\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இதமான வாழ்விற்கு இயற்கையே முன்வழி

இயற்கையில் நேரத்தைச் செலவழிப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விடுபட உதவும். எனவே வீடு, வேலைத்தலத்தில் இருந்து வெளியேறி, சுற்றாடலில் சஞ்சரிப்பது சுகமான உடலிற்கும் , மனதிற்கும் சாதகமான விடயம்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே, மனிதகுலம் இயற்கையுடனான தொடர்பை இழந்து வருவதாக இயற்கையிலாளர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது அமெரிக்கா இயந்திரமாக்கலில் முன்னோக்கிச் செயற்பட்டு வந்தது. அந்தச் சமயத்தில் பொது மக்கள்  இதைப் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

இன்று நிலைமை சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கையுடனான எமது தொடர்பு மோசமாக மாறியவாறே உள்ளது எனலாம். இலத்திரனியல் நூற்றாண்டில் இயல் வாழ்விற்கும் நகல் வாழ்விற்கும் இடையே போட்டிகள் பெரிதாகிவிட்டது. இதன் பரி விளைவு நாம் இயற்கைச் சூழலின் பயன்களை அறியாது, அதனிடம் இருந்து அகன்று வாழ்வதே நிலைப்பாடாகிவிட்டது .

இதை நாம் வரலாற்று ரீதியில் எடுத்துப் பார்த்தால் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 90 சதவீதமாக இருந்த அமெரிக்கர்கள் வெளியே இயற்கையின் வனப்பில் தொழில் புரிந்தனர். இது 20ம் நூற்றாண்டின் இறுதியில் 20 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தது.

ஓய்வு நேர இயற்கை அனுபவிப்பைத் தொடர்வதில் நாங்கள் ஆசை காட்டினும் எமது உண்மை நிலைப்பாடு வேறாகவே உள்ளது. அமெரிக்க Outdoor foundation கூற்றுப்படி, அமெரிக்கர்கள் 2008 உடன் ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில் நமது மக்கள் இயற்கையில் 1 பில்லியன் குறைவான பயணங்களை மேற்கொண்டனர். இன்று, பெரியவர்களில் 85 சதவீதம் பேர், இன்றுள்ள குழந்தைகளை விட அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அதிக நேரம் வெளியில் செலவழித்ததாக கூறுகிறார்கள். இது தமிழராக நாம் பிறந்து இடங்களிலும், ஊர்ப்புறங்களிலும் உண்மையாகவே காணப்படுகிறது. ஆயினும் தற்போதைய வாழ்வு பிறந்த நாட்டிலும் சரி, புகுந்த நாட்டிலும் சரி, பொதுவாக இயற்கையைத் தெரிந்தோ, தெரியாமலோ புறக்கணிப்பதாகவே காணப்படுகிறது.

இது பொதுவாக மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மோசமான செய்தி என்பதை நீங்கள் உள்ளுணர்வாக அறிந்திருக்கலாம். ஆனால் உங்கள் சொந்த வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் இயற்கையுடன் தொடர்பு இல்லாததை நீங்கள் இணைத்திருக்க மாட்டீர்கள். நீங்கள் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் கிட்டத்தட்ட நிச்சயமாக உங்கள் நல்வாழ்வைக் குறைத்து, உங்கள் வருத்தத்தை அதிகரிக்கிறீர்கள் என்பதே அர்த்தம்.

நமது மாநிலமாகிய மினசோட்டா மற்றும் வட அமெரிக்காவையும் எடுத்துப்பார்த்தால் கோடையின் மீதமுள்ள வாரங்கள் இயற்கையை நோக்கி எம்மை திருப்புவதற்கும், புதிய காற்றில் ஒரு புதிய தொடக்கத்தைப் பெறுவதற்கும் ஒரு சரியான வாய்ப்பாகும்.

கடந்த சில நூற்றாண்டுகளாக , குறிப்பாக கடந்த சில தசாப்தங்களாக மக்கள் இயற்கையிலிருந்து விலகிச் செல்லும் போக்கு , நேரடியான விளக்கங்களைக் கொண்டுள்ளது . தொடக்கத்தில், உலக மக்கள் தொகை நகரமயமாகிவிட்டது, எனவே இயற்கை சூழல் குறைவாக உள்ளது எனலாம். மினசோட்டாவைப் பொறுத்தளவில் இது சிறிய அளவில் தான் உண்மையாகும். காரணம் எமது  பாரிய இயற்கை நிலப்பரப்பில் இன்றும் சுமார் 2 மில்லியன் மக்கள் தாம் நகர்புறங்களில் உள்ளனர்.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, அமெரிக்க மக்கள் தொகையில் 6.1 சதவீதம் பேர் 1800 ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் வாழ்ந்தனர். ஆயினும் 2000ம் ஆண்டில் 79 சதவீதம் பேர் நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டனர் .

அடுத்ததாக, நாம் எங்கு வாழ்ந்தாலும், தொழில்நுட்பம் எங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாகத் தொழிநுட்பத் துறைகளில் பணியாற்றும் தமிழர்களும் மற்றவர்களும் என்றும் இலத்திரனியல் சூழலையை நாடுவது இயல்பானதாகக் காணப்படுகிறது.

பொதுவான அமெரிக்க வாழ்வு முறையை எடுத்துப் பார்க்கினும், “சுற்றுச்சூழல் சுகாதார கண்ணோட்டங்கள்” (Environmental Health Perspectives) இதழில் 2017 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், முகாம் மற்றும் குழந்தைகளின் வெளிப்புற விளையாட்டு ஆகியவைக் கணிசமாகக் குறைந்திருந்தாலும், வயதுவந்தோர் 2016 ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மற்றும் 39 நிமிடங்கள் வரை இலத்திரனியல் திரை நேரம் (Screen Time) வேகமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டது. மேலும் 2022 இல் சிற்சிறு காணொளிகள் (Digital Videos) தமது கை உபகரணங்களில் பார்ப்பது நாளுக்கு 8 மணித்தியாலங்கள் வரை அதிகரித்துள்ளது என AdTaxi எனும் விளம்பர ஆய்வு தாபனம் குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை இவை அனைத்தும் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றலாம். ஒருவேளை நீங்கள் ஒரு உட்புற வேலையுடன் ஒரு நகர்ப்புறவாசியாக இருக்கலாம், இரவும் பகலும் உங்கள் சாதனங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள்- உங்கள் வீட்டிலிருந்து கார் அல்லது ரயிலுக்கு நடந்து செல்வதைத் தவிர, நீங்கள் பல மாதங்களாகவோ அல்லது பல ஆண்டுகளாகவோ இயற்கையில் தீவிர நேரத்தைச் செலவிடவில்லை. அப்படியானால், மன அழுத்தம், பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்ற சில குறிப்பிடத்தக்க உடல்நலக்குறைவுகளை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

2015 ஆம் ஆண்டிலிருந்து ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 50 நிமிடங்களுக்கு இயற்கை அல்லது நகர்ப்புற அமைப்பில் நடக்க மக்களை அழைத்தனர். இயற்கையை அனுபவித்து வெளியே நடை செய்பவர்கள் குறைந்த கவலை, சிறந்த மனநிலை மற்றும் சிறந்த வேலை நினைவகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இதன் போது அவர்கள் தாமாக “நான் என் வாழ்க்கையின் அத்தியாயங்களைப் பற்றி அடிக்கடி பிரதிபலிக்கிறேன், நான் இனி என்னைப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை” என்ற கூற்றுக்கள்/எண்ணங்களுடன் அவர்கள் உடன்படுவதாகவும் அறியப்பட்டது.

இயற்கையைச் சார்ந்த வாழ்க்கை முறை பற்றி மற்றவர்களின் கருத்துக்களைப் நீங்கள் பெரிதாக கவனிப்பதில்லையாக இருக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் 15 நிமிடங்கள் ஒரு நகரத்தில் நடந்து சென்ற மக்கள், “இப்போது, நான் என்னை முன்வைக்கும் விதத்தைப் பற்றி கவலைப்படுகிறேன்” (“I am concerned about how I present myself”) என்ற கூற்றுடன் உடன்படுவதற்கான வாய்ப்புகள் 39 சதவீதம் அதிகம் என்று கண்டறிந்தனர்.

இயற்கையில் அதிக நேரம் செலவழிப்பதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் உங்கள் வேலையின் சூழலில் அதை வாங்க முடியாது என்று நினைக்கலாம். உண்மையில், ஒருவேளை உங்களுக்கு முடியாது: இயற்கையின் பற்றாக்குறை உங்கள் வேலையின் தரத்தை குறைக்கலாம்.

“PLOS One” இதழில் 2012 ஆம் ஆண்டு ஒரு ஆய்வில், தொழில்நுட்பம் இல்லாமல் இயற்கையில் மூழ்கிய நான்கு நாட்கள் மக்களின் படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை சுமார் 50 சதவீதம் அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர்.

இயற்கை உங்கள் வாழ்க்கையில் இல்லையானால்,  நீங்கள் அநேகமாக மகிழ்ச்சியற்றவர்களாகவும், நரம்பியல் நோயாளிகளாகவும், தேவையானதை விட குறைவான உற்பத்தித் திறனுடையவர்களாகவும் இருப்பீர்கள். பன்னீராயிரம் ஏரிகளும், பல பூங்காக்களும் கொண்ட மினசோட்டாவில் நம்மவர்க்கு நலமான வாழ்வுக்கான ஆதாரங்கள் ஏற்கனவே உண்டு.

எனவே வீடு, வேலை போன்ற தரிப்பிடங்களில் இருந்து அகன்று, இந்த விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் செய்வது உங்கள் வாழ்வுக்கு நலமானது. அமெரிக்காவில் இந்தக் கோடையில், இயற்கைக்கு நேரத்தை ஒதுக்குவது அவசியமான விடயம். உங்கள் வாழ்க்கையில், இயற்கை ரசனையை அனுவித்தல், ஒரு பொடி நடை, ஓடுதல், சைக்கிள், படகு சவாரி, ஏரிகளில் நீந்துதல், ஆற்றோரம், ஏரிகள் ஓரம் விதம் விதமான பறவைகள், தாவரங்கள் அவதானித்தல். போன்ற நெறிமுறைகளை இணைத்துக் கொள்ளுவது உடலிற்கும் உளத்திற்கும் நலம் தரும் விடயம்.

–    யோகி

உச்சாந்துணைகள்

–    Nature Contact and Human Health: A Research Agenda Howard Frumkin (et al.)  https://ehp.niehs.nih.gov/doi/pdf/10.1289/EHP1663

–    Creativity in the Wild: Improving Creative Reasoning through Immersion in Natural Settings, Ruth Ann Atchley,David L. Strayer ,Paul Atchley https://doi.org/10.1371/journal.pone.0051474

–    The benefits of nature experience: Improved affect and cognition,  Gregory N. Bratmana,∗, Gretchen C. Daily b, Benjamin J. Levyc, James J. Gross, https://www.ltl.org.uk/wp-content/uploads/2019/02/the-benefits-of-nature-experience.pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad