\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நானோ பிளாஸ்டிக் எனும் அசுரன்

சமீபத்தில் ‘நானோ பிளாஸ்டிக்குகள்’ மனித உடலுக்குள் நுழைந்திருப்பதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று வழியாக மனித உடலுக்குள் நுழையும் இவ்வகை மிக நுண்ணிய (மீநுண்) பிளாஸ்டிக் துகள்கள் செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, உயிரணுக்களுக்கு தீங்கு உண்டாக்கும் செயற்கை இரசாயனங்களைப் பரப்புகின்றன என்று நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். கொலம்பியா பல்கலை (நியு யார்க்) மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலை (நியு ஜெர்சி) கழகங்களைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் தண்ணீர் பாட்டில்களில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருந்தாலும், சராசரியாக ஒரு லிட்டர் அளவுள்ள தண்ணீர் பாட்டிலில், அதிகபட்சமாக சுமார் 240,000 நானோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாக, இம்மாத துவக்கத்தில் வெளியான அறிக்கை பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

செப்டம்பர் 1993 ஆம் ஆண்டு, அயர்லாந்து அருகேயுள்ள குட்டித் தீவின் கடற்கரையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ரிச்சர்ட் தாம்சன் என்பவர், தனது காலடியில் மணல் போன்று ஆயிரக்கணக்கான வண்ணத் துகள்கள் படிந்திருந்ததைக் கவனித்தார். அங்கிருந்த மீனவர்கள் பயன்படுத்திய வலை, வடிகட்டிகளிலும் இது போன்ற வண்ணத் துகள்கள் சேருவதைக் கண்டு துணுக்குற்ற அவர், அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து தனது ஆய்வகத்திற்கு எடுத்துவந்து சோதனைகளை மேற்கொண்டார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, கடலில் கழிவுகளாகக் கொட்டப்படும் பிளாஸ்டிக்குகள் காலப்போக்கில் சிறு சிற, உறுதியான துகள்களாக உடைவதாக அவர் அனுமானித்தார். அளவில் மணல் துகள் அல்லது அதைவிட  சிறிதாக காணப்பட்ட இவ்வகை பிளாஸ்டிக் துகளுக்கு ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ என பெயரிட்டார் தாம்சன். ‘மைக்ரோ பிளாஸ்டிக்குகள்’ எளிதில் அழிவதில்லை. அதனிலிருக்கும் இராசயனம், நோய்கிருமிகள் மற்றும் நச்சுப்பொருட்களை ஈர்த்து, பாதுகாத்துக் கொள்கிறது; இதனை உட்கொள்ளும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், மனித உணவுச் சங்கிலியிலும் பாதிப்புகளை வெளியிடுகிறது. ‘மைக்ரோபிளாஸ்டிக்’ போலவே, அதே அளவில் அல்லது அதைவிட சிறிதாக மனிதர்களால் உருவாக்கப்படும் ‘மைக்ரோபீட்ஸ்’ மூலமாகவும் இதே பாதிப்புகள் ஏற்படுகின்றன.  பாலிஎத்திலின்(polyethylene), பாலிப்ரொபலின் (polypropylene), பாலிஎத்திலின் டெரப்தலேட் (polyethylene terephthalate (PET)), பாலியெஸ்டர் (polyester) போன்ற பல்வேறு பிளாஸ்டிக் மூலப்பொருட்களினால் தயாரிக்கப்படும் ‘மைக்ரோபீட்ஸ்’ அதன் மென்மையான உதிர்த்தல் (exfoliation) மற்றும் உராய்வு (abrasive) தன்மையின் காரணமாக ஒப்பனை பொருட்கள் மற்றும் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. நுண்ணோக்கிகள் மூலம் மட்டுமே காணக்கூடிய மிகச் சிறிய உருளைகளான இவற்றை foundations, lipstick, makeup remover, sunscreen lotions, wrinkle remover cream, anti aging products, nail polish, nail polish remover, mascara, body scrubbers என்று ஏறக்குறைய அனைத்து அழகுச் சாதனப் பொருட்களிலும் காண முடியும். முகத்திலும், உடலிலும் படியும் எண்ணெய் பசை, மாசு, முந்தைய முகப் பூச்சுகளை நீக்கவும், முகச் சருமத்தில் இருக்கக்கூடிய நுட்பமான புரைகளை (pores) தற்காலிகமாக நிரப்பி மென்மையான பொலிவைத் தரவும் இவ்வகை மைக்ரோபீட்ஸ் சேர்க்கப்படுகின்றன. பற்பசையில் இவை பற்குழிகளை (cavities) மூடவும், பற்களைத் தேய்த்து, பளபளப்பாக்கும் உராய்வுத்தன்மைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. மேலும் அழகு பொருட்களிலும் பற்பசையிலும் ‘மைக்ரோபீட்ஸ்’கள் அடர்த்தித் தன்மை உண்டாக்கி, பொருட்களின் எடையை  அதிகரிக்கவும், தேக்க ஆயுளை (shelf life) நீட்டிக்கவும் பயன்படுகின்றன

‘மைக்ரோபிளாஸ்டிக்’கின் மிக நுட்பமான துகள்கள் தான் ‘நானோபிளாஸ்டிக்’. குறிப்பிட்ட அளவுகளில் தேவைக்காக தயாரிக்கப்படும் ‘மைக்ரோபிளாஸ்டிக்’ போலன்றி, இயற்கையாக பிளாஸ்டிக் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் உடைவதால் உண்டாகும் பொடிகளே நானோபிளாஸ்டிக் எனப்படுகிறது. உதாரணமாக பிளாஸ்டிக் சாலைகளை எடுத்துக் கொள்வோம். பிட்டுமன் (bitumen) எனப்படும் பெட்ரோலிய வண்டலுடன் 2 மில்லிமீட்டர் அளவுக்கு நொறுக்கப்படும் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’கள் கலக்கப்பட்டு சாலைகள் இடப்படுகின்றன. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தார் (Tar – asphalt) மூலப்பொருளினால் அமைக்கப்பெறும் சாலைகளை விட, பிளாஸ்டிக் சாலைகளின் ஆயுட்காலம் மூன்று மடங்கு அதிகம் ஆனால் செலவு மிகக் குறைவு. அதன் நெகிழ்வுத் தன்மையினால் தட்பவெட்ப காரணங்களினால் சாலைகள் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இச்சாலைகளில் வாகனங்கள் செல்லும்பொழுதும், இயற்கை உராய்வுகளினாலும் இந்த பிளாஸ்டிக்கள் பொடியாக உடைந்து நீரில், காற்றில், நிலத்தில் கலக்கின்றன. அதேபோல் அழகுப் பொருட்கள், பற்பசைகளில் சேர்க்கப்படும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கழிவுநீர் வழியாக மண்ணில் கலப்பதுடன், இறுதியாக கடலில் சேர்ந்து நானோ பிளாஸ்டிக்களாக உருவெடுக்கின்றன. இவ்வகை ‘நானோ பிளாஸ்டிக்’ துகள்கள் எளிதில் புலப்படுவதில்லை. இவை மீன், இறால் போன்ற உயிரினங்களால் உட்கொள்ளப்பட்டு மனித உணவுச் சங்கிலியில் நுழைந்து விடுகின்றன. மண்ணில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக் பொருட்கள், செடிகளால் உறிஞ்சப்பட்டு காய்கறிகள், பழங்கள் மூலம் மனிதர்கள் இதர விலங்குகள், பறவைகளுக்குள்  நுழைகின்றன. 

சில காலங்களுக்கு முன்பு பிளாஸ்டிக்குகளில் சேர்க்கப்படும் பி.பி.ஏ (BPA – Bisphenol-A) எனும் இராசயனம் மனிதர்க்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்றறியப்பட்டு, பி.பி.ஏ அல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அதுவரையில் இவ்வகையான நானோபிளாஸ்டிக் மூலம், பி.பி.ஏ வும் மனித உடலுக்குள் சென்றுள்ளது. 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குழாய் தண்ணீரை விட பாட்டில் தண்ணீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் மூடிகளைத் திறந்து மூடுவதால் சிதிலமடையும் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் தண்ணீருடன் உடலுக்குள் நுழைவதன் மூலம் கடுமையான உடல்நலக் கேடு விளைவிக்கப்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கை எச்சரித்தது.

நுரையீரலில் கூட நானோபிளாஸ்டிக்குள் வண்டல் படலங்களை காணமுடிகிறது என்கிறது மற்றுமொரு ஆய்வு. மனிதருக்குள் நுழையும் இந்த நானோபிளாஸ்டிக் துகள்கள் அனைத்தும் கழிவுகள் மூலம் வெளியாவதில்லை. குறிப்பிட்ட சதவிகித துகள்கள் மனித உறுப்புகளிலேயே தங்கி, தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. அப்படியே வெளியாகும் நானோபிளாஸ்டிக்கள், மேலே சொன்ன ஏதோவொரு வழியில் நிலத்திலோ, காற்றிலோ, நீரிலோ கலந்து மறுசுழற்சி பெற்று மீண்டும் உயிரினங்களுக்குள் கலந்துவிடும். நானோ பிளாஸ்டிக் துகள்கள் மிக நுட்பமானவை என்பதால் அவை மனித உடல் செல்கள் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் உறுப்புகளை மெதுவே அழிக்கும் என்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி கருவுற்றிருக்கும் தாயின் தொப்பூள் கொடி மூலம் இவை வயிற்றில் வளரும் குழந்தைகளின் உடலிலும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் சென்றடையும் அபாயமுள்ளது. 

இன்றைய தேதியில், முற்றிலும் பிளஸ்டிக் இல்லாத உலகம் சாத்தியமில்லை. கோவிட் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள், பிணங்களை அடைக்கும் பைகள் என அங்கிங்கென இல்லாதபடி எங்கும் பிளாஸ்டிக் நிரம்பி வழிந்தது. பாரிய காலமாகக் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கும் நுகர்வோர் கலாச்சாரம் மாறி இணைய வர்த்தகம் பெருகியதால் அவற்றைப் பாதுகாப்பான முறையில் பொதிகளாக்க வேண்டி பிளாஸ்டிக்கின் தேவையும் அதிகரித்தது.   2018ஆம் ஆண்டு 359 மில்லியன் டன் அளவிலிருந்த பிளாஸ்டிக் உற்பத்தி, 2021 ஆம் ஆண்டு இறுதியில் 400.3 மில்லியன் டன்னாக உயர்ந்திருந்தது.

பிளாஸ்டிக்கின் புதைபடிவ எரிபொருள் (fossil fuel) பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு சுத்தமான பிளாஸ்டிக் உருவாகும் தருணத்திலிருந்து, அதன் உற்பத்தி, போக்குவரத்து, பயன்பாடு, இறுதியில் கழிவுகளாகக்கப்படும் வரை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எதோவொரு நச்சு இரசாயனத்தை வெளியிடுகிறது. ‘மைக்ரோ’ மற்றும் ‘நானோ’ பிளாஸ்டிக் குறித்து ஆய்வு செய்வோர் முன் எழுந்திருக்கும் மிகப்பெரிய சவால் அவற்றின் ஆயுள் காலத்தை நிர்ணயிப்பது. நானோ பிளாஸ்டிக்கை அழிக்க முற்பட்டால் அவை மேலும் சிதறுண்டு மேலும் சிறிய துகள்களாக மாறி புதிய அபாயத்தை உருவாக்கலாம். அவற்றை அப்படியே விட்டாலும், காலப் போக்கில் அவற்றின் இரசாயனத்தன்மை எப்படி மாறுபடும் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி. 

பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பல பத்தாண்டுகளாகப் பெருகி வந்தாலும், முற்றிலுமாக அவற்றை  நிராகரிக்க முடியாத நிலையில் உலகமுள்ளது. பிளாஸ்டிக் மறுசுழற்சியும் பெரியளவில் வேகமடையவில்லை. உலகில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 14% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதில் சேர்க்கப்படும் இரசாயனம் மற்றும் வண்ணப் பூச்சுகளால், பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்ய லாயக்கற்றுப் போகின்றன. அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் கனடாவுக்கு 1.5 லட்சம் டன், மெக்சிகோவுக்கு 80 ஆயிரம் டன் மற்றும் இந்தியாவுக்கு 45 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பப்படுகின்றன. 

நம் அன்றாட வாழ்வில் சிற்சில மாற்றங்கள் செய்வதன் மூலம் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டையும், பக்கவிளைவுகளையும் ஓரளவுக்குக் குறைக்க முடியும். குறிப்பாக பின்வரும் விஷயங்கள் உங்கள் உடல் நலனைப் பேணவும், பிளாஸ்டிக் கேடுகளை அகற்றவும் உதவக் கூடும்,

 

  • ‘மைக்ரோவேவ்’ முறையில் உணவை சூடுபடுத்த பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்கவும்.
  •  ‘நான்-ஸ்டிக்’ பாத்திரங்கள் மற்றும் தரமற்ற ‘சிலிகான்’ பொருட்களை தவிர்ப்பது நல்லது.  
  • பிளாஸ்டிக் ஸ்டிரா, ஸ்பூன், ஃபோர்க்குகளுக்குப் பதிலாக காகிதம் அல்லது உலோகத்தாலான பொருட்களைப் பயன்படுத்துங்கள். கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கப்புகள், பாட்டில்களை பாவிப்பது நலமளிக்கும்,
  • கடைகளுக்குச் செல்லும் பொழுது வீட்டிலிருந்தே துணிப் பையை எடுத்துச் செல்வது அல்லது காகிதப் பைகளைப் பயன்படுத்துவது, பிளாஸ்டிகின் பயன்பாட்டைச் சிறிது குறைக்கலாம்.
  • விலை சற்றே கூடுதலாக ஆனாலும் இயற்கை மூலக்கூறு கொண்ட பற்பசை, ஒப்பனை பொருட்களுக்கு மாறுங்கள்.
  • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமேற்பட்டால், அவற்றின் தரம் பார்த்து மறுசுழற்சி செய்ய ஏற்றவையா என்று கவனித்து முடிவெடுங்கள். 
  • சின்ன சின்ன பெட்டி / புட்டிகளில் வாங்குவதை விட மொத்தமாகப் பெரிய அளவிலிருப்பதை வாங்க முடிந்தால், நலம். (உதாரணமாக – கையில் எடுத்துச் செல்லக் கூடிய பத்து தண்ணீர் பாட்டில்களை வாங்குவதை விட, பத்து லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி, கண்ணாடி புட்டிகளில் நிரப்பி எடுத்துச் செல்லலாம்). 
  • குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் அல்லாத விளையாட்டுப் பொருட்களைத் தருவது ஏறத்தாழ இயலாத காரியம்; இருப்பினும் மரம், மூங்கில், காகித அட்டை, துணியாலான பொம்மைகள் மாற்றாக அமையக் கூடும். 

 

இன்றைய சூழலில், மைக்ரோ, நானோ பிளாஸ்டிக்குகள் மனிதச், விலங்கினச் சமூகத்திற்கு ஏற்படுத்தும் தீங்குகள் குறித்து பெரிதும் விளக்கமில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் துகள்களின் ஆயுட் காலத்தையும், காலப்போக்கில் அவை ஏற்படுத்தும் இரசாயன தாக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்வதும் மிகப் பெரியச் சவாலாக உள்ளது. மைக்ரோ/நானோ பிளாஸ்டிக் தொடர்புடைய சாத்தியமான அபாயங்களைக் குறைக்க, ஒரு விரிவான இடர் மேலாண்மை உத்தி வகுக்கப்பட வேண்டும், இது நானோபிளாஸ்டிக் உமிழ்வைக் குறைத்தல், மாற்றுப் பொருட்களை உருவாக்குதல் மற்றும் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல் எனப் பல திட்டங்களை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம். அறிவியல் வல்லுனர்கள் மட்டுமல்லாது, அரசியல் முனையிலும் இதற்கான முனைப்புகள் தொடங்கப்படவேண்டும். காலநிலை மாற்றம், புவி வெப்பம் போன்ற இதர இயற்கை மாற்றங்களில் மெத்தனம் காட்டியது போலன்றி ‘நானோ’, ‘மைக்ரோ’ பிளாஸ்டிக் பாதிப்புகளை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.

 

-ரவிக்குமார்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad