\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து உலகெங்கும் பல உயிர்கள் இந்த நோய்க்குப் பலியாகின. உயிர்ச் சேதங்கள் மட்டுமின்றி பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாயின. குறிப்பாக அன்னியச் செலாவணி, சுற்றுலா வருவாய்களைப் பிரதானமாகக் கொண்ட நாடுகளின் பொருளாதார நிலை முற்றிலுமாக நசிந்து விட்டது என்பதே உண்மை. அத்தகைய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே உள்நாட்டுப் போர், ஸ்திரமற்ற அரசுகள் என பல இன்னல்களைச் சந்திந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருந்த நாடு, 2017ஆம் ஆண்டு முதல் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துக் கொண்டு வந்தது. 2020ஆம் ஆண்டு கோவிட் காரணமாக பொது முடக்கம் அமலான பின்னர், சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் தொழில்கள் முற்றிலுமாக முடங்கிப்போன நிலையில், அதன் வருவாய் ஏறத்தாழ பூஜ்யமாகிப் போனது. இதனைச் சாதக வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டு வருவது இலங்கைக்கு மட்டுமல்லாமல் ஏனைய அண்டை நாடுகளுக்கும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

 அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டமைப்பு

 இலங்கையில் 2008ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகளுக்காக சீனா நுழைந்தபோதே சில சந்தேகங்கள் கிளம்பின. இலங்கையின் சர்வதேசத் துறைமுகமான கொழும்பு, ஆசிய-ஐரோப்பிய தடத்துக்கான சரக்கு கொள்கலன்களைக் கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் இதரச் சேவைகளுக்கு மற்றுமொரு துறைமுகம் தேவைப்பட்டது. இதற்காக 2008 ஆம் திட்டமிடப்பட்டு, 2010 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது தான் அம்பாந்தோட்டைத் துறைமுகம். இந்தத் துறைமுகக் கட்டுமானத்துக்கு சீனாவின் ‘எக்ஸிம் பாங்க்’ (Exim Bank of China) சுமார் $1070 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டு தவணைகளில் கடனாக இலங்கைக்கு வழங்கியது. ‘சீனா ஹார்பர் எஞ்சினியரிங்’ (China Harbor Engineering Company), ‘சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்க்ஸ்’ (China Merchants Port Holdings) என்ற இரண்டு சீன அரசு நிறுவனங்கள் இந்தக் கட்டுமான ஒப்பந்ததாரராகவும், நிர்மாணிப்பவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்தக் கடன் மற்றும், கட்டுமான நிர்மானப் பணிகளுக்காக 35 ஆண்டுகளுக்கு சீனா 65 சதவிகித உரிமையைப் பெறுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கப்பல் போக்குவரத்து, துறைமுகச் சேவைகள் வருமானத்தை ஈட்டித் தராததினால், அம்பாந்தோட்டைத் துறைமுகம் 2016 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 46 பில்லியன் இலங்கை ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதே நேரம் சீனாவுக்குத் தரவேண்டிய கடன் தவணையான 9 பில்லியன் இலங்கை ரூபாயைக் கூடச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சீன அரசு, தொடர் அழுத்தங்களினால், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 85 சதவிகித உரிமையை, 99 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தந்தைப் பெற்றுக்கொண்டது. இந்த 85 சதவிகிதப் பங்குக்கு மாறாக இலங்கை திரும்ப செலுத்தவேண்டிய $1.1 பில்லியன் கடன் ரத்தானது. கூடவே, சீனாவின் உதவியுடன், 15,000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் அனுமதி அளித்தது.

 கொழும்புத் துறைமுக நகரம் 

 270 ஹெக்டேர் கடல்பரப்பில் நீரை அகற்றி, மண் மற்றும் கழிவுகள் நிரப்பி உருவாக்கப்படும் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம், கொழும்புக்கு அருகே கடல்பரப்பில் செயற்கைத் தீவாக உருவாக்கப்படவுள்ளது. இந்தச் சிறப்பு மண்டலத்தை ‘கொழும்பு துறைமுக நகரம்’ என்ற பெயரில், கொழும்பு சர்வதேச நிதி மையம், சிறப்பு நிதி நீதிமன்றம், வானுயரக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், வங்கிகள், பங்குச் சந்தை நிலையங்கள் என மிகப் பிரம்மாண்ட நகரமாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளது சீனா. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமென்னவென்றால், இந்த நகரம் தன்னிச்சையான அதிகாரத்துடன் செயல்படும். அதாவது இவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக மேலாண்மை கொழும்பு மாநகர சபைக்கு உட்படாது. மேலும், இதில் சுமார் 116 ஹெக்டேர் பரப்பளவுப் பகுதி, ‘சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்க்ஸ்’, ‘சீனா ஹார்பர் எஞ்சினியரிங் கம்பெனி’ களின் பிரத்யேகக் கட்டுப்பாட்டில் செயல்படும். சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நகரம் 2041 ஆம் ஆண்டுக்குள்  நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.   

 இலங்கை  அரசாங்கம் ‘கொழும்பு துறைமுக நகர’த் திட்டம் வரலாற்றிலேயே மிகப்பெரிய திட்டமெனவும் இதனால் ஆண்டுக்கு 11 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்குமெனவும் சொல்லி வருகிறது. நாட்டின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று இலங்கையை சிங்கப்பூர், ஹாங்காங் போல் மிகப் பெரிய வணிக மையமாக மாற்ற இந்நகரம் வாய்ப்பாக அமையும்  என்று அரசு நம்புகிறது. 

 ஆனால் இந்நகரம் பல சுற்றுச் சூழல் அபாயங்களை விளைவிக்கும் எனச் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இதன் பாதிப்புகள், இந்த நகரம் எதிர் நோக்கும் பொருளாதார நன்மைகளைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதலாகயிருக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் இந்நகரின் முக்கியமான பிராந்தியங்களை வெளிப்படைத் தன்மை இல்லாத சீனாவின் கட்டுப்பாட்டில் விடுவது இலங்கையின் பாதுகாப்பு வலயத்தைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்று கப்பற்படை வல்லுனர்களும், பாதுகாப்பு வல்லுனர்களும் கருதுகின்றனர்.

 இந்த இரண்டு துறைமுகக் கட்டுமானங்களைத் தவிர, சீனா இலங்கையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான ‘மட்டாலா சர்வதேச விமான நிலைய’த்தின் கட்டுமானத்துக்கும் $190 மில்லியன் கடனுதவி வழங்கியுள்ளது.  இதன் கட்டுமானத்தை நிர்வகித்ததும் சீன நிறுவனமான ‘சீனா ஹார்பர் எஞ்சினியரிங்’ தான். கொழும்பு மடாரா எக்ஸ்பிரஸ் சாலை, லோட்டஸ் டவர், நிலக்கரி மின் நிலையம், மருத்துவ மனைகள், கலையரங்கங்கள் என ஏராளமான கட்டமைப்புகளில் சீனா செய்துள்ள முதலீடுகள் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 14% எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கையில் அன்னிய முதலீடுகள் அடிப்படையில் சீனாவின் பங்கு மட்டுமே 35%. அதுமட்டுமல்லாமல் சர்வதேச நிதி மையங்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாயைக் கடனாக இலங்கைக்குத் தந்துள்ளது சீனா.

 சீனாவுக்குச் சாதகமானவை

 சீனாவைப் பொறுத்தவரையில் இந்த துறைமுகங்களை உருவாக்குவதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியமெனக் கருதுகிறது. உலகில் மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து மிக அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாவுக்கு, இந்தியப் பெருங்கடலில் இந்தத் துறைமுகங்கள் அமைவது அவர்களது எண்ணெய்த் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்யக்கூடும். மேலும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகள் கொண்டு வர முனையும் கடல் பாதுகாப்புக் கட்டமைப்புகளினால் சீனாவுக்கு எற்படக்கூடிய பாதகங்களை நிவர்த்திக்க  இந்தத் துறைமுகங்களைக் கண்காணிப்புத் தளங்களாகவும் சீனா பாவிக்க முயலலாம். 

 இலங்கையில் உருவாகும் கொழும்புத் துறைமுக நகரக் கட்டமைப்பை எதிர்ப்பவர்கள், இது இலங்கை மண்ணில் உருவாகும் சீனத் தீவாகவே பார்க்கின்றனர். இலங்கைப் பிரஜைகள் இங்கு சென்று வரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்; இந்த நகரில் முற்றிலும் சீன வணிக நிறுவனங்களின் ஆதிக்கம் நிலவும்; கலாச்சார மாற்றங்கள் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள். சீனாவின் நிதியுதவியுடன் அமையும் கட்டமைப்புகளில் ஆங்கிலம், சிங்களம், சீன மொழிகள் மட்டுமே காணப்படுவதாகவும், அரசு அலுவல் மொழியான தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும் இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 

 அமெரிக்க முதலீடுகள்

 இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது, பல நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான். இந்தியா, ஆஸ்திரிலேயா நாடுகள் இலங்கையில் சீனா முன்னெடுத்து வரும் முதலீடுகளைக் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வருகின்றனர். அமெரிக்காவும் தன் பங்குக்கு இலங்கையில் பெருவர்த்தக முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது. அண்மையில் ‘கெரவெலபிட்டிய’ (Kerawelapitiya) மின் உற்பத்தி நிலையத்தில், திரவப் பெட்ரோலிய சுத்திகரிப்புப் பணியை அமெரிக்காவின் ‘நியு ஃபோர்ட்ரஸ் எனர்ஜி’ (New Fortress Energy Inc) நிறுவனம் எடுத்துள்ளது. சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஈடான இந்தப் பணிக்கு கட்டணத்துக்குப் பதிலாக, இலங்கை மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்கை பெற்றுக்கொண்டுள்ளது இந்த நிறுவனம். 

 ஏற்கனவே 2017 இல், இலங்கை-அமெரிக்க நாடுகள் செய்துகொண்ட ‘அத்தியாவசிய வழங்குதல்களும், பரஸ்பர சேவையும்’ (Acquisition and Cross-Services Agreement) என்ற பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தப்படி தனது ராணுவத் தளவாய்களை இலங்கையில் இறக்கியிருக்கும் அமெரிக்கா, கொழும்பு துறைமுக நகரம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இது சீனாவின் கனவுத் திட்டங்களான ‘கடல்சார் பட்டுப்பாதை’ (Maritime Silk Road) மற்றும் கிழக்காசியா முழுதுக்கும் ஒரே பாதை  (One Belt One Road) ஆகியவற்றுக்கு இலங்கையைப் பிரதானமாகப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சி என்கிறது அமெரிக்கா. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் சீனாவின் இந்த முயற்சி ஆசியா முழுவதிலும் தனது செல்வாக்கை மேம்படுத்துவதற்காகும்  எனச் சந்தேகிக்கிறது அமெரிக்கா. அதனால் இலங்கையிலிருக்கும் தனது ‘இராணுவத் தளவாட மையங்களை’ வலுப்படுத்துவதுடன் ‘இந்தோ-பசிஃபிக் பிராந்தியக் கொள்கை’யில் உறுதியாக நிற்க வேண்டுமென்று ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியாவை வலியுறுத்துகிறது அமெரிக்கா. அண்மையில் இதற்கு எதிர் வினையாற்றும் வகையில் இலங்கையிலிருக்கும் சீனத் தூதரகம் “ஒரு திருடன், எல்லோரையும் தன்னைப் போன்ற திருடர்கள் என்றே நினைப்பான்” எனும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “ஆப்கானிஸ்தானிலிருந்து கற்ற பாடத்துக்குப் பின்னரும் இலங்கையில் ஏன் இராணுவத்தைப் பலப்படுத்துகிறது அமெரிக்கா?” என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டுள்ளது.

 இந்திய முதலீடுகள்

 இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைவதில் இந்தியாவும் கவலைகொள்கிறது. ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் சீனா நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் இந்திய அரசு, தென் கடல் பகுதியிலும் சீனா தனிபலத்துடன் தலையெடுப்பதை விரும்பவில்லை. இந்தியாவின், குறிப்பாகத் தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 கிமீ தூரத்தில் சீனாவின் இராணுவத் தளமாக கொழும்புத் துறைமகம் மாறுமானால் அது இந்தியாவுக்கு மிக அபாயமாக மாறக்கூடும் என எச்சரிக்கிறார்கள் பாதுகாப்பு வல்லுனர்களும், அரசியல் கவனர்களும்.

 கடந்த செப்டம்பர் 30 அன்று, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி குழுமம், இலங்கையில் புதிய ‘கொள்கலன் முனையத்தை’ அமைப்பதற்கான $700 மில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமான ‘ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்’ (John Keells Holdings) மற்றும் ‘இலங்கைத் துறைமுக அதிகார சபையுடன்’ (Sri Lankan Ports Authority) இணைந்து கொழும்பு மேற்கு சர்வதேசக் கொள் கலன் முனையத்தை (Colombo West International Container Terminal) கட்டமைத்து அபிவிருத்தி செய்யும் பணியை மேற்கொண்டுள்ள அதானி குழுமம் இந்தக் கூட்டமைப்பில் 35 ஆண்டுகளுக்கு 51 சதவீதப் பங்கை வைத்திருக்கும். ஜான் கீல்ஸ் 34 சதவீதத்தையும், எஸ்எல்பிஏ 15 சதவீதப் பங்கையும் கொண்டிருக்கும். இலங்கையில் இந்திய நிறுவனமொன்று செய்துள்ள மிகப்பெரிய முதலீடு இது.

 இலங்கையில் சீனா செய்து வரும் அபிவிருத்தி முதலீடுகள் ஒருபுறமிருந்தாலும், அதன் கடலோரப் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகள் விரும்பவில்லை. இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் புவிசார் அமைப்பு, வரும் தசாப்தங்களில் பல உலக அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும். குறிப்பாகத் தெற்காசியப் பிராந்தியத்தில் சீனா, அமெரிக்கா, இந்தியாவுக்கு இடையிலான போட்டா போட்டி தீவிரமடைந்து வருகிறது.

 67 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய-சீன நாடுகள் கையொப்பமிட்ட ‘பஞ்சசீலக் கொள்கை’களின் முக்கியக் கொள்கையான ‘​​சமாதான சக வாழ்வு’ கொள்கையை இரண்டு நாடுகளும், இலங்கை மண்ணிலும், இந்தியப் பெருங்கடலிலுமாவது கடைபிடிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. இரண்டு கோடி மக்கட்தொகை கொண்ட இலங்கை, பாதுகாப்பான, அமைதியான முறையில் வளம்பெறுவது இன்று சீன, அமெரிக்க இந்திய நாடுகளின் கையில் விழுந்துள்ளது என்றால் மிகையில்லை.

  • ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad