\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு – 3

நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது அழகு என்று அர்த்தம். அதாவது, அழகு பார்வையில்  மட்டுமே உள்ளதாக நினைக்கிறோம். கண்களின் வழியே நுகரப்படும் அனுபவம் இன்பமளித்தால் அதனை அழகு என வகைப்படுத்துகிறோம். ஆனால் அன்பு ஊற்றெடுக்கும் பட்சத்தில், புற ரூபத்தைக் கடந்த அழகை உணர்கிறோம். உலக அழகிகள் நிறைந்திருக்கும் மேடையில், அன்னை தெரசா வந்து நின்றால் மற்றவர்களைவிட அழகு நிரம்பியவராகத் திகழ்வார். அவரது அன்புள்ளம் சரீர அடையாளங்களைத் தாண்டிய அழகைப் பூசிவிடுகிறது. அகத்தின் அழகு முகத்தில் வந்து அமர்ந்துகொள்கிறது. அந்த அழகை வருணிக்க வார்த்தைகள் எளிதில் வசப்படுவதில்லை. 

‘அங்காடித் தெரு’ திரைப்படத்தில், நா. முத்துக்குமாரின் வரிகளில் உருவான பாடலொன்று அப்படிப்பட்ட அழகைத் தான் சொல்கிறது. கண், காது, கூந்தல், உடல்வாகு என எந்தவொரு புற அவயவங்களையும் குறிப்பிடாமல் அழகாய்ப் பின்னப்பட்ட பாடல் இது. கவிதைக்கான இலக்கணக் கோட்பாடுகளில் அடங்கி விடாமல், திரையிசை  சொற்கட்டுக்குள் சுருங்கி விடாமல், சுதந்திரமாய், சிறகடித்துப் பறக்கும் உணர்வுகளுடன் வடிக்கப்பட்ட வரிகள்.  இன்னும் சொல்லப்போனால் பாடலின் ஒவ்வொரு வரியையும் எதிர்மறை வாக்கியமாகவே அமைத்திட அசாத்தியத் துணிச்சல் இருந்திருக்கவேண்டும்.

கதைப்படி, ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரியும் பதின்ம வயதினர் மத்தியில், அவர்களின் அன்றாட வாழ்வியலின் சிக்கல்களைத் தாண்டி தோன்றும் ஈர்ப்பை, மெலிதாய் அரும்பும் காதலை வெளிப்படுத்தும் காட்சி தான் பாடலின் படாடோபமில்லாத இயல்பான ஜவுளிக்கடைச் சூழல். பின்னணி. பகட்டு காட்டும் ஒப்பனை, அலங்காரம் இல்லாத,. எண்ணெய் கலந்த வியர்வை முகத்துடன், சராசரியான மனிதர்கள்.  

காட்சியில் நிறைய பாத்திரங்கள்; இருந்தாலும், தனக்கான ஜோடியைப் பற்றி ஆண் கதாபாத்திரங்கள் பாடுதாய் வரும் பாடல். அதாவது பாடல் வரிகள் எந்தவொரு சராசரிப் பெண்ணுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்திருப்பது தான் பாடலின் தனிச் சிறப்பு.

பாடலின் பல்லவி இதுதான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படியொன்றும் கலரில்லை

ஆனால் அது ஒரு குறையில்லை

 

தனக்கு பிரியமானவளை, அவன் முற்றிலும் அழகற்ற குரூபி என்று சொல்லிவிடவில்லை. ‘அப்படி ஒன்றும் பெரிதாய் சிலாகித்துக் கொள்ளும் வகையில் , ஓரிரு அங்க அடையாளங்களை குறிப்பிட்டு வருணிக்கும் அழகில்லை’ என்பதையே முதல் வரியாகக் கொண்டு துவங்கும் பாடல். ‘அவளுக்கு யாரும் இணையில்லை’ எனும் அழுத்தமான இரண்டாம் வரியில் தான் எத்தனை நிதர்சனம் ஒளிந்துள்ளது! என் சிநேகிதிக்கு நிகர் வேறொருவருமில்லை எனும் கற்பனை அவளைத் தவிர என் மனதில் யாருக்கும் இடமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. மூன்றாம் வரியில், அவள் மனதைச் சுண்டும் தோல்நிறம் கொண்டவளில்லை என்பதையே ‘கலரில்லை’ என்று பேச்சுவழக்கில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘அவள் அப்படியொன்றும் நிறமில்லை’ அல்லது ‘அவள் அப்படியொன்றும் சிகப்பில்லை / வெண்மையில்லை’ என்று பெரிதாய் சிந்தித்து அலட்டிக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நான்காம் வரியான ‘ஆனால் அது ஒரு குறையுமில்லை’ என்பதை, பாடல் கண்ணோட்டத்திலிருந்து நாமும் ஏற்றுக் கொள்ளலாம்.

அண்மைக்காலத் தமிழ்த் திரைப்படப்பாடல்களில் அவ்வளவாக அனுபல்லவி பயன்படுத்தப்படுவதில்லை. அனுபல்லவி, பல்லவியையும் சரணத்தையும் இணைக்கும் ஒரு பாலம் எனலாம். பல்லவியின் கருத்தோடு ஒட்டிப் போகும் வரிகள், அல்லது பல்லவியின் கடைசி இரண்டு வரிகள் ஒவ்வொரு சரனத்துக்கு பின்னும் வருவது அனுபல்லவியெனலாம். உதாரணமாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக் கொடி யாரோ பாவையெனும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ’ என்பது தான் பல்லவி. அதற்கு ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..’ எனும் வரிகள் ஒவ்வொரு சரணத்துக்குப் பின்னரும் வந்து இடையிசைக்கு அழைத்துச் செல்லும்.

(தொகையறா என்பது பாடலின் மெட்டு, தாளக்கட்டுக்குள் அடங்காமல் பல்லவிக்கு முன்னரோ, சரனங்களுக்கு இடையிலோ வருவது – (படகோட்டி படத்தில் ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ பாடலுக்கு இடையில், ‘மின்னலாய் வகிடெடுத்து மேகமாய் தலை முடித்து’ என்ற தொகையறா வரும்; ‘உயிரே’ படத்தின் ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ பாடலில் ‘கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை’ என்ற தொகையறா வரும்). 

இந்தப் பாடலில் அனுபல்லவியாய் ஓரிடு இடங்களில் வரும் வரிகள் இவை.

 

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் நிரம்பப் படித்தவள் இல்லை என்றாலும் அவளை புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலை அழகாகச் சொல்லும் வரிகள். காட்சிப்படி ஜவுளிக்கடை பணியாளராக வரும் பெண், அந்தக் கடை சீருடையை அணிய வேண்டிய கட்டாயம். பொதுவாகப் பெண்கள், தாங்கள் உடுத்தும் உடைகளில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. அப்படியொரு வாய்ப்பின்றி, தினமும் ஒரே சீருடையில் அவளைக் காண அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த உடையின் நேர்த்தியை அவன் கவனிக்க தவறுவதில்லை எனும் வரிகள், அப்பெண்ணின் பிரமிக்க வைக்கும் ஆளுமையை, நேர்நிலை பரிமாணங்களைச் சொல்வதாயுள்ளது. 

சரணங்களில் இசை தாளக்கட்டு மாறிவிடுவதால், பாடலைக் கேட்கும்பொழுது, வரிகள் பெரிதாய் மனதில் பதிவதில்லை. ஆனால் நாயகனின் மனதில் தோன்றும் உணர்வுகளை, அழகாய் எடுத்துரைக்க சரணம் தவறவில்லை.

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை

நான் காவலிருந்தால் தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை

நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை

அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை

அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை

கைப்பிடித்திடும் ஆசையில் தூங்கவில்லை

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை

வளர்ப்பாறின்றி ஆதரவுக்காக, அன்புக்காக ஏங்கிச் சுற்றிச் சுற்றி வரும் நாய்க்குட்டியை போன்ற மனநிலையில், தான் இருப்பதாய் சொல்லும் இரண்டு வரிகளில் அவ்வளவு நேர்த்தி. காதல் வயப்பட்டு, சம்மதத்துக்காக காத்திருந்தவர்களுக்கு, அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் சுகம் புரியும். அவளுக்கு பொம்மையை கட்டியணைத்து உறங்கும் வழக்கமில்லை என்றாலும், தான் பொம்மையில்லை எனும் அழைப்பு விடுக்கின்றன அடுத்த இரண்டு வரிகள். அழகான நீளமான கூந்தல் இல்லையென்றாலும், அதில் மனதைத் தொலைத்து, கறைந்து போய்விட்டதாய் சொல்வது அழகோ அழகு. தங்கமோதிரம் அணிய வசதியில்லையென்றாலும் அவளைத் தனதாக்கிக் கொள்ளும் ஆசை அவனை உறங்கவிடுவதில்லை. மொத்தத்தில் அவளின்றி அவனுக்கு உலகமில்லை என்பதை  ‘அவள் சொந்தமின்றி எதுவுமில்லை’ என்று கவிஞர் சொன்னதை ‘எனக்கு எதுவுமில்லை’ என்று அடிக்கோடிட்டு தூக்கி நிறுத்தியதில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு ‘சபாஷ்’ போடலாம். 

இரண்டாம் சரணமும், முதல் சரணத்தைப் போலவே சற்று நீளமானதுதான். குறிப்பிட்ட தாளக்கட்டுக்குள் அடங்காத வரிகளை, வெவ்வேறு ஸ்வர அளவுகளில் மெட்டமைத்து சமாளித்திருப்பார்கள்.

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை

அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை

அந்த அக்கறைப்போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை

அவள் இல்லாமல் சுவாசமில்லை

அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை

அவள் பகட்டான ஆடை அணிவதில்லை ஆனாலும் அவள் அணியும் சீருடைபோல் எதுவும் சிறந்ததில்லை. அவள் திட்டினாலும் அது அக்கறையினாலான எச்சரிக்கையாகவே தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழிலாளர் சமூகத்தின் இயல்பான நிலையைச் சொல்லும் விதம்  சுவையானது. உடல் உழைப்பின் விளைவாக பெருகும் வியர்வை நறுமண வாசம் வீசாது. இந்த இயல்பு நிலையை மிக மிக நாசூக்காக, நேர்த்தியாக ‘அவள் வாசம் ரோஜா வாசமில்லை’ என்று சொல்வதோடு நிறுத்திவிடாமல், எந்த காரணமாகட்டும்,  அவளில்லாமல் நானில்லை என்பதை ‘அவள் இல்லாமல் சுவாசமில்லை’ என்பது அபாரம். ‘அவளுக்குச் சொந்த பந்தமில்லை – அவள் எனக்குச் சொந்தமில்லாவிட்டால் எனக்கு எதுவுமில்லை’ என்று காதலின் ஆழத்தை வெளிப்படுத்த முயல்வது அற்புதம். இந்த இருவரிகள் நா. முத்துக்குமாருக்கு முகவரியாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. முதல் சரணத்தைப் போலவே இந்த வரிகளை அடிக்கோடிட்டு காட்டியிருப்பார் விஜய் ஆண்டனி.

காதல் பாடல் என்றால் பச்சைப் புல்வெளி, நீல வானம், அலை பாயும் கடல், உயரமான கட்டிடப் பின்னணியில் செயற்கையான நடன அசைவுகளை மட்டுமே பார்த்திருந்த கண்களுக்கு, மிக மிக யதார்த்தமாக, பாத்திரங்களின் பணி மற்றும் வாழ்க்கைச் சூழலைக் கருவாக எடுத்துக்கொண்டு, அதைக் கவிதையாய், ஓவியமாய் செதுக்கிய இயக்குநர் வசந்தபாலன், ஓளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன், படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் மற்றும் அவர்களது குழுவினர் அனைவரும் சிறப்புப் பாராட்டுகளுக்கு உரியவர்கள்.

வழக்கமாக அதிரடிப் பாடல்களையே அடையாளமாகக் கொண்டிருந்த விஜய் ஆண்டனிக்குள் வேறொரு பரிமாணம் ஒளிந்திருப்பதைக் காட்டிய பாடல் இது. சன்னமான பியானோ, புல்லாங்குழல், ஏறு வரிசை, இறங்கு வரிசைகளுக்குத் தனித்தனி வயலின்கள், சந்தூரின் யாழிசை என வித்தியாசமான இசைப்பின்னணி. மிக மென்மையாகத் தொடங்கிய பாடல், வலிமையான சொற்கள் வருமிடங்களில் சற்றே தடம் மாறியது போலத் தோன்றினாலும், மெலிதான பின்னணி குரல்கள் சேர்த்து அதன் மென்மை கெடாமல் தந்த விஜய் ஆண்டனி தனி முத்திரை பதித்திருப்பார். பாடகர்கள் வினித் ஶ்ரீனிவாசன், ரஞ்சித், ஜானகி ஐயர் ஆகியோரின் குரல்வளம் பாடலுக்கு உறுதுணையாய் நின்றிருக்கும்.

பாடலாசிரியர் நா. முத்துக்குமார், சில ஆண்டுகள் மட்டுமே நம்மிடையே வாழ்ந்திருந்தாலும், முத்தான பாடல்களைத் தந்தவர். சொற்சுவை, சந்தச் சுவை, உவமை, இலக்கியக் கட்டுப்பாடுகள் என்று மெனக்கெடாமல், இயல்பானச் சொற்களில் உணர்வை வடித்துத் தருவதில் கைதேர்ந்தவர். ‘இல்லை’ என்ற எதிர்மறைச் சொல்லைக் கொண்டு, இருப்பதில் மகிழ்ச்சியுறும் நேர்மறை நேசத்தை அழகாக விளக்கிய இந்தப் பாடல் அவரது திறமைக்குப் பெரும் சான்று. 

பாடலுக்கான சுட்டி :  

அழகின் மற்றொரு பரிமாணத்தை இவர் எடுத்துரைக்கும் அழகை வரும் பதிவுகளில் காணலாம்.

  • ரவிக்குமார்.

Tags : நா. முத்துக்குமார், அங்காடித் தெரு, அவள் அப்படியொன்றும் அழகில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad