\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

Filed in கதை, வார வெளியீடு by on January 16, 2024 0 Comments

டாக்ஸி வீட்டின் முன் வந்து நின்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் காஞ்சனா. உள்ளேயிருந்து வேகமாக வந்த குமுதவல்லி கைக்குழந்தையை வாங்கிக் கொண்டு  மகளின் தலையைக் கோதியவாறு உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். காஞ்சனாவின் அப்பா டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு பையை உள்ளே தூக்கிக் கொண்டு வந்த போது ‘‘இப்போதும் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?’’ கொஞ்சம் கோபம் கலந்த தொனியோடு கேட்டார்.

‘‘அவள் சோகம் அவளோடு. அவளை ஏன் வீணாகக் கடிந்து கொள்கிறீர்கள்?’’ என்றாள் குமுதவல்லி கைக்குழந்தைக்கு புட்டிப் பால் கொடுத்தவாறு.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன்னுடைய திருமண போட்டோவைத் திருப்பிப் பார்த்தாள். ‘‘ரிஷி ஏன் சிரித்துக் கொண்டிருக்கிறாய்…? என்னையும் என் மகனையும் தனித்து விட்டுப் போவதற்காக… இல்லைத் திருமணம் முடிந்த மறு நாளிலிருந்து  நீ உன் அம்மாவோடு சேர்ந்து கொண்டு என்னை சித்திரவதைப் படுத்தி போனவைகளை நினைத்துக்கொண்டா….? உன்னை எவ்வளவு பெரிய மகானாக நினைத்துக் கொண்டு உன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தேன். ஆனால் நான் வாங்கிய அடிகளை கணக்கிட முடியாமல் போனதே…

“சே! விழுந்து விழுந்து காதலித்தாயே!… துரத்தி துரத்தி உன் காதல் வலையில் விழ வைத்தது இத்தனை வலிகளைத் தாங்கிக் கொள்ளவா? எங்கே இருக்கிறாய்….? நமக்கு பிள்ளை பிறந்த பிறகு கூட பார்க்க வராமல் உன் அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்து கொண்டாயே….”

மனதிற்குள் பூகம்பமே வெடித்தது.

“என்ன செய்யப் போகிறேன்?” உள்ளுக்குள்ளே எழுந்த கேள்விக்கு

மனதும் எண்ணங்களும் தடுமாறின…

“இனி?’… பொருளாதாரப் பிரச்சினை ஒன்றும் வரப் போவதில்லை..கூடிய விரைவில் வேலைக்குப் போய் விடலாம்.. ஆனால்… வாழ்க்கை…? நானும் ஒரு புவனா ஒரு கேள்விக்குறி தானா?”

நான்கு வருடம் ரிஷியோடு சுற்றித்திரிந்து அலுவலகம், வேலை, திருமணம், குழந்தை… இனி… கொஞ்சம் தலையை சிலிர்த்துக் கொண்டவள், “நான் வாழ வேண்டும்… ரிஷிக்கு முன்னால் நான் வாழ்ந்து காட்ட வேண்டும்.”

“என்ன செய்யப் போகிறேன்” தலையைப் பிடித்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள். அம்மா தேனீர் கொண்டு வர, “அம்மா அவள் தூங்குகிறாளா?” என்று கேட்டாள். 

“ஆமாம். காஞ்சனா… ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை… சீக்கிரம் ஆபீஸ் போய்விடலாம் என்று யோசிக்கிறேன். நீ அவளை பாத்துக்கவ இல்லை…” என்று அம்மாவின் முகத்தை பார்த்தாள்.

“அது ஒண்ணும் பிரச்சினை இல்லை..ஆனா…பச்ச ஒடம்பு… ஒனக்கு தான் மூணு மாசம் லீவு உண்டே…?” என்று சொல்லி முடிக்குமுன் வாசல் அழைப்பு மணி அடித்தது.

“நீ இரும்மா… நான் பார்க்கிறேன்” எழுந்த காஞ்சனா கதவைத்திறந்த போது, “அம்மா ஒரு கொரியர் வந்திருக்கு” என்றான் கொரியர் கொண்டு வந்தவன்.

கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டு திறந்து பார்த்தாள்.

“என்னம்மா? என்ன கொரியர்?” அம்மா கேட்டாள்

”நான் ஏற்கனெவே சொல்லியிருந்தேனே  அம்மா.. எனக்கு இப்போ

அயர்லாந்து அலுவலகத்திலே வந்து சேரும்படி கடிதமும் டிக்கட்டும்

வந்திருக்கு…”

“ஓ… எப்ப அப்ளை பண்ணுனே…”

”ஒரு வருடமாகி விட்டது”

“இப்ப எப்படிம்மா போக முடியும்?”

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லையம்மா. அங்கே தங்கிறதுக்கு அவங்களே அரேஞ்ச் பண்ணுறாங்க… நல்ல சம்பளம்…வேலைக்கு ஒரு பொம்பிளையை வச்சிகிட்டா போச்சி”

உள்ளே வந்த காஞ்சனாவின் தந்தையிடமும் சொல்ல, “உன்முடிவு தான் எங்க விருப்பம்” என்று கொஞ்ச நேரம் வாதாடியவர், சொல்லிவிட்டுத் தன் அறைக்குப் போய் விட்டார்.

”நான் நாளைக்கு ஆபீசிற்கு போயிட்டு வர்றேனம்மா” என்றவாறு எழுந்தாள் காஞ்சனா.

மறுநாள் காஞ்சனா அலுவலகம் செல்லக் கிளம்பிகொண்டிருந்த போது, வாசல் அழைப்பு மணி அடித்தது.

“அப்பா… அது யாரென்று பாருங்கள்” என்றவாறு குளியலறைக்குள்

சென்றாள் காஞ்சனா.

கதவைத் திறந்த போது ரிஷி சிரித்தவாறு நின்று கொண்டிருந்தான்.

வாசலில் நின்ற மாமனார் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருக்க, “என்ன மாமா உள்ளே வரச்சொல்ல மாட்டீர்களா?”என்றான் ரிஷி.

அவர் வாசலில் ஒதுங்கி நிற்க, சிரித்துக் கொண்டே உள்ளே வந்து அமர்ந்தான்.

“அவள் ஆபீசுக்கு போறதுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

என்ன செய்தி”? என்றார் மாமனார்.

“அதுக்கென்ன வரட்டும். அதுக்குள்ளே ஆபீஸ் போக ஆரம்பிச்சாச்சா?” என்ற போது மாமியார் “காபி சாப்பிடுங்கோ” என்றவாறு காபியை கொண்டு வர, அங்கே வந்த காஞ்சனா,

“அம்மா காபியை உள்ளே கொண்டு போ… சும்மா வாற போற ஆளுக்கெல்லாம் காபியா? என்ன ரிஷி…? என்ன செய்தி…? கொஞ்சம் சீக்கிரம் சொல்கிறீர்களா? நான் அவசரமா ஆபீஸ் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாள் காஞ்சனா.

காஞ்சனாவின் தந்தை ஏதோ சொல்வதற்கு முன், “எப்ப நம்ம வீட்டிற்கு வருகிறாய்? என்று அம்மா கேட்டு வரச்சொன்னாள்” என்றான் ரிஷி.

“ஏன்… இவ்வளவு நாளும் நான் அடிபட்டு சித்திரவதை பட்டது போதாதென்று என் குழந்தையையும் சேர்த்து சித்திரவதை பண்ணப்போறீங்களா?” கத்தினாள் காஞ்சனா.

“ஏய்… என்ன சொல்றே…” என்று பதறினான் ரிஷி.

“சும்மா நடிக்காதே… எங்க அப்பா அம்மாவிற்கு எல்லாம் தெரியும்.”

திரும்பவும் கத்தினாள் காஞ்சனா.

“சரி நடந்ததெல்லாம் மறந்திட்டு ஒரு நல்ல நாளா பாத்து சொல்லச் சொல் நானே வந்து கூட்டிண்டு போறேன்” என்றான் ரிஷி.

”சரி ரிஷி. நீ ஒரு நல்ல வக்கீலாப் பாரு. நம்ம விவாகரத்தை அப்ளை பண்ணலாம். நீ எங்கேயெல்லாம் கையெழுத்து போடச்சொல்றியோ நான் கையெழுத்து போடறேன்… நீ போலாம்”

ரிஷி எழுந்து ஏதோ சொல்ல முயல, காஞ்சனா, வாசற் கதவைக் காட்டினாள்.

மறுநாள் காலையில் கிளம்பிய போது, “அம்மா… குழந்தை அழுதால் கூப்பிடுங்கள். அநேகமாக முதல் நாள் என்பதால் சீக்கிரம் வந்து விடுவேன்” என்று கிளம்பி வெளியே காத்து நின்ற ஆட்டோவில் ஏறினாள்.

உள்ளே இருந்த ரிஷியைப் பார்த்து விட்டு, “ஆட்டோ. நீ போப்பா.

நான் வேற வண்டியிலே வருகிறேன்” என்றாள்.

ரிஷி உருகியவாறு, “காஞ்சனா கொஞ்சம் சொல்றத கேளு… உங்கூட கொஞ்சம் பேசணும். ப்ளீஸ்” என்று அவள் கையை பிடித்தான்.

“ரிஷி, பேசியதெல்லாம் போதும். இனி என் முகத்தில் கூட முழிக்காதே…” என்று கத்தியவள், அடுத்து சாலையில் வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய் விட்டாள்.

அலுவலகம் வேகமாக, மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. வரவேற்பாளினி இனியா, “வாங்க. என்ன இவ்வளவு சீக்கிரம் ஆபீஸ் வந்திருக்கீங்க” என்றாள் சிரித்துக் கொண்டே.

பதிலாக புன் முறுவல் ஒன்றை உதிர்த்து விட்டு,” மானேஜர். ராம் இருக்கிறாரா? பார்க்க முடியுமா?” என்று கேட்டாள்.

“ஒரு நிமிடம்” என்றவள், இண்டர்காமில், பேசி விட்டு,”ராம். உங்களை கூப்பிடுகிறார்” என்றாள் வரவேற்பாளினி இனியா.

எழுந்து, கதவைத்தட்டிக் கொண்டு அந்த சிறிய அறைக்குள் நுழைந்தாள்.

எழுந்த ராம்” வாங்க காஞ்சனா… உங்களுக்கு…?” கேள்வியை முடிக்குமுன் “ஆம் சார். சீக்கிரமே அலுவலில் ஈடுபடலாம் என்ற முடிவில் வந்து விட்டேன்.” என்றாள் காஞ்சனா.

 

“ரொம்ப மகிழ்ச்சி… சொல்லப் போனா உங்க வேல எல்லாம் என் தலையிலே… நீங்க வந்ததும் கூட ஒருவகையில் எனக்கு கொஞ்சம்

வேலை குறையும்.” என்று சொல்லி, அவள் மேசையின் சாவியை எடுத்துக் கொடுத்தார்.

“நன்றி” என்று எழுந்தவளிடம் “ உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?”

என்றார் ராம்.

“எந்த மாதிரி… அலுவலக செய்திகள் என்றால் பேசலாம். ஏனென்றால் இன்று காலை தான் என்னைப்பற்றி எங்க அப்பாகிட்டே பேசியிருக்கிறீர்கள்.

சொந்த காரியங்களில் அதிகமாக தலையிட வேண்டாம். என் மனசுக்கு உங்களைப் பற்றி என் அலுவலக மேலதிகாரி என்ற எண்ணத்தை தவிர எதுவுமே ஒட்ட மாட்டேங்கிறது… மன்னித்துக் கொள்ளுங்கள்” எழுந்தாள் காஞ்சனா

”ஆண் துணையில்லாமல் இருப்பது நல்லதல்ல மேடம்”

“இந்த மேடம் என்கிற தூரத்திலேயே இருப்போம்”என்று காஞ்சனா

சொல்லி முடிக்குமுன் தொலை பேசி ஒலிக்க, “ சார். ரிஷி என்பவர் உங்களை பார்க்க வேண்டுமாம்” என்றாள் வரவேற்பாளினி.

“வரச்சொல்” என்று தொலை பேசியை வைத்து விட்டு, “உங்கள் கணவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.” என்றார் ராம்.

“ஓ … அவரிடம் சீக்கிரம் ஒரு நல்ல லாயராக பார்த்து எனக்கு விவாகரத்து வாங்கித்தரச் சொல்லுங்கள். முடிந்தால் நான் ஆஸ்திரியா புறப்படுமுன் கிடைத்தால் மிக்க நல்லது” என்று சொல்லி விட்டு எழுந்தவள், “ மிஸ்டர் ராம். அந்த ஆஸ்திரியா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, நான் அடுத்த மாதம் அங்கே வந்து பணிபுரிய விரும்புகிறேன் என்று சொல்லுங்கள்” என்று சொல்லி விட்டு தன் இருக்கைக்கு கிளம்பினாள் காஞ்சனா.

                               

-கவிமணி-

இரஜகை நிலவன்

மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad