\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மதவெறிக்கு இரையாகிறதா நாடு?

“நம்மில் 100 பேர் அவர்களில் இருபது இலட்சம் பேரைக் கொல்லத் தயாராக இருந்தால், நாம் வெற்றி பெறுவோம். கொலை செய்யவும், சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்கள்.”

“நீங்கள் உங்கள் மதத்துக்கு உண்மையானவர்ளாக இருந்தால், உங்கள் மதத்தைப் பாதுகாப்பதாக சபதம் எடுங்கள். எனவே, புதிய மொபைல் வாங்குவதை விட, துப்பாக்கியை வாங்குங்கள். கடவுள்களுக்கு ஆயுதங்கள் இருப்பதைப் போல், நமக்கு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கிடைத்தால் என்ன தவறு? இவை நம்மைத் தற்காத்துக் கொள்ளவே தவிர தாக்குதலுக்காக அல்ல.”

முதல் முத்தை உதிர்த்தவர் இந்து மகாசபை தேசியச் செயலாளர்  பூஜா ஷகுண் பாண்டே. சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மா காந்தியின் உருவப்படத்தைச் சுட்டு புரட்சி செய்த பெண் சாமியார். சாத்வி அன்னபூர்ணா என்று அழைக்கப்படும் இவர், இந்நாட்டில், மற்ற மதங்களுக்கு எதிரான அவசர வன்முறை தேவை என்ற அறைகூவலையும் விடுத்துள்ளார் 

இரண்டாவது முத்தை உதிர்த்தவர் பஜ்ரங் தளத்தின் பிராந்தியத் தலைவர் பால்ராஜ் சிங் துங்கர்.

சாத்வி விபாவோ எனப்படும் இன்னொரு பெண் சாமியார் இந்துப் பெண்களைப் பாதுகாக்க முஸ்லிம் பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பயன்படுத்துங்கள் என்று இந்து ஆண்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்,

சாத்வி தேவா தாகூர், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த கட்டாயக் கருத்தடை செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

தரம் சன்சத் 

சென்ற ஆண்டு, டிசம்பர் 17 முதல் 19 வரை ஹரித்வாரில் ‘தரம் சன்சத்’ (மத நாடாளுமன்றம்) என்ற சம்மேளனம் நடைபெற்றது. இந்து மகாசபை உறுப்பினர்கள், பல அகாராவைச் சேர்ந்த மதத் தலைவர்கள், மத அடிப்பதைவாதப் போராளிகள், இந்துத்துவா அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்ட இந்த சம்மேளனத்தை ஒருங்கிணைத்தவர் யதி நரசிங்கானந்த் எனும் இந்து மதத் தலைவர். “எந்த ஒரு இந்து சந்நியாசி, பிரபாகரனாக (விடுதலைப் புலிகள் தலைவர்) மாறுகிறாரோ அவருக்கு 1 கோடி ரூபாய் தருவேன்” என்றும் “இந்து மதத்தைக் காப்பாற்ற பிரபாகரன், பிந்தரன்வாலே, ஷபேக் சிங் போன்றவர்கள் தேவை. முஸ்லிம்களுக்கு எதிரான போரில் இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும். 2029 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடக் கூடாது” என்றும் பேசியுள்ளார் இவர்.  

சென்ற ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் AIMIM கட்சித் தலைவர் அசாசுதின் ஓவைசி கான்பூரில் முஸ்லிம்களுக்கு எதிராக உத்தரபிரதேச காவல்துறை நடத்திய அட்டூழியங்களை விவரித்து, இந்த அட்டூழியங்களுக்கு எதிர்வினையாக, காலம் மாறும் என்று பேசினார். எதிர்காலத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் மற்றும் மோடி இப்போதிருக்கும் இடத்தில் இல்லாது போகலாம் என்றும் உத்தரபிரதேச காவல்துறையை ஓவைசி எச்சரித்தார். அவர்களுக்காக அல்லா நீதியை வழங்குவான் என்றும் கூறினார். 

 

அதே போன்று 2012 ஆம் ஆண்டு அக்பருதின் ஓவைசி (அசாசுதின் ஓவைசியின் சகோதரர்) ஒரு அரசியல் கூட்டத்தில் பேசியபொழுது ‘காவல்துறையை 15 நிமிடங்களுக்கு அகற்றினால் போதும், 100 கோடி இந்துக்களை ஒழித்துவிடலாம்’ என்று பேசி கைதானார்.  இவர்களில் அசாசுதின் ஓவைசி அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி சார்பில் ஹைதராபாத் தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சகோதரர் அக்பருதின் ஓவைசி இதே கட்சியின் சார்பில் தெலுங்கானா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவ்விரு பேச்சுகளுக்கு பதிலடியாகவே ‘தரம் சன்சத்’ மாநாட்டுப் பேச்சுகள் அமைந்தன என்கிறார்கள் இந்து மத அமைப்பினரும், வலதுசாரி ஆதரவாளர்களும்.

ஹரித்வார் தரம் சன்சத் மாநாட்டில் பேசிய சுவாமி பிரபோதானந்த கிரி “கொலை செய்ய அல்லது கொல்லப்படத் தயாராவோம்” என்று முழங்கினார். இந்த மாநாட்டில் பாரத நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றுவோம் என்ற உறுதிமொழியுடன் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. 

 

மாநாட்டில் எடுக்கப்பட்ட சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து இந்த வெறுப்புப் பேச்சுக்களைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் சீற்றம் கிளம்பியது. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்த உத்தரகண்ட் காவல் துறை, டிசம்பர் 23 ஆம் தேதி, தரம்தாஸ் மஹராஜ், மா அன்னபூர்ணா, சாகர் சிந்துராஜ் மஹராஜ், யதி நரசிங்கானந்த், சில நாட்களுக்கு முன்னர் இந்து மதத்துக்கு மாறிய ஜிதேந்திர தியாகி எனப்படும் வசீம் ரிஸ்வி ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதற்கு பின்னரும் சுமார் 21 நாட்கள் எந்த விசாரணையையும் தொடங்காத நிலையில் தனிநபர் ஒருவர் வழக்குத் தொடர ஜிதேந்திர தியாகி, போலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்தக் கைதின் போது அங்கிருந்த யதி நரசிங்கானந்த் தன்னையும் கைது செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்காத காவல்துறையினரை “உங்கள் குடும்பம், குழந்தை உட்பட நீங்கள் அனைவரும் செத்துப் போவீர்கள்” எனச் சாபமிட்டிருந்தார் நரசிங்கானந்த். பின்னர், தியாகியின் கைதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நரசிங்கானந்த் தொடர்ந்து இஸ்லாமியர் மீது அவதூறான கருத்துகளைப் பகிர்ந்து வந்தார். “இஸ்லாமியர்களைக் கொல்ல, வாள் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் உங்கள் ஆயுதங்களால் மடியக்கூடியவர்கள் அல்லர். தொழில்நுட்பத்தில் நீங்கள் அவர்களைவிட முன்னேற வேண்டும்” என்று பேசினார். இந்த நிலையில் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதற்காக அவர்மீது ஏற்கனவே இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். ஹரித்துவார் மதவெறிப் பேச்சுக்காக அவர் கைது செய்யப்படவில்லை என்றும் பத்திரிக்கை செய்திகள் சொல்லின. 

 

உத்தரகண்ட் ‘தரம் சன்சத்’ நடந்து முடிந்த ஒரு வாரத்தில் சட்டீஸ்கரிலும் ‘தரம் சன்சத்’ நடந்துள்ளது. இங்கும் இஸ்லாமிய, கிறித்துவ சிறுபான்மை வகுப்பினரின் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் விதத்திலும், அச்சுறுத்தும் விதத்திலும் விஷ விதைகள் தூவப்பட்டன. இங்கு பேசிய காளிசரண் மகராஜ் என்ற இந்து மதக் குழுக்கள் ஒன்றின் தலைவர் மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியதுடன், அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து காந்தியின் கொலையை நியாயப்படுத்திப் பேசினார். இவர் மீதும் வழக்குப் பதியப்பட்டு கைதானார்.

கடந்த ஜனவரி மாதம், ஹரித்வார், ராய்பூர் மாநாடுகளில் மத உணர்வுகளைத் தூண்டியதற்காக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவருக்கும் சில நாட்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

இஸ்லாமியப் பெண்கள் ஏலம்

ஜனவரி மாதத் துவக்கத்தில், இஸ்லாமியப் பெண்களைக் குறிவைத்து, அவர்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலிருந்து திருடி அவர்களை விற்பனைக்கு ஏலம் விடும் வகையில் செயல்பட்ட புல்லி பாய் எனும் செயலி பிரபலமடைந்தது. இதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இதைப் போன்றே செயல்பட்ட ‘சுல்லி டீல்ஸ்’ எனும் செயலி கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டது. இச்செயலிகளில் 16 வயது முதல் 67 வயது வரையிலான இஸ்லாமியப் பெண்களின் படங்களை பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல மார்ஃப் செய்து,  அவற்றை ‘டீல் ஆஃப் த டே’ (Deal of the day) பதிவிட்டு ஏலத்தைத் துவங்குவார்கள். இப்பெண்களின் அங்க வடிவுகளை வக்கிரமாக வருணித்து பதிவிட்டு ஏலம் கேட்கும் வகையில் இச்செயலிகள் செயல்பட்டன. ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலித் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, செயலி முடக்கப்பட்டது தவிர வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. டிசம்பர் 31ஆம் நாள் ‘புல்லி பாய்’ செயலி, டிவிட்டர் தளத்தில் பரவத் தொடங்கிய போது, மஹாராஷ்டிராவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மும்பை போலிஸ் ஸ்வேதா சிங், விஷால் குமார் ஜா, மயங்க் ராவல் ஆகியோரைக் கைது செய்தது. இதையடுத்து நீரஜ் பிஸ்னோய் என்ற 20 வயது மாணவன் ஒருவன், “ஸ்லம்பாய் போலிஸ், நீங்கள் தவறாக கைது செய்துள்ளீர்கள். புல்லி பாயை உருவாக்கியது நான் தான்” என்று டிவிட்டரில் சவால் விட அவனைஅயும் கைது செய்தது மும்பை போலிஸ். “நான் சரியானச் செயலைத் தான் செய்திருக்கிறேன்; நான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்க மாட்டேன்” என்று வாக்குமூலத்தில் நீரஜ் தெரிவித்தது அதிர்வலைகளை உருவாக்கியது. “சுல்லி”, “புல்லி” எனும் சொற்கள் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி விளிக்கும் சொற்கள் என அறியப்படுகிறது. 

 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் களேபரம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியொன்றில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கிறிஸ்துமஸ் விழாவைப் பள்ளி நிர்வாகம் ரத்து செய்திருந்த நிலையில், பள்ளி மாணவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் கேக் வெட்டிக் கொண்டாட மட்டும் அனுமதி வழங்கப்பட்டு, ஏராளமான மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். இதில் உடன்பாடில்லாத ஒரு மாணவரின் பெற்றோர், இந்து ஜகரனா வேதிகா அமைப்பினரிடம், இந்து மாணவர்களைக் கிறித்துவ மதத்துக்கு மாற்றும் நோக்கத்தோடு செயல்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால் பள்ளிக்குள் நுழைந்த இந்து ஜகரனா வேதிகா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்துமஸ் விழா நடத்தக் கூடாதென கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். கிறிஸ்துமஸ் விழா நடத்தும் நீங்கள் ஏன் இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை எனக் கேட்டு பள்ளி வளாகத்தில் சரஸ்வதி படத்தினை மாட்ட முற்பட்டிருக்கிறார்கள். பள்ளி மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட உத்தரவிட்டு மிரட்டியுள்ளனர்.  இதற்கு முன்னரே, பட்டியலின இந்துகளை மதமாற்றம் செய்வதாக கிறிஸ்துவ பாதிரியார்கள் மீது புகார்கள் எழுந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத்தில், மதமாற்றத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் நாட்டின் பிற பகுதிகளிலும் பல இந்து அமைப்புகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.  ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள புனித மீட்பர் தேவாலயத்தில் உள்ள ஏசு கிறிஸ்துவின் சிலையை மதவெறிக் கும்பல் ஒன்று உடைத்து நொறுக்கியது.  உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் ராஷ்ட்ரிய பஜ்ரங்தள் எனும் அமைப்பினர் கிறிஸ்துமஸ் தாத்தா என அழைக்கப்படும் “சாண்ட்டா கிளாஸ்” உருவ பொம்மையை எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அஞ்சு சவுகான்   “சாண்ட்டா கிளாஸ்” ஒரு கற்பனை கதாபாத்திரம், அவர் எந்த  பரிசுப் பொருளையும் கொண்டு வருவதில்லை. மதமாற்றத்தைதான் கொண்டு வருகிறார்” என கூச்சல் போட்டார். மதமாற்றத்தை நிறுத்தவில்லை எனில் அனைத்து மிஷனரி பள்ளிகள் முன்பும் கலகம் செய்வோம் எனவும்  எச்சரிக்கை விடுத்தார். அஞ்சு சவுகான் 2015ஆம் ஆண்டு 1500 இஸ்லாமியர்களை இந்து மதத்துக்கு மாற்றும் “கர்வாப்ஸி” நிகழ்வை நடத்தியர். “மகளைக் காப்பாற்றுங்கள். (இஸ்லாத்திலிருந்து) மருமகள்களைக் கொண்டு வாருங்கள்” என மற்ற மதப் பெண்களை காதலித்து இந்து மதத்துக்குக் கொண்டுவரும் கோட்பாட்டை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாரனாசி (உ.பி), குருஷேத்ரா, குருகிராம், அம்பாலா (ஹரியானா), சில்சார் (அசாம்) உள்ளடங்கிய பல மாவட்டங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடாத வகையில் கிளர்ச்சிகள் எழுந்தன. கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகள், சர்ச்கள் தடை செய்யப்படவேண்டும் என்றும் முழங்கினர். இயேசு நாதரின் சிலைகளை உடைத்து அங்கிருந்தவர்களை “ஜெய் ஶ்ரீராம்” என்று சொல்லச் சொல்லி வன்முறையில் ஈடுபட்டனர். இந்தியாவில் இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டுமெனவும், அதர்மம் போதிக்கும் மற்ற மதங்கள் இருக்கக்கூடாதென்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.

 

தஞ்சாவூர் மாணவி தற்கொலை

ஏறத்தாழ இதே சமயத்தில் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவப் பள்ளியொன்றிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள திருக்காட்டுப்பள்ளி கிறித்துவப் பள்ளியில், பனிரெண்டாம் படித்துவந்த இந்து மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன் மாணவி கொடுத்த வாக்குமூலத்தில் தான் அந்தப் பள்ளியிலேயே தங்கிப் படித்து வந்ததாகவும், அங்கிருந்த வார்டன் அவரது கணக்கு வழக்கு வேலைகளை இந்த மாணவியைச் செய்யச் சொன்னதால், வேலை பளு பிடிக்காததால் விஷம் சாப்பிட்டுவிட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதன் பின்னர் அந்த மாணவியை மருத்துவமனையில் சென்று சந்தித்த விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர் ஒருவர் கிறித்துவ மதத்துக்கு மாறச் சொன்னார்களா என்ற தொனியில் கேள்விகள் கேட்டு பதிவு செய்து, மாணவி இறந்த பின்பு சமூக ஊடகங்களில் கசிய விட்டார். அந்த மாணவியின் தாய் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்த பின்னர், அவரின் தகப்பனார் வேறொரு திருமணம் செய்து கொண்ட நிலையில் மாணவி பள்ளியிலேயே தங்கிப் படிக்க ஏற்பாடானதாகவும், அந்தச் சமயத்தில் கிறித்துவ மதத்துக்கு மாற விருப்பமுள்ளதா என்று அந்த மாணவியின் பெற்றோரிடம் கேட்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.  மாணவியின் வாக்குமூலம் கிடைத்தவுடன் பள்ளி வார்டன் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், தங்களைப் பள்ளி நிர்வாகம் கிறித்துவ மதத்துக்கு மாறச் சொன்னதாக பொய்ப் புகார் அளிக்கச் சொல்லி இந்து அமைப்பினர்கள் மிரட்டுவதாக ஊர் மக்கள் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியினர் தமிழ்நாட்டில் மத மாற்றத் தடை சட்டம் அமல் படுத்தப் படவேண்டுமென கிளர்ச்சி செய்து வருகிறார்கள். 

 

கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை 

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட நிலையில், பெங்களூரில் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. உடுப்பி பியூ பெண்கள் கல்லூரியில் (12ஆம் வகுப்பு நிகரான பி.யூ.சி – Pre University Course) படிக்கும் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம், சேர்க்கைப் படிவத்தில் கல்லூரி சீருடை மட்டுமே அணிய வேண்டுமென குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டிய போது, நாங்களும் சீருடைதான் அணிந்து வருகிறோம், ஆனால் தலைமுடியையும், மார்பு பகுதியையும் மறைக்கும் விதத்தில் ‘ஸ்கார்ஃப்’ அணிந்து வருகிறோம், அதுவும் சீரூடை நிறத்தில் தான் இந்த ஸ்கார்ஃப் உள்ளது. ஹிஜாப் அணியக் கூடாது என்று சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிடப்படவில்லை என்று அவர்கள் வாதாடிய பின்னர், வகுப்புக்குள் வரும் வரை ஹிஜாப் அணியலாம் ஆனால் வகுப்புக்குள் வந்த பின்னர், கழற்றிவிட வேண்டுமென நிர்வாகம் இறங்கி வந்தது. இதனை எதிர்த்த 8 இஸ்லாமியப் பெண்கள் அனுமதி மறுக்கப்பட்டு கல்லூரி வாசலில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இத்தனைக்கும் இந்தக் கல்லூரி தனியார் கல்லூரி அல்ல – அரசுக் கல்லூரி.  இந்தப் போராட்டம் மெல்ல மற்ற கல்லூரிகளுக்கும் பரவ, பிஜேபி கட்சியின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகள் களத்தில் குதித்தன. அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவித்துண்டு அணிவோம் என வாதம் எழுந்து கலவரம் தொடங்கியது. ஹிந்து ஜாகரன வேதிகே எனும் அமைப்பு இந்து மாணவர்களுக்கு காவி நிறத் தலைப்பாகை, துண்டு வழங்கி “முதல்வர், உள்துறை அமைச்சர் எல்லோரும் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் அச்சமின்றி போராடுங்கள்” எனத் தூண்டிவிட்டது. ஒரு பக்கம் காவித் துண்டு தலைப்பாகையுடன், “ஜெய் ஶ்ரீராம்” எனும் கோஷம் ஒலிக்க மறுபுறம் இஸ்லாமியப் பெண்களுக்கு ஆதரவாக நீலத் துண்டு அணிந்து “ஜெய் பீம்” எனும் கோஷம் ஒலிக்கத் தொடங்கி கல்லூரி வளாகம் அரசியல் களமானது. இள ரத்தம் பொங்க இருபிரிவினரும் எதிரெதிரே நின்று கோஷங்கள் எழுப்பிப் போராடிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. அத்தருணத்தில் ஏதேனும் ஒரு சின்னப் பொறி, எதேனும் ஒரு மாணவர் கல்லெறிந்திருந்தால் கூட அங்கு மிகப் பெரிய மத வன்முறை நடந்திருக்கக்கூடும். அடுத்த சில தினங்கள் போராட்டம் தொடர, பள்ளி நிர்வாகம் இந்த எட்டுப் பெண்களையும் தனி வகுப்பறையில் உட்கார அனுமதி தந்தது. இரு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்து அமைப்பின் சார்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், கல்லூரி வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் ஏறி காவிக் கொடியைப் பறக்கவிட்டார். கல்லூரிக்குள் நுழைந்த ஹிஜாப் அணிந்த பெண்ணை அச்சுறுத்தும் வகையில் காவித் துண்டு அணிந்த பெருங்கும்பல் ஓடி வந்து “ஜெய் ஶ்ரீராம்.. ஜெய் ஶ்ரீராம்” என்று கோஷமிட ஒரு நிமிடம் அதிர்ந்துபோன மாணவி அவர்களைச் சட்டை செய்யாமல் தனியொருத்தியாக “அல்லா ஹூ அக்பர்” எனச் சொல்லிக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்த நிகழ்வும் அரங்கேறியது. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கல்லூரிகள் இயங்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் மதத் தீவிரவாத அமைப்புகள், ஊருக்குள் இந்தப் பிரிவினையை வளர்த்துவிடத் துவங்கிவிட்டனர். 

கடைகளில் காவிக்கொடி அடையாளம்

கர்நாடகாவில் தக்கின கன்னடா பைலு பகுதியில் கோவில் திருவிழா நடந்த போது, இது இந்துக்களுக்கான திருவிழா, இங்கு இந்துக்கள் கடைகள் மட்டும் தான் இருக்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ‘பேனர்கள்’ வைத்திருந்தனர். கலவரம் ஏற்பட வாய்ப்புண்டான காரணத்தால் முஸ்லிம்கள் கடை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதை வெற்றியாக நினைக்கும் இந்து அமைப்புகள், இந்துக்களின் கடைகளை அடையாளப்படுத்த காவிக் கொடி பறக்கவிடப்பட வேண்டும். இந்துக்கள் இந்த கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கவேண்டுமென நூதனமான பிரிவினை ஆங்காங்கே பரவத் தொடங்கியுள்ளது. 

ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள்

தமது சொந்த ஆதாயங்களுக்காக மத்திய அரசும், பல மாநில அரசுகளும் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களின் அமைதியே மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தெம்பையும், துணிவையும் தருகிறது. அரசின் அழுத்தங்களால் காவல் துறையும், நீதித் துறையும் செயலற்று போக நேரிடுகிறது. டிசம்பர் 25ஆம் நாள், இந்திய அரசு, மதர் தெரசா தொடங்கிய ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’க்கு அயல்நாட்டிலிருந்து வரும் நிதியுதவிக்கான அனுமதியை ரத்து செய்துவிட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம், இங்கு ‘தொண்டு’ என்ற பெயரில் மதமாற்றக் குற்றங்கள் நடைபெறுகிறது என்பதே. குஜராத் மாநிலத்தில் இந்நிறுவனம் நடத்திவரும் பெண்கள் விடுதியில் இந்துப் பெண் ஒருவரை கிறித்துவக் குடும்பத்தில் திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்துவதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது. ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’ நடத்திவரும் சேவைகள் என்ன நிலைக்கு உள்ளாகுமெனத் தகவலில்லை. இந்த அனுமதி மறுப்பு எல்லா மதத் தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டிலிருந்து பெற்று வரும் நிதியை நிறுத்திவிடுமா என்ற வினாவுக்கும் பதிலில்லை.

 

இவை யாவும் ஒரு குறிப்பிட்ட மதம், மத அமைப்பினர் நேரடியாகச் செய்வதோடு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்கள் மூலமாகவும் நஞ்சைக் கக்கி, பரப்பி வருகின்றனர். உலகில் நடைபெறும் எந்தச் செயலையும் விடுவதில்லை இவர்கள். அண்மையில் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த ஷாருக்கான் விஷயத்தையும் திரித்து பொய்ச் செய்தி பரப்பினார்கள். லதாவின் உடலருகே நின்று ஷாருக்கான் தொழுவது போலவும், அருகில் இன்னொரு பெண்மணி இந்து பாரம்பரிய முறையில் கையெடுத்துக் கும்பிடுவதாகவும்  வெளியான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து “இது தான் உண்மையான இந்தியா” என யாரோ ஒருவர் கமெண்ட் எழுத, வெகுண்டெழுந்த இந்து மத அடிப்படைவாதிகள், ஷாருக்கான் இஸ்லாமிய முறைப்படி துவா செய்துவிட்டு ஊதிய புகைப்படத்தை வைத்துக் கொண்டு, ஷாருக்கான் இந்துவான லதா மங்கேஷ்கர் மீது எச்சைத் துப்பிவிட்டார் என ஒரு வக்கிரமானப் புனைவைப் பரப்பிவிட்டனர். ஐம்பது லட்சம் பேருக்கு இந்தத் தகவல் சேர்ந்திருந்து அதில் ஐந்து பேர் இதை உண்மையென்று நம்பினாலும் அது தேசம் உடைவதற்கான முதல் சம்மட்டி அடியாக அமையும். அதே போன்று உடுப்பியில், தன்னை ‘கேரோ’ செய்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை எதிர்த்து குரலெழுப்பிய இஸ்லாமிய மாணவியின் புகைப்படத்தை வெட்டியெடுத்து அரைகுறை ஆடைகளுடன் இருந்த வேறொரு பெண்ணின் உடலில் பொருத்தி, “இடுப்பைக் காட்டும் இவளுக்கு ஹிஜாப் எதற்கு?” என்ற கேள்வியோடு சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். இத்தகவலை கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகளே மென்மேலும் ஷேர் செய்து பரப்பியுள்ளதையும் காண முடிகிறது. தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாணவியின் விவகாரத்தில் இது போன்ற பொய்செய்திகள் பரவின. தமிழ்நாட்டு பிஜேபி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் “திருக்காட்டுப் பள்ளி என்ற ஊரின் பெயரையே மைக்கேல்பட்டி என்று மாற்றிவிட்டிருக்கின்றனர். அந்தளவுக்கு அங்கு மதமாற்றம் வேரூன்றியுள்ளது” என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டு பலரும் திருக்காட்டுப்பள்ளியில் இருக்கும் சிறிய கிராமம் தான் மைக்கேல்பட்டி. திருக்காட்டுப்பள்ளி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்று இடித்துரைத்ததும் தனது டிவிட்டை நீக்கினார் இந்தச் சட்டமன்ற உறுப்பினர். இந்த டிவிட் நீக்கப்படும் முன்பு லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்து, பகிர்ந்து தவறானத் தகவலைப் பரப்பிவிட்டிருந்தனர். அதிகாரப் பொறுப்பிலிருக்கும் இவரைப் போன்ற சிலர் தெரிந்தே தவறான தகவலைப் பரப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடுவது அபாயகரமானது.  குறிப்பாக அரசியல் பின்புலம் அறியாதவர்கள், இத்தகைய குறுஞ்செய்திகளை உண்மையென நம்பிவிடும் மக்கள், இளவயதினரிடையே பரவும் இத்தகைய மதப் பிளவு வாதங்கள், நாட்டுக்குள் தீவிரவாதத்தை வளர்க்கும். தணலாக தூவப்படும் தீப்பொறிகள் ஒருநாள் பெருந்தீயாக வெடிக்கும் அபாயமுண்டு. 

அமெரிக்காவைச் சார்ந்த இனப்படுகொலை கண்காணிப்பு  (‘Genocide Watch’) எனும் அமைப்பு இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களைக் குறிப்பிட்டு,  இனவாதப் பிரிவினை உண்டாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் கெரகரி ஸ்டாண்டன், இனப்படுகொலைகள் நடப்பதற்கான அறிகுறிகளாக வகைப்பாடு, அடையாளப்படுத்துதல், பாகுபாடு, மனிதமற்ற தன்மை, அமைப்புகளாய் உருவாதல், பிளவுண்டாக்கல், துன்புறுத்தல், அழித்தல் என படிநிலைகளைக் குறிப்பிடுகிறார். மேற்சொன்ன சம்பவங்களின் அடிப்படையில் ஒவ்வொரு படிநிலைக்கான புள்ளிகள் தரும் இவர், இந்தியாவின் காஷ்மீர், அசாம் மாநிலங்களைக் குறிப்பிட்டு இது தொடருமானால் இந்தியாவில் இனப்பேரழிவு நடக்கும் அபாயங்கள் தென்படுவதாக எச்சரித்துள்ளார். இதெல்லாம் இவரது அதீத கற்பனை, வழக்கம் போல் மற்ற நாடுகளின் விஷயத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்க முற்படுகிறது என்ற மறுப்புகள், எதிர்ப்புகள் எழத்துவங்கியுள்ளன. அவரது ருவாண்டாவில் இனப் படுகொலைகள் குறித்த எச்சரிக்கைக் கணிப்புகள், நிஜத்தில் நடந்தது போல இந்தியாவில் நடக்காமல் போனால் நல்லது தான். ஆனால் உலக நாடுகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வது, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அவசியம். 


ஊடகத் துறை ஊனமடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உண்மைகள் திரைமூடப்பட்டு, திரிக்கப்பட்டு, திணிக்கப்பட்டு நம்மை வந்தடைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. செய்திகளை உள்வாங்க இந்து, முஸ்லிம், கிறிஸ்து, பெளத்தம், ஜைனம், சீக்கியம் என்ற மதப்பாகுபாடுன்றி மனசாட்சியின் துணையை நாடுவதுதான் நல்லது. இந்துக்கள் பலரும் அன்றாட வழிபாடுகளை முடிக்கும் சமயத்தில் ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (எல்லா உலக மக்களும் நன்றாக இருக்கட்டும்) என்ற வேண்டுதலோடு முடிப்பதுண்டு. இந்த வேண்டுதலை அனைவரும் அடிமன ஆழ உணர்தலோடு சொல்வோம்.  எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே (Inclusive Growth) நாட்டின் மெய்யான வளர்ச்சியாகும்.

  • ரவிக்குமார்-

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad