருந்த காயங்களை பெற்றோர் ஆராய்ந்ததில் தான் வெளிவந்தது. அது போலவே அண்டிரி புனேவில், ஆரம்ப நிலைப் பள்ளியில் படித்து வந்த ஐந்து வயதுச் சிறுவனை, அப்பள்ளியில் ‘காகா’ என அழைக்கப்பட்ட மூத்த பணியாளர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது அந்தச் சிறுவனுக்கு அவனது பெற்றோர் மனித உறுப்புகள் சம்பந்தப்பட்ட பால பாடம் எடுத்த போது தான் தெரிய வந்தது. 

ஒரளவு விவரம் தெரிந்த குழந்தைகள் கூட பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லத் தயங்குகின்றனர். பள்ளிகள், பொது இடம், உறவினர்கள் / அண்டை வீடு எனக் குழந்தைகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பாலியல் தொந்தரவுகள் ஏற்படலாம். குழந்தைகள் தங்களுக்கு உறவினர்களால் ஏற்படும் நிந்தைகள் பற்றித் தெரிவித்தாலும் பெரும்பாலான பெற்றோர், குடும்ப கெளரவம், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சம் கருதி அவற்றைப் பெரிதுபடுத்துவதில்லை. 

சற்று வளர்ந்த சிறார்கள் தங்களுக்கு நேர்ந்த சீரழிவுக்குத் தாங்களும் ஒரு விதத்தில் காரணமாகயிருந்ததாகக் குற்ற உணர்ச்சியில் குமைகிறார்கள். தன்னைச் சூறையாடிவரின் நோக்கமறியாமல் நட்பு ரீதியில் அல்லது தொழில் ரீதியில் உண்டான நெருக்கம் இந்தக் குற்றச் செயலைத் தூண்டியிருக்கக்கூடும் எனப் புழுங்கி, மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் வெளிவராமல், அவர்களது மனதில் ஆறாத வடுக்களாகவே பதிந்துப் போகின்றன.

அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த தற்கொலைகள் இவ்வகை மனவுளைச்சலுக்கு ஆளான பிஞ்சுகளின் ஒரு பகுதி தான். சிறார் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது போலத் தோன்றினாலும், அவை வெளிச்சத்துக்கு வருவது அதிகரித்துள்ளது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் என்று பொது இடங்களில் நடைபெறும்  இவ்வகையான பாலியல் தாக்குதல்கள் சமூகத்தில் புரையோடி பல காலங்களாக நடந்து வந்தாலும் சமீப காலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றை வெளிக் கொணர்வதற்குத் துணிச்சல் வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆசிரியர்கள் மீது பதியப்படும் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது கவலையளிப்பதாகவும், இச்சட்டம்  துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் ஒரு கருத்து எழுந்துள்ளது. ஆனால் இந்த வழக்குகள் கொடிய காம மிருகங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்; எதிர்காலத்தில் எவரும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாதளவுக்கு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். 

பெரும்பாலான போக்ஸோ வழக்குகளில் தீர்ப்புகள் எளிதில் வெளியிடப்படுவதில்லை. 2020 டிசம்பர் கணக்கின்படி 1.33 லட்சம் வழக்குகள் விசாரணை தொடங்கப்படாமலோ, அல்லது விசாரணையின் வெகு ஆரம்ப நிலைகளிலோ இருப்பதாகத் தெரிவிக்கிறது NCRB. நாடு முழுவதும் மொத்தமாக 389 போக்சோ நீதிமன்றங்கள் இருந்தாலும், தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே பல மாதங்கள் ஆகி விடுகின்றன. பாலியல் பிரச்சனைகளுக்கு உள்ளான சிறார்கள் காலப்போக்கில் சம்பவம் குறித்த தகவல்களை மறந்து விடுகிறார்கள். இதனால் வழக்குத் தொடர்பான சாட்சியங்கள் சரி வர நிருபிக்கப்படுவதில்லை. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள குற்றவாளிகள் விசாரணையைத் தள்ளி வைத்துக் காலத்தைக் கடத்துகிறார்கள். போக்ஸோ வழக்குளில் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென சட்டமிருந்தாலும் சராசரியாக போக்ஸோ வழக்குகளில் தீர்ப்பு வெளியாக 3 வருடங்கள் ஆகின்றன. சட்டங்களில் இருக்கும் துளைகள் சரியாக அடைக்கப்படாததும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வழி வகுத்து விடுகின்றன. அண்மையில் ‘தோலோடு தோல் உரசல்’ இல்லாததால் (பெண்ணின் ஆடையை விலக்காத துன்புறுத்தல்), தண்டிக்கப்படும் குற்றமில்லை என்று மும்பை நீதிமன்றத்தின் பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பின்னர் அந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. அது போன்று சிறார்கள் மீது நடத்தப்படும் வாய்வழிப் புணர்ச்சிகளுக்குக் குறைந்த பட்ச  தண்டனை வழங்கினால் போதும் என்ற புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது அலகாபாத் நீதிமன்றம். போக்சோ சட்டத்தை இயற்றியதன் நோக்கம் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதாகும். இவ்விதிகளின் இடுக்குகளில்,  குறுகிய நோக்கில் புதிய விளக்கங்களை உருவாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வது மிகவும் தீங்கானது. உச்ச நீதி மன்றம் “போக்சோ சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றத்தை உருவாக்குவதற்கான மிக முக்கியமான மூலப்பொருள் ‘பாலியல் நோக்கம்’ என்பது தானே ஒழிய குழந்தையுடன் ‘தோலோடு தோல் உரசல்’ என்பது அவசியமில்லை” என்ற திருத்தத்தினைக் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. 

குற்றவாளிகளை அரசியல், மதக் கோட்பாடுகளுடன் இணைத்து அந்தந்தக் கட்சியினர் அல்லது சமூகத்தவர் போராடுவதும் வழக்குகளைச் சிக்கலாக்கி விடுகிறது. ஒரு குறிப்பிட்ட பள்ளியாசிரியர் மீது  பாலியல் வழக்குத் தொடரப்பட்ட போது, அந்தப் பள்ளியை நடத்திவரும் நபரின் சமூகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் இது என்று மத்திய அரசின், மாநிலங்களவை உறுப்பினர்  அணி திரட்டினார். இன்னுமொரு வழக்கில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளியின் நிறுவனர் தன்னை ஒரு ஆன்மீகத் தலைவர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர். இவர் மீது அந்தப் பள்ளி மாணவிகள் தெரிவித்த பாலியல் புகார்களின் அடிப்படையில் அவர் மீது நான்கு போக்சோ வழக்குகள், இன்னும் பல பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் அவரின் ஆன்மீகப் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரைக் கடவுளின் அவதாரமாகப் பார்த்து, வழக்குகளுக்கு முட்டுக் கட்டைப் போட்டு வருகின்றனர். 

குற்றஞ்சாட்டப்பட்ட நபர், அரசியல் பின்புலம் உள்ளவரென்றால் கேட்கவே வேண்டாம். சட்டத்தின் துளைகள், அச்சுறுத்தல்கள் எனப் பலவழிகளிலும் சாட்சியங்களை நீர்த்துப் போகச் செய்து விடுகின்றனர். 

சில வழக்குகளில், பதின்ம வயதில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் விசாரணைக்கு வருமுன்னர் அவர்கள் திருமணமாகிச் சென்று விடுகின்றனர். அந்தச் சமயங்களில், திருமண உறவில் விரிசல் வரக்கூடாதென்று பல பாலியல் வழக்குகள் பின்வாங்கப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்’ என்பது சட்டத்துறை சம்பந்தப்பட்ட மிகப் பிரபலமான சொற்றொடர். தாங்களோ, தங்களைச் சார்ந்த சமூகமோ நேரிடையாகப் பாதிக்கப்படாத வரையில் பொதுமக்களும் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களை ஒரு செய்தியாகவே கடந்து சென்று விடுகிறோம். குற்றம் தொடர்பான இறப்புகள் ஏற்பட்டால் ஊடகங்கள் அதிகப்பட்சம் ஒரு வாரம் அது குறித்துப் பேசுகின்றன. அடுத்த பாலியல் குற்றம் நடக்கும் வரையில் மக்களும், ஊடகங்களும் முந்தைய வழக்குகளை மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு முறை இவ்வகைச் சம்பவம் நிகழும் பொழுதும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கடைசிக் குழந்தை இதுவாக இருக்கட்டும் என்ற வேண்டுதலோடு நம் கடமை முடிந்துவிடக் கூடாது.

இயன்ற வரையில் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பேதமின்றி குறிப்பிட்ட வயதில் பாலியல் ரீதியான உடல் மாற்றங்கள், உளவியல் மாற்றங்கள் குறித்த அறிவை வளர்க்க வேண்டும். தொழில் நுட்பத்தால் ஏற்பட்ட சீரழிவுகளில் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதும் ஒன்று. கைப்பேசி வழியே உலகையே சுற்றி வரலாம் என்றாகி விட்ட சூழலில், இணையத்தில் கிடைக்கும் பாலியல் தொடர்பான விஷயங்கள் பலரது மனங்களில் வக்கிரத்தை வளர்க்கின்றன. பொள்ளாச்சியில், குற்றவாளிகள் தங்களின் பாலியல் வன்மங்களைப் படமெடுத்து பரப்புமளவுக்கு வன்மம் பெருகிவிட்டது. தன்னிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் சிலர் காம மிருகங்களாகி வேட்டையாடுவது அதிகரிக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் பள்ளி நிர்வாகம் இவ்வகை ஆசிரியர்களுக்குத் துணை நிற்பது அதைவிடக் கொடுமை. சிறை தண்டனை மட்டுமல்லாது, வாழ்நாள் முழுதும் களைய முடியாத அவமானத்தை இவர்களுக்கு தண்டனையாகத் தர வேண்டும். அவர்களது சமூக உரிமைகள் பறிக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் என அனைத்து அடையாள அட்டைகளிலும் ‘பாலியல் குற்றவாளி’ என்ற குறியீடு இருக்க வேண்டும். 

 மது, போதை வஸ்துகளைப் போல பாலியல் இச்சைகளுக்கு அடிமையாவதும் ஒரு வகையான உளவியல் நோய். பதின்ம வயதில், உணர்வற்ற ஆழ்மனதில் (Unconscious mind) லேசாகப் படரத் துவங்கும் பாலியல் இச்சைகள் முறையாகக் கட்டுப்படுத்தப்படாத பட்சத்தில் கொடூர வக்கிரங்களாக மாறி விடுகின்றன. உளவியல் ரீதியாக இவற்றைப் புரிந்து கொள்வதும், மற்றவர்க்குப் புகட்டுவதும் இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய சவால். இதைப் புறக்கணிப்பது மானுட இனத்தையே விலங்குகளாக மாற்றி அழித்துவிடும்.

  • ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad