\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அதிபராக ஜோ பைடனின் முதலாண்டு – ஒரு பார்வை

அதிபர் ஜோ பைடன், ஜனவரி 20ஆம் தேதியன்று தனது பதவிக் காலத்தின் முதலாண்டை நிறைவு செய்துள்ளார். எண்பது மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற முதல் அதிபர் என்ற பெருமை அவருக்காகக் காத்திருந்தது. பாரம்பரிய பதவியேற்பு விழாவே நடைபெறுமா என்ற கலவர அச்சம் சூழ்ந்திருந்த நிலையில், திறந்த வெளியில் பதவியேற்றுக் கொண்டு, “இது தனிமனித வெற்றியல்ல; ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டுள்ள உங்களின் வெற்றி” என அவர் ஆற்றிய உரை புதியதொரு நம்பிக்கையைத் தந்தது. ஒவ்வொரு தினமும் பத்து இலட்சம் (1 மில்லியன்) தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் 100 நாட்களில் பத்து கோடி (100 மில்லியன்) தடுப்பூசிகள் என்பதை இலக்காக நிர்ணயித்துக் கொண்டது மீண்டும் அறிவியல் அடிப்படையில் இயங்கக்கூடிய அதிபர் வந்துவிட்டார் என்ற  பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.  ஓராண்டு கடந்த பின்பு அந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அப்படியே உள்ளதா என்பது கேள்விக்குறியே. தொடக்கத்தில் 56 சதவிகிதமிருந்த அதிபர் பைடனின் அங்கிகாரப் புள்ளி (approval rating), பலவித கலவையான விமர்சனங்களுக்கு உட்பட்டு, இன்று 41 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி அகற்றுவதே முதல் குறிக்கோளாகக் கொண்டு களத்தில் குதித்த பைடனின் செயல்பாடுகள் ஒரளவுக்கு வெற்றி பெற்றதெனலாம். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் வேகப்படுத்தப்பட்டன. இன்றைய தேதியில் சுமார் 75% மக்கள், தடுப்பூசியின் முதல் பகுதியைப் பெற்றுள்ளனர்; முழுமையாக இரண்டு பகுதியையும் பெற்றவர்கள் 63%. சென்ற நவம்பர் முதல் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் கிடைக்கின்றன; திரிபடைந்த ஒமிக்ரான் தொற்றைக் கையாள சுமார் 80 மில்லியனுக்கும் அதிகமான துணையூக்கிகள் (booster dose) வழங்கப்பட்டுள்ளன; ஏராளமான இலவச பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன; சென்ற மாதம் வீட்டிலேயே பரிசோதித்துக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச பரிசோதனைப் பொருட்கள் வழங்கும் முயற்சியும் கையெடுக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் திரிபடையும் தொற்றுகளை அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒரு புறமிருக்க தனிமனிதச் சுதந்திரம் என்ற பெயரில் தடுப்பூசிகளை எதிர்ப்பவர்களையும் கையாள முடியாமல் அரசு சிக்கலுக்குள்ளானது. கடந்த ஆண்டில் அமெரிக்கா தொற்றின் மூன்று அலைகளையும், 800,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் கண்டது. உலகளவில் தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையாக தனியொரு நாடு பதிவு செய்ததில், துரதிருஷ்டவசமாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார, வேலை இழப்புகளின் நிவாரணமாக, $1.9 டிரில்லியன் அளவுக்கு (தலைக்கு $1400) உதவித் தொகை வழங்கியது மக்களுக்கு ஆறுதல் தந்தாலும், தொற்றின் திரிபுகள் பரவுதல் மற்றும் தடுப்பூசி எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்துவதில் பைடனின் அரசு மெத்தனமாக இருந்து வருவதாக விமர்சனங்கள் வலுக்கின்றன.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக அமெரிக்கப் படைகளை விலக்கியதும் அதிபர் பைடனுக்குக் கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தன. 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா, அப்போது தாலிபான்கள் வசமிருந்த ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின் லாடனுக்குத் தாலிபான்கள் புகலிடம் கொடுத்து, வன்முறையை வளர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் தான் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. தாலிபான்களை ஒடுக்கி முறையான அரசை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சி ஓரளவு வெற்றிபெற்றது. ஆஃப்கன் மக்கள் அச்சம் விலகி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அமெரிக்கப் படைகள் உதவின. ஆனாலும் ஸ்திரமற்ற அரசாங்கத்தால் அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளான ஜெர்மனி மற்றும் பிரிட்டனும் தொடர்ந்து தங்கள் படையை அங்கே நிறுவியிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கு அமெரிக்கா 800 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிட நேர்ந்தது; மேலும் ஏராளமான உயிரிழப்புகளையும் சந்தித்தது. கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்காவின் நான்கு அதிபர்களும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உறுதியளித்து முயன்றிருந்தாலும், பல காரணங்களுக்காக அதனைச் செயல்படுத்த முடியாத சூழலிருந்து வந்தது. துணை அதிபராக இருந்தபோதே, ஆஃப்கன் போரை கண்டித்து வந்த பைடன், அங்கிருந்த அமெரிக்கப் போர்ப் படையினர் பலத்தை அதிகரிக்க வேண்டிய கோரிக்கை வந்த போதெல்லாம் அதற்கு எதிராக வாக்களித்து, ஆஃப்கான் தங்களது சொந்தப் படை பலத்தை அதிகரித்து, அரசியல் முடிவுகள் எடுப்பது மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டு வருமென வாதிட்டு வந்தார். தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக ஆஃப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்என்று சொல்லியிருந்தாலும், அதிபர் பைடன், 2021 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அமெரிக்கப் படைகளை முற்றிலும் விலக்கிக் கொள்வதாக அறிவித்தது, ‘அமெரிக்காவின் தோல்வியாககருதப்பட்டு, அமெரிக்கர்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆஃப்கன் அதிபர் தலைமறைவானார்; அமெரிக்க நேச நாடுகளான பிரிட்டனும், ஜெர்மனியும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டன; தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றினர்; ஒரளவுக்கு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்த ஆஃப்கன் மக்கள் நிலைகுலைந்து போனார்கள். போர் நிறுத்தம் தொடர்பாக முந்தைய அதிபர் டானல்ட் டிரம்ப் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கை செய்திருந்த போதிலும், அதிபர் பைடன் தடாலடியாகப் படைகளை விலக்கியது கண்டனங்களைக் கிளப்பியது. “20 ஆண்டு காலப் போருக்குப் பிறகும், அமெரிக்காவின் மற்றொரு தலைமுறையை, நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்த போருக்கு அனுப்ப நான் மறுக்கிறேன். அதிபராக எனது கடமை அமெரிக்காவைப் பாதுகாப்பதும், வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்வதும் தான். 2001 ஆம் ஆண்டின் அச்சுறுத்தல்களுக்கு பழி தேடுவது உசிதமல்ல, மாறாக 2021 மற்றும் நாளைய அச்சுறுத்தல்களுக்கு பாதுகாப்புத் தேடுவது முக்கியம் என உணர்கிறேன். இந்த முடிவுக்கு நான் முற்றிலுமாகப் பொறுப்பேற்கிறேன். 20 வருடங்களாக அமெரிக்காவுக்குப் பெரும் சுமையாக இருந்த போர் என்னோடு முடியட்டும்” என்று பைடன் பேசியது நியாயமாகப் பட்டாலும், ஆஃப்கன் நாட்டு மக்களின் பாதுகாப்பை முறையாகத் திட்டமிட்டு அந்நாட்டு அரசாங்கம், இராணுவத்திடம் ஒப்படைக்காதது பைடன் மீதான கரும் புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

இன்று நாடு எதிர்கொள்ளும் முதல் பிரச்சினை பொருளாதாரம். பைடன் பதவியேற்ற சமயத்தில் பொது முடக்கம் காரணமாக வேலையின்மை 6.7 சதவிகிதமாகயிருந்தது. கடந்த ஓராண்டில் 6.4 மில்லியன் வேலைவாய்ப்புகள் உண்டாக்கப்பட்டன. நாட்டில் இன்று, தொற்றுக்கு முந்தைய நாட்களை விட குறைவான மக்களே பணியாற்றி வருகின்றனர். பணியாட்களுக்கானத் தேவைகள் அதிகரித்திருந்தாலும், பொதுமக்கள், தொற்று அச்சம் காரணமாகப் பணிகளுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். அரசு வழங்கிய கொரோனா நிவாரணத் தொகை இவர்களுக்கு ஒரளவுக்கு உதவி செய்ததெனலாம். ஆனால் தொழிலாளர்கள் குறைபாட்டால் உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த உற்பத்திக் குறைபாடு ஏறக்குறைய எல்லாத் துறைகளுக்குள்ளும் நுழைந்து விநியோகச் சுழற்சியைச் சுருக்கி வருகிறது. கடைகளில் அத்தியாவசிய மளிகை அடுக்கப்படும் அலமாரிகள் கூட காலியாகத் தென்படுவது பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப் போவதன் அறிகுறியாகும். 2021 ஜனவரியில் 1.4% சதவிகிதமாகயிருந்த பணவீக்கம் 2021 டிசம்பரில் 7% சதவிகிதமாக உயர்ந்துள்ளது பொருளாதார வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி.  வரும் ஆண்டுகளில் பல நடுத்தரக் குடும்பங்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளி விடும் அபாய நிலை ஏற்படக்கூடும். இதனைச் சமாளிக்க  பைடன் அரசு தயாராகி வருகிறதா என்பது தெளிவில்லாமல் உள்ளது. நவம்பர் 2021 இல் பைடன் கையெழுத்திட்ட $1 டிரில்லியன் கட்டுமான விரிவமைப்புக்கான நிதி ஒதுக்கீடு பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்த உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தொற்று காரணமாக வேலைக்குச் செல்வோர் குறைந்துள்ளது அரசின் வரி வருவாயைப் பெருமளவுக்குப் பாதிக்கக் கூடும். பங்குச் சந்தையின் நிலையற்ற ஏற்ற இறக்கங்கள், ஒரு வகையில், முதலீட்டாளர்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகப் பொருள் கொள்ளலாம்.

2017 இல் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்து, உலக நாடுகளின் பசுமை இல்ல வாயு உமிழ்வைகுறைக்கும் முயற்சியில் மண்ணைப் போட்டார் முந்தைய அதிபர் டானல்ட் டிரம்ப். வளரும், வளர்ச்சியடையாத நாடுகளில் கரியமில உமிழ்வைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் அமெரிக்கா வெளியேறிய பின்பு பலவீனமடைந்தது. இதனைச் சரிப்படுத்த பைடன் அரசு முடிவு செய்து, மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நுழைந்துள்ளது வரவேற்கக் கூடியதாகும். பைடனின் $1 டிரில்லியன் கட்டுமான விரிவமைப்புத் திட்டத்தில், 2050க்குள் நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்றுவதும் பருவநிலை ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான். இதன் மூலம் எரிபொருட்களால் உண்டாகும் பசுமைக் குடில் வாயுவைக் குறைக்கும் முயற்சி வெற்றியடையலாம். 

மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை மணிக்கு $15 ஆக உயர்த்தியதில் பைடன் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் எனலாம். இதனால் ஏறக்குறைய 67000 ஊழியர்கள், ஊதிய உயர்வு பெற்றுள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒரு கறுப்பினப் பெண்ணை நியமிப்பேன் என்பது ஜோ பைடனின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதி பிரெய்யர்பதவி விலகியதினால், பைடனுக்கு அந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. 

இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் முதலாண்டை முடித்துவிட்ட அதிபர் பைடனுக்கு மேலும் சிக்கல்களும் சவால்களும் காத்துக் கொண்டிருக்கின்றன. புதுப்புது உருவெடுக்கும் தொற்று மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவது அவற்றில் முதன்மையானது. பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள். பெருகிவரும் பணவீக்கத்தைக் குறைக்க விரைவில் பெடரல் வங்கியின் வட்டி சதவிகிதம் அதிகரிக்கக் கூடும். இந்த மறைமுக நடவடிக்கை அரசுக்குக் கெட்ட பெயரை உருவாக்கலாம்.

சீன அமெரிக்க இடையிலான வர்த்தகச் சிக்கல்கள் போராக வெடித்துவிடக் கூடிய அபாயம் பெருகிவருகிறது. ஆசியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க பிராந்தியங்களில் சீனா கால் பதித்து வருகிறது. பல ஆண்டுகளாக உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கிடையே நீடித்து வரும் மோதல் போக்கு, கடந்த சில வாரங்களாக ரஷ்யா தனது படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருவதால் எல்லைப் பகுதி பதட்டமடைந்து வருகிறது. ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்காவும் இந்தப் பகுதியில் தனது படைகளைக் களமிறக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் முன்னர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்துப் பேசியுள்ளது போருக்கான பதட்டத்தை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு போர்க்களத்தை விட்டு வெளியேறிய அதிபர் பைடனுக்கு ரஷ்ய-உக்ரைன் சிக்கல் மிகப்பெரிய சவாலாக அமையக்கூடும்.  

இரண்டாம் ஆண்டிலும், அதிபர் பைடனுக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. ஒமிக்ரான் தொற்றின் பரிசோதனை, ‘வாக்களிக்கும் சுதந்திரம்‘, மத்திய அமெரிக்க நாடுகளின் அகதிகளுக்குக் குடியுரிமை போன்ற திட்டங்கள் சரிவர துவங்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்ட பைடன்,வருமாண்டில் இத்திட்டங்களைச் செயல்படுத்தப் பாடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக வாக்களிக்கும் சுதந்திரம்திட்டம் வருங்கால அமெரிக்க ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியமானதென்றும், எதிர்க்கட்சியினருடன் சுமூகமான முறையில் இத்திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயமுள்ளதாகவும் குறிப்பிட்டார். வெளிநாட்டு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள், பருவநிலை மாற்றக் கோட்பாடுகள், பொருளாதாரச் சீர்த்திருத்தம் எனப் பல சிக்கல்களை அதிபர் பைடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனுடன் இந்தாண்டு நவம்பர் மாதம் பிரதிநிதிகளின் தேர்தல் வேறு நடைபெறவுள்ளது. ஏற்கனவே தனது திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் எதிர்க்கட்சியினர் பிரதிநிதிகள் அவையில்பெரும்பான்மை பெற்றுவிட்டால், பைடனுக்கு அது மேலும் பின்னடைவைத் தரும்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad