\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கங்கா

“ஸாரிம்மா தீபிகா” என்றேன் உண்மையான மன வருத்தத்துடன்.

“இன்னும் ரெண்டே நாளில் அவளுக்கு பரிட்சை. கோபிச்சுண்டு அவள் “மூடை” அவுட்டாகிக்கியாச்சு. ஸாரி என்ன வேண்டிக்கிடக்கு? ஸாரியாம் ஸாரி…” என்று மனைவி உஷா படபடவென்று வெடித்தாள். பிறகு சுமுகமான சூழல் வரவேண்டுமே என்று எண்ணினாளோ என்னவோ,

“எனக்கு வேணுமானால் வீட்டில் கட்டிக்க ரெண்டு ஸாரி வாங்கிக் கொடுங்கள்! ஸல்வார் நிறைய இருக்கு” என்றாள்.

என் தவற்றை உணர்ந்தேன். மேலும் ஏதாவது பதிலுக்குப் பேசினால் அது வீண் விவாதத்தில்தான் முடியும் என்று தோன்றியது, மேசை மீதிருந்த ஆங்கிலச் செய்தித்தாளைக் கழுத்திலிருந்து முகம் வரை மூடிக் கொண்டு, படிப்பது போல் பாசாங்கு செய்தேன்.

செய்தித் தாளைப் புரட்டினேன். தற்செயலாக ஒரு குறுக்கெழுத்து போட்டி கண்ணில் பட்டது. “தீபிகா, வா இங்க. இதைப் போடு பார்க்கலாம். உன் இங்கிலிஷ் நாலெட்ஜ் வளரும். பரிட்சைக்கும் உபயோகமாக இருக்கும்.” என்று அழைத்தேன்.

என் குரலிலிருந்த கனிவு அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுமியின் பயத்தை முழுதுமாக அகற்றவில்லை. மெதுவாக அன்ன நடைபோட்டு நெருங்கி வந்தாள்.

“காட்டுங்களப்பா” என்றாள். பிறகு சில நிமிடம் வாக்கியங்களைப் பார்த்துவிட்டு, “கொஞ்சம் கஷ்டம், எங்க ஸ்கூலிலே இது…” என்று மேற்கொண்டு ஏதோ சொல்ல விரும்பினாள்.

அதற்குள் கை பேசி அழைத்தது. எண்ணைப் பார்த்த உடனே சட்டென்று உறைத்தது.

“ஸாரி, பணத்தை இரவே அனுப்பி விடுகிறேன்”

“நோ ப்ராபளம். வாட்ஸ்ப்பிலே ‘photo in memorium’ அனுப்பியிருந்தேனே பார்த்தீங்களா? நல்லா டிஸ்பிளே பண்ணியிருக்காங்க. செங்கல்பட்டு முழுதும் வரும்” என்றது மறுகுரல்.

“ஆமாமாம்” என்றேன்.

“அப்புறம்” சிறிது தயக்கம், “தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க குடும்ப விஷயத்திலே குறுக்கிடுறேன்னு. மறுபடி அரை நிமிட மவுனம். “ஏன் அம்மாவுக்கு ஞாபகார்த்தமா போட்டோ போடற மாதிரி, அப்பாவுக்கு போடுறதில்லை? ஜஸ்ட் ஒரு க்யூராசிட்டி”

என்னையுமறியாமல், கைபேசி நழுவிக் கீழே விழுந்தது.

“என்னப்பா” என்று பதற்றமாகக் கேட்டபடி அதை தீபிகா எடுத்தாள். யோசித்தேன். இதே கேள்வியைத்தானே அவள் சிறிது வேறு மாதிரி கேட்டாள். “ஏன் தாத்தாவின் போட்டோ போடுவதில்லை? பாட்டியோடது மட்டும் போடுறிங்க.” அதோடு நில்லாமல் “தாத்தா bad தாத்தாவா?” என்று ஒரு கொக்கி போட்டாள்.

என்ன கேள்வி இது? பள்ளிக்கூடத்தில் சக மாணவ மாணவிகளுடன் பழகியதால் எழுந்த அபத்தமான கேள்வி. இதனால்தான் தீபிகாவிடம் சீறினேனோ? இதற்காகவேதான் உஷா, பெண்ணுக்கு வக்காலத்து வாங்கினாள். நல்ல காலம், பூகம்பமாக வெடிக்கவில்லை. மவுனமாக இருந்தேன்.

ஏதேதோ எண்ணங்கள். திடீரென்று அடுத்த மைதானத்திலிருந்து கோஷம் எழும்பியது கேட்டது. “ஸிக்ஸர்” என்று யாரோ கூவினார்கள்.

சட்டென்று ஒரு நிமிடத்தில் மனத்திரையில் ‘டார்டியோ’ காணாமல் போய், நுங்கம்பாக்கம் தெரிந்தது. மும்பை மைதானம் மறைந்து, சென்னை சேத்துப்பட்டு யுனிவர்சிட்டி யூனியன் கிரவுண்ட் விரிந்தது. பம்பாயின் இரண்டு அறை கொண்ட தளக் குடியிருப்பு விலகி, சென்னையின் மூன்று கிரவுண்ட் பெரிய பங்களா காட்சியளித்தது.

நினைவுகள் பொங்கிப் பொங்கி எழுந்தன.

யுனிவர்சிட்டி யூனியன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் எங்கள் குழுதான் வென்றது. நான்தான் ஹீரோ. 34, நாட் அவுட். 20 வருஷ முன்பிருந்தால் என் பெயர் ஹிண்டுவில் வரும். லீக் மாட்ச் ஆச்சே?

பேச்சுக்கள், பாராட்டுகள், சக ஆட்டக்காரர்களின் ஒத்துழைப்பு, பிற வம்பு, சந்தோஷம்தான் எனக்கு. ஆனால் ஒன்று சொல்ல வேண்டுமே? ஓட்டலுக்குப் போய் டிபன் காப்பி எல்லாம் கிடையாது. யாரிடமும் கைக்காசு இல்லை என்பது ஒரு காரணம். சேத்துப்பட்டு அருகில் மலிவான ஒட்டல் எதுவுமில்லை என்பது மற்றொன்று.

பாராட்டுகளின் இதமான தடவல் குறைய, பசி எடுக்க ஆரம்பித்தது. பங்களாவுக்கு சைக்கிளில் விரைந்தேன். என்ன ஆச்சரியம்… இல்லத்தின் முன் பகுதியில் பத்துப் பதினைந்து நாற்காலிகள், மேசைகள், தட்டுகள். மசாலா வாசனை வெஜிடபிள் பாத் என்று சொல்லியது. ஒரு கிண்ணத்தில் வெங்காய கிச்சடி.

உட்கார்ந்தேன். சமையல்காரி கோகிலாம்மா “எழுந்திரு” என்று சாடை காட்டியது, மனதுக்குப் புரிந்தது. ஆனால் பசியால் துடிக்கும் வயிற்றுக்குப் புரியவில்லையே… முந்திரிப் பருப்பு கலந்த சாதத்தில் ஒரு விள்ளலை எடுக்க முயன்ற போது

“எழுந்திருடா ராஸ்கல்” என்ற குரல் ஒங்கி ஒலித்தது. மாதவண்ணா… சுற்றிலும் நோக்கினேன். வித்தியாசமான நடை, உடை, பாவனைகளில் மாதவண்ணாவின் சினேகிதர்கள். ஒரிரண்டு பேர் உதட்டில் சிகரெட். வேறு ஏதோ பழ வாசனை வீசியது.

“ஹுஸ் திஸ் ஃபெல்லோ?” என்று நுனி ஆங்கிலத்தில் விசாரித்தான் ஒரு நண்பன்.

“நம்ம வீடுதானே அண்ணா? பசிக்கிறது.” என்றேன் தயங்கியபடி கெஞ்சுகிற குரலில்.

மாதவன் கிண்டலாக, “பசித்தால் உன் அப்பா வேலை பார்க்கிற ஸ்வீட் கடையிலே போய் சாப்பிடு.” என்றவன், நண்பர்கள் பக்கம் திரும்பி, “யூ ஸீ… his father uneducated, works in..” என்று சொல்லிக் கொண்டே போனான். அம்மா பெயரையும் இழுத்தாற் போலிருந்தது.

அவனுடைய வேகமான நாகரீக ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரியாவிட்டாலும், என் பெற்றோரை இகழ்கிறார்கள் என்று உள்ளுணர்வு சொல்லியது.

“ரொம்ப பேசாதே அண்ணா” என்றேன். சற்று கோபத்துடன்.

“போடா… அண்டிக் கிடக்கிற நாய்க்கு வாய் வேறு கேடா” என்னைப் பிடித்து நெட்டித் தள்ளினான். விழுந்தேன். நாற்காலியின் கூரிய முனையோ அல்லது மேசையின் ஓரமோ பட்டதில், ரத்தம்… வலி… “ஐயோ!” என்று அலறினேன்.

உள்ளே இருந்த அம்மா ஓடி வந்தாள். இரண்டு பெரியம்மாக்களும் (அம்மாவின் ஓரகத்திகள்) பின்னால் மெதுவாக வந்து நின்றார்கள். ஒருவராவது வாயைத் திறக்க வேண்டுமே?

“என்னடா அரவிந்த், பசிக்கிறதா?” என்று கனிவாகக் கேட்டாள். திரும்பி மாதவனை நோக்கி, “மாதவா நீ செஞ்சது உனக்கே நன்னா இருக்கா?.”

மாதவன் அம்மாவைத் துரும்பாக மதித்தான். பதிலே சொல்வதற்குக் கூட அருகதை இல்லாதவள் போல. சினேகிதர்களுடன் உட்கார்ந்து புசிக்க ஆரம்பித்தான். “என் அப்பாவும், பெரியப்பாவும் சம்பாதிக்கிறதினால்தான், அவ லைஃப் ஓடறது. யூ நோ… like a cook.”

வலி, பசி அவமானம் சகலவற்றையும் மீறிப் பாயத் துணிந்தேன். என்ன ஆகியிருக்குமோ? நல்ல காலம். அம்மா குறுக்கே நின்று தடுத்தாள்.

“வாயைக் கொஞ்சம் அடக்கு மாது. உனக்கு நாக்கு நீளம்தான்.” என்று மாதவனிடம் சொல்லிவிட்டு, அவன் பதிலுக்குக் காத்திராமல் என்னைத் தரதரவென்று உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். ஏதோ மருந்து போட்டு நெற்றியைத் துடைத்தாள். தயிர் சாதமா? என்ன ஊறுகாய்? ஏன் இத்தனை உப்பு? எதுவுமே தெரியாது.

பசி, அவமானம், மயக்கம், அழுகை, களைப்பு… அப்படியே உறங்கினேன். எப்போது எழுந்திருந்தேன் என்றே தெரியாது. அம்மாவின் குரல் கூடத்திலிருந்து கம்பீரமாகக் கேட்டது.

“எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க. நாங்கள் இந்த பங்களாவை விட்டு வேறு இடத்துக்கு போகிறோம். இத்தனை வருஷமாக ஆதரிச்சு காப்பாத்தினதுக்கு ரொம்ப தாங்ஸ்.” என்று இரண்டு அண்ணிகள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள்.

நான் மெதுவாக எழுந்து ஒரமாக எட்டிப் பார்த்தேன்.

“இந்த இடத்தை விட்டால் வேறு கதி… வெறும் ஜம்பப் பேச்சு. நாதனோட சம்பளம் ஆயிரம் கூட இல்லை.” என்று பெரியம்மா முணுமுணுத்தது என் காதில் விழுந்தது. அம்மாவுக்கு கேட்காமாலா இருக்கும்.

பத்ரகாளி போல மன்னிகளை ஒரு பார்வை பார்த்தாள். மௌனமாக ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள். இதற்குள் பின்னாலிருந்த அப்பா,

“என்னடி சியாமா? எப்படித் தனியா இருக்க முடியும்? இங்க வாடகை இல்லை. சாப்பாட்டுக்கு…” சட்டென்று அடிக்கிறார் போல் கையை ஓங்கி, அப்பாவின் வாயைப் பொத்தினாள்.

அப்புறம் ஒரு நாலைந்து நாளைக்கு அம்மாவும், நானும் அலைந்த இடங்கள் சொல்லி மாளாது. எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம்… (ஆ… சொல்ல மறந்தேவிட்டேன், புரசைவாக்கத்தில் அப்போதிருந்த ராக்ஸி தியேட்டரில்தான் அப்பா பணி புரிந்த ஸ்வீட் ஸ்டால் இருந்தது.)

எனக்கு ரொம்ப நாளாக இருந்த சந்தேகமும் தீர்ந்தது. பிறந்த வீட்டில் அம்மாதான் மூத்தவளாம். அடுத்தடுத்து இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள். அம்மாவின் நட்சத்திரம் ஆயில்யமாம். அதுவும் இந்த நுங்கம்பாக்கம் பங்களாவில் இருந்த வெறும் ‘பியூசி’ மட்டுமே படித்த அப்பாவின் ஜாதகம் ஒத்துப் போனதால் கல்யாணம் நடந்ததாம்.

வேடிக்கை பாருங்கள், மெத்த படித்த பெரியப்பாக்கள், பட்டதாரிகளான பெரியம்மாக்கள் முன் அப்பாவும், அம்மாவும் நெளியும் புழுக்கள் போலத்தான். ஆனால் தாய் மாமன்களுக்கும், சித்திகளுக்கும், அம்மா பெரிய பங்களாவாசி ஆகிவிட்டாளே என்கிற பொறாமை. ஆகையால்தான் அம்மா ஒண்டுக் குடித்தனத்துக்காக அலைந்த போது, யாருமே உதவ முன் வரவில்லை.

“இந்த மாதிரி வசதியான பங்களா கிடைக்குமா? சியாமா ஒரு முட்டாள்.” என்று மாமா சொன்னாராம். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்தபடியே அம்மா கூறினாள்.

யார் செய்த புண்ணியமோ, செங்கு ரெட்டி தெருவில், 400 சதுர அடி கொண்ட அவுட் ஹவுஸ் கிடைத்தது. அப்பாவுக்கு கடை மிக அருகில். அம்மாவும் அந்த ஸ்வீட் முதலாளி அகர்வாலிடம் வேண்டி கொண்டு, பலகாரம் செய்ய உதவினாள். முற்ற முழுக்க இனிப்பு வகைகள் மட்டுமே உள்ள ஸ்வீட் ஸ்டால், வேறு வகையில் வளர்ந்தது.

“தன்யவாத் பெஹன்ஜி “ என்றார் முதலாளி மனப்பூர்வமாக. அவ்வப்போது சமையல் மாமி கோகிலா மூலமாக நுங்கம்பாக்கம் சமாசாரங்களும் தெரிந்து கொண்டிருந்தன. அம்மா இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார்களாம். (அம்மாதானே சமையல் உதவியாளர்) மாதவன் பாதி நாள் ஒட்டலில்தானாம். அதோடு வேறு கெட்ட பழக்கங்கள் தொற்றி கொண்டதாம். சின்ன பெரியப்பாவின் பெண் யாரையும் லட்சியம் செய்வதில்லையாம்.

“நான் நிச்சயமாக மாசம் ரெண்டு நாள் லீவு போடுவேன். மறுநாள் பார்த்தால், சமையல் அறை பார்க்க சகிக்காது.” என்றாள் கோகிலா.

எனக்கும் திடீர் திடீரென்று பங்களா ஞாபகம் வரும். அங்குதான் சுவரில் மூன்று கோடு கிழித்து, டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் பயிற்சிப் பெற்றேன். அவ்வப்போது, யாராவது ஒரு பெரியப்பா, காரிலேயே பள்ளிக்கூடம் வரை விட்டுச் செல்லுகிற சொகுசும் ஞாபகம் வரும்.

சாருவுக்கும் இது போல் தோன்றியதோ என்னமோ? “நான் ஒன்று கேட்பேன். கோபித்துக் கொள்ளக் கூடாது.” என்றாள் அவள்.

“சொல்லேன்.” என்றாள் அம்மா, ஜல்லடையில் பொட்டுக் கடலையை சலித்தபடி.

“நேத்து டீச்சர் ஒரு திருக்குறள் பாட்டுக்கு அழகா விளக்கம் தந்தார். “அளவளா”ன்னு ஆரம்பிக்கும் அந்த குறள். அதுக்கு அர்த்தம், உற்றார், உறவினர்களில்லாத குடும்பம், நீர் இல்லாத ஏரி போல் பாழாகி விடும்.”

“ஆமாம்மா, கொஞ்சம் பெரியம்மா, பெரியப்பாக்களோடு அனுசரித்து போயிருக்கலாமே?” என்று நானும் கூடச் சேர்ந்தேன்.

அம்மா, எங்கள் இரண்டு பேரையும் வெறிக்கப் பார்த்தாள். தீப்பிழம்பு கண்கள், விடைக்கும் மூக்கு, சுருங்கும் நெற்றி, துடிக்கும் உதடுகள். பதில் பேசாது, ஏணியை எடுத்துப் போட்டு, பரணிலிருந்து ஒரு பெட்டியை எடுத்துக் கீழே வைத்தாள்.

பரபரவென்று தேடி, நாமக்கல்லார் உரை கொண்ட திருக்குறளை எடுத்துப் புரட்டினாள். “அரவிந்த், ஏய் சாரு உனக்கும்தான். இதில் பதிலிருக்கிறது. மானம் பகுதியில்.”

அம்மா குரல் உயர, “நீயாவது சின்னவன் பரவாயில்லை. ஆனா மாதுக்கு நம் அப்பா சித்தப்பாதானே. வயசுக்காவது மரியாதை தர வேண்டாம்?”

“ஸாரிம்மா ஸாரி. இனிமேல் அது போல் கேட்க மாட்டேன். மன்னிச்சுடு.” கெஞ்சினேன், சாருவும் கண்ணீர் விட்டாள்.

ஓய்வாக இருக்கும்போது பெட்டியைத் திறந்து புத்தகங்களைப் பார்த்தேன். பல கதைப் புத்தகங்கள், சமைத்துப் பார், சரித்திர நாவல்கள்

“தொடக்கூட மாட்டார்களே உங்க பெரியப்பாக்கள். சகலமும் இங்கிலீஷ்தானே?” என்றவள்

“தெரியுமா உனக்கு? உன் மாமா ஒரு நாள் நுங்கம்பாக்கம் வந்தான். ஏதோ விகடனோ, கல்கியோ கேட்டான். என் மச்சினர், மாதவனின் அப்பா விட்டார் டோஸ்.”

திடீரென்று அம்மா எதோ ஞாபகம் வந்தவளாகச் சிரித்தாள். “அக்கா, உன் புகுந்த வீட்டில் சிரிப்பது ௬ட இங்கிலீஷ்தானா?”

சொந்த விருப்பு வெறுப்புகள், தன்மானம், பிறந்தகப் புறக்கணிப்பு போன்ற பலவற்றைப் பொருட்படுத்தாமல் அம்மா எப்படி பங்களாவில் இருந்திருக்கிறாள் என்று எண்ணினேன். அம்மாவுடன் எங்கள் ஒட்டுதல் அதிகமாயிற்று. அம்மா விடாப்பிடியாக, மாதம் ஒரு முறை கங்காதீஸ்வரர் கோயிலுக்குப் போகும் போது நானும் போவேன். “உனக்கு தெரியுமோ அரவிந்த்? பாட்டிக்கு ரொம்ப வருஷமா குழந்தை பிறக்கலை. அப்போதெல்லாம் கோயில் என்றால் மயிலாப்பூர்தான். யாரோ சொன்னார்களென்று இந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டாராம்.”

“ரொம்ப தள்ளி இல்லை.”

“ஆனா, மாமியாருக்கு தைரியம் ஜாஸ்தி. ரெண்டு பஸ் ஏறி வருவாராம். அப்புறம்தான் மூத்தவர் பிறந்தாராம். பெயரே இல்லாத வீட்டுக்கு கங்கான்னு பெயர் வச்சது அதனால்தான்.”

“ஏன், இங்கிலீஷ்லே பெயர் வைக்கலே?”

“ஆ… அவர் ரொம்ப கண்டிப்பு. அவர் போன பிறகுதான் எல்லாமே மாறிப்போச்சு.” என்று சிறிது துயரத்துடன் சொன்னாள்.

எல்லாம் மாறிப் போச்சு. எவ்வளவு உண்மை! 1990 இறுதிகளில் இந்தியாவே புதிய தளர்த்தப்பட்ட பொருளாதாரத்தால், குடும்பங்கள் மாறின. எங்கள் வீட்டிலும் தொலைபேசி வந்தது. அம்மாவின் சமையல் திறமையைக் கேள்விப்பட்டு, ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்குச் சிபாரிசு செய்தார். அம்மா அதை கப்பென்று பிடித்துக் கொண்டு பிரபலமானாள். அதுவும் எப்படி? என்னை யாராவது பார்த்தால், நீங்கள் சமையல் திலகம் சியாமளாவின் பையன்தானே?” என்று கேட்குமளவுக்கு.

“ஆ… மறந்துவிட்டேனே. என் பெரியப்பா  தவறிவிட்டார். அப்பாவும், அம்மாவும் மரியாதைக்கு விசாரித்துவிட்டு வந்தார்கள். அது அவ்வளவு முக்கியமில்லை.”

ஆனால் ஒரு மாதம் கழித்து தினசரியொன்றில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, “அய்யோ” என்று கத்தினார் அப்பா. என்னவோ ஏதோவென்று பார்த்தால், நுங்கம்பாக்கம் பங்களாவுக்கு மாதுவண்ணாவும், சரளாவும் தனித்தனியே உரிமை கோரி இருந்தார்கள்.

அம்மா பொருட்படுத்தவே இல்லை. இது போலாகுமென்று நினைச்சதுதான். “ஆனால் இவ்வளவு சீக்கிரமா! ” என்றாள்.

வயது காரணமாகவோ, கணிணியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததாலோ அப்பா விலகினார். முதலாளி அகர்வாலின் பையன் வேட்டி அங்கவஸ்திரம் சகிதம் ரூ.50000 காசோலையுடன் மரியாதை செய்தான்.

சாருவுக்கு வரன் கிடைப்பதுதான், கஷ்டமாக இருந்தது. ‘MBA’, ‘MCA’ போன்ற பட்டங்களுடன் வேலைக்குச் செல்லும் பெண்களைத்தான் இளைஞர் விரும்புகிறார்கள்.

இதற்கிடையில் அம்மா இரண்டு குதிரைகளின் மீது சவாரி செய்கிறாற்போல் சூழல் ஏற்பட்டது. அப்பாவுக்கான தொடர் மருத்துவச் செலவு, என் கல்விக்கான கட்டணம்; ஓரளவு வங்கி உதவியது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

“நான் வேணுமானால், படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போகட்டுமா?” என்று கேட்டேன்.

“போடா! உன் அப்பாவுக்குத் தான் படிக்கலைங்கிற காரணத்துக்காகத்தான் எல்லா அவமானமும் வந்தது என்கிற மாதிரி எண்ணம் உண்டு. அதனால நீ விடாமல் படி.” என்று ஊக்கம் தந்தாள். அதோடு “சாருவுக்கும் வரன் தானாக வரும்.” என்றும் கூறினார்.

வந்தது, அதிர்ஷ்டம் கைகூடியது, மனித ரூபத்தில் கடவுள் உதவினார். பம்பாயிலிருந்து ஒருத்தர். படித்து வீட்டோடு இருக்கும் பெண்ணைப் பார்ப்பதாக கடிதம் எழுதினார். மகிழச்சியுடன் ஜாதகம் பார்த்து, பொருந்தி வந்து… அப்புறம்… அதற்கப்புறம்… எதைச் சொல்ல, எதை விட?

மூச்சிரைப்பு என்று ஒரு நாள் கீழ்ப்பாக்க மருத்துவமனையில் தங்கின அப்பா, திடீரென்று இதயக் கோளாறால் இறந்ததைச் சொல்லவா? அதைப் பொருட்டாக எண்ணாமல், இன்னும் ஒரு வருடம் காத்திருப்பதாகச் சொன்ன பம்பாய்க்காரரின் பெருந்தன்மையைச் சொல்லவா? சாருவுக்குக் கல்யாணம் ஆனவுடன், நாங்களும் பம்பாய்க்கே இடம் பெயர்ந்ததைச் சொல்லவா?

பம்பாய் எனக்கு முற்றிலும் புது அனுபவம் தந்தது மட்டுமல்ல, நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தது. தபாலில் காஸ்டிங் படித்தேன். சாருவின் கணவர் மேற்பார்வையில் தொடர்ந்து படித்தோம். பழக்கதோஷத்தால் இந்தி பேசவும் வந்தது. மருத்துவமனையில் கணக்குப் பிரிவில் சேர்ந்து, ஆறே மாதத்தில் செலவினங்களைக் குறைக்க உதவினேன்.

சாருவின் புகுந்த வீட்டார்களே எனக்கு பெண் பார்த்தார்கள். உஷா மனைவியாகி, இரண்டு வருடங்களில் தகப்பனானேன்.

ஆனால் எல்லாவற்றையும் பார்க்க அம்மாதான் இல்லை. கோயிலிலிருந்து வீட்டுக்கு வருகிற வழியில், காரிலேயே திடீரென்று விக்கல் வந்து…

“அம்மா!” என்று உரக்கக் கத்தி விட்டேனோ? உஷா ஓடி வந்தாள். “என்ன ஆச்சு? எதாவது பயங்கர கனவா?”

எழுந்து கொண்டேன். வாஷ் பேசினில் முகத்தை அலம்பினேன். பழைய நினைவுகள் கலைந்தன. புதிதாக ஒரு தெம்பு பிறந்தது.

“உஷா” என்று அழைத்தேன். “சென்னையில் ஹோட்டல் ஒன்றில் இண்டர்வியூவுக்குப் போனேனே… அந்த வேலை கிடைத்துவிட்டது. அசிஸ்டென்ட் மேனேஜர். சம்பளம் இப்ப கிடைப்பதை விட கம்மிதான்.”

“என்ன யோசனை? மூட்டை கட்ட வேண்டியதுதானே?” உஷா குதுகலமாகக் கேட்டாள்.

“கோடம்பாக்கம் ஹைரோட் பக்கமாம். பழைய ஞாபகம் துரத்துமோ?”

“ஸில்லி” என்றாள் மனைவி.

“மெட்ராஸ் போகலாம்பா” என்றாள் பெண்.

‘நவீன் காவேரி’ ஓட்டலில் பொறுப்பேற்ற போது நிறைய சவால்கள் காத்திருந்தன. நுங்கம்பாக்கம் ஹைரோட்டில், தாஜ் மாதிரியான ஓட்டல்கள், கேக் இனிப்பு கடைகள், வில்லேஜ் ரோட்டில் சுமாரான ஓட்டல்… அதனருகே எங்கள் ‘நவீன் காவேரி’ – கோடம்பாக்கத்துக்கும், நுங்கம்பாக்கத்துக்கும் நடுவில் இருந்தது. கஸ்டமர்கள் குறைவுதான். இத்தனைக்கும் பார்த்து பார்த்து புது உணவு வகைகளைக் கொண்டு வந்தேன். உப்பு கொழுக்கட்டை, வேர்க்கடலை சட்னி.

தற்செயலாகத்தான் அது நடந்ததும். கோடம்பாக்கம் ஹைரோட்டிலுள்ள, மருத்துவ மனையிலிருந்து ஒருவன் வந்தான். “தயிர் சாதம் கிடைக்குமா?”

மணி இரண்டு. சாப்பாட்டுக் கடை மூடிவிட்டது. டிபனுக்கான இட்டிலியும் கிடைக்கக் கூட நேரமாகும்.

என் மவுனத்தைப் புரிந்து கொண்டு, “சே… இந்த ஹாஸ்பிட்டல் வேண்டாமென்று சொன்னேன். அப்பாதான் பிடிவாதமாக..” என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டே போனவனை, தடுத்து நிறுத்தினேன்.

சமையல் கட்டுக்குப் போனேன். சாதம் மிஞ்சியிருந்தது. பிரிஜ்ஜில் தயிர் எப்பவும் இருக்கும்.

பணியாளிடம், எதாவது ஊறுகாய் இருக்கிறதா என்று கேட்டு, தயார் செய்த தயிர் சாதத்துடன், ஊறுகாயையும் சேர்த்து, வந்த இளைஞனிடம் கொடுத்தேன். தொகை வாங்க மறுத்தேன்.

“ரொம்ப ரொம்ப தேங்ஸ் சார். பாலைவனத்தில் கிடைத்த குடிநீர் மாதிரி” என்று சொல்லிக் கிளம்பினான்.

அதுதான் ஆரம்பம். அந்த திவ்யா மருத்துவமனையுடன் எங்கள் ஓட்டல் ஒப்பந்தம் போடாத குறைதான். காய்ச்சல் கண்டவர்களுக்கு, வயிறு உபாதை உள்ளவர்களுக்கு, அதிக நீரிழிவு கொண்டவர்களுக்கு என்று ஒவ்வொரு வகையினருக்கும் வித விதமாய் சாப்பாடு போட ஆரம்பித்தோம். மிளகு ரசம், சுட்ட அப்பளம், தயிர் சாதம், உப்பு ஏற்றின எலுமிச்சை ஊறுகாய், ஊட்டச் சத்து நிபுணரை வாரம் இரண்டு முறை வரவழைத்து, வெவ்வேறு நோய்க்கு உணவு தயாரித்தோம்.

பசினஸ் பிய்த்துக் கொண்டு போனது. நோயாளிகளுக்கான நவீன உணவு விடுதி காவேரி… என்று உள்ளூர் வார ஏடு நீளமாகப் பிரசுரித்தது. என் போட்டோவையும் போட்டார்கள்.

ஒரு நாள் மாலை நேரம், இரண்டு தடவை என்னைத் தேடி இளம் டாக்டர் வந்தாரென்று பணியாள் சொன்னபோது ஆச்சரியப்பேட்டேன்.

ஏன்? எதற்கு? ஓட்டலிலிருந்து அனுப்பின சாப்பாடு நன்றாக இல்லையா? என்ற கேள்வி எழ, உடனே விரைந்தேன். தனி அறைக்குச் சென்று உடை மாற்றினேன். முன் வழுக்கை, வயது அரை நூற்றை தொடுகிறது என்பதைக் காட்டியது.

ஆஸ்பத்திரி அருகில் இருந்ததால் நடந்தே போனேன். என்னைப் பார்த்த உடனேயே ரிசப்ஷனிஸ்ட், “மூணாவது ஃப்ளோர், டேர்ன் ரைட். டாக்டர் வெயிட் பண்ணிட்டிருக்கார்” என்றாள்.

என்னைப் பார்த்த உடனேயே, அங்கிருந்த நோயாளி ஒருவர் எழுந்து உட்கார முயன்றார்.. ஓட்டல் மேலாளர் என்று நோயாளி புரிந்து கொண்டுவிட்டாரோ….

டாக்டர் எனக்கு ஒரு நாற்காலி போட்டார். எனக்கு நோயாளியிடம் பேச என்ன  இருக்கிறது?

நோய்வாய்பட்டிருந்தவர் “இந்த இடம் எனக்கு பரிச்சயமாக இருக்கு. ரொம்ப வருஷம் முன்னாலே எங்களுக்கு ஒரு பஙகளா இருந்தது.அப்பா, பெரியப்பா போனப்புறம், சண்டை வந்து… வித்து…” மூச்சு வாங்கியது, இருமினார். தனிக் கிண்ணத்தில் துப்பினார்.

“Be calm” என்று அவரை அமைதிப்படுத்திவிட்டு, என்னைத் தனியே அழைத்துச் சென்றார் டாக்டர்.

“மனுஷனுக்கு 59 வயசு ஆச்சு. டிவோர்ஸி. பையன், பெண் கூட இல்லை. யாரோ உறவினர் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். டிமென்ஷியா, High BP…” என்று சொல்லிக் கொண்டே போனார். ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, “உங்க ஓட்டலைப் பார்க்கணுமாம். வெளியிலிருந்து பார்த்தால் கூட போதுமாம்.”

ஆம்புலன்ஸில் படுத்த படுக்கையாக வந்தார். முக்கால் கிரவுண்டில் உள்ள சின்ன ஓட்டலை பார்த்தார். “எங்க பங்களா ரொம்ப பெரிசு. இங்கதான் இருந்த ஞாபகம். ரெண்டு கிரவுண்டுக்கும் மேலே.” சில நிமிடம் பார்த்தபடியே இருந்தார். திடீரென விசித்து விசித்து அழுதார்.

“டாக்டர் சார், நான் பாவம் பண்ணியிருக்கேன். என்னவெல்லாமோ ஞாபகம். தலை குழம்பறது.” என்று தன் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டார்.

நான் மௌனமாக நோயாளியையும், ஓட்டலையும் வெறித்துப் பார்த்தபடி நின்றேன். திடீரென்று வாசல் சுவரிலிருந்து சின்னக் கல் ஒன்று என் தலை மேல் விழுந்தது.

பின்னால் ஏதோ பழுது பார்த்த மேஸ்திரி ஓடி வந்தார். “நான் அப்போதே சொன்னேன். பேரு புதுசா ‘நவீன் காவேரி’… இந்த பழைய பெயர் எதுக்கு சுவத்திலே.” என்றார்.

“என்னவோ சொல்வாங்களே, மறந்து போச்சே…” தலையை சொறிந்து கொண்டார்.

“திருஷ்டி… வீட்டுக்கு படாமலிருக்கு, பூசணிக்காயை உடைப்பார்கள். அது மாதிரி இந்தச் சுவரில் இதுவும் இருக்கட்டும்.” என்றேன்.

கங்கா என்ற பெயர் உடைந்து தெரிந்தது. அப்போதுதான் ஆஸ்பத்திரியின் அறை எண் 105ம், நோயாளியின் பெயர் மாதவன் என்பதும் எனக்கு ஞாபகம் வந்தது.

 

– லக்‌ஷ்மணன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad